சிற்றறிவு கடந்த மனனம்; மனவுணர்ச்சி கடந்த நிதித்யாஸனம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ச்ருதி, யுக்தி, அநுபவம் என்ற மூன்று வித ப்ரமாணங்களான ஸத்யத்தைத் தெரிந்துகொள்வது என்பதில் ச்ருதி – ‘ச்ரவணம்’, யுக்தி – ‘மனனம்’, அநுபவம் – ‘நிதித்யாஸனம்’ என்று சொல்வதுண்டு. ச்ருதியிலுள்ள மந்த்ரங்களையும் வைதிகமான ப்ரம்மவித்யா விஷயங்களையும் குரு சொல்லி சிஷ்யன் ச்ரோத்ரத்தால் (காதால்) கேட்டுக் கொள்வதால் ச்ரவணத்தை ச்ருதி என்று சொல்வது ரொம்ப ஸரியாகவே தெரிகிறது.

‘யுக்தி’ என்கிறபோது கொஞ்சம் விளக்கி ஸரியாகப் புரிந்து கொள்ள வைக்கவேண்டியிருக்கிறது. ஸாமான்ய தசையில் நமக்கு இருக்கப்பட்ட புத்தி வாதமாக – rational thinking (பகுத்தறிவுச் சிந்தனை) . அது இது என்கிறார்களே, அப்படிப்பட்ட புத்தி வாதமாகப் பண்ணி ஒரு விஷயத்தை எடுத்துச் கொள்வதல்ல, இங்கே சொல்லும் யுக்தி. அநுபவம் என்பதும் அப்படியே. நமக்கெல்லாம் வெறும் மனஸின் லெவலில் மாறி மாறி ஏற்படுகிற ‘எக்ஸ்பீரியன்ஸ்’இல்லை இங்கே சொல்வது. ஸாதனை பண்ணி, அடங்கி ஒடுங்கி, பரிசுத்தியாகி, ச்ரத்தா பக்திகளால் ரொம்பியிருக்கும் மனோ புத்திகள் அஹங்காரம் அழிவுபட வேண்டும் என்ற உத்தேசத்திலேயே அஹங்கார ஸ்தானத்தில் குவிவதற்காகப் போய்க் கொண்டிருக்கும்போது எப்படி உசந்த லெவலில் அலசி ஆராய்ந்து அறியுமோ, எண்ணுமோ அப்படிப்பட்டதையே இங்கே ‘யுக்தி’என்று சொன்னது. ‘அநுபவம்’என்பதும் பண்பட்ட மனோ புத்திகள் இந்த யுக்தியினாஸ் தெரிந்து கொண்டவற்றை மனத்தின் அடி ஆழத்தில், அஹங்கார base -லிருந்தே எக்ஸ்பீரியன்ஸ் செய்வதாக இருக்கும். அதையெல்லாம் பற்றி நான் ஒன்றும் லெக்சர் அடிப்பதற்கில்லை. நம்மிலே யாராவது பாக்யசாலிக்கு அப்படி வாஸ்தவத்தில் வாய்த்தால் – தான் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

சாந்தமாக நடுநிலையில் இருப்பதற்கு சாத்வீகம் என்று பெயர். அப்படியில்லாமல் இப்போது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி உணர்ச்சி வேகத்தில் தடுமாறிக் கொண்டே இருப்பதற்கு ராஜஸம் என்று பெயர். இப்போது நம்முடைய புத்தி பண்ணும் யுக்தி ராஜஸமானது. அதனால் தப்பானது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஸ்டேஜ்காரனின் புத்தியோ ராஜஸம் நசித்துப் போய் ஸாதவிகமாகிவிட்டது. ஆகையால் அது செய்கிற யுக்தியே வேறு தினுஸாக இருக்கும். ஸத்யத்தையும் சாஸ்திரத்தையும் ஆக்ஷேபித்துப் பகுத்தறிவு என்ற சின்ன எல்லைக்கு உள்ளேயிருந்து கொண்டு நாம் செய்கிற யுக்தியாக இல்லாமல் அவற்றை (ஸத்யத்தையும் சாஸ்திரத்தையும்) அநுஸரித்தே பகுதத்றிவுக்கு மேற்பட்ட விஞ்ஞானத்தினால் செய்யும் யுக்தியாக இருக்கும். அந்த புத்தியைப் பற்றி ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

மோக்ஷைக-ஸக்த்யா விஷயேஷு ராகம்

நிர்மூல்ய ஸந்நியஸ்ய ச ஸர்வகர்ம |

ஸச்ச்ரத்தயா ய: ச்ரவணாதிநிஷ்டோ

ரஜ: ஸ்வபாவம் ஸ துநோதி புத்தே: ||

‘விடுபடணும் என்பதொன்றே ஈடுபாடாக இருந்து விஷயப்பற்று எல்லாவற்றையும்

நிர்மூலம் பண்ணி, அதனடியாக ஸர்வகர்மாவையும் விட்டு ஸந்நியாஸியாகி எவன் ச்ரத்தையோடுகூட ச்ரவணம் முதலியவைகளில் (முதலியவை என்பது மனன, நிதித்யாஸனங்களைத்தான்) ஸ்திரமாக ஊன்றியிருக்கிறானோ அவன் புத்தியுடைய ராஜஸிக குணத்தை அடியோடு தள்ளிவிடுகிறான்’என்று அர்த்தம். (இங்கே முமுக்ஷுத்வம், ஸந்நியாஸம், அப்புறம் சிரவணம் என்ற ஸாதனா க்ரமமும் வந்துவிடுகிறது) அந்த நிலையில் யுக்தியே அலாதியாக இருக்கும்.

அப்படியே (அந் நிலையில்) அநுபவம் என்பதும் இந்திரிய ஸம்பந்தப்பட்ட- தாயில்லாமல் அந்தராத்ம ஸம்பந்தப்பட்டதாக இருக்கும்.

ப்ரொஃபஸர் பாணியில் சொல்கிறேன் : அந்த யுக்தி ‘ஸூபர்-ராஷன’லாகவும் அந்த அநுபவம் ‘மிஸ்டிக்’காகவும் இருக்கும்!

மனனம் எதற்கென்றால் உபதேசத்தையே திருப்பித் திருப்பி உருவேற்றிக் கொண்டிருந்தால்தான் மனஸ் வேறே ஒன்றுக்கும் இடம் கொடுக்காமல் அதிலேயே நிலைக்கும். இந்த மனனத்தைத்தான் ‘ஆவ்ருத்தி’- ‘உருப்போடுவது’ – என்று ப்ரஹ்மஸூத்ரம் சொல்கிறது. ஹாஸ்யமாக, ‘திரும்பத் திரும்ப உருப்போடணும் என்று திரும்பத் திரும்ப வேதம் சொல்லிருக்கிறது’  –  அஸக்ருத் உபதேசாத்‘ – என்கிறது. எதுவரை இப்படி மனனம் செய்யணும் என்பதற்கு ஆசார்யாளும் ஹாஸ்யமாக பதில் சொல்கிறார். “நெல்லைத் திரும்பத் திரும்பக் குத்தணும்’என்றால் ‘எதுவரைக்கும் குத்துவது?’என்று கேட்பதுண்டா?அரிசிமணி தெறித்து வருகிறவரை குத்த வேண்டியதுதானே?அந்த மாதிரி அவித்யையிலேயிருந்து ஆத்மா தெறித்து வருகிறவரை அதே மனனமாக, ஸ்மரணமாக, த்யானமாகத் திரும்பத் திரும்ப உருட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்’என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸித்திக்கு முன்னிலையில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மாறுபாடான இரு பாவனைகள் வில
Next