Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பட்டி மேய்ந்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

பட்டி மேய்ந்து

தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் பகவான் எப்படிப் பொறுத்துக்கொள்வான்? கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் பெருந்துன்படைந்தாள். அத்துன்பமெல்லாம் தீருமாறு கண்ணன் ஆண்டாள் எதிரில் நின்று சேவை தருகிறான்.

'கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், தோழர்களோடு விளையாடவதையும், அவன்மீது வெய்யில் படாமல் இருக்கக் கருடன் சிறகு விரித்துப் பறப்பதையும், உடலில் வியர்வைத் துளிகள் படிந்த யானைக்குட்டிபோல் கண்ணன் விளையாடுவதையும், சங்கு சக்கரங்களைக் கொண்ட பரமபுருஷன் கேசம் தோளில் புரண்டு அலையும்படி விளையாடுவதையும் விருந்தாவனத்தில் கண்டோம்' என்று கூறுகிறாள் ஆண்டாள்.

முதலை வாய்ப்பட்ட களிறு பகவான் அருளால் மீட்கப்பட்டு துயர் தீர்ந்ததுபோல் ஆண்டாளும் பிரிவுத் துன்பத்திலிருந்து மீண்டுபெருகிழ்வு அடைந்தாள். இப்பத்தும் கூறுவோர் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கவலையின்றி வாழ்வார்.

விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பலதேவனின் தம்பியை விருந்தாவனத்தே கண்டோம்

637. பட்டி மேய்ந்தோர் காரேறு

பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,

இட்டீ றிட்டு விளையாடி

இங்கே போதக் கண்டீரே?-

இட்ட மான பசுக்களை

இனிது மறித்து நீரூட்டி,

விட்டுக் கொண்டு விளையாட

விருந்தா வனத்தே கண்டோமே. 1

கண்ணன் விளையாட்டைக் கண்டோம்

638. அணுங்க வென்னைப் பிரிவுசெய்

தாயார் பாடி கவர்ந்துண்ணும்,

குணுங்கு நாறிக் குட்டேற்றைக்

கோவர்த் தனனைக் கண்டீரே?-

கணங்க ளோடு மின்மேகம்

கலந்தாற் போல,வனமாலை

மினுங்க நின்று விளையாட

விருந்தா வனத்தே கண்டோமே. 2

கருடனது சிறகின்கீழ் வருவானைக் கண்டோம்

639. மாலாய்ப் பிறந்த நம்பியை

மாலே செய்யும் மணாளனை,

ஏலாப் பொய்க ளுரைப்பானை

இங்கே போதக் கண்டீரே?-

மேலால் பரந்த வெயில்காப்பான்

வினதை சிறுவன் சிறகென்னும்,

மேலாப் பின்கீழ் வருவானை

விருந்தா வனத்தே கண்டோமே. 3

வியர்த்து விளையாடும் கண்ணனைக் கண்டோம்

640. கார்த்தண் கமலக் கண்ணென்னும்

நெடுங்கயி றுபடுத் தி,என்னை

ஈர்த்துக் கொண்டு விளையாடும்

ஈசன் றன்னைக் கண்டீரே?-

போர்த்த முத்தின் குப்பாயப்

புகர்மால் யானைக் கன்றேபோல்,

வேர்த்து நின்று விளையாட

விருந்தா வனத்தே கண்டோமே. 4

விருந்தாவனத்தே வீதியில் கண்ணனைக் கண்டோம்

641. மாத வன்என் மணியினை

வலையில் பிழைத்த பன் றிபோல்,

ஏது மொன்றும் கொளத்தாரா

ஈசன் றன்னைக் கண்டீரே?-

பீதக வாடை யுடைதாழப்

பெருங்கார் மேகக் கன்றேபோல்,

iF யார வருவானை

விருந்தா வனத்தே கண்டோமே. 5

உதயசூரியன் போலும் கண்ணனைக் கணடோம்

642. தரும மறியாக் குறும்பனைத்

தன்கைச் சார்ங்க மதுவேபோல்,

புருவ வட்ட மழகிய

பொருத்த மிலியைக் கண்டீரே?-

உருவு கரிதாய் முகம்செய்தாய்

உதயப் பருப்ப தத்தின்மேல்,

விரியும் கதிரே போல்வானை

விருந்தா வனத்தே கண்டோமே. 6

கருநிறக் கண்ணனைக் கண்டோம்

643. பொருத்த முடைய நம்பியைப்

புறம்போ லுள்ளும் கரியானை

கருத்தைப் பிழைத்து நின்றஅக்

கருமா முகிலைக் கண்டீரே?-

அருத்தித் தாரா கணங்களால்

ஆரப் பெருகு வானம்போல்,

விருத்தம் பெரிதாய் வருவானை

விருந்தா வனத்தே கண்டோமே. 7

விளையாடும் கண்ணனைக் கண்டோம்

644. வெளிய சங்கொன் றுடையானைப்

பீதக வாடை யுடையானை,

அளிநன் குடைய திருமாலை

ஆழி யானைக் கண்டீரே?-

களிவண் டெங்கும் கலந்தாற்போல்

கமழ்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,

மிளிர நின்று விளையாட

விருந்தா வனத்தே கண்டோமே. 8

அசுரர்களை அழித்த கண்ணனைக் கண்டோம்

645. நாட்டைப் படையென்று அயன்முதலாத்

தந்த நளிர்மா மலருந்தி,

வீட்டைப் பண்ணி விளையாடும்

விமலன் றன்னைக் கண்டீரே?-

காட்டை நாடித் தேனுகனும்

களிறும் புள்ளு முடன்மடிய,

வேட்டை யாடி வருவானை

விருந்தா வனத்தே கண்டோமே. 9

எம்பெருமான் அடிக்கீழ் வாழ்வர்

646. பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

பரமன் றன்னை, பாரின்மேல்

விருந்தா வனத்தே கண்டமை

விட்டு சித்தன் கோதைசொல்,

மருந்தா மென்று தம்னமத்தே

வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,

பெருந்தா ளுடைய பிரனடிக்கீழ்ப்

பிரியா தென்று மிருப்பாரே. 10

அடிவரவு:பட்டி அனுங்க மால் கார்த்தண் மாதவன் தருமம் பொருத்தம் வெளிய நாட்டை பருந்தாள் --- இருள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்


 

 

 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்ணனென்னும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  இருளிரியச் சுடர்மணிகள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it