Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருமடந்தை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

திருமடந்தை

திரு அரி மேய விண்ணகரம்

அடியார்களின் பகைவர்களை நீக்க விரும்பிய பகவான் ஸ்ரீ தேவி பூதேவியுடன் இந்தத் திவ்விய தேசத்தில் எப்போதும் எழுந்தருளியிருக்கிறான். இத்தலத்தைக் குடமாடு கூத்தர் கோயில் என்றும் கூறுவர். இங்கிருக்கும் பெருமாளுக்குக் குடமாடு கூத்தன் என்று பெயர். திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! அரி மேய விண்ணகரம் வணங்கு

1238. திருமடந்தை மண்மடந்தை

யிருபாலும் திகழத்

தீவினைகள் போயகல

அடியவர்கட் கென்றும்

அருள்நடந்து, இவ் வேழுலகத்

தவர்பணிய வானோர்

அமர்ந்தேத்த இருந்தவிடம்,

பெரும்புகழ்வே தியர்வாழ்

தருமிடங்கள் மலர்கள்மிகு

கைதைகள்செங் கழுநீர்

தாமரைகள் தடங்டொறு

மிடங்கடொறும் திகழ,

அருவிடங்கள் பொழில்தழுவி

யெழில்திகழு நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 1

தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்

1239. வென்றிமிகு நரகனுர

மதுவழிய விசிறும்

விறலாழித் தடக்கையன்

விண்ணவர்கட்கு, அன்று

குன்றுகொடு குரைகடலைக்

கடைந்தமுத மளிக்கும்

குருமணியென் னாரமுதம்

குலவியுறை கோயில்,

என்றுமிகு பெருஞ்செல்வத்

தெழில்விளங்கு மறையோர்

ஏழிசையும் கேள்விகளு

மியன்றபெருங் குணத்தோர்,

அன்றுலகம் படைத்தவனே

யனையவர்கள் நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 2

கம்சனைக் கொன்றவன் கோயில் இது

1240. உம்பருமிவ் வேழுலகு

மேழ்கடலு மெல்லாம்

உண்டபிரான் அண்டர்கள்முன்

கண்டுமகிழ் வெய்த,

கும்பமிகு மதயானை

மருப்பொசித்துக் கஞ்சன்

குஞ்சிபிடித் தடித்தபிரான்

கோயில்,மருங் கெங்கும்

பைம்பொனொடு வெண்முத்தம்

பலபுன்னை காட்டப்

பலங்கனிகள் தேன்காட்டப்

படவரவே ரல்குல்,

அம்பனைய கண்மடவார்

மகிழ்வெய்து நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்கு மட நெஞ்சே! 3

இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது

1241. ஓடாத வாளரியி

னுருவமது கொண்டுஅன்

றுலப்பில்மிகு பெருவரத்த

இரணியனைப் பற்றி,

வாடாத வள்ளுகிரால்

பிளந்தவன்றன் மகனுக்

கருள்செய்தான் வாழுமிடம்

மல்லிகைசெங் கழுநீர்,

சேடேறு மலர்ச்செருந்தி

செழுங்கமுகம் பாளை

செண்பகங்கள் மணநாறும்

வண்பொழிலி னூடே,

ஆடேறு வயலாலைப்

புகைகமழு நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 4

உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்

1242. கண்டவர்தம் மனம்மகிழ

மாவலிதன் வேள்விக்

களவில்மிகு சிறுகுறளாய்

மூவடியென் றிரந்திட்டு,

அண்டமுமிவ் வலைகடலு

மவனிகளு மெல்லாம்

அளந்தபிரா னமருமிடம்

வளங்கொள்பொழி லயலே,

அண்டமுறு முழவொலியும்

வண்டினங்க ளலியும்

அருமறையி னொலியும்மட

வார்சிலம்பி னொலியும்,

அண்டமுறு மலைகடலி

னொலிதிகழு நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 5

தயரதன் மகன் தங்கும் இடம் அரிமேய விண்ணகரம்

1243. வாணெடுங்கண் மலர்க்கூந்தல்

மைதிலிக்கா இலங்கை

மன்னன்முடி யருபதும்தோ

ளிருபதும்போ யுதிர,

தாணெடுந்திண் சிலைவளைத்த

தயரதன்சேய் என்றன்

தனிச்சரண்வா னவர்க்கரசு

கருதுமிடம், தடமார்

சேணிடங்கொள் மலர்க்கமலம்

சேல்கயல்கள் வாளை

செந்நெலொடு மடுத்தரிய

வுதிர்ந்தசெழு முத்தம்,

வாணெடுங்கண் கடைசியர்கள்

வாருமணி நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 6

காமனைப் பயந்த காளையின் கோயில் இதுதான்

1244. தீமனதான் கஞ்சனது

வஞ்சனையில் திரியும்

தேனுகனும் பூதனைத

னாருயிரும் செகுத்தான்,

காமனைத்தான் பயந்தகரு

மேனியுடை யம்மான்

கருதுமிடம் பொருதுபுனல்

துறைதுறைமுத் துந்தி,

நாமனத்தால் மந்திரங்கள்

நால்வேதம் ஐந்து

வேள்வியோ டாறங்கம்

நவின்றுகலை பயின்று,அங்

காமனத்து மறையவர்கள்

பயிலுமணி நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 7

குடமாடு கூத்தனின் இடம் அரிமேய விண்ணகரம்

1245. கன்றதனால் விளவெறிந்து

கனியுதிர்த்த காளை

காருசீர் முகில்வண்ணன்

காலிகள்முன் காப்பான்,

குன்றதனால் மழைதடுத்துக்

குடமாடு கூத்தன்

குலவுமிடம் கொடிமதிள்கள்

மாளிகைகோ புரங்கள்,

துன்றுமணி மண்டபங்கள்

சாலைகள்தூ மறையோர்

தொக்கீண்டித் தொழுதியடு

மிகப்பயிலும் சோலை,

அன்றலர்வாய் மதுவுண்டங்

களிமுதலு நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 8

அரிசரணம் என்று வணங்கும் இடம் இது

1246. வஞ்சனையால் வந்தவள்த

னுயிருண்டு வாய்த்த

தயிருண்டு வெண்ணெயமு

துண்டு,வலி மிக்க

கஞ்சனுயி ரதுவண்டிவ்

வுலகுண்ட காளை

கருதுமிடம் காவிரிசந்

தகில்கனக முந்தி,

மஞ்சுலவு பொழிலூடும்

வயலூடும் வந்து

வளங்கொடுப்ப மாமறையோர்

மாமலர்கள் தூவி,

அஞ்சலித்தங் கரிசரணென்

றிறைஞ்சுமணி நாங்கூர்

அரிமேய விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 9

இவை படிப்போர் தேவராவர்

1247. சென்றுசின விடையேழும்

படவடர்த்துப் பின்னை

செவ்வித்தோள் புணர்ந்துகந்த

திருமால்தன் கோயில்,

அன்றயனு மரன்சேயு

மனையவர்கள் நாங்கூர்

அரிமேய விண்ணகர

மமர்ந்தசெழுங் குன்றை,

கன்றிநெடு வேல்வலவன்

மங்கையர்தம் கோமான்

கலிகன்றி யலிமாலை

யைந்தினொடு மூன்றும்,

ஒன்றினொடு மொன்றுமிவை

கற்றுவல்லார் உலகத்

துத்தமர்கட் குத்தமரா

யும்பருமா வர்களே. 10

அடிவரவு: திருமடந்தை வென்றி உம்பர் ஓடாத கண்ட வாள் தீமன கன்று வஞ்சனை சென்று -- போதலர்ந்த.


 


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சலங்கொண்ட
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  போதலர்ந்த
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it