காசையாடை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

காசையாடை

திருஎவ்வுளூர்

சென்னைக்குச் சுமார் 25 கல் தொலைவில் உள்ளது திருவள்ளூர். இவவூரைத் திருவெவ்வுளூர் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். சாலிஹோத்ர முனிவருக்குப் பகவான் பிரத்யக்ஷமானான். 'நான் சுகமாக வசிக்கக்கூடிய இடம் எது?' (வசிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?) என்று கேட்டான். அதனால் இவ்வூர் எவ்வுளூர் ஆயிற்று. திரு என்பது அடைமொழி. திருவெவ்வுளூர் என்ற தொடர் மருவித் திருவள்ளூர் ஆயிற்று.

இவ்வூரில் இருக்கும் வீரராகவனே கண்ணன் பாண்டவ தூதன் சிறந்த நண்பன், அடியார்களுக்கு இனியன், தேவர்களின் தலைவன். இவனுடைய திருவடிகளில் மலரிட்டு வணங்கினால் உலகை ஆளுமீ தகுதி பெறலாம்.

கலிநிலைத்துறை

கண்ணன் இருக்கும் ஊர் திருஎவ்வுளூர்

1058. காசை யாடை மூடியோடிக்

காதல்செய் தானவனூர்,

நாச மாக நம்பவல்ல

நம்பி நம்பெருமான்,

வேயி னன்ன தோள்மடவார்

வெண்ணெயுன் டானிவனென்று

ஏச நின்ற வெம்பெமா

னெவ்வுள் கிடந்தானே. 1

இராவணனைக் கொன்றவன் கிடக்கும் ஊர்

1059. தைய லாள்மேல் காதல்செய்த

தானவன் வாளரக்கன்,

பொய்யி லாத பொன்முடிக

ளன்பதோ டொன்றும், அன்று

செய்த வெம்போர் தன்னி லங்கோர்

செஞ்சரத் தாலுருள,

எய்த வெந்தை யெம்பெருமா

னெவ்வுள் கிடந்தானே 2

பாண்டவ தூதன் கிடக்கும் ஊர்

1060. முன்னோர் தூது வானரத்தின்

வாயில் மொழிந்து, அரக்கன்

மன்னூர் தன்னை வாயியினால்

மாள முனிந்து அவனே

பின்னோர் தூத னாதிமன்னர்க்

காகிப் பெருநிலத்தார்,

இன்னார் தூத னெனநின்றா

னெவ்வுள் கிடந்தானே.

ஏழு எருதுகளை அடக்கியவன் கிடக்கும் ஊர்

1061. பந்த ணைந்த மெல்விரளாள்

பாவைதன் காரணத்தால்,

வெந்தி றலே றேழும்வென்ற

வேந்தன் விரிபுகழ்சேர்,

நந்தன் மைந்த னாகவாகும்

நம்பி நம்பெருமான்,

எந்தை தந்தை தம்பெருமா

னெவ்வுள் கிடந்தானே.

ஏழுலகும் உண்டவன் கிடக்கும் ஊர்

1062. பால னாகி ஞாலமேழு

முண்டுபண் டாலிலைமேல்,

சால நாலும் பள்ளிகொள்ளும்

தாமரைக் கண்ணன் எண்ணில்,

நீல மார்வண் டுண்டுவாழும்

நெய்தலந் தண்கழனி,

ஏல நாறும் பைம்புறவி

லெவ்வுள் கிடந்தானே.

முனிவர்கள் தொழுதேத்தும் நம்பியின் ஊர்

1063, சோத்த நம்பி யென்றுதொண்டர்

மின்டித் தொடர்ந்தழைக்கும்,

ஆத்த னம்பி செங்கணம்பி

யாகிலும் தேவர்க்கெல்லாம்,

மூத்த நம்பி முக்கணம்பி

யென்று முனிவர்தொழு

தேத்தும், நம்பி யெம்பெருமா

னெவ்வுள் கிடந்தானே.

எல்லோருக்கும் அப்பன் கிடக்கும் ஊர்

1064. திங்க ளப்பு வானெரிகா

லாகி, திசைமுகனார்

தங்க ளப்பன் சாமியப்பன்

பாகத் திருந்த, வண்டுண்

தொங்க லப்பு நீண்முடியான்

சூழ்கழல் சூடநின்ற,

எங்க ளப்ப னெப்பெருமான்

எவ்வுள் கிடந்தானே.

அடியார்க்கு இனியன் கிடக்கும் ஊர்

1065. முனிவன் மூர்த்தி மூவராகி

வேதம் விரித்துரைத்த

புனிதன், பூவை வண்ணனண்ணல்

புண்ணியன் விண்ணவர்கோன்,

தனியன் சேயன் தானொருவன்

ஆகிலும் தன்னடியார்க்கு

இனியன், எந்தை யெம்பெருமான்

எவ்வுள் கிடந்தானே.

இந்திரனுக்கும் தலைவன் கிடக்கும் ஊர்

1066. பந்தி ருக்கும் மெல்விரலாள்

பாவை பனிமலராள்,

வந்தி ருக்கும் மார்வன்நீல

மேனி மணிவண்ணன்,

அந்த ரத்தில் வாழும் வானோர்

நாயக னாயமைந்த,

இந்தி ரற்கும் தம்பெருமா

னெவ்வுள் கிடந்தானே.

மண்ணுலகும் விண்ணுலகும் ஆள்வர்

1067. இண்டை கொண்டு தொண்டரேத்த

எவ்வுள் கிடந்தானை,

வண்டு பாடும் பைம்புறவில்

மங்கையர் கோன்கலியன்,

கொண்ட சீரால் தண்டமிழ்செய்

மாலையீ ரைந்தும்வல்லார்,

அண்ட மாள்வ தாணையன்றே

லாள்வ ரமருலகே.

அடிவரவு-காசை தையல் முன் பந்தைணைந்த பாலன் சோத்தம் திங்கள் முனிவன் பந்திருக்கும் இண்டை-வில்


 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வானவர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  விற்பெருவிழவும்
Next