பத்மபாதரின் ‘பஞ்சபாதிகை’ : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மற்ற ப்ரதான சிஷ்யர்களில் பத்மபாதர் கதை முன்னேயே கேட்டீர்கள். அவர் சாரீரக பாஷ்யத்துக்கு வ்யாக்யானம் எழுதினார். அதில் கொஞ்சம் பாகம் ஆசார்யாளுக்கு வாசித்தும் காட்டினார். அப்புறம் அவருக்கு தீர்த்தாடனத்தில் ரொம்ப ஆர்வம் ஏற்பட்டதால் ராமேச்வரத்துக்குப் புறப்பட்டார். ‘ரிவைஸ்’ பண்ணலாமென்று தம்முடைய புஸ்தகச் சுவடியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

போகிற வழியில் ஜம்புகேச்வரத்தில் அவருடைய மாமா அகம் இருந்தது. அங்கே புஸ்தகத்தை வைத்துவிட்டு திரும்பி வரும்போது எடுத்துக் கொள்ளலாமென்று ராமேச்வரம் போனார்.

இவர் இல்லாதபோது மாமாக்காரர் படித்துப் பார்த்தார். அவர் கர்ம மார்க்க அபிமானி. ‘இந்தப் புஸ்தகம் நம் ஸித்தாந்தத்தை அழித்துவிடும் போலிருக்கே!’ என்று நினைத்தார். ‘ஸரி, புஸ்தகத்தை நாம் அழித்துவிட்டால் போச்சு! மறுபடி எழுதுவானானால் பார்த்துக் கொள்வோம்!’ என்று நினைத்தார்.1

அவருக்கு இரண்டு வீடு இருந்தது. ஒன்று கிலமாயிருந்தது. அதிலிருந்த ஸாமான்களையெல்லாம் இன்னொரு வீட்டில் சேர்த்தார். இந்தப் புஸ்தகத்தை மட்டும் அங்கே வைத்து வீட்டுக்கே நெருப்பு வைத்துவிட்டார்!

பத்மபாதர் ராமேச்வரத்திலிருந்து வந்தார்.

“விபரீதமாக நடந்துவிட்டது!”என்று மாமாக்காரர் வேஷம் போட்டார்.

‘ஸுரேச்வராசார்யாளை ஸந்தேஹித்ததற்காக இது ஆசார்யாளே தந்த தண்டனை! நாம் மறுபடி எழுத வேண்டாம்!’ என்ற எண்ணத்தோடு பத்மபாதர் ஆசார்யாளிடம் திரும்பி வந்தார். விஷயம் சொன்னார்.

ஆசார்யாள், “முந்தி நீ முதல் அத்யாயம் நாலு பாதமும், இரண்டாம் அத்யாயம் முதல் பாதமும் வாசித்துக் காட்டினாயல்லவா? அதைத் திரும்பச் சொல்கிறேன். எழுதிக் கொண்டு ப்ரகாசப்படுத்து. அதாவது லோகத்துக்குக் கிடைக்கட்டும்” என்று அநுக்ரஹம் பண்ணினார்.

ஒரே தடவை எப்பவோ கேட்டதை அப்படியே கடகடவென்று ஒப்பித்தார்!

ஸூத்ர பாஷ்யத்தின் முதல் ஐந்து பாதங்களுக்கு வ்யாக்யானமாதலால் அந்தப் புஸ்தகத்துக்குப் “பஞ்ச பாதிகா”என்று பெயர்.

ஆனால் அதில் லோகத்தில் ப்ரசாரத்துக்கு வந்திருப்பது (ப்ரஹ்ம ஸூத்ரத்தின்) முதல் அத்யாயத்தின் முதல் பாதத்திலுள்ளப் பத்மபாதாசார்யாள் பண்ணியுள்ள வ்யாக்யானம்தான்.

தம்முடைய ப்ரதான மடங்களில் ஒன்றில் பத்மபாதரை ஆசார்யாள் முதல் பீடாதிபதியாக நியமித்தாரென்று நிச்சயமாகத் தெரிகிறது. எந்த மடம் என்பதில் மூன்று விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. த்வாரகையிலுள்ள மடம் என்று பலர் சொல்கிறார்கள். புரி ஜகந்நாத மடம் என்ற அபிப்ராயமுள்ளவர்களும் இருக்கிறார்கள். ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யிலும் ‘ஆனந்தகிரீய’த்திலும் அவரை ச்ருங்கேரியின் முதல் ஆசார்யாளாகச் சொல்லியிருக்கிறது.


1 மறுபடி பத்மபாதர் அந்நூல் எழுதமுடியாதபடி அவரது ஞாபகசத்தியைக் குலைக்க அவருடைய மாமா விஷமிட்டதாக ‘சங்கர விஜய’ங்களில் காண்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஸுரேச்வரரின் தனித்தன்மையும் சிறப்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மௌனஞானி ஹஸ்தாமலகர்
Next