ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மையக் கேள்வி : மெகஸ்தனிஸ் சொல்லும் ‘ ஸன்ட்ர கோட்டஸ் ‘ யார் ? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

வேண்டுமென்று, மனஸறிந்து வெள்ளைக்காரர்கள் நம்முடைய சரித்ர காலங்களை ரொம்பவும் பிற்காலத்துக்கு இழுத்துவிட்டு நமக்குப் புராதனப் பெருமை இல்லாமல் பண்ணியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களையும் ஒரேயடியாகக் குறைசொல்வது ஸரியில்லைதான். அவர்களில் எல்லாருமே பக்ஷபாதிகள் தான் என்று நினைப்பதும் ந்யாயமில்லை. அதனால், அவர்களுக்கும் தெரியாமலே, உள்நோக்கமில்லாமலே, அவர்கள் ஸரியில்லாத ஒரு ஆதாரத்தை ஸரியென்று நிஜமாக நம்பி அந்த அஸ்திவாரத்தின் மேல் காலக் கணக்குகளை நிர்ணயித்திருக்கிறார்களோ என்று தோன்றும் ஒரு விஷயத்தையும் சொல்கிறேன்.

புராதன இந்திய சரித்ரத்தில் ஸர்வ நிச்சயமாக உறுதிப்படுத்தக்கூடிய தேதி என்று ஒன்றை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான் அதற்கு முன் பின்னாகப் பழைய கால நிகழ்ச்சிகளை நிர்ணயித்திருக்கிறார்கள். ஒரு மாதிரி அதுதான் பழைய சரித்ரத்திற்கே key-யாக இருக்கிறது.

அது என்ன?

அலெக்ஸாண்டருக்கு அடுத்தாற்போல் க்ரீஸில் (கிரேக்க நாட்டில்) ஆட்சிக்கு வந்த அவனுடைய ஸேனாதிபதி ஸெல்யூகஸ் நிகேடார் என்பவன் இந்தியாவின்மேல் படையெடுத்தான். ஆனால், பாடலிபுத்ரத்திலிருந்து ஆட்சி பண்ணிக்கொண்டிருந்த மகதச் சக்கரவர்த்தி ஒருவனிடம் தோற்றுப்போனான். இரண்டு பேரும் ஸமாதான உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். விவாஹ ஸம்பந்தம் கூடப் பண்ணிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்புறம் அவன் பாடலிபுத்ர ராஜஸபைக்குத் தன்னுடைய அம்பாஸிடராக (அரசாங்க தூதராக) மெகஸ்தனிஸ் என்பவரை அனுப்பி வைத்தான். அந்த மெகஸ்தனிஸ் இந்தியாவில் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதி வைத்திருக்கிறார். அதுதான் வெள்ளைக்காரர்களுக்கு நம் தேச சரித்ரம் பற்றிக்கிடைத்த முதல் authentic document-ஆக (பூர்ண நம்பிக்கைக்குரிய சாஸனமாக) இருக்கிறது.

அலெக்ஸாண்டர், ஸெல்யூகஸ் நிகேடார், மெகஸ்தனிஸ் முதலியவர்களின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று அவர்களுக்கு ஸர்வ நிச்சயமாகத் தெரியும். அதனால் மெகஸ்தனிஸ் குறிப்பிடும் பாடலிபுத்ர ராஜாவும் அந்தக் காலம்தான் என்று தீர்மானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ராஜா யார்?

Sandracottus என்று மெகஸ்தனிஸ் குறிப்பிட்டிருப்பவன்தான்.

இந்த ஸ்ன்ட்ரகோட்டஸ் மௌர்ய வம்சத்தை ஸ்தாபித்துச் சக்ரவர்த்தியாக இருந்த சந்த்ரகுப்தன் என்று வைத்துக்கொண்டே வெள்ளைக்காரர்கள் நம்முடைய பழைய சரித்ர காலங்களை நிர்ணயிருத்திருக்கிறார்கள். தங்களுக்குத் தீர்மானமாகத் தெரிந்த ஸெல்யூகஸ் நிகேடாரின் ஸமகாலத்தவனான சந்த்ரகுப்த மௌர்யன் கி.மு. நான்காம் நூற்றாண்டின் முன் பாதியில் இருந்தவன் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

அதைக்கொண்டே அவனுக்கு முன்னால் அரசாண்ட நந்த வம்சம், அதற்கு முந்தி ஆண்ட சிசுநாக வம்சம் என்றிப்படியும், அவனுக்குப் பின்னால் மௌர்ய வம்சத்தில் வந்த அவனுடைய பிள்ளையான பிந்துஸாரன், பேரனான அசோகர் முதலானவர்கள், மௌர்யர் வம்சத்துக்கு அப்புறம் வந்த சுங்க வம்சம் முதலானவற்றுக்கும் காலம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

இது ஸரிதானா என்பதே கேள்வி. பெரிய கேள்வி!

‘ஸன்ட்ர கோட்டஸ்’ என்று, அதாவது ‘சந்த்ர குப்தன்’ என்று மட்டும் தான் மெகஸ்தனிஸ் சொல்லியிருப்பது; சந்த்ரகுப்த மௌர்யன் என்று அல்ல. அவன் என்ன வம்சம் என்பதைப் பற்றிச் சொல்லவில்லை. அவனுக்கு முன்னால் நந்த வம்சம் ஆட்சியில் இருந்ததென்றோ, அவனுக்குப் பிள்ளை பிந்துஸாரன் என்றோ எதுவும் சொல்லவில்லை. பாடலிபுத்ரத்தை ‘போலிபோத்ரா’ (Polibothra) என்று சொல்லி, அங்கே இருந்துகொண்டு இவன் ஆட்சி செய்ததாகவும் அப்போது அவனுடைய ராஜ்யம் எத்தனை உன்னத ஸ்திதியில் இருந்தது என்பதையும்தான் விவரித்திருக்கிறார்.

அதனால்தான் கேள்வி வருகிறது. மெகஸ்தனிஸ் சொல்லும் ஸன்ட்ரகோட்டஸ் ஏன் மௌர்ய வம்ச சந்த்ரகுப்தனாக இல்லாமல் குப்த வம்சத்து சந்த்ரகுப்தனாக இருக்கக்கூடாது என்பதுதான் கேள்வி. குப்த வம்சமும் இதே பாடலிபுத்ரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்திருக்கிறது. அதிலே இரண்டு சந்த்ரகுப்தர்கள். இரண்டாமவன் தான் சந்த்ரகுப்த விக்ரமாதித்யன் என்று புகழ் பெற்றவன். மெகஸ்தனிஸ் ஏன் இந்த குப்த சந்த்ரகுப்தர்களில் ஒருத்தருடைய ஆட்சியின்போது இருந்திருக்கக் கூடாது?

புராணங்கள், ராஜதரங்கிணி, நேபாளி வம்சாவளி ஆகியவற்றிலிருந்து மகத தேசத்தை ஆண்ட வம்சங்களின் காலத்தை கணித்துப் பார்த்தால் மெகஸ்தனிஸின் காலமான கி.மு. நாலாம் நூற்றாண்டில் சந்த்ரகுப்த மௌர்யன் இருந்தானென்பது ஸரியாக வரவில்லை. இவற்றிலிருந்து நாம் பெறுகிற விவரப்படி மௌர்ய சந்த்ரகுப்தனுடைய காலம் கிட்டத்தட்ட கி.மு. 1500-ஆக இருக்கிறது1. இப்போது ஓரியன்டலிஸ்டுகள் அவன் ஆட்சிக்கு வந்ததாகச் சொல்லும் கி.மு.-300க்கும் இதற்கும் 1200 வருஷ வித்யாஸம்! ஆசார்யாள் விஷயமாக நாம் சொல்வதற்கும் அவர்கள் சொல்வதற்கும் 1300 வருஷ வித்யாஸம்!

விஷ்ணு புராணத்தில் ஒரு இடத்தில் கலி ஆரம்பத்தில் ஆட்சிக்கு வந்த பரீக்ஷித்துக்கு 1500 வருஷத்துக்கப்புறம் நந்தன் (சந்த்ரகுப்த மௌர்யனுக்கு முன் மகதாதிபதியாயிருந்த மஹாபத்மநந்தன்) பட்டத்துக்கு வந்தானென்று இருக்கிறது2. அதாவது நந்தன் கி.மு. 1600-ல் ஆட்சிக்கு வந்திருக்கிறான். அடுத்தவன் சந்த்ரகுப்தன் என்றால் முன்னே சொன்னதற்குக் கிட்டத்தில்தானே, 3500 வருஷத்துக்கு முற்பட்ட ஸம்பவங்களை கணிக்கும்போது?

இப்படி வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து தெரியவருவதால் மெகஸ்தனிஸ் சொல்வது மௌர்ய சந்த்ரகுப்தனைத்தான் என்று முடிந்த முடிவாகத் தீர்மானம் பண்ணுவற்கில்லை என்றே தோன்றுகிறது.

அந்த ஸ்ன்ட்ரகோட்டஸ் குப்த வம்சத்தின் இரண்டு சந்த்ரகுப்தர்களில் ஒருத்தனாக இருக்க இடமுண்டு என்றும் தோன்றுகிறது.

ரிஸர்ச்காரர்களின் முடிவுப்படி சந்த்ரகுப்த மௌர்யன் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்; குப்த வம்ச சந்த்ரகுப்தர்களில் முதல்வன் கி.பி. நாலாம் நூற்றாண்டின் முற்பகுதி; இரண்டாமவன் அதே நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்தவன்.

அதாவது அதற்கும் இதற்கும் எழுநூறு எண்ணூறு வருஷ இடைவெளி இருக்கிறது.

இந்த எண்ணூறு வருஷ இடைவெளியிலும் இதே போல அநுமானங்களில் பலருடைய காலம் முன்பின்னாகப் போகக் கூடுமாதலால் எண்ணூறு என்பது ஆயிரமாகக்கூட, அதற்கும் அதிகமாகவும்கூட, ஆகலாம்.

ஆக, குப்த வம்ச சந்த்ரகுப்தனே மெகஸ்தனிஸின் காலத்தவன் என்றால் அதற்கு முற்பட்ட நம்முடைய சரித்ர நிகழ்ச்சிகளெல்லாமே சுமார் ஆயிரம் வருஷம் முந்திப் போய்விடும். நம்மவர் சும்மாவுக்காகப் பழம்பெருமை கொண்டாடிக் கொள்ளவில்லை, வாஸ்தவத்திலேயே வெகு புராதனமான காலத்திலிருந்தே நம் தேசத்தில் நாகரிக ஸமுதாய வாழ்க்கை இருந்துதானிருக்கிறது என்று prove ஆகிவிடும்.

வெள்ளைக்காரர்களிடம் நாம் சண்டைக்குப் போக வேண்டாம். ஸர் வில்லியம் ஜோன்ஸ், வில்ஸன் முதலானவர்கள் மெகஸ்தனிஸ் யாரோ ஒரு சந்த்ரகுப்தனைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரென்று கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது நாம் ஸரியாக ஆராய்ச்சி பண்ணிப் பார்க்க நிரம்ப உபகாரம் பண்ணும் ஒரு தகவலாகும். அதனால் அவர்களுக்கு நன்றி தான் தெரிவிக்கணும். மேற்கொண்டு அவர்கள் சொல்வதைக் காரணம் கேட்காமல் நம்பிவிடும் அசடுகளாக நாம் இருப்பதுதான் தப்பு. அவர்களை வையவேண்டாம். ‘நம் தேச ஸமாசாரம் பிறத்தியார் சொல்கிறார்களே! ஸரியாகத் தான், ஸரியான நோக்கங்களோடுதான் சொல்கிறார்களா?’ என்று நாம்தானே ஆலோசிக்க வேண்டும்?

‘குப்த வம்சத்து சந்திரகுப்த விக்ரமாதித்யன் காலத்தில் ஃபா-ஹியன் என்ற சீன யாத்ரிகர் வந்து எழுதி வைத்திருக்கிறாரே, அதனால் அவன் கி.பி. 4-5 நூற்றாண்டுக்காரனாகத்தானே இருக்கணும்? அவனை எப்படிக் கி.மு. வுக்கு கொண்டுபோவது?’ என்று கேட்கலாம். வேடிக்கை என்னவென்றால்: அந்தக் கி.பி. ‘பீரிய’டில் அவர் (ஃபா – ஹியன்) இங்கே வந்து முழுசாக ஆறு வருஷம் பௌத்த ஸ்தலங்களுக்கு யாத்திரை பண்ணிக்கொண்டு, அந்த மத நூல்களைக் சேகரித்துக்கொண்டு, அப்படியே ப்ரயாண விவரங்களை எழுதி வைத்திருப்பது வாஸ்தவந்தான். ஆனால் அவர் அப்போது இங்கே இருந்த எந்த ராஜாவைப் பற்றியும் எதுவுமே சொல்லவில்லை! சந்த்ரகுப்தன் என்ற பெயரோ, வேறெந்த ராஜாப் பெயரோ அவருடைய நோட்ஸில் காணப்படவில்லை! பௌத்த விஷயங்களில்தான் அவருக்கு ‘இன்டரஸ்ட்.’ அதைப் பற்றியே முக்யமாகச் சொல்லும் போது இங்கேயிருந்த ஸமூஹ வாழ்க்கை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால் அவர் வந்த ‘பீரிய’டை வைத்துத்தான் அப்போது தாங்கள் ஏற்கனவே காலநிர்ணயம் பண்ணியிருந்தபடி குப்தவம்ச சந்த்ரகுப்தன் இருந்ததாக ஹிஸ்டரிக்காரர்கள் சொல்லுகிறார்களே தவிர, மெகஸ்தனிஸ் ஒரு ராஜாவின் பெயராகச் சொன்னதைக் கொண்டே அந்த ராஜாவுக்குக் கால நிர்ணயம் பண்ணிய மாதிரி இங்கே இல்லை. ஃபா-ஹியன் வந்தபோது குப்தவம்ச சந்த்ரகுப்தன் தான் இருந்தான் என்று அடித்துக்சொல்வதற்கு ஆதாரமில்லை.

இந்த விஷயத்தில் நான் முழுசாக ஆராய்ச்சிப் பண்ணி விடவில்லை. ‘ஹிஸ்டரி’ விஷயமாக அப்படிப் பண்ண க்வாலிஃபிகேஷனும் இல்லை. அதனால் ஹிஸ்டரி ஸ்காலர்களாக இருப்பவர்கள் இதை நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்கவேண்டும். பெஜவாடாவைச் சேர்ந்த கோடா வேங்கடாசலம் என்பவர் இதில் சற்று ஆழமாகப் பார்த்து ஸன்ட்ரகோட்டஸ் குப்த ராஜாதான், மௌர்யன் இல்லை என்று முடிவு செய்திருக்கிறார். (பிற்பாடு அவர் ஒரு அத்வைத மடத்தில் ஸந்நியாஸியாக ஆனவர்.) மைலாப்பூர் ஆயுர்வேத காலேஜைச் சேர்ந்த கே.ஜி. நடேச சாஸ்த்ரி என்பவரும் ஆராய்ந்து பார்த்து இதே முடிவுக்கு வந்திருக்கிறார்.

இன்னும் சில பேரும் ஸன்ட்ரகோட்டஸ் விஷயமாக இல்லாவிட்டாலும், வேறு புராணங்கள், ராஜதரங்கிணி, நேபாளி வம்சாவளி போன்றவற்றை ஆராய்ந்து, இப்போது சரித்ர புஸ்தகங்களில் சொல்லியிருப்பதற்கு அநேக நூற்றாண்டு, ஆயிரமாண்டுக்கு முன்னேயே நம்முடைய ஆதிகால ஸம்பவங்கள் நடந்தன என்று விவரம் தருகிறார்கள்.

குப்தர்களில் முதல் சந்த்ரகுப்தனுக்குப் பிள்ளையாகவும் இரண்டாம் சந்த்ரகுப்தனுக்குத் தகப்பனாராகவும் இருந்த ஸமுத்ரகுப்தன் தான் ஸன்ட்ரகோட்டஸாக இருக்குமோ என்று எனக்கு (அநுமானம்) ! ‘சந்த்ரகுப்தன்’ என்பதில் முதல் எழுத்து ச (cha). மெகஸ்தனிஸ் சொல்லும் ‘ஸன்ட்ரகோட்ட’ஸில் முதல் எழுத்து ஸ (sa). ஸமுத்ர குப்தன் என்பதுதான் ‘ஸ’வில் ஆரம்பிக்கிறது. க்ரீக் முதலிய மேல்நாட்டு பாஷைகளில் ச-ஸ வித்யாஸம் நன்றாகத் தெரிகிற ஒன்று. ஒரு பெயரில் முதல் எழுத்தாக வருவதையே மெகஸ்தனிஸ் தப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பாரோ?

“அலெக்ஸாண்டர் காலத்து க்ரீஸ் தேசக்காரர்கள் அப்போது Xandrames என்பவன் பாடலிபுரத்தில் ராஜவாயிருந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது யார் என்று நிச்சயம் பண்ண முடியாவிட்டாலும் இங்கே ‘Xandra’ என்பது (‘Sandra’ இல்லை; ‘Xandra’) ‘சந்த்ர’ என்பதைத்தான் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மெகஸ்தனிஸோ ‘Sandra’ என்கிறார்!”

மெகஸ்தனிஸ் நம்முடைய புஸ்தகங்களைப் பார்க்காமல், ஜனங்களின் பேச்சில் வார்த்தைகளைக் கேட்டுத்தான் எழுதியவர். வார்த்தையில் நடுவில் வரும் உயிர் மெய்யெழுத்துக்களைப் பேசிக்கொண்டு போகும் அவஸரத்தில் மெய்யெழுத்துக்களாகவே குறுக்கி விடுவது ஸஹஜம். அதிலும் நம் பெயர்களை வெள்ளைக்காரர்கள் சொல்லும் போது கேட்கவே வேண்டாம்–திருவல்லிக்கேணி ‘ட்ரிப்ளிகேன்’ என்று வரும்போது ‘வல்லி’ என்பது ‘ப்ளி’ யாகவும் ‘கேணி’ என்பது ‘கேன்’ என்றும் ஆகி விடுகிறதல்லவா? இப்படி, ‘ஸமுத்ர’ என்பது நம்முடைய ஜனங்களின் பேச்சு மொழியிலேயே ‘ஸம்த்ர’ மாதிரிதான் ஒலித்திருக்கும். ‘ம்த்’ என்பதைவிட ‘ந்த்’ என்று வருவதே நம்முடைய பாஷைகளின் இயல்பு. ஸம்ஸ்க்ருதத்தில் ‘மந்த’, ‘நந்த’, ‘ஸுந்தர’ போன்ற வார்த்தை அதிகம். நம்முடைய ‘ந்த்’ வெள்ளைக்காரர்களிடம் ‘ன்ட்’ ஆகிவிடும். And, hand, sand என்பதுபோல ‘ன்ட்’ வரும் வார்த்தைகள் மேல்நாட்டு பாஷைகளில் நிறையவுண்டு. அப்படித்தான் ‘ஸமுத்ர’ என்பது நம் ஜனங்களில் பேச்சிலேயே ஸம்த்ர-ஸந்த்ர என்றாகி மெகஸ்தனிஸ் காதில் ‘ஸன்ட்ர’ என்று விழுந்து, அப்படியே அவர் ‘ஸன்ட்ர கோட்டஸ்’ என்று எழுதியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

மொத்தத்தில் இப்படி ஆயிரம் வருஷம் போல எல்லாம் முன்னே பேனால் அப்போது ஆசார்யாள் அவதாரம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் என்பது மட்டும் எப்படி ஸரியாயிருக்கும்? அதுவும் ஆயிரம் வருஷம் முன்னே போய்விடும். புத்தர் காலமும் அவர்கள் (மேல் நாட்டினர்) சொல்லும் கி.மு. ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டுக்கு ஆயிரம் வருஷம் முற்பட்டுபோய்விடும். அதாவது ஆசார்யாள் கி.மு. 6-5 நூற்றாண்டிலிருந்தாலும்கூட புத்தரின் ஸமகாலத்தவரில்லை என்றும், புத்த மதம் நன்றாக வேர் பிடித்துப் பல நூற்றாண்டுகள் தேசத்தில் இருந்த பிறகுதான் அவர் அவதரித்து அதை நிராகரணம் பண்ணினார் என்றும் ஏற்பட்டுவிடும்.

முன்னே நாம் புராணக் காலக் கணக்குப்படி மௌரிய வம்சம் கி.மு. 1500-ல் ஆரம்பித்ததல்லவா? அதற்கு ஸுமார் முன்னூறு வருஷம் முன்னாடி பிம்பிஸாரன் இருந்ததாக மத்ஸ்ய புராணத்திலிந்து தெரிகிறது. பிம்பிஸாரன் அவன் பிள்ளை அஜாதசத்ரு, அப்புறம் ஆட்சிக்கு வந்த மூன்று நாலு ராஜாக்கள், அதற்கப்புறம் மஹா பத்மநந்தன், அவனை அடுத்து மௌர்ய வம்சம் என்று அதில் ஒவ்வொருவருக்கும் ஆட்சிக்காலம் இவ்வளவென்று கொடுத்திருப்பதில் பிம்பிஸாரன் சந்த்ரகுப்த மௌர்யனுக்கு முன்னூறு வருஷம் முற்பட்டவன் என்று ஏற்படுகிறது. அதாவது அவன் கி.மு. 1800-1700க்குள் இருந்தவன். புத்தர் அவன் காலத்தவராகையால் அவரும் அப்போதிருந்தவரே. நம்முடைய தேசத்தை சேர்ந்த மற்ற source-களிலிருந்தும் இதை கோடா வேங்கடாசலம் போன்றவர்கள் confirm செய்திருக்கிறார்கள். ஆகையால் புத்தருக்கு பஹுகாலம் கழித்தே கி.மு. 509-ல் ஆசார்யாள் அவதாரம் என்று ஆகும்.

இது ஒரு பக்கட்டும் இருக்கட்டும். (அதாவது குப்த சந்த்ர குப்தர்களில் ஒருத்தனோ, அவர்களுக்கு நடுவில் வந்த ஸமுத்ர குப்தனோதான் கி.மு. நாலாம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸுக்கு ஸமகாலத்தவனாக இருந்தது என்ற விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.) ஆசார்யாள் காலம் கி.பி. 788-820 என்னும் கட்சிப்படி, அவர் அந்தக் கட்சிக்காரர்களின் அபிப்ராயப்படி மேலே சொன்ன குப்த ராஜாக்களின் காலமான கி.பி. நாலாம்-ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு 350-400 வருஷம் பின்னால் வந்தவர். இந்த இடைக்காலத்திற்குள் குப்த ஸாம்ராஜ்யம் எடுபட்டுப்போய் இன்னம் அநேகம் நடந்து ஹர்ஷவர்தனின் ஆட்சியும் முடிந்து நூறு வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஹர்ஷனைப் பற்றி, மஹாகவியான பாணர் பெரிசாகவே ‘ஹர்ஷ சரித்ரம்’ என்று காவ்யம் பண்ணி வைத்திருப்பதால் அவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து நாற்பது வருஷத்திற்கு மேல் ஆட்சி நடத்தியவன் என்று தெரிகிறது. நம்மூர்க்காரரான பாணர் சொல்வதைக்கண்டு கால நிர்ணயம் பண்ணப் பிடிக்காவிட்டாலும், ஹர்ஷனின் காலத்தில் இங்கே வந்து பதினாறு வருஷம் புத்த ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்ரை பண்ணிய ஹுவான்-த்ஸாங் என்ற சீனாக்காரர் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் இருக்கவே இருக்கின்றன! அதனால் ஹர்ஷன் காலம் அதுதான் (கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதிதான்) என்று ஊர்ஜிதமாகிறது. அதற்கப்புறம் நடந்த ஸமாசாரங்களை ஆயிரம் வருஷம் முந்திக்கொண்டுபோக நியாயமில்லை என்று சொல்லலாம். ‘குப்தர் காலம் வரை வேண்டுமானால் ஆயிரம் வருஷம் முந்திக்கொண்டு போங்கள். எங்கள் கணக்குப்படி அதன்போதே, அதாவது கி.பி. நாலாம் நூற்றாண்டிலேயே ஃபா-ஹியன் என்று சீன யாத்ரிகர் வந்து குறிப்புக்கள் எழுதி வைத்திருக்கிறார். ஆனாலும் அவர் பௌத்த மத விஷயத்திலேயேதான் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் காலத்தில் இருந்த பெரிய பெரிய ராஜாக்களின் பெயரைக்கூடச் சொல்லாமல், ‘தேசமும் அமைதியாயிருக்கிறது; ஜனங்களும் ரொம்ப அமைதியாயிருக்கிறார்கள். பெரிய குற்றங்களே நடப்பதில்லை. பயமில்லாமல் ஒரு கோடிக்கு மறு கோடி ஸஞ்சாரம் பண்ண முடிகிறது. பௌத்த மதம், ஹிந்து மதம் இரண்டுமே அநுஷ்டானத்தில் இருக்கின்றன’ என்று ஜெனரலாகத்தான் கொஞ்சம் சொல்லி முடித்திருக்கிறார். ஆகையால் குப்த ராஜவம்ச கால நிர்ணயத்தில் அவரை ஸம்பந்தப்படுத்தாமல் வேண்டுமானாலும் விட்டுவிடுகிறோம். ஆனால் அப்புறம் ஹர்ஷர், ஹுவான்-த்ஸாங் காலங்கள் நாங்கள் சொல்கிறதுபோல கி.பி. ஏழாம் நூற்றாண்டுதான் என்பது ஸர்வ நிச்சயமான fact. அதை முற்காலத்துக்குக் கொண்டு போவதற்கேயில்லை. இதற்கும் 150 வருஷத்துக்கப்புறம் நாங்கள் ஆசார்யாள் காலத்தைச் சொல்வதால் அதில் கை வைப்பதற்கே இடமில்லை’ என்று சொல்லலாம். ஆனபடியால் அவர்கள் 788-820 என்று ஆசார்யாளின் கால நிர்ணயம் செய்திருப்பதற்கு அநேக காரணங்கள் காட்டுவதாகச் சொன்னேனே, அவற்றையேதான் ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டு ஸரியா தப்பா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.


1 நமது பூர்விக நூல்களின்படிக் கலியுகத் தொடக்கத்திலிருந்து மகதத்தை ஆண்ட வம்சங்களின் காலம் பற்றி அறிஞசர்கள் தரும் விவரம்:

பார்ஹத்ரத வம்சம்  — 22 அரசர் கி.மு. — 3102 – 2096 (கலியின் முதல் 1006 ஆண்டுகள்)
ப்ரத்யோத வம்சம்     — 5  அரசர் கி.மு. — 2096 – 1958
சிசுநாக வம்சம்          — 10  அரசர் கி.மு. — 1958 – 1598
நந்த வம்சம்                 — 2   அரசர் கி.மு. — 1598 – 1498
மௌர்ய வம்சம்        — 12  அரசர் கி.மு. — 1498 – 1182

மௌர்யகளில் முதல்வனான சந்த்ரகுப்தன் கி.மு. 1498-ல் பட்டத்துக்கு வந்ததையே ஸ்ரீ சரணர்கள் ‘கிட்டத்தட்ட கி.மு. 1500’ என்று கூறியுள்ளார்கள்.

2  யாவத் பரீக்ஷிதோ ஜந்ம யாவந்-நந்தாபிஷேசநம் |
ஏதத் வர்ஷ ஸஹஸ்ரம் து ஜ்ஞேயம் பஞ்ச-சதோத்தரம் || (விஷ்ணு புராணம் IV.24. 104)

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 8. நமது சரித்ர ஆதார நூல்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  10. காளிதாஸன் விஷயம்
Next