ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – த்வாரகா ஸ்ரீமடத்தின் சான்று : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்த (காஞ்சி) மடத்து குரு பரம்பரை இருக்கட்டும். த்வாரகையில் ஆசார்யாள் ஸ்தாபித்த மடம் இருக்கிறதல்லவா? அதன் குரு பரம்பரையிலும் இப்படியே கிட்டத்தட்ட ஆதி ஆசாரியாள் காலத்தைச் சொல்லியிருக்கிறது. அங்கே இருந்த ஸ்வாமிகளில் முதலில் சிலருக்கு யுதிஷ்டிர சகாப்தப்படி வருஷங்கள் சொல்லியிருக்கிறது. (கி.மு. 3138ல் ஆரம்பிக்கும் ‘நம்முடைய’ யுதிஷ்டிர சகம்; ஜைன பௌத்தர்களுடையதல்ல.) இப்படி ஆரம்பத்தில் சில பட்டங்களுக்குச் சொன்ன பிறகு மற்றவர்களுக்கு (கி.மு. 57-ல் தொடங்கிய) விக்ரம சகப்படி வருஷம் தந்திருக்கிறது. அந்த லிஸ்டின்படி ஆசார்யாள் ஸித்தியானதாகச் சொல்லியிருக்கும் காலம் கிட்டத்தட்ட நாம் சொல்வதாகவே இருக்கிறது. அதே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுதான். ஆனால் சில வருஷங்கள் முந்தியிருக்கிறது. 2500 வருஷ ஸமாசாரத்தில் சில வருஷம் முந்தி-பிந்தி என்பது பெரிய விஷயமேயில்லை. அதுவும் தவிர போன நூற்றாண்டில் அங்கே பீடாதிபதிகளாக இருந்த ஒருவரே ‘விமர்சா’ என்ற புஸ்தகத்தில் நாம் சொல்கிற கி.மு. 509-ஐயே அங்கீகரித்தும் எழுதியிருக்கிறார்.

இங்கே (காஞ்சி ஸ்ரீமடத்தில்) இதுவரை 68 ஸ்வாமிகள் இருந்திருக்கிறோமென்றால் அங்கே (த்வாரகை ஸ்ரீமடத்தில்) தற்போது (1963) இருப்பவர் 79-வது ஸ்வாமிகள் என்று வரிசையாக குரு பரம்பரை வைத்திருக்கிறார்கள். முதல் ஸ்வாமிகளிலிருந்து ஒவ்வொருவரும் இத்தனாம் வருஷத்திலிருந்து இத்தனாம் வருஷம்வரை பட்டத்தில் இருந்திருக்கிறார்களென்றும், நம் மடத்தைப் போலவே, கணக்கு வைத்திருக்கிறார்கள். இங்கே ஆரம்பத்தில் ஏழு ஸ்வாமிகள் அறுபது வருஷத்துக்கு அதிகமாகப் பட்டத்திலிருந்து கிறிஸ்து சகாப்த ஆரம்பத்துக்கு வருகிறோமென்றால், அங்கே அதற்குள் பதினோரு ஸ்வாமிகள் வந்துவிடுகிறார்கள்! அவர்களில் இரண்டு பேர்தான் அறுபது வருஷத்துக்குமேல் பட்டத்திலிருந்திருக்கிறார்கள்!

இப்படியிருக்கும்போது, ‘அறுபது அறுபது வருஷம் வெட்டிவிடலாம்’ என்றால் எப்படி ஸரியாகும்?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 22. மேற்படி கருத்துக்கு மாற்றுக் கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  24. முக்கிய ஆதாரம்:சங்கர மடங்களிடையே ஒரே கருத்து
Next