மேலப் பாட்டம் வேங்கடாசலபதி
பாளையங்கோட்டை, திருநெல்வேலியிலிருந்து ஒரு புகழ் பெற்ற பகுதியாகும். அங்கிருந்து திருமழைக் கொழுந்துபுரம் - சீவலப்பேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலமே மேலப்பாட்டம். அங்கு வெங்கடாசலபதியின் ஆலயம் மிகவும் புராதனமானது. கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்ள் அதனை நன்குணர்த்துகின்றன. ப்ரதான ஸந்நிதியில் மூலவராக வெங்கடாஜலபதி, ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸேவை ஸாதிக்கிறார். தனிக் கோயில் நாச்சியாளர்களாக ஸ்ரீதேவியும், பூதேவியும் எழுந்தருளி இருப்பது இக்கோயிலின் விசேஷ அம்சம். உற்சவர் ஸ்ரீநிவாசர், பத்மாவதி, அலர்மேல்மங்கை என்ற இரு தேவியருடன் காட்சி அளிக்கின்றார்.
மூலவருடைய ஸந்நிதியிலேயே ஸ்ரீராமபிரான், ஸீதை, லக்ஷ்மணனுடன் உற்சவ மூர்த்தியாக இருக்கிறார். ஸ்ரீராஜகோபாலனுடனும், ருக்மணியுடனும் அழகாகக் காட்சி தருகிறார்கள். மற்றும் உற்சவ மூர்த்த்திகளாக ராமானுஜர், மணவாள மா மூனிகள், ஆழ்வார்கள், விஷ்வக்ஸேனர் உள்ளனர். நம்மாழ்வாரின்
உற்சவமூர்த்தி கொள்ளை அழகுடன் நம்மைக் கவர்திழுக்கின்றார். ப்ராகாரத்தில் தனி ஸந்நிதியில் ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார்.
ப்ராகாரத்திலேயே திருமலை ஸ்ரீநிவாசன் என்ற மற்றொரு மூலவர் ஸ்ரீதேவி,
பூதேவியுடன் எழுந்தருளி இருக்கின்றார். இந்த மூர்த்திகள் அருகிலுள்ள மலையில் கண்டெடுக்கப்பட்டவை என்று தெரியவருகிறது. நெல்லைத் திருவேங்கடவன் திருத்தலங்களில் இந்த மேலப்பாட்டமும் ஒன்று. புரட்டாசி மாதம் ஸ்ரீநிவாசருக்கு ப்ரஹ்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருடஸேவை அன்று நிறைய பக்தர்கள் வருவதாகத் தெரிகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளிலும் ஸ்ரீநிவாசரைக் காண மக்கள் திரண்டு வருகிறார்களாம். வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கு விசேஷமாக நடைபெறுவதாக அறிகிறோம்.
எழில்மிகு நம்மாழ்வாரின் மூர்த்தி இக்கோயிலில் உறைவதனால் அவரது திருமலை மங்களாசாசனப் பாசுரத்தையே இங்கு நினைவில் கொள்வோம்.
சோதியாகி எல்லாவுக்கும் தொழும்
ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ
வேதியர் முழுவேதத்த முதத்தைத்
தீதில் சீர்த் திருவேங்கடத்தானையே