தெலை வில்லிமங்களம் தேவப் பிரான்.
திருக்குளந்தையிலிருந்து சிவராம மங்களம் என்ற கிராமத்தைக் கடந்து இந்த திவ்ய தேசத்தை அடையலாம். தாமிரபரணி வடகரையில் அமைந்துள்ள இடம் இது. இந்தக் கோயிலும், அரவிந்தலோசனர் கோயிலும் சேர்ந்து இரட்டைத் திருப்பதி பெயரினைப் பெற்று ஒன்றாகக் கருதப்படுகின்றன. இதன் ஸ்தல வரலாறு ப்ரும்மாண்ட புராணத்தில் உள்ளது. குபேரனால் சாபமடைந்த தேவனும் அவன் மனைவியும் தராசாகவும், வில்லனாகவும் மாறி இருந்தனர். சுப்ரபர் என்ற முனிவர் யாகம் செய்ய முற்பட்ட போது அவர்கள் சாபம் விலகியதால் இத்தலம் தொலைவில்லிமங்களம் என்ற பெயர் பெற்றதாம். இந்திரன், வருணன், வாயு பகவான் ஆகியோராலும் வணங்கப்பட்ட திவ்ய தேசமாம் இது.
மூலவராக ஸ்ரீநிவாசர் தேவபிரான் என்ற திருநாமத்தோடு நின்ற திருக்கோலத்தில் சாளக்கிராமத் திருமோனியில் ஸேவை ஸாதிக்கிறார். உற்சவர் ஸ்ரீநிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி ஸஹிதம் காட்சி அளிக்கிறார். தனித்தாயார் ஸந்நிதி இல்லை. கம்பத்தடியான் ஸந்நிதி என்ற ஒன்றும் தனியாக உள்ளது. இதனைக் கேது ஸ்தமாகக் கருதுகின்றனர். இரண்டு திருப்பதிகளுக்கும் சேர்த்து நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.
இந்தத் தேவ பிரான் நம்மாழ்வாருக்குத் தாயாகவும், தந்தையாகவும் காட்சி அளித்ததால் அவரும் மனமுருகி,
சிந்தையாலும் சொல்லாலும், செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய்யென்றடைந்த வண்குருகூர்ச் சசடகோபன்
என்று ஸ்ரீநிவாசரைப் போற்றி நிற்கின்றார்.