திருமலைவையாவூர் ப்ரஸன்ன வேங்கடேசர்
சென்னை மாநகரத்திலிருந்து சுமார் 75 A.e. தொலைவில் அமைந்துள்ள தலமே திருமலைவையாவூர், செங்கற்பட்டிலிருந்து வேடந்தாங்கள் செல்லும் வழியில் 12 A.e. தொலைவில் உள்ளது. திருப்பதி போன்றே இதுவும் வராஹ க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. இங்கும் ஆதிமூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீவரதராஜப் பெருமாளே. ப்ருகு முனிவர் பெருமாளை லக்ஷ்மி வராகர் கோலத்தில் காண விரும்பியதால் இப்பதியில் பகவான் அவ்வண்ணமே எழுந்தருளினார். பிற்காலத்தில் இடையர் குலத்தில் தோன்றிய கோனார்கள் இவருக்காகத் திருவேங்கடவன் கோலத்தில் பகவான் காட்சி அளித்து இந்தத் தலத்தையே இருப்பிடமாகக் கொண்டார் என்பது ஸ்தல வரலாறு கூறும் உண்மைகள்.
முகமதியர் படையெடுப்பின்போது, ஸ்ரீவைகுண்டம் என்ற பாண்டிய நாட்டுத் திருப்பதியைச் சேர்ந்த கள்ளபிரான் என்ற உற்சவமூர்த்தி பாதுகாப்பிற்காக இந்த ஸ்தலத்தில் எழுந்தருளினார். அவரோடு ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார், செல்வர் ஆகியோரும் இங்கு வந்து கோவில் கொண்டுள்ளனர். தக்ஷிண சேஷகிரி, தென் திருப்பதி, வராஹ புரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில் ஒரு சிறிய மலையில்
அமைந்துள்ளது. 200 படிகள் ஏறி இந்த வேங்கடவனை ஸேவிக்க வேண்டும். இப்போது வாகனப் பாதை போடப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் வராஹ புஷ்கரிணி என்ற திருக்குளம் இருக்கிறது. இம்மலையை வேங்கடவன் திருமேனியாகவே கருதுகிறார்.
முதலில் நாம் ஆதி மூர்த்தியாக ஸ்ரீ லக்ஷ்மி வராஹரை வணங்கிய பின்னரே மற்ற ஸந்நிதிகளுக்குச் செல்ல வேண்டும். ஸ்ரீலக்ஷ்மிவராஹர், ஐந்து தலைப் பாம்பான ஆதிசேஷன், தம் இடது பாதத்தைத் தாங்குமாறு அழகாக அமைத்துள்ளார். இடது மடியில் ஸ்ரீமஹாலக்ஷ்மி அமர்ந்திருக்க, சதுர்புஜ தாரியாக சக்கரம், சங்கு ஏந்தி, ஸ்ரீ வராஹர் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் கோதண்டராமரும், வேணுகோபாலரும் ஸந்நிதி கொண்டுள்ளார்கள். ஸ்ரீவராஹமூர்த்தியே ஆதி மூர்த்தி என்பதனால் அவருக்கு நேரெதிரில் த்வஜஸ்தம்பம் உள்ளது. கோதண்டராமர் ஸீதை, லக்ஷ்மணரோடு காட்சி அளிக்க,
வேணுகோபாலன் ருக்மணி, ஸத்யபாமா ஸமேதராக எழுந்தருளி இருக்கிறார்.
ப்ரதான ஸந்நிதிக்கு மிக அருகில் மூவராக அலர்மேல் மங்கைத் தாயார் கோவில் கொண்டுள்ளார். கல் இழைத்த ஆபரணங்கள் அவர் எழிலுக்கு எழில் கூட்டுகின்றன. உத்ஸவராகப் பத்மாவதித் தாயார் கருணையே உருவாகக் காட்சி தருகிறார். ப்ராகாரத்தில் மூலவராக ஆண்டாள் எழுந்தருள, ஆழ்வார்கள் ராமானுஜர், விஷ்வக்சேனர் உள்ளனர். ப்ரதான ஸந்நிதியில் மூலவராக ஸ்ரீப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள் திருமலைப் பெருமாளைப்போன்றே காட்சி தருகிறார். உற்சவராக ஸ்ரீநிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகின்றார்.
ஸந்நிதியிலிருந்து மற்றொரு புறம் ஸ்ரீவைகுண்டதிலிருந்து வந்துள்ள ஸ்ரீகள்ளபிரான் எழிலாக ஸ்ரீதேவி. பூதேவி காட்சி அளிக்கிறார். ஆண்டாள் உற்சவர், சக்கரத்தாழ்வார், செல்வர் ஆகியோர் ப்ரதான ஸந்நிதியில் உள்ளனர். ஸ்ரீப்ரசன்ன வேங்கடேசரின் தசாவதார மாலையும், கல் இழைத்த ஆபரணங்களும் நம்மைக் கவரந்து இமை கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கச் செய்கின்றன.
தனி ஸந்நிதியில் ஸ்ரீஸுதர்ஸன ஆழ்வார் 16 வகையான ஆயுதங்களைக் தாங்கிக் காட்சி அளிக்கிறார். இந்த ஸந்நிதியில் விஜயவல்லி நாயிகா ஸமேத ஸுதர்ஸனர் என்று எழுதப்பட்டுள்ளது. அவரை ஒட்டிப் பிணைத்து ஸ்ரீ யோக நரசிம்மர் காட்சி தருகிறார். இந்த சக்கரத்தாழ்வார் புறப்பட்டுச் செல்லும் நிலையில் காட்சி அளிப்பது விசேஷம். அவர் ஸந்நிதியில் ஒரிடத்தில் நின்று பார்த்தால் கண்ணாடி வழியே கோபுர விமான தரிசனம் கிடைக்கிறது. ப்ராகார வலம் வரும்போது ஆஞ்சநேயருக்குத் தனி ஸந்நிதி உள்ளது. சில படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். இவர் தவிர மலைஅடிவாரத்தில் ப்ரவேச கட்டத்தில் வீர ஆஞ்சனேயர் ஆஜானுபாகு தோற்றத்துடன் எழுந்தருளியிள்ளார்.
ஸ்ரீநிவாச நிகேதனம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி, ஸ்ரீஸீதாராமஸ்வாமிகள் என்பவர் திறம்பட இக்கோவில் நிற்வாகத்தை இயக்கி வருகிறார். ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக அவர் குழுவினருடன் திருமலைவையாவூர் வந்து ப்ரஹ்மோத்ஸவ திருவிழாவில் கலந்து கொள்கிறார். இங்கு ராமநவமி, ஸுதர்ஸன
ஜெயந்தி, ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகிய உற்சவங்களும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. போக்குவரத்தினைச் சிறிது அதிகரித்து சாலையை நன்கு செப்பனிட்டால் ஸேவார்த்திகளுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்.