மலைவளம் நிரம்பிய கொல்லி நகர் என்ற திருத்தலத்தில் திடவிரதன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் திருமாலடியவன். புத்திரப் பேறு குறித்துத் தவம் செய்தான். திருமாலின் பேரருளால் புதல்வன் பிறந்தான். அவனுக்குக் குலசேகரன் என்று பெயரிட்டான்.
குலசேகரர் இளமையிலேயே முற்றுக் கல்விக்கற்று, தக்க பருவம் அடைந்தபின், அரசு மேற்கொண்டார். அரசாட்சி செய்த நாளில் அவருக்குச் செல்வத்திலும் இன்பத்திலும் வெறுப்பு மீதூர்ந்து வந்தது. பற்றற்றானாகிய பரமனிடம் பற்று வளர்ந்து வந்தது. பரமனின் பக்தர்களிடம் எல்லையற்ற மதிப்பும் உண்டாயின. திருமாலடியவர்களை எல்லாம் ஒன்றுக்கூட்டுவதும், அவர்களை வணங்கி உபசரிப்பதும், திருமாலின் திவ்ய குணங்களைச் செந்தமிழ்ப் பாக்களிலே பாடுவதுமாகப் பொழுதைப் போக்கினார். அரசியற் காரியங்களை அமைச்சர்கள் கவனிக்குமாறு விட்டுவிட்டார்.
இவரது பற்றற்ற நிலையைக் கண்டு, அமைச்சர்கள் மனங்கலங்கினார்கள். இவர் மனத்தை மாற்றியவர்கள் திருமாலடியவர்களே என்று வெறுப்புக் கொண்டு ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.
குலசேகரனின் பூஜாகிருகத்திலுள்ள ஆபரணப் பெட்டியியிருந்து ஒரு ரத்தின மாலையையை எடுத்து மறைத்து அது காணாமற் போய்விட்டதாக மந்திரி தெரிவித்தான். அதைப்பற்றிக் குலசேகரரும் சிந்தித்தார். மந்திரி, ''திருமாலடியவர்களே இக்களவுக்குக் காரணம்''என்று தன் கருத்தை கூறினான். மற்றவர்களும் அதே அபிப்பிராயம் தெரிவித்தார்கள். குலசேகரர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. மந்திரி முதலானவர்கள் கூறியபடி திருமாலடியவர்கள் மீது பழி ஏற்ப்பட்டதை மனம் பொறுக்காதவரானார். உடனே பாம்பு அடைக்கப்பட்ட ஒரு குடத்தை எல்லாருக்கு முன்பும் கொணர்ந்து வைக்கச் செய்தார். ''திருமாலடியவர்கள் களவு செய்யவில்லை என்பது உண்மை''என்று கூறி அக்குடத்திற்குள் கையிட்டார். உடனே நடுநடுங்கிய மந்திரி முதலானவர்கள் குலசேகரர் முன் வணங்கி மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு தாம் மறைத்த மாலையையும் முன் வைத்தார்கள்.
குலசேகரர் அவர்கள் செயலைக் கண்டு முன்னிலும் பன் மடங்கு அரசியல் வெறுப்புற்று அன்றே தம் மகனுக்கு முடிசூட்டித் தாம் துறவுபூண்டுத் திருவரங்கம் நோக்கிச் சென்றார்.
திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமானிடம் பெரும் பற்றுக் கொண்டு பாடி மகிழ்ந்து வாழ்ந்தார். அப்போதுதான், 'முகுந்தமாலை'என்ற ஸ்தோத்திரத்தை அருளினார். அதன்பின் 'இருளிரியச் சுடர்மணிகள்'என்று தொடங்கும் பாடல்களைப் பாடியருளினார்.
அதன்பின் அந்நகரம் விட்டுத் திருவேங்கடமலை அடைந்தார். அங்கே பல நாள் தங்கி உள்ளமுருகப் பாடி, 'ஊனேறு செல்வம்'முதலான பாடல்களை அருளினார். அங்கே சில நாட்கள் தங்கி ஆயற்பாடி, திருக்கண்ணபுரம் முதலிய பல தலங்களையும்அடைந்து, சித்திர கூடப்பர்வதம் சென்று இராம அவதாரச் சிறப்பைப் பத்துப் பாடலாகச் செய்தருளி ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அத் தலத்தில் வாழ்ந்து திருமால் பொற்பாதங்களில் ஒன்றானார்.
இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவித்
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டென்
கண் இணைகள் என்றுகொலா களிக்கும் நாளே.
ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்
ஆனே றேழ்வென்றான் அடிமைத் திறமல்லால்,
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே