இ ன்று ஓர் நன்னாள் குருவாரம். ஸ்ரீபால பெரியவர்கள் உடனிருந்து சுகிக்க கிடைத்த நாள்.
மாலையில் தயாராக இரு. ஸ்தோத்திர புத்தகம் கையில் இருக்கட்டும் என உத்திரவு ஆகியது. கரும்பு தின்ன கூலியா? தயாரானேன்.
பெரியவர்கள் வண்டியில் அடி அமர்ந்து அவர்களின் சொற் பெருக்கை சுவைத்தேன். மனதில் எண்ணம் எழுந்தது. கூறியவற்றை எல்லாம் தொடுத்து யாவரும் பயன் பெற அளிக்க வேண்டும் என்ற அவா. பெரியவர்களிடம் அனுமதி கோறினேன்.
சிவபுராணத்தில் மணிவாசகப் பெருந்தகை முடிக்கும்போது சிவபெருமானுக்கு '' சொல்லற்கு அரியானை '' என்று ஒரு அடைமொழி அளிக்கிறார்கள். இதற்கு சொற்களால் வருணித்து கூற இயலாதவன் என்று பொருள். சிறிய '' K '' க்கு பதிலாக பெரிய '' P '' போட்டால் பொருள் மாறிவிடும், '' சொல்லவதற்கு அறியான் '' என்றாகி விடும் இதற்கு '' சொல்லுவதற்கு தெரியாதவன் '' என்று பொருள் வரும். எல்லாம் அறிந்த பரம் பொருளுக்கு சொல்லத் தெரியாது என்று சொல்லலாமா எனக் கேட்டால் அப்படியும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. அவருக்கு ''இல்லை''எனச் சொல்லத் தெரியாது. கேட்டவர்க்கு கேட்டபடி இல்லை எனச் சொல்லாமல் வாரி வழங்குபவன் இறைவன், அந்த வகையில் அவன் சொல்லத் தெரியாதவனே.
பரமேஸ்வர வடிவாய் பக்தர்கட்கு அருள்பாலிக்கும் பாலபெரியவர்கள் இல்லை எனச் சொல்லத் தெரியாதவர்கள். கேட்ட அனுமதியினை உடன் வழங்கினார்கள். '' காஞ்சியிலிருந்து கர்னூல் வரை '' என தலைப்பும் தெரிவித்தேன், அங்கீகரித்தார்கள். அது மிகவும் நீண்ட பயணம் என்பதால் அதற்கு தயார் செய்து கொள்ள காலதாமதம் ஆகும். அந்த பயணத்தை உங்களுடன் விரைவில் பங்கிட்டுக் கொள்வேன். இன்றைய குறுகிய பயணத்தினை பெரியவர்களின் ஆசியோடு உங்களுக்கு அளிக்கின்றேன்.
திருமால்பூர் என்ற கிராமம் காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் 13 A.e. தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து 5 A.e. மேற்கே திரும்பி போக வேண்டும். திருமால்பூர் என்று ஒரு புகைவண்டி நிலையமும் உள்ளது. இந்த கிராமத்திற்கு '' திருமால் பேருற்ற ஊர் '' என்று பழமை காலத்தில் பெயர் இருந்திருக்கிறது. இது நாளடைவில் மறுவி '' திருமால்பூர் '' என்று குறுகியுள்ளது. இந்த கிராமத்தில் மிகப் பழமையான கோயில் உள்ளது.
கோயில்கள் மூவகைப்படும் இறைவனே மனம் கனிந்து தான்தோன்றியாக (ஸ்வயம்புவாக) வெளிப்பட்டு பக்தர்கட்கு அருள்பாலிப்பது முதல் வகை. முனிவர்களும் ரிஷிகளும் இறைவனை ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து அவர்கள் பூஜை செய்து வழிப்பட்டது இரண்டாவது வகை. அரசர்கள் போன்ற மனிதர்களால் இறைவனுக்காக எழுப்பப்பட்ட கோயில்கள் மூன்றாம் வகை.
இறைவனின் அடியார்கள் தலம் தோறும் சென்று வழிபட்டு இறைவனை புகழ்ந்து பாடிய தலங்களுக்கு பாடல் பெற்ற தலம் என்பார்கள். தலத்திற்கு போகாமலேயே அந்த தலத்தைப் பற்றிய பாடல்களைப் பாடி இருப்பின் அத்தகைய தலத்திற்கு வைப்புத் தலம் என்று அழைப்பார்கள்.
திருமால் பேருற்ற ஊர் முதல் வகை தலம். நாயன்மார்களில் ஞானசம்பந்தரும் அப்பர் அடிகளும் வந்து தொழுது பாடிய பாடல் பெற்ற தலம். இவற்றிற்கும் மேலாக இந்த தலத்துடன் தொடர்பு கொண்ட வரலாற்றினை ஆதிசங்கர பகவத்பாதர்கள் தங்களின் சிவானந்தலஹரியிலும் தசஸ்லோகியிலும் குறிப்பிட்டு புகழ்ந்து பாடி இருப்பது மேலும் சிறப்பைச் சேர்க்கின்றது. பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் வரலாற்றினை சொல்லும்போது செப்பறிய புகழ்பாலித் திருநதியின் தென்கரை போய் மைப்போலியும் கண்டர் திரு மார்பேறு மகிழ்ந்திறைஞ்சி என இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் சென்று வழிபட்ட வரலாற்றினை சுட்டிக் காட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தின் வடக்கே அந்த காலத்தில் ஓடிய பாலாற்றின் தென்கரையில் இந்த தலம் இருந்தது. காலப்போக்கில் நதி தன் போக்கை மாற்றி தற்போது காஞ்சிபுரத்தின் தெற்கே பாலாறு ஓட இந்த தலம் பாலாற்றின் வடக்கே அமைந்துவிட்டது.
இந்த தலத்தின் சிறப்பு இங்கு திருமால், தான் இழந்த சக்கரப்படைக்காக தவம் இருந்து வழிப்பட்டு சக்கரப்படையை மீண்டும் பெற்றார் என்பது. தினமும் இறைவனை ஆயிரம் தாமரை மலர் கொண்டு அர்ச்சித்து பூஜை செய்து வந்துள்ளார் திருமால். கண்களை மூடி வெளியில் தோன்றும் உருவத்தை உள்ளத்தில் கண்டு மகிழ்ந்து ஒவ்வொரு மலராக எடுத்து இறைவனின் பாதகமலங்களில் அர்ப்பணித்து வரும்போது ஒரு மலர் கைக்கு உடன் கிடைக்காமல் ஒதுங்கி விட குறித்த நேரத்தில் சொல்லுகின்ற நாமா முடிவதற்கு முன்னால் மலரிட்டு அர்ச்சிக்க வேண்டும் என்பதாலும், மூடிய கண்களைத் திறந்தால் உள்ளத்தில் கண்டு கொண்டிருக்கும் இறைவனின் காட்சி மறைந்துவிடுமே என்ற கவலையினாலும், திருமால் மலருக்காக காத்திராமல் தனது வலது கண்ணை எடுத்து தாமரை மலராக அர்ப்பணித்து ஆயிரமாவது நாமத்திற்காக மறுகண்ணையும் பறிக்க போக இறைவன் தடுத்தாட்கொண்டு இழந்த கண்ணையும் அளித்து ''தாமரைக் கண்ணன்''என்றப் பெயரையும் அளித்து அவருக்கு அவருடைய ''ஸுதர்சன'' சக்கரப்படையையும் மீண்டும் அளித்தார் என வழங்குகிறது தல புராணம். இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் மற்ற எந்த சிவன் கோயிலிலும் இல்லாத அம்சமாக மூல ஸ்தானத்திற்கு முன்னால் திருமால் ஒரு கையில் மலரும், மற்றொரு கையில் கண்ணும், இரண்டு கைகளையும் கூப்பித் தொழுகின்ற நிலையில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு 21-06-02 வெள்ளிக்கிழமை காலை 7.30 க்கு மேல் 9 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடக்க இருக்க கும்பாபிஷேகத்திற்கு பூர்வாங்கமாக நடைபெறும் யாகங்களில் பங்கேற்று இறைவனையும் வழிப்பட்டு பக்தர்களையும் ஆசீர்வதித்து அருள்பாலிக்க ஸ்ரீபால பெரியவர்கள் இந்த தலத்திற்கு விஜயம் செய்தார்கள்.
சிறிய கிராமத்திற்கு பெரிய கோயில். மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரப்படுகிற கோயில். அருள்மிகு அஞ்சனாட்சி அம்மை உறை அருள்மிகு மணிகண்டேஸ்வரர் இங்கு கோயில் கொண்டு அன்பர்கட்கு அருள்பாலித்து வருகிறார்.
திரளாக குழுமி இருந்த மக்கள் வெள்ளத்திற்கு ஸ்ரீபால பெரியவர்கள் நீண்டதொரு அருளாசி வழங்கினார்கள். அவர்கள் ஆற்றிய உரையின் சாரம்:-
''பூஜை இரண்டு விதம். நமக்காக நாம் இறைவனை வழிபாடு செய்து பூஜை செய்வது, இதற்கு ஆத்மார்த்த பூஜை எனப் பெயர். பொது மக்களுக்காக பொது இடத்தில் நடைபெறும் பூஜைக்கு பரார்த்த பூஜை என்று பெயர். கோயில்கள் பொதுவானது;பக்தியினால் நடக்காத காரியம் ஏதுமில்லை. ஆதிசங்கரர் பக்தியின் சிறப்பைச் சொல்லும் போது கண்ணப்பனின் பெருமையைச் சொல்லி அவனின் வாய் நீர் புனித கங்கையாகவும், தலையில் சூடி இருந்த மலர்கள் இறைவனுக்கு உகந்த மலர்களாகவும், அவன் சுவைத்து கொணர்ந்த இறைச்சி சிறந்த நைவேத்யமாகவும் ஆயிற்று எனில் அவனின் அசஞ்சலமான பக்தியன்றோ காரணம் என வியக்கின்றார். இறைவன் சொற்படி நடந்தால் இறைவன் தானே வந்து காட்சி தருவதுடன் கோறும் வரத்திற்கேற்ப தங்கி யாவருக்கும் அருள்பாலிக்கிறார் என்பதை பண்டரி புர புண்டலீகன் கதை தெளிவுப்படுத்துகிறது. பல அவதாரங்களை எடுக்கும் விஷ்ணு தரும வழி மாறி நடப்பவர்களை அழிக்கிறார். அவரை காக்கும் கடவுள் என்கிறோம். ஆனால் தன்னுடைய மௌனத்தால் மக்களின் தீய எண்ணங்களையே அழித்து நல் ஞானத்தை அளிக்கும் பரமேஸ்வரனை அழிக்கும் கடவுள் என்கிறோம். அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை அளித்து யாவரையும் கடைதேற்ற நல்லதையே செய்வதால்தான் அவருக்கு சிவன் என்று பெயர். சிவ விஷ்ணு பேதம் என்பது கிடையாது. இரண்டும் ஒன்றே. ஒன்றே பலகாரணங்களுக்காக பலவாக தோற்றமளிக்கிறது என்கின்ற உண்மையினை யாவரும் உணர்ந்து பேதமின்றி அவரவர் குலதர்மபடி நெற்றியில் அவரவர் மத சின்னங்களை (நாமமோ, விபூதியோ, குங்குமமோ) வெட்கமின்றி தரித்துக் கொள்ளவேண்டும். படிக்காமலேயே பல பாடல்களை தேவையற்று வாய் முணு முணுக்குகையில் இறை வணக்கப் பாடல்களை படித்து நெஞ்சு உருக பாடினால் மிகுந்த பயனளிப்பதுடன் எங்கும் எளிதில் கிடைக்காத மன அமைதி கிடைக்கும்.
இந்த சாரமுள்ள பேச்சு யாவர் உள்ளங்களையும் மிகவும் கவர்ந்தது. பேச்சு முடிந்து பெரியவர்கள் எழுந்து மேடையைவிட்டு இறங்கிவிட்டார் என்பது கூட உணராத நிலையில் பேச்சிலே தோய்ந்து தங்களை மறந்த நிலையில் மக்கள் இருந்தது கண்கொள்ளா காட்சி.
யாவரும் சென்று வழிபட ஏற்ற தலம். பெரியவர்கள் சென்று வழிபட்டு புனித தலத்தை மேலும் புனித மாக்கி வந்துள்ளார்கள்.
நீங்களும் சென்று வழிபடலாமே.
காஞ்சிபுரம்
21-06-02 இராமாயணம்