விரிஞ்சிபுரம் : விரிஞ்சிபுரம் திருத்தலம் தமிழ்நாட்டின் ஒரு முக்யமான சுற்றுலா மையமாக உருவாகிப் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்று ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி

விரிஞ்சிபுரம் :

விரிஞ்சிபுரம் திருத்தலம் தமிழ்நாட்டின் ஒரு முக்யமான சுற்றுலா மையமாக உருவாகிப் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்று ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆகிய மஹனீயர்கள் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கர மடத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆற்காடு மாவட்ட அன்பர்கள் கூட்டத்தில் விரிஞ்சிபுரம் திருத்தலத்தைப் பல வகைகளிலும் அபிவிருத்தி செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பிறகு, விரிஞ்சிபுரம் வளர்ச்சி GF (Virinchipuram Development Fund) என்ற பெயரில் முறைப்படி GF திரட்டி அபிவிருத்திப் பணிகளை ஆர்காடு சங்கர பகவத் பாத சமிதி மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. கிருஷ்ணசாமி, மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

வேலுர் மாவட்டத்தில் வேலூர் மாநகருக்கு மேற்கே சுமார் 10 மைல் தொலைவில் விரிஞ்சிபுரம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப் பழைய திருத்தலங்களில் ஒன்று. சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம், காஞ்சீ புராணம், காளத்தி மான்மியம், அருணகிரி புராணம் ஆகிய நூல்களில் இந்தத் திருத்தலம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

விரிஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிசங்கரரின் பீஜாட்சர பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை உடையது ஆகும்.

இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை ஸமேத மார்கபந்தீஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். இந்தியாவில் சிறந்து விளங்கும் 1008 சிவத்தலங்களில், எல்லா விசேஷங்களும் பெற்று விரிஞ்சிபுரம் விளங்குகிறது என்பதை உணர்த்தும் வகையில், ஒரு மஹா லிங்கத்தில் 1008 சிவலிங்கம் இந்தத் திருத்தலத்தில் அமைந்து திகழ்கிறது.

திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற சிவபெருமானின் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மானிடப் பிறவி எடுத்து மார்கபந்து ஈஸ்வரனின் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக இறைவன் முடியை வளைத்து அருளிய பெருமைக்குறிய தலம் இது. ஆதி சைவர் குலத்தில் சிவ சர்மன் என்ற பெயருடன் தோன்றிய பிரம்மா இங்கு சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதோசம், சிவதீ¬க்ஷ ஆகியவற்றை பெற்றார்.

தனபாலன் என்ற வணிகருக்குச் சிவபெருமான் வழித் துணையாக வந்து அருளினார். எனவே தான் இங்கு இறைவனின் பெயர் மார்கபந்து ஈஸ்வரர்

அல்லது வழித்துணை நாதர் விளங்குகிறது.

இந்தத் திருத்தலம் தேவார வைப்புத் தலமாகவும், அருணகிரி நாதர், கிருபானந்த வாரியார் போன்ற அருளாலர்களின் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

மஹான் அப்பைய தீக்ஷிதர் மார்கபந்து ஸ்தோத்திரம், மார்க்க சகாய லிங்க ஸ்துதி ஆகியவற்றை வழங்கி இருக்கிறார். மார்க சகாய லிங்க ஸ்துதி பெரும் ஆற்றல் வாய்ந்தது என்பதை அனுபவமிக்கவர்கள் தெரிவிக்கிறார்கள்.

விரிஞ்சிபுரத்தைப் பற்றி 18 கல்வெட்டுகள் தென்னிந்தியக் கல்வெட்டுப் பகுதிகளில் அரசினரால் பிரதிகள் எடுக்கப்பட்டுள்ளன. விஜய நகர மன்னர்கள் பல சாசனங்களும், பல்லவ மன்னர், சோழ மன்னர், சம்புவராய மன்னர் ஆகியோர் வழங்கியுள்ள சாசனங்களும் இந்தக் கல்வெட்டுகளில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. விரிஞ்சிபுரத்தின் தொன்மையையும், சிறப்பையும் இந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன.

விரிஞ்சிபுர சிற்பக் கலை சிறப்புக்கு ஒரு சான்றாகவும் விளங்குகிறது. இங்கு விசேஷமான தீர்த்த கட்டங்கள் உள்ளன. பிரம்ம தீர்த்தம் ஆலயத்திற்கு வெளிப் பிராகாரத்தில் பெரிய தடாகமாக அமைந்துள்ளது.

சிம்ம தீர்த்தம் பெரும் மகிமை வாய்ந்தது. இதற்கு கௌரீ தீர்த்தம் என்றும் பெயர். இது விரிஞ்சிபுரத்திற்குத் தனிச்சிறப்பை அளிப்பது. இது ஆலயத்தில் முதல் பிராகாரத்தில் தென் கிழக்கே உள்ளது. ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக இது அமைந்துள்ளது. குழந்தைகள் இல்லாதவர்கள் சிம்ம தீர்த்தத்தில் நீராடி, ஈர உடையுடன் ஆலயத்தில் படுத்துறங்கி பகவானின் அனுக்ரஹத்தைப் பெற்றால், அடுத்த வருடமே அவர்களுக்குத் குழந்தை பிறக்கும். இந்த உண்மையை இந்தத் தலத்தின் பல பெரியவர்களும், பயன் பெற்றவர்களும் தெரிவிக்கிறார்கள்.

சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் ஆகியவையும் உள்ளன. அவற்றில் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நன்மைகளும் பெறுவார்கள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

விரிஞ்சிபுரத்தில் பல விசேஷ உற்சவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. சித்திரா பௌர்ணமியில் வசந்த விழா, ஆனி உத்திரத்தில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம், பத்து தினங்கள் தேரோட்டத்துடன் ஆடிப்பூர விழா, புரட்டாசியில் நவராத்திரி கொலு, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் பிரம்மேற்சவம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

கார்த்திகை மாதத்தில் கடை ஞாயிறு பெரு விழா இந்தத் திருத்தலத்தின் தனிச் சிறப்பான உற்சவம். அன்றைய தினம் பாலக பிரம்மாவான சிவ சர்மனுக்கு இறைவன் உபநயன சிவ தீ¬க்ஷ அருளிய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

விரிஞ்சிபுரம் எல்லா வகைப் பெருமைகளையும் கொண்ட ஒரு திருத்தலம். இதனைச் சமய அளவிலும், சமுதாய நோக்கிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளி இருக்கிறார்கள். அன்பர்கள் விரிஞ்சிபுரம் வளர்ச்சி நிதிக்கு நன்கொடைகளை வழங்கலாம்.