உலகத்து மக்களாய்ப் பிறந்த அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அடைய விரும்பி முயலும் பயன்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இந் நான்கனுள்ளும் அடங்குவனவாம். இவற்றுள் ஒன்றையே அடைய முயல்பவரும் ஒன்றன்மேல் பலவற்றை அடைய முயல்வாரும் எனப் பலதிறப்படுவர் மக்கள் என்க. எனினும் இவர் எல்லாராலும் ஒத்த பான்மையாக விரும்பப்படுவதும் முயன்று தேடப்படுவதும் ஆகிய ஒரு பயன் இன்பமே என்பதில் ஐயமில்லை. இவ்வாறு எல்லாரும் அடைய விரும்பும் இன்பமும் வெவ்வேறு மக்களிடையே வெவ்வேறு கருத்தளவாக இருக்கும் என்பதும், அதனை அடைய அவர் கைக்கொள்ளும் வழியும் வெவ்வேறாக இருக்கும் என்பதும் அநுபவத்திற் காணப்படுவதாம். ஆயினும், சுகாநுபவ வாழ்க்கையாகிய இம்மை இன்பத்தையே தேடுகிறவரும், நித்தியானந்த வாழ்வாகிய மறுமை இன்பத்தையே தேடுகிறவரும், இம்மையின்பத்தோடு மறுமை இன்பத்தையும் தேடுகிறவரும் என மக்களை முத்திறப் படுத்தலாம். இவர் ஒவ்வொருவரும் விரும்பிய இன்பப் பயனை அடைவதற்குப் பொருள் இன்றியமையாத துணைக்காரணமாம். அதனால், பொருள் தேடுதலை எல்லாரும் விரும்புவர். இப்பொருள் இருமையின்பங்களையும் பயப்பது. அது,
' முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் '
எனவும்,
' அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு ' (குறள், 247)
எனவும்,
' அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு ' (குறள், 753 )
எனவும் வருவனவற்றாலும் அறியப்படும்.
இவ்விதமாய் இம்மை மறுமைப் பயன்களுக்குத் துணை செய்வதாகிய பொருளைத் தேடுங்கால் அறத்தின் வழிநின்றே தேடுதல் வேண்டும். அற (தரும) வழியை விட்டு, வஞ்சம் கொடுமை அநீதி முதலிய அதர்ம வழியில் பொருள் தேடுவோர் ஈற்றில் அப் பொருளை இழந்தும் அப் பொருள்வாயிலாக அவர் அடைய விரும்பிய இன்பத்தையும் இழந்தும் துன்புறுதலை உலகாநுபவத்திற் காண்கிறோம்; ஆதலின், இவ்வுலக இன்பம் ஒன்றையே அடைய விரும்புவோரும் தருமமல்லாத வழியிற் பொருள் தேடுதலை முற்ற ஒழித்தல் வேண்டும் என்பது வெளிப்படையாம். தருமவழியாவது தம் வாழ்க்கைமுறையில் அன்பையும் அருளையும் கடைப்பிடியாகக் கொண்டு செயல் செய்யும் வழி என்பது. உறவு, சிநேகம் முதலிய தொடர்புப் பற்றி ஒரு வரிடத்துக் கொள்ளும் பற்றாகிய அன்பும், அவ்விதத் தொடர்பின்றியும் வறுத்தமுறும் உயிர்களிடத்துப் பொதுவாகக் கொள்ளும் பற்றாகிய அருளும் அறத்தின் பாற்படும் என்று அறிக.
இதனால், பொருளும் இனப்முமாகிய இருபயனையும் தீதின்றிப் பெறுவதற்கு அறம் இன்றியமையாத துணையாகற்பாலது என்பது மறுக்கொணாத உண்மையாம். அறம்,பொருள்,இன்பம் என அறத்தை முதற்கண் வைத்துச் சொல்லும் முறைமையும் இச்சிறப்பு நோக்கியே. இதனை,
' சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்து வழீபடூஉந் தோற்றம் போல .' ( புற. செய்யுள்31 )
(இ. ள். சிறப்புடை முறையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோற்றும் காட்சி போல.)
என்பதனாலும் அறியலாம். நாம் நமது வாழ்க்கையில் அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒழுகிப் பொருளையும் இன்பத்தையும் தேடி, இவை வாயிலாக வீடுபேற்றை அடைய முயலுதலே இப்பிறவியினாலாம் பயனென்று அறிதல் வேண்டும். மேலும், இல்வாழ்க்கை என்னும் தேரைச் செலுத்திச் செல்லும்போது, அதில் பூட்டியுள்ள பொருள், இன்பம் என்னும் இரண்டுயானைளும் மதங்கொண்டு அடங்காமல் நம்மையும் தேரையும் நல்வழியினின்று புறம்பே காட்டுள் இழுத்துச்சென்று பாவப் படுகுழிகளில் விழுத்தி அதோகதி அடையச் செய்யாதிருக்கும்படி, அறம், வீடு என்னும் இருமருங்கிலும் அரணான இருசுவர்களாக அமைய, அவற்றைத் துணையாகக் கொண்டு இடைப்பட்ட செந்நெறி பற்றி ஒழுகுதல் நமது கடனாகும் என்னும் குறிப்பு அறம் பொருள் இன்பம் வீடு என்னும் முறைவைப்பினால் அறியக்கிடப்பது எனக் கொள்ளுதலும் பொருத்தமுடைத்து