இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 9 புது அக்ரஹாரம் பட்டாபிராமர் த ஞ்சை மாவட்டத்தில் கல்யாணபுரத்திற்கும் திருவையாற்றிற

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

9. புது அக்ரஹாரம் பட்டாபிராமர்

ஞ்சை மாவட்டத்தில் கல்யாணபுரத்திற்கும் திருவையாற்றிற்கும் இடையில் அமைந்துள்ள கிராமமே புது அக்ரஹாரம். ஸத்குரு தியாகராஜர் வழிபாடு செய்த பட்டாபிராமனின் கோவில் இந்த இடத்திலேயே உள்ளது. வயது முதிர்ந்த பட்டாசாரியார் இந்த கோவிலில் ஸேவை செய்து வருகிறார். புது அக்ரஹாரத்திற்கு பஞ்சநத மோகனாம்பாள்புரம் என்று பெயர் இருந்ததாம். ப்ரஸன்ன ஆஞ்சனேயரையும், ஸந்நிதி கருடனையும் வணங்கி ப்ரதான ஸந்நிதிக்குச் செல்ல வேண்டும். மூலவராக ராமபிரான் அமர்ந்த திருக்கோலத்தில் இடப்புறம் ஸீதாபிராட்டியும் அதே கோலத்தில் காட்சி. வலது புறம் பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லக்ஷ்மணர் ராமருடைய வில்லோடு தன் வில்லையும் தாங்கியவாறு காட்சி. இதனையே நாம் குடந்தை ராமஸ்வாமி கோவிலிலும் காணலாம்.

ராமபிரானின் மடித்து வைக்கப்பட்ட வலது தொடைக்குக் கீழே ஆஞ்சனேயர் மண்டியிட்டு ராமபிரானின் திருவடியை இடது கரத்தால் தொட்டுக்கொண்டு, வலது கரத்தால் வாய்பொத்தி வினய பாவத்தில் காட்சி அளிக்கிறார். மாருதி தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். உற்சவ மூர்த்திகளில் பட்டாபிராமனாக ராமர் ஸீதாப்பிராட்டியோடு அமர்ந்த கோலத்திலேயே உள்ளார். உற்சவராக ராமரை வீற்றிருந்த கோலத்தில் நாம் காண்பது அரிது. இதனால் இவர் இங்கு ஞானகுருவாக வழிபடப்படுகிறார். நின்றகோலத்தில் அவரைச் சுற்றி பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன, அனுமன் உள்ளனர். தனியாக ஆஞ்சனேயமூர்த்தி ஒரு திருகரத்தில் ஜபமாலையும், மற்றொரு திருகரத்தில் ராமாயண புஸ்தகத்தையும், வீணையும் தாங்கிக் காட்சி அளிக்கிறார். மற்றும் ஆழ்வார்கள், தேசிகர், ராமானுஜர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் மட்டும் ஸந்நிதியில் உள்ளனர். இவர்களின் மூல மூர்த்திகளின் ஸந்நிதி தனியாக உள்ளது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனின் மஹாராணியான மோகனாம்பாள் நிர்மாணம் செய்தது புது அக்ரஹாரக் கோவில், திருவையாறு பஞ்சனதீஸ்வரர் கோவில் கொண்டு விளங்கிய பட்டாபிராமனை தஞ்சை மஹாராணி தான் புதிதாக நிர்மாணித்த புது அக்ரஹாரக் கோவிலில் குடியேறச் செய்து கண்ணாரக் கண்டு களித்ததாக வரலாறு கூறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இன்றும் தர்மஸம்வர்தினி அம்பாள் ஸந்நிதிக்கு எதிரில் ஓர் ஆஞ்சனேயர் தனிக்கோவில் உள்ளது. இது வடகலை ஸம்ப்ரதாய கோவில்.

வால்மீகி மாமுனிவரின் ஸ்ரீராமாயணப் பட்டாபிஷேக வர்ணனைப்படியே இடது கரத்தை முழங்காலில் வைத்த ராமபிரான் வலக்கரம் ஞானமுத்திரையாகக் கொண்டது இங்கு தான். இந்த ராமபிரானை ஞானகுருவாக வரித்தவர் ஸ்ரீ ஸத்குரு தியாகராஜஸ்வாமிகள். இந்த ராமபிரானிடமே அவர் பக்தர்களின் இஷ்டநலன்களைப் பூர்ணமாக அளித்துக் காக்கும்படி வேண்டினராம்.

ஸ்ரீ ராமநவமி தினத்தில் ஸத்குரு தியாகப்ருமத்தின் அழைப்பை ஏற்று வந்து ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் இந்தப் பட்டாபிராமனைக் கண்டு மகிழ்ந்து மாமவபட்டாபிராம என்ற மணிரங்கு கீர்த்தனையை இயற்றினாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.