இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 21 சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் செ ன்னை மாநகரில் மிகவும் புகழ் பெற்ற த்யாகராய நகர

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

21. சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்

செ ன்னை மாநகரில் மிகவும் புகழ் பெற்ற த்யாகராய நகரில் பேரூந்து நிலையத்திற்கே உள்ள மேட்லி சாலையிலிருந்து சுரங்கப்பாதை வழியே வந்து இடது புறம் திரும்பினால் அஹோபிலமடம் ஓரியண்டல் பள்ளியை அடுத்து அமைந்துள்ள இவ்வாலயத்தை அடையலாம். இந்தத் தெருவிற்கே கோதண்டராமர் கோவில் தெரு என்றுதான் பெயர். சில காலத்திற்கு முன் குடமுழுக்கு செய்யப்பட்டு இப்போது அழகாகவும், சுத்தமாகவும் இக்கோவில் காட்சி அளிக்கிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரப்ரதேசத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் மடத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் இது என்றறிகிறோம். இக்கோவில் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் என்று பலகை அறிவிக்கிறது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை.

ஆலயத்தில் நுழைந்ததும் நாம் காண்பது சஞ்சீவி மலையைக் தூக்கிக் கொண்டு வடக்கு நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டு ஸேவை ஸாதிக்கும் ஆஞ்சனேயஸ்வாமியின் மூலவர் திருக்கோலத்தையே. அழகான உற்சவரும் அங்கேயே எழுந்தருளியுள்ளார். அடுத்து வருவது மடப்பள்ளியும், திருக்கல்யாண மண்டபமும். ஆஞ்சனேயர் தர்சனம் முடிந்ததும் நாம் மேற்கு நோக்கி தாயார் ஸந்நிக்கு வருகிறோம். என்ன, ராமபிரான் கோவிலில் தனி தாயார் ஸந்நிதியா என்ற ஐயம் எழுகிறது. இங்குத் தனிக் கோவில் நாச்சியாராக உறைபவர் அரங்கநாயகித் தாயாரே. இவர் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அரங்கனின் நாச்சியார். அரங்கநாயகித்தாயார் எழிலாக வீற்றிருந்த திருக்கோலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் காட்சி அளிக்கிறார்.

அதற்குப் பின் லந்நிதி கருடனை ஸேவித்துப் ப்ரதான ஸந்நிதி மண்டபத்திற்குச் சென்றால், வலதுபுறம் ஸ்ரீரங்கநாதர் சிறிய பாலசயனராக நம்மைக் கொள்ளை கொள்ளும் கிடந்த வண்ணத்தில், சேஷசயனத்தின் மேல் காட்சி அளிக்கிறார். நாபியில் ப்ருஹ்மாவும், அருகில் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் போக சயனராக இவர் உள்ளார். இதேபோன்று சிறிய மூல மூர்த்தியாக வந்தவாசி என்ற ஊரில் ஒரு அரங்கனை ஸேவிக்கலாம். ஸந்நிதிலேயே உற்சவராக ரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராகக் காட்சி. ப்ரதான ஸந்நிதிக்கு இடப்புறம் தனி ஸந்நிதியில் எழுந்தருளியிருப்பவர் யோக ந்ருஸிம்ஹர். இவர் தனியாக மூலவராக வீற்றிருக்கிறார். உற்சவராக நின்ற கோலத்தில் ப்ரஹ்லாத வ்ரதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை தருகிறார். மற்றும் ஸந்நிதியில் அழகான நர்த்தன கண்ணனின் உற்சவமூர்த்தியும் உள்ளது. இக்கோவிலுக்குத் திருநீர்மலை ரங்கநாதரே எழுந்தருளி ஸேவை ஸாதித்திருப்பாகத் தகவல் அறிகிறோம்.

ப்ரதான ஸந்நிதியில் உறைபவர் சக்கரவர்த்தித் திருமகனாகிய கோதண்டராமரே. வலதுபுறம் ஸீதாப்பிராட்டியுடனும், இடப்புறம் லக்ஷ்மணருடனும் நின்ற திருக்கோலத்தில் அவர் காட்சி. இந்த மூலவருக்கு முன்புறம் சிறிய சிறிய அளவில் பட்டாபிராமர் பத்ராசலத்தில் மஹான் ராமதாஸருக்குக் காட்சி அளித்த கோலத்திலேயே எழுந்தருளி இருக்கிறார். மடியில் ஸீதையை அமர்த்திக் கொண்டு, லக்ஷ்மணன் பரதன், சத்துருக்கனனுடன் ஸேவை ஸாதிப்பது கண்கொள்ளாக் காட்சி. இவரே முதலில் இந்தக் கோவிலில் எழுந்தருளிய மூர்த்தி என்பதால் இக்கோவிலை அப்போது '' தட்சிண பத்ராசலம் '' என்றே அழைத்து வந்தனராம். உற்சவராகக் கோதண்டராமர் நின்ற திருக்கோலத்தில் வலப்புறம் ஸீதை, இடப்புறம் லக்ஷ்மணனுடன் ஸேவை தருகிறார். மற்றும் உற்சவ மூர்த்திகளாக பஞ்சபேரர்களும், சக்கரத்தாழ்வாரும் உள்ளனர். பட்டாபிராமர் காலடியில் மிகச் சிறிய ஆஞ்சனேயர் அமர்திருப்பது மிகவும் விசேஷம். தென்கலை ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த கோவிலான இது, இந்து அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றறிகிறோம்.

குலசேகராழ்வார் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் ஸேவை அளிக்கிறார். '' மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே '' என்று ராமபிரானுக்கு தாலாட்டு பாடிய செம்மல் அல்லவா அவர்?அவரை அடுத்து சேனை முதல்வர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் உள்ளனர். உடையவர் ராமானுஜரும், மணவாள மாமுனிகளும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் காட்சி தருகின்றனர். எழில் ததும்பத் தனி ஸந்நிதயில் ஆண்யாள் நாச்சியார் மூலவராக, மற்றும் உற்சவராக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். திருப்பாவை முப்பதும் ஆண்டாள் ஸந்நிதியில் அழகாக எழுதப்பட்டுள்ளன. ஆண்டாள் ஸந்நிதி ப்ராகாரத்திற்கருகில் அத்திகிரி அருளாளர் வரதராஜப் பெருமாள், பெருந்தேவித்தாயாருடன் மஹா நவமி உற்சவத்தன்று அளிக்கும் சேர்த்தி ஸேவையை புகைப்படமாக யாரோ அன்பளிப்பாக வைத்திருப்பது நம்மைக் கவர்கின்றது. பரமபத வாசலும், வாஹன மண்டபமும் இக்கோவிலில் உள்ளன. ஆண்டு முழுவதும் கோவிலில் நடைபெறும் உற்சவாதிகளை விவரித்து ஒரு பத்திரிகையை சேவார்த்திகளுக்கு வழங்குகின்றனர். ஆடிப்பூரம், மாசிப்பூரம், ஸ்ரீ ராமநவமி, நவராத்ரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திர விழாக்கள் இவற்றில் முக்யமானவை. மற்றும் பெருமாள், தாயார் இவர்களின் நக்ஷத்ரம் தனியாகப் பலகையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது. அமளி நிறைந்த சென்னை மாநகரில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்தக் கோவில் நம்மை மிகவும் ஆனந்தப்பட வைக்கின்றது. திருப்புல்லாணி கடற்கரையில் தொடங்கிய ராமபிரான் திருத்தலயாத்திரை கடற்கரைத்தலமான சென்னை நிறைவு பெறுகின்றது.

''மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாப்தயே

சக்கரவர்த்தி தனுஜாய ஸார்வபௌமாய மங்களம்''.