இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 19 திருநின்றவூர் ஏரி காத்த ராமர் செ ன்னை நகரத்திலிருந்து சுமார் 30 A e தூரத்தில் உள்ள திரு

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

19. திருநின்றவூர் ஏரி காத்த ராமர்

செ ன்னை நகரத்திலிருந்து சுமார் 30 A.e. தூரத்தில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்ட தலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும். திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன் புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.

ஏரியின் கரை உடைந்து அடிக்கடி வெள்ளம் ஊரை அழித்தபோது, அவ்வூரில் இருந்த ஆங்கிலேய ஆளுனர் மதுராந்தகம் வரலாற்றினைக் கேள்விப்பட்டு, ராமபிரானை வேண்ட, ஏரியின் வெள்ளம் கரைக்குள் அடங்கிற்று என்று இவ்வூர் ஸ்தல புராணம் கூறுகின்றது. வாக்களித்தபடி ஆங்கிலேயரும் ராமபிரானுக்குத் தனிக் கோவிலை நிர்மாணித்துக் கொடுத்தாராம். இங்ஙனம் பிற மதத்தினரையும் அரவணைக்கும் கருணை வள்ளல் கடல் வண்ணனான ராமரல்லால் வேறெவர் உள்ளனர்?இந்தக் கோவிலும் மதுராந்தகம் போன்றே '' ஏரிகாத்த ராமர் கோவில் '' என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரிக்கு வருணபுஷ்கரிணி என்று பெயர்.

ஏரிகாக்கும் எம்பிரானும் கோதண்டராமராக கம்பீரமான தோற்றத்தில் நெடிது உயர்ந்து 6 அடிக்கும் மேலாகக் காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்புறம் ஸீதாதேவியும், இடப்புறம் லக்ஷ்மணனும் உள்ளனர், மூலவராக. உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. ஆஞ்சனேயர் ஸந்நிதி பக்தவத்ஸலப் பெருமாளுக்கு எதிரில் உள்ளது. நின்ற வண்ணத்தில் இந்த ராமபிரான் தைலத் திருகாப்புத் திருமேனியாகத் திகழ்வது விசேஷமாக உள்ளது. பெரும்பாலும் தைலகாப்பு திருமேனி கிடந்த வண்ணருக்கே.

'' காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

ஆராவமுதனைப் பாடிப்பற ! அயோத்தியர்

வேந்தனைப்பாடிப் பற !''

என்ற பெரியாழ்வாரின் '' உந்திப் பறத்தல் '' பாசுரமே நினைவுக்கு வருகிறது. எல்லையற்ற கடலினையே அடைத்து இலங்கை சென்று பிராட்டியைச் சிறைமீட்ட ராமபிரானுக்கு இந்த ஏரியைக் கரைக்குள் அடைத்துக் காத்தல் என்ன கடினமான தொழிலா என்ன? இந்த ஏரி காத்த ராமனை மழையில்லாத நாட்களில் வேண்டினால் மழை பெய்யும்;அதிகமழை பெய்து துன்பங்கள் ஏற்படும் போது, அவை பகலவனைக் கண்டபனிபோல் விலகி ஓடும் என்பது இவ்வாலயம் உணர்த்தும் உண்மை.