இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 18 திருப்புட்குழி விஜயராகவர் செ ன்னையிலிருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் சுமார் 90 A e த

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

18. திருப்புட்குழி விஜயராகவர்

செ ன்னையிலிருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் சுமார் 90 A.e. தூரத்தில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரிலேயே இந்த தலம் அமைந்துள்ளது. காஞ்சியிலிருந்து 13 A.e. தொலைவில் உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்துடன் வேகவதி நதியின் கரையில் அமைந்துள்ள இது ஸத்யவ்ரத க்ஷேத்ரம். விஜயகோடி விமானத்தையும், ஜடாயு தீர்த்தத்தையும் உடையது. இந்தக் கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும் என அறிகிறோம். தென்கலை ஸம்ப்ரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு தினமும் முறைப்படி திருவாராதனம் நடைபெறுகின்றது. பாண்டிய, விஜயநகர மன்னர்கள் நிறைய திருப்பணி கோவிலுக்குச் செய்துள்ளனர். 1999-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப் பெற்று ஆலயம் புதிதாகவும் தூய்மையாகவும் விளங்குகிறது.

இந்தத் தலம் நூற்றெட்டு திவ்ய தேசங்களில் தொண்டைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகும். ராமாவதாரத்துடன் தொடர்புடைய இத்தலத்தைப் பற்றி வாமனபுராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது. ராவணன் ஸீதாப்பிராட்டியை அபகரித்துப்போன பின்னர் அவனை எதிர்த்து இறக்கைகளை இழந்து பரிதவித்த ஜடாயுவிற்கு ராமபிரான் இத்தலத்தில் முக்தி அளித்து அந்திமச் சடங்குகள் செய்ததாக அப்புராணம் கூறுகின்றது. தர்ப்பணம் செய்ய பூமியைக் கீறியபோது ராமருக்காக கங்கையே ஊற்றாக வந்ததாகவும், அந்த தீர்த்தத்திற்கு ஜடாயு தீர்த்தம் என்று பெயர் வழங்கலாயிற்று என்றும் வரலாறு சொல்கிறது. இன்றும் கோவிலுக்கு எதிரே வலப்புறம் அத்தீர்த்தம் உள்ளது. இதனால் இந்தத் தலத்திற்கு திருப்புள்குழி என்ற பெயர் ஏற்பட்டது. இதே வரலாறு குடந்தை அருகிலே உள்ள புள்ளபூதங்குடி திவ்யதேசத்திலும் பேசப்படுகிறது. ராமபிரான் விஜயராகவனாக இங்கு ஜடாயுவுக்குக் க்ரியை செய்யும் நிலையில் எழுந்தருளி இருக்கிறார். ஜடாயுவை சந்தித்ததும் ராவணனைப் பற்றிய செய்தி கிடைத்ததால், அதுவே அசுர ஸம்ஹாரத்திற்கு வித்திட்டது என்ற காரணத்தினால் இந்த ராமபிரான் போர் செய்யும் முன்னரே விஜயராகவனாக ஆகிவிடுகிறார்.

இங்கு மூலவராகவும், உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார் விஜய ராகவர். மூலவர் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி ஸேவை ஸாதிக்கிறார். அவர் தமது தொடையின் மேல் ஜடாயுவை வைத்துக்ரியை செய்த வண்ணம் காட்சி. தகனக்ரியை நடந்த இடமாதலால் இது ருத்ர பூமியாகக் கருதப்பட்டு ராமபிரான் விஷ்ணு ரூபமாகச் சங்கு, சக்ரதாரியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். வலது திருவடி கீழே தொங்க விடப்பட்டும், இடது திருவடி மடங்கிய நிலையில் வலது தொடையில் ஜடாயுவைத் தாங்கித் தகனக்ரியை செய்ததாகப் புராண வரலாறு கூறுகின்றது.

அக்னியின் வெப்பமும், ஜடாயு உயிர் நீத்த தாபமும் தாங்காத ஸ்ரீ தேவி பகவானின் வலதுபுறத்திலிருந்து, இடது புறத்திற்குச் சென்றமர்ந்துள்ளார். எந்த தாபத்தையும், துன்பத்தையும் பொறுக்கவேண்டிய பூமாதேவி வலப்புறம் எழுந்தருளியுள்ளார். இதனால் தனி ஸந்நிதியில் கோவில் கொண்டு இருக்கும் மரகதவல்லித் தாயாரும் விஜயராகவரின் இடது பக்கத்திலேயே எழுந்தருளி இருக்கிறார். மூலவரின் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவியும், பூதேவியும் திருமுகத்தைச் சிறிது சாய்த்து வைத்துள்ளனர். இரண்டு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஒருவர் விஜயராகவர், ஸ்ரீ தேவி, பூதேவியுடன், மற்றவர் யாகபேரர். தனி ஸந்நிதிகளில் கருடாழ்வார், ஆண்டாள், நிகமாந்த மஹாதேசிகர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள், சேனை முதல்வர் ஆகியோருக்குத் தனி ஸந்நிதிகள் உள்ளன.

தனிக் கோவில் நாச்சியாராகக் கோவில் கொண்டுள்ள மரகதவல்லித் தாயார் மிகவும் வரப்ரஸாதியாகப் போற்றப்படுகிறார். ஸந்தான பாக்கியம் வேண்டுபவர்கள் புஷ்கரிணியில் நீராடி ஈரத்துணியில் வறுத்த பயிறை அமாவாஸை அன்று வயிற்றில் கட்டிக் கொண்டு படுப்பார்கள். அந்த வறுத்தபயிறு முளைத்திருந்தால் அவர்களுக்கு மகப்பேறு நிச்சயம் என்பது இக்கோவிலின் மஹிமைக்கு எடுத்துக்காட்டு. இந்தக் கோவிலுக்கு எதிரில் ஜடாயுவிற்கு தனி ஸந்நிதி உள்ளது. விஜயராகவரின் புறப்பாடு நிகழும் போதெல்லாம் ஸகல மர்யாதைகளுக்கும் ஜடாயு பகவானும் பாத்திரராகிறார். இந்தப் பதியைத் தவிர வேறெங்கும் ஜடாயுவிற்கு என்று தனிக் கோவில் இல்லை. அவரும் கருடாழ்வார் போலவே இங்கு காட்சி அளிப்பது விசேஷம். இந்தத் தலத்தில் அமாவாஸை அன்று ஒருவர் தங்கி இருந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடினால் ஏழ் பிறப்பின் பாவங்களும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்தப் பதியிலேயே ராமானுஜர் அத்வைத விஷயங்களை யாதவப்ரகாசரிடம் கற்றார் என்பதால் அவர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. அவர் பயின்றதை விளக்கும் சிற்பமும் அங்குள்ளன. திருப்புட்குழிச் சீயர் என்ற பெரியவரும், பெருமாள் சீயரும் இங்கே அவதரித்தார்கள். இந்தத் தலத்து இறைவன் பேரிலேயே வேதாந்த தேசிகர் பரமார்த்தத் துதி என்ற க்ரந்தத்தை இயற்றி அருளினார். மாசி ப்ரம்மோத்சவம், ஸ்ரீராமநவமி பங்குனி உற்சவம், தை தெப்போற்சவம் இங்கு நடைபெறும் முக்ய திருவிழாக்கள். இந்தக் கோவிலில் உள்ள குதிரை வாஹனம் உண்மையான குதிரைபோலவே இயங்கும் உறுப்புக்களை உடையது. எட்டாம் நாள் ப்ரம்மோத்சவத்தன்று குதிரை வாஹனம் செய்த சிற்பியின் வீதிக்கு விஜயராகவப் பெருமாள் எழுந்தருளிய பின்னரே அன்றைய உற்சவம் தொடங்கும். கல்வெட்டுக்களில் '' திருப்புட்குழி நாயனார் கோவில் '' என்றும் '' போரேற்றும் பெருமாள் கோவில் என்றும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வாரால் இரண்டே பாசுரங்ளில் இந்த திவ்யதேசம் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது.

'' தர்மோ விக்ரஹவாந் அதர்மவிரதம் தந்வீ ஸ தந்வீதந :''

என்ற தேசிகரின் வாக்குப்படி விஜயராகவ ராமபிரான் அதர்மங்களை விலக்கி நம்மைக் காப்பாற்றி அருள்வார்.