இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 17 பொன் பதர்க் கூட்டம் சதுர்புஜராமர் பொ ன் விளைந்த களத்தூரிலிருந்து சுமார் 4 A e தொலைவில் உள

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

17. பொன் பதர்க் கூட்டம் சதுர்புஜராமர்

பொ ன் விளைந்த களத்தூரிலிருந்து சுமார் 4 A.e. தொலைவில் உள்ள மற்றொரு ராமபிரானின் திருத்தலம் பொன்பதர்க் கூட்டம். இறைவனின் அருளால் விவசாயி ஒருவருக்குத் நெல் மணிகள் பொன் மணிகளாக விளைந்த ஊர் பொன் விளைந்த களத்தூர். அந்தக் கதிர்களை அடித்துப் பதர் நீக்கிய இடம் பொன்பதர்க் கூட்டம் என்று வழங்கலாயிற்று. ராமபிரானின் மூர்த்திகள் அநேகமாக எல்லாக் கோவில்களிலும் இரண்டு கரங்களுடனே அமைந்துள்ளன. ஒரு கையில் அம்பும், மற்றொரு கையில் கோதண்டமுமாகவே அவர் காட்சி அளிப்பார். இந்த ஒரு கோவிலில் தான் அவர் நான்கு திருக்கரங்களோடு விளங்குகிறார். அதனால் இத்தலத்திற்குச் சதுர்புஜராமர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

மிகச்சிறிய கோவிலில் கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்த நிலையில் ராமபிரான் சதுர்புஜங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார். மேல் திருக்கரங்கள் சக்ரமும், சங்கும் ஏந்தி கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரையைக் காட்டி அருள் புரிகின்றன. அவருக்கு வலப்புறம் ஸீதாப்பிராட்டியும், இடப்புறம் லக்ஷ்மணனும் உள்ளனர். இளைய பெருமாள் கூப்பிய கரத்தினராக இருக்கிறார். ஆஞ்சனேயர் தன் வலக்கரத்தால் வாய் பொத்தியபடி வினய ஆஞ்சனேயராகக் காட்சி அளிக்கிறார்.

உற்சவ ராமபிரான் சதுர்புஜ ராமனாக மேல் திருக் கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி, கீழ்த்திருக்கரங்களில் அம்பும், கோதண்டம் என்ற வில்லும் கொண்டு ஜானகியோடும், லக்ஷ்மணனோடும் காட்சி தருகிறார். இவரது அழகினைப் பற்றிக்கூற வார்த்தைகளே அகப்படாது!சுத்த ஸத்வ விமானத்தின் கீழே ஸந்நிதி கொண்டு அவர் அருள் புரிகிறார். இந்தக் கோவிலைச் சேர்ந்த கிணறு சேஷதீர்த்தம் என்றும் புஷ்கரிணி தேவராஜ புஷ்கரிணி என்றும் வழங்கப்படுகிறது. இது தவிர க்ஷீர ரஸம் என்ற தீர்த்தமும் கோவிலுக்கருகாமையில் உள்ளது.

ஸ்தல புராணம் இந்த சதுர்புஜ ராமரை இதிஹாஸத்துடன் தொடர்புபடுத்திக் கூறுகிறது. ஸீதையைத் தேடி ராமரும், லக்ஷ்மணரும் ஸுக்ரீவன் இருப்பிடம் வரும்போது அவர்களைச் சொல்லின் செல்வனான அனுமன் கண்ட கோலத்தில் ராமபிரான் அவருக்குச் சதுர்புஜத்தோடு கூடிய தனது திவ்ய ரூப லாவண்யத்தைக் காட்டினால் தான் தகும் என்று அவ்வாறு தோன்றினார் தசரதகுமாரர். பகவான் தனது உண்மை உருவத்தைப் பரமபக்தர்களுக்குக் காட்டியே அருளுவார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. மற்றும் ராவணனின் பட்டத்து ராணியான மண்டோதரி ராமபிரானைச் சதுர்புஜங்களுடன் கூடிய தெய்வமாகவே கண்டதும் இந்த மூர்த்தியால் நினைவுபடுத்தப்படுகிறது. இதைத் தவிர அவதார ஸமயத்திலும் கௌஸல்யா தேவி ஒருத்திக்கு நான்கு கரங்களுடன் இரண்டில் சங்கும், சக்கரமும் ஏந்தியவராகவே ராமபிரான் காட்சியளித்தாராம்.

யாககுண்டர் என்ற முனிவர் காஞ்சி தேவாதிராஜனைத் தொழுதபோது அவர் ''பொன்பதர்க் கூட்டத்தில் உறையும் இறைவனை தேவராஜர் என்றயோகி ஆராதித்து வருகிறார். அவரது முயற்சியால் தேவராஜ புஷ்கரிணி என்ற திருக்குளமும், சேஷதீர்த்தம் என்ற கிணறும் ஏற்பட்டுள்ளன. தர்ம நிஷ்டர் என்ற மஹான் அங்குள்ள மூர்த்தியை ப்ரார்த்தித்து, சேஷ தீர்த்தத்தில் நீராடித் தன் தீராத நோயைப் போக்கிகொண்டார். அங்கு சென்றால் அந்த சதுர்புஜ ராமர் ராமாவதாதரத்தின் உண்மையை உமக்கு உரைப்பார்''என்று கூறவே, யாககுண்டரும் இந்த தலத்தில் வந்து சுத்த ஸத்வ விமானத்தின் கீழ் ஒளி வீசிநின்ற சதுர்புஜ ராமரைக் கண்டு இவரே ராமவதாரத்தில் தோன்றியவர் என்று உணர்ந்தார். அதே ராமபிரான் இன்றும் திருவாழி, திருச்சங்கு தாங்கி, அம்பும், வில்லும் ஏந்தி அடியாளர்ளைக் காத்து வருகிறார்.

ஸீதாப்பிராட்டிக்கே இந்தத் தலத்தில்தான் சங்கு, சக்கரம், கோதண்டம், அம்பு ஏந்தித் தன் அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியதாக தலப்புராணம் கூறுகிறது. அதனாலேயே ஸீதாப்பிராட்டியார் இங்கு ஆனந்தக் களிப்புடன் காட்சி அளிக்கிறார் போலும்!பரகால நாயகி என்ற நாயகி பாவத்தில் பரமனை அனுபவிக்கும் திருமங்கை ஆழ்வார் '' பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி '' என்று ராமபிரான் சக்ரம் ஏந்திய கோலத்தை அனுபவித்துள்ளார். '' சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் '' என்று ஆண்டாள் நாச்சியார் அனுபவித்ததும் இந்த ராமபிரானாகவே இருக்கலாம்.

'' எங்கள் செய்தவத்தின் ராமன் என வந்தோன்

சங்கினொரு சக்கர முடைத் தனிமுதற்பேர்

அங்கணரசாதலினவ் வல்லி மலர் புல்லும்

நங்கையிவளாமென வசிட்டன் மகிழ்வுற்றான் ''

ராமரைச் சதுர்புஜராகவும், ஸீதையை அல்லி மலர்ப்பாவையாகவும் வசிஷ்டர் கண்டதாகக் கம்பர் பெருமான் சுவைபட இயம்பி மகிழ்கிறார். இப்பாடலும் இந்த ராமர் விஷயமாகவே எழுந்ததாகக் கொள்ளலாம்.