இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 16 பொன் விளைந்த களத்தூர் தர்ப்பசயனர் செ ங்கற்பட்டிலிருந்து சுமாரான சாலை வழியாக 12 A e தூரம

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

16. பொன் விளைந்த களத்தூர் தர்ப்பசயனர்

செ ங்கற்பட்டிலிருந்து சுமாரான சாலை வழியாக 12 A.e. தூரமுள்ள இத்தலத்தை அடையலாம். இநதப்பாதை திருக்கழுக்குன்ற பாதையில் சென்று சேருகிறது. பராங்குசபுரம் என்றழைக்கப்படும் பகுதியில் கோதண்டராமர் கோவில் உள்ளது. அதனோடு ஒட்டியே உள்ளது தர்ப்பசயன சேதுராமர் ஆலயம். இரண்டும் தொடர்புடைய ஆலயங்களே. வட திருப்புல்லாணி என்றழைக்கப்படும் ஸந்நிதியில் எழிலான திருவுருத்தோடு வலது கைமேல் சிரசை வைத்துச் சயன கோலத்தில் ராமபிரான் தர்சனம் தருகிறார். அருகில் லக்ஷ்மணன் அமர்ந்துள்ளார். ஆஞ்சனேயரும், ஸமுத்ர ராஜனும் கீழே உள்ளனர். தர்ப்பசயன கோலத்தின் போது இலங்கையில் ஸீதை இருந்ததால் மூலவரோடு தாயாரில்லை.

உற்சவ மூர்த்தியான சேதுராமர் எழிலாக ஸீதை, லக்ஷ்மணர் இருவரோடும் ஸேவை ஸாதிக்கிறார். உற்சவ சேதுராமர் சிரசில் சேதுராமர் என்று எழுதப்பட்டு உள்ளது. அதேபோல் அவர் திருவடியில் விபீஷண சேதுராமர் என்றுள்ளது. வலது தோளில் அம்புப்பையுடனும், திருமார்பில் ஸ்ரீவத்ஸமாகிய மருவுடனும் ஸேவைதரும் இவர் வனப்பு சொல்லில் அடங்காதது. மண்ணில் புதையுண்டு கிடந்த இவர் தான் இருக்குமிடத்தைக் காட்டி வெளியே வந்து ஸேவை ஸாதிப்பவர்.

ப்ராதன கோவில் என்றழைக்கப்படும் கோதண்டராமர் ஆலயத்தில் முதலில் நாம் ஸந்நிதி கருடனை வணங்கிச் செல்வோம். அடுத்ததாகச் சக்கரத்தாழ்வார் ஸந்நிதியில் அவரோடு பின்னிப் பிணைந்து ந்ருஸிம்ஹரும் சேர்ந்து காட்சி அளிக்கின்றனர். இந்தக் கோவிலில் மூலவரான பட்டாபிராமர் வீற்றிருந்த திருக்கோலத்தில் மடியில் இடதுபக்கம் ஸீதையை வைத்துக் கொண்டு ஸேவை ஸாதிக்கிறார். வலப்புறம் லக்ஷ்மணன் நின்ற கோலத்தில் காட்சி. உற்சவரான கோதண்டராமர் ஸீதாப்பிராட்டி லக்ஷ்மணனுடன் அருள் பாலிக்கிறார் நின்ற கோலத்தில். இவர் ஸந்நிதியிலேயே ஆஞ்சனேயர் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். மற்றும் சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் ஸந்நிதியிலுள்ளது. மூலவர் ஆண்டாள் தனி ஸந்நிதியில் உள்ளார்.

ராமபிரான் ஸந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கியபடி அபய வேங்கடவரதர் கம்பீரக் கோலத்தில் மூலவராக ஸேவை தருகிறார், நின்ற கோலத்தில் அவருடன் ஸ்ரீதேவியும், பூதேவியும் மூலவராக உள்ளனர். இவரும் கோவில் மண்ணில் புதைந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். உற்சவ ஸ்ரீநிவாஸர் நான்கு கரங்களுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராகக் காட்சி அளிக்கிறார். இவரது ஸந்நிதியில் சதுர்புஜ வேணுகோபலான், தேவகி, கம்சன், சிசுபாலனுடன் காட்சி அளிக்கிறார். உத்சவ ஸ்ரீநிவாஸரும் தேவிகளும்4 A.e. தொலைவில் உள்ள எடையூர் மலையில் கண்டெடுக்கப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.

தனி ஸந்நிதியில் பத்மாவதித்தாயார் மூலவராகவும், உற்சவராகவும் வீற்றிருக்கிறார். அவரது ஸந்நிதியிலேயே ஆண்டாளின் உற்சவ மூர்த்தியும் உள்ளது. ராமானுஜர், சேனைமுதல்வர், ஆழ்வார்கள், நிகமாந்த மஹாதேசிகன் ஆகியோரும் இருக்கின்றனர். இது ஒரு வடகலை ஸம்ப்ரதாயக் கோவில். தனி ஸந்நிதியில் ஓர் ஆஞ்சனேயர் வெள்ளிக் கவசத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோவில் அமைந்துள்ள தெருவிலேயே உள்ள மற்ற கோவில் லக்ஷ்மி ந்ருஸிம்ஹஸ்வாமி கோவிலாகும். இந்த ஊரில் தான் புகழேந்திப் புலவர், அந்தகக்கவி வீரராகவ முதலியார், அரசியலில் புகழடைந்த சேலம் விஜயராகவாசாரியார் ஆகியோர் தோன்றியவர்கள். குலசேகராழ்வாரின் அமுதமொழிகளான '' மலையதனால் அணைகட்டி மதில் இலங்கை அழித்தவனே ! அலை கடலைக் கடந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே !'' என்பவை தர்ப்பசயனசேதுராமரைக் கண்டதும் சிந்தையில் எழுகின்றன.