இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 12 கும்பகோணம் ராமஸ்வாமி கு ம்பகோணத்தில் பெரிய கடைத்தெருவின் தெற்கு கோடியில் அமைந்துள்ள இக்

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

12. கும்பகோணம் ராமஸ்வாமி

கு ம்பகோணத்தில் பெரிய கடைத்தெருவின் தெற்கு கோடியில் அமைந்துள்ள இக்கோவில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் இது. இதுவும் வடகலை ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த கோவிலாகும். மூலஸ்தானத்தில் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்தில் ஸீதையுடன் ஒரே ஆஸனத்தில் அமர்ந்து கையில் வில் இல்லாமல் காட்சி அளிக்கிறார். வருக்கு வலப்புறம் லக்ஷ்மணன் தன் வில்லோடு தமையனார் வில்லையும் தாங்கி நிற்க பரதன் வெண்கொற்றக் குடைபிடிக்க, ஸத்ருக்னன் சாமரம் வீச, ஆஞ்சனேயர் ஒரு கையில் வீணையும், மற்றொரு கையில் ராமாயண புஸ்தகமும் ஏந்தியவாறு உள்ள இந்தக் காட்சியைக் காண எத்தனை கண்களிருந்தாலும் போதாது அற்புதமான சாளக்ராமத் திருமேனியில் யாவரும் வடிவு அமைக்கப்பட்டுள்ளனர்.

உற்சவராகக் கல்யாண கோதண்ட ராமர் வலதுபுறம் ஸீதையுடனும், இடதுபுறம் லக்ஷ்மணன், அனுமனோடும் நின்ற திருக்கோலத்தில் கோதண்டபாணியாகக் காட்சி. தனித் தாயார் ஸந்நிதி இல்லை. பட்டாபிராமன் உடன் ஒரே ஆஸனத்தில் அமர்ந்த ஸீதாபிராட்டி, பதினான்கு ஆண்டுகளாகப் பிரிந்த துன்பம் தீர்ந்தபோது ஏன் தனி ஸந்நிதிக்குச் செல்லப் போகிறார் ஸந்நிதிகளில் மற்றும் ஒரு பட்டாபிராமர், நவநீத க்ருஷ்ணன், மூலவர் மற்றும் உற்சவராக ஸ்ரீநிவாஸர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தும்பிக்கை ஆழ்வார், வராக மூர்த்தி ஆகியோரும் உள்ளனர்.

கோவில் தூண்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கலை வண்ணம் மிகுந்தவை. ஒரே தூணில் நான்கு புறமும் ராமர், ஸீதை, லக்ஷ்மணர், ஆஞ்சனேயர் எழுந்தருளி இருந்து ஸேவை தருவது ஸ்வாரஸ்யமான விஷயம். சிற்பங்களில் வாலி சுக்ரீவ யுத்தம், விபீஷண பட்டாபிஷேகம், அகலிகை சாப விமோசனம், கோதண்டராமர் நம்மை மிகவும் கவருபவையாகும். பன்னிரு ஆழ்வார்களுக்கும் ஸந்நிதி உள்ளது. ப்ராகாரத்தில் ராமாயணச் சித்திரங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. பங்குனி மாதத்தில் வரும் ஸ்ரீராமநவமி மஹோத்ஸவமே இக்கோவிலின் முக்ய திருவிழாவாகும். இந்தக் கோவிலை ராமஸ்வாமி கோவில், ராமஸ்வாமிப் பெருமாள் கோவில் என்று அழைக்கின்றனர். நம்மனம் புது அக்ரஹார பட்டாபிராமர் ஆலயத்திற்குச் செல்வதை நாம் உணர்கிறோம். கம்பராமாயணப்பாடலே நம் நினைவில் எழுகிறது.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்தப்

பரதன் வெண்குடைகவிக்க இருவரும் கவரி வீச

விரை செறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி