கம்பனும் வால்மீகியும்
காஞ்சி காமகோடி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களே இந்த விழாவின் தலைவர் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு ராஜகோபால் அவர்களே ! ஹிந்து மிஷன் நிறுவனத்தின் தலைவர் மாண்பமை நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களே ! தமிழகக் காவல்துறைக் கூடுதல் தலைவர் பாலச்சந்திரன் அவர்களே !பெரியோர்களே !தாய்மார்களே !
வ ணக்கம்.
இன்றைக்கு இப்பெரு விழாவில் பங்கேற்றுக் 'கம்பனும் வால்மீகியும்' , என்ற அரிய நூலை வெளியிடுவதைப் பெரும் பேறாக் கருதுகிறேன். இறைவன் பணித்த சமயப்பணியை மேற்கொண்டு, இந்தப்பூவுலகில் நடமாடிவரும் வாழும்தெய்வம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஹிந்து சமயத்தின் காவலராக மட்டுமல்லாது இந்தச் சமயத்தில் இந்தியத்திரு நாட்டின் காவலராகவும் இருக்கவே அவதரித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. "தருமம் அழிந்து அநீதி தலையெடுக்கிறபோது நான் மீண்டும் அவதரிப்பேன்", என்று கிருஷ்ணன் கீதையிலே சொன்னதாகப் படித்திருக்கிறேன். அந்தக் கண்ணன் தான்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளாக அவதரித்திருக்கிறார் என்பது உறுதி. அன்று இராமன் பிறந்து சிறந்த அயோத்தியில் இன்று அமைதி நிலவ இந்தக் கிருஷ்ணாவதாரச் சங்கரர் பெருமுயற்சி செய்வது பொருத்தம்தானே.
இதுவரை நான்கு நூல்கள் வெளி வந்திருக்கின்றன. ஐந்தாவது நூல் இது. 'கம்பனும் வால்மீகியும்' என்ற இந்த நூலை வெளியிடுமாறு ஸ்வாமிகள் என்னை அழைத்திருக்கிறார்கள். இதிலும் ஒரு பொருத்தத்தைக் காண்கிறேன். நீதிமான் இராமனது வரலாறு குறித்த நூலை வெளியிடும் இந்த நூலை வெளியிடும் உரிமை அவன் தம்பி இந்த நீதிமான் லக்ஷ்மணனுக்குத் தவிர வேறு யாறுக்கு உண்டு.
தந்தையின் சொல்லை ஏற்றுக் கொண்டு அன்று காடு சென்றான் அண்ணன் ராமன். அவன் பின்னே கல்லிலும் முள்ளிலும் நடந்து போய் எல்லையற்ற துன்பம் அடைந்தான் தம்பி இலக்குவன். அந்தக் களைப்புதீர இன்று இந்தக் காஞ்சியிலே சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருள் நிழலிலே இளைப்பாறத்தான் வந்திருக்கிறான் அதே இலக்குவனாகிய இந்த இலக்குவன்.
நமது இந்திய திருநாட்டிற்கு ஒரு விந்தையான பழக்கம் உண்டு. நமது பழைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கலைகளையும் மொழிகளையும் மறந்துவிட்டு - புறக்கணித்துவிட்டு மேலைநாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், கலைகளையும் மொழிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது. இந்த நிலை ஏற்பட்டதற்குக் பல காரணங்கள் சொல்லலாம்.
1. எண்ணற்ற போர்களால் நாடு சீர்குலைந்தது ஒரு காரணம்.
2. கல்வி அறிவு இன்மை ஒரு காரணம்
3. கற்றவர்கள் பாமரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தவறியது மற்றுமொறு காரணம்.
4. அந்நியர் ஆட்சி இன்னுமொரு காரணம்
இவைகள்தான் வலுவான காரணங்கள்.
1947க்குப் பிறகு நமது நாடு விடுதலை அடைந்தபிறகு போர், கல்லாமை, அந்நியர் ஆட்சி என்ற மூன்று காரணங்கள் மறைந்து விட்டன. ஆனாலும் வெளிநாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, கலைகள், மொழிகள் இவற்றின் மீதிருந்த மோகம் குறையவில்லை. மாறாக அதிகரித்துவிட்டது. இதைத்தான் தேசியக் கவிஞர் பாரதியார் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று பாடினார்.
நமது பழைய கலாச்சாரம், பண்பாடு, கலைகள், மொழிகள் இவற்றின்மீது மக்களுக்குப் பிடிப்பும் பிணைப்பும் ஆர்வமும் வரவில்லை. அதிலும் குறிப்பாக நமது இளைய சமுதாயத்திற்கு வரவில்லை. இதைப் போக்குவரத்து தமது தலையாய கடமை என்று நமது ஸ்வாமிகள் திருவுள்ளங் கொண்டார்கள். நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ள விலைமதிக்கமுடியாத இந்த நிறைந்த செல்வம், அழியாத பொன் களஞ்சியம் இவை நமக்கே சொந்தம். இவற்றுக்குப் பெருமைமிக்க உரிமையாளர்களும் நாமே என்ற உண்மையை நமது சமுதாயத்திற்கு உணர்த்தி நமது மக்களைத் தலைநிமிர்த்து நடக்கச் செய்யத் திருவுள்ளம் கொண்டவர்கள் நமது ஸ்வாமிகள்.
இந்த நல்ல சீரிய நோக்கங்களுக்காக ஹிந்து மிஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். எதை யார் கையில் கொடுத்தால் அது நல்ல முறையில் வளர்ச்சிபெறும் அதற்கு யாரைப் பிடிப்பது என்ற கலையில் ஸ்வாமிகள் வல்லவர்கள், இந்த வகையில் இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் என்ற திருக்குரளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள் ஸ்வாமிகள். முன்னாள் நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களை ஹிந்து மிஷனின் தலைவராக ஆக்கித் தாமே புரவலராக விளங்குகிறார்கள்.
செங்கல்பட்டில் புகழ்மிக்க வழக்கறிஞராக விளங்கி, பப்ளிக் பிராசிக்கியூட்டராகப் பதவி பெற்றுச் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராகப் புகழ் நிறுவியவர்கள் திரு ரெட்டியார் அவர்களை நான் நன்கு அறிவேன். I can proud ly de scribe him as " A Judje with a heart" இதயம் உள்ள ஒரு நீதிபதி என்று அவரைப் பெருமையோடு கூறுவேன். எளிய மக்களுக்கு எதில் cF கிடைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குள்ள அக்கறை வேறு யாறுக்கும் இல்லை. இலவசச் சட்ட உதவிக் குழுவின் தலைவராக (Preside nt of the Legal - Aid Board) அவர்கள் விளக்கியபோது இந்தியாவிலேயே ஏழை மக்களுக்குச் சட்ட உதவி வழங்கியதில் தமிழகம்தான் முதலிடம் பெற்று உயர்ந்தது. இதைப் பார்க்கும்போது நாம் எல்லோரும் பெருமை கொள்கிறோம். எனக்கு இதில் ஒரு தன்னலம் கூட உண்டு. அவர் எங்கள் நீதிதுறையை சார்ந்தவராயிற்றே. இவை எல்லாம் அவரது தொழில்துறையின் சிறப்பு. தனது தொழில் ஒன்றில்மட்டும் சிறந்திருந்தால் ஒரு மனிதன் முழு மனிதன் ஆகமாட்டான். கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சொல்வதுபோல ஒருவன் அனைத்துலகச் சமநோக்குடைய மனிதனாக (---) எல்லாத்துறைகளிலும் சிறந்து
விளங்க வேண்டும். நமது கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களும் இத்தகைய ஒரு சமநோக்குடைய மனிதர்.
தாம் ஏற்படுத்தியுள்ள ஹிந்து மிஷனின் தலையாய நோக்கத்தை இந்த நூலில் தனது ஸ்ரீமுகத்தில் ஸ்வாமிகள் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்:" ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடம் ஸ்ரீ மடத்தின் மூலம் நடைபெறும் ஹிந்து மிஷன் ஹிந்து மதத்தின்
கொள்கைகளைத் தமிழ் இலக்கியங்கள் பரப்பி வந்துள்ளன என்பதை எடுத்துக்கூறும் பணியில் ஈடுபட்டுவருகிறது" என்று குறிப்பிடுகிறார்கள்.
அவ்வப்போது போட்டிகளை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு உயர்ந்த கருத்துக்கள் வெளிவரவும் நூல் வடிவம்பெறவும் ஹிந்து மிஷன் துணைநிற்கிறது. அந்தவகையில் இதுவரை ஐந்து கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பெற்றுள்ளன. இந்த போட்டிகளுக்கான எல்லாத் தலைப்புக்களையும் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளே தேர்வுசெய்து தந்துள்ளார்கள். "இலக்கியங்களில் இந்து சமயம்", "ஐம்பெரும் காப்பியங்களில் இந்து தருமம்", "திருமுறைகளும் திவ்யப்பிரபந்தங்களும் விவரிக்கும் வைதிக நெறி", "பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி" என இதுவரை நான்கு நூல்களை ஹிந்து மிஷன் வெளியிட்டுள்ளது. இப்போது "கம்பனும் வால்மீகியும்" , என்ற தலைப்பில் போட்டி நடத்திப் போட்டியில் பரிசுபெற்ற பெருமக்களுக்குக் காஞ்சித் திருமடத்தின் திருவளாகத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், பாலப்பெரியவர் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இவர்களின் அருளாசியுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எனது நண்பர் திரு .ஆர். ஜெயசிம்மபாபு அவர்கள் தலைமையில் 3-3-2002 அன்று ரொக்கப்பரிசுகளும், சான்றிதழ்களும், பிரசாதமும் வழங்கப்பெற்றன. இந்த போட்டியில் பரிசுபெற்ற முதல் மூன்று கட்டுரைகளையும் தனிப்பரிசு பெற்ற கட்டுரை ஒன்றையும் சேர்த்து இப்போது ஒப்பற்ற நூலாக வெளியிடுகிறார்கள்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் அருளாசியுடன் ஹிந்து மிஷன் இந்த அரும்பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்தப்பணி எந்த அளவு மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்துள்ளது என்பதற்கு ஓரே நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவது எனது கடமை. மரண தண்டனை பெற்று வாடிக்கிடக்கும் கைதி ஒருவரும் ஆயுள்தண்டனை பெற்று நைந்து கிடக்கும் கைதி ஒருவரும் - இருவரும் வேலூர் மத்திய சிறைவாசிகள் இந்தபோட்டியில் பங்கேற்றதோடல்லாமல் ஊக்கப்பரிசுகளும் பெற்றார்கள்.
சிறையிருந்தவள் தாளே சீதை -அவளது ஏற்றம் பற்றிச் சிறையிலிருப்பவர்களும் எழுதுவது சிறப்புத்தானே.
பெரியோர்களே மஹாபாரதம், இராமாயணம் ஆகிய இரு பெரு நூல்களும் காலத்தால் அழியாதவை. அவை மற்ற இலக்கியங்களைப்போலச் சாதாரண நூல்கள் அல்ல. நம்முடைய நாடி நரம்புகளில் ஒடிக்கொண்டிருக்கும் ஜீவதாரைகள் இவை. நமது நாட்டின் கலாச்சார ஜீவதாரைகள் அவற்றுள்ளும் இராமாயணம் ஒப்பற்றது. பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமன் தானே மனிதனாக வந்து இவ்வுலகிற் பிறந்து படாதன எல்லாத் துயரும் அனுபவித்து மானுடத்தின் பெருமையை நமக்கு உணர்த்தியதைக் காட்டும் மானுட-இறைக் காப்பியம் இராமாயணம். அடங்காமல் திரியும் காட்டு யானையைப் பழகிய வீட்டுயானையைக் கொண்டு பிடித்து வசப்படுத்துவதுபோல பெருமான் தானே வந்து பிறந்து உத்தம வாழ்வு வாழ்ந்துகாட்டி நம்மை வசப்படுத்திய கதைதான் இராமாயணம்.
நல்ல மனித குணங்கள் அனைத்தும் நிரம்பபெற்ற புருஷோத்தமன்தான் இராமன். இவனது சரிதத்தை முதலில் எழுதியவர் வால்மீகி முனிவர். இதை இவர் ஸமஸ்க்ருத மொழியில் யாத்தார். ஸமஸ்க்ருதம் என்ற சொல்லுக்குச் 'செம்மை செய்யப்பெற்றது' என்று பொருள். ஸமஸ்க்ருத மொழியில் யாத்தார். ஸமஸ்க்ருதம் என்ற சொல்லுக்குச் "செம்மை செய்யப்பெற்றது" என்று பொருள். ஸமஸ்க்ருத மொழியில் முதன்முதலில் எழுந்த நூலாகையால் இதுவே ஆதிகாவியம் என்று அழைக்கப்பெறும் சிறப்புக்கு உரியது.
இந்த உலகிலேயே வீரர்களுக்கெல்லாம் வீரணாக, மனிதர்களுக்கெல்லாம் மனிதனாக எல்லாநற்குணங்களும் வாய்ந்த மனிதன் யார்", என்று வால்மீகி நாரத முனிவரிடம் கேட்க அவரும் இராமனது வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுச் சென்றாராம். இந்த வரலாற்றிலேயே லயித்துத் தன் மனதில் தியானித்தபடி ஆற்றங்கரைக்கு நீராடச்சென்ற வால்மீகி முனிவர் அங்கே ஒரு மரக்கிளையில் கூடி மகிழ்ந்திருந்த ஜோடிப்பறவைகளைக் கண்டார். அப்போது அங்கே வந்த வேடன் ஒருவன் விசுக்கனெ அம்பெய்து ஆண்பறவையைக் கொன்றுவிடவே பெண்பறவை அதன்மீது வீழ்ந்து புரண்டு புரண்டு அழுதது. இதைக்கண்டு மனமிரங்கிய வால்மீகி முனிவர் அந்த பறவையின் சோகத்தை மனமுருகப் பாடியதோடு அந்த வேடனையும் சபித்துப் பாடினார். ஒப்பற்ற அந்த அழகும் நாத அழகும் வாய்ந்ததாக அந்த ஸ்லோகம் அமைந்து விட்டது. இது வான்மீக முனிவர்க்கே பெருவியப்பாக இருந்தது. நாதமோ சந்தமோ அறியாத தனது நாவில் அற்புதச் சந்தம் எப்படிப் பிறந்தது என்ற வியப்பில் ஆழ்ந்திருந்த அவர்முன்னர் நான்முகக் கடவுள் தோன்றி "முனிபுங்கவரே இராமனின் கதையை தியானித்துக்கொண்டிருக்கும் உமக்கு அதற்குரிய சந்தத்தைப் புலப்படுத்தவே ஸரஸ்வதி தேவி உமது நாவில் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை இப்படிப் பாடிக்காட்டினாள், இதே சந்தத்தில் இராமனின் கதையை நீர் பாடுக" என்று பணித்தருளியதோடு" இந்த பூமியில் மலைகளும் ஆறுகளும் உள்ள காலம் வரை உமதுஇராமாயணமும் மக்களிடையே புகழோடு வழங்கும்" என்று வாழ்த்தியும் அருளினார்.
அவர் வாழ்த்தியது அப்படியே இன்றுவரைப் பலித்துவருகிறது. நமது நாட்டில் மட்டுமின்றி கீழ்த்திசை நாடுகளில் எல்லாம் இராமாயணக்கதை பரவியுள்ளது. இவ்வாறு காலங்காலமாக மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட இராமகரை தமிழ்மொழியில்
சங்க இலக்கியம் முதற்கொண்டு போற்றிப் பேசப்பட்டுவந்தது. தமிழக வரலாற்றில் சோழர்காலம் ஒரு பொற்காலம். இமயம் வரை கட்டியாண்ட பெருமையுடையவர்கள் சோழமன்னர்கள். நமது நாட்டுப்பண்பாட்டையும் கலைகளையும் மொழிகளையும் அவர்கள் பேணிக்காத்தனர் அந்த பொன்னான காலத்தில்தான் கம்பன் என்ற மகாகவி வால்மீகி இராமாயணம் காத்துக்கிடந்தது. தமிழ்க்கடல்முழுதும் கரைகண்ட கம்பன் சோழ சாம்ராஜ்யத்தின் ப்ரம்மாண்டமான பெருமைகளை உணர்ந்தவன் இராமனைப் பெருமைபடக் கூறும்போது "தென்சொல் கடந்தான், வடசொல்கலைக்கு எல்லை தேர்ந்தான்", என்று கூறும் கம்பன் தான் கூறும் இலக்கணத்திற்கு தானே இலக்கியமாகத் திகழ்ந்தான். ஸமஸ்கிருத மொழியையும் பழுதறக் கற்றிருந்தான் கம்பன். அதனால் தான் 'கல்வியிற் பெரியன் கம்பன்' என்ற பழமொழி தோன்றியது. எல்லோரையும் கொள்ளைக்
கொண்ட இராமாயணக் கதை கம்பனின் உள்ளத்தையும் கொள்ளைகொண்டதில்
வியப்பில்லை. இது தமிழ்மொழி செய்த தவப்பயன் எனலாம். தமிழுக்குக் கம்பனும் திருவள்ளுவரும் தான் கதி (கம்பனின் முதல் எழுத்து க திருவள்ளுவரின் முதல் முத்து F) என்றுகூடச் சொல்வார்கள். இத்தகைய பெருமை மிக்க கம்பன் சோழநாட்டில் தேரழுந்தூரில் 11 நூற்றாண்டில் பிறந்தான்.
மொழியில் உள்ள இராமாயணங்களுள் வால்மீகி எழுதிய இராமாயணத்தை மொழிபெயர்க்கும் பெரும் பொறுப்பை விரும்பித் தலைமேல் ஏற்றுக்கொண்டான். ஏழு காண்டங்களில் 24000 ஸ்லோகங்களாக வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை ஆறு காண்டங்களில் 10500 பாடல்களாக இயற்றியுள்ளளான் கம்பன். சொற்சுவை, பொருட்சுவை, உவமை நயம், பாத்திரப் பண்பு, விதையழகு, சந்த நயம், மொழிநடை என்ற எல்லா அழகும் நிரம்பியதாக இயற்றியுள்ளான் கம்பன். உலகப் புகழ் மிக்க தாந்தே, வெர்ஜில், மில்டன், ஷேக்ஸ்பியர், காளிதாசன் போன்ற புலவர்களுக்கும் மேம்பட்ட கவிஞன் கம்பன் என்று பன்மொழிப்புலவர்கள் பலரும் பாராட்டுகின்றனர். அதனாலேதான் வேறு எந்த தமிழ்ப்புலவர்க்கும் இல்லாத "கவிச் சக்கரவர்த்தி" என்ற பெயரும் பட்டமும் இவர் ஒருவருக்குமட்டுமே இன்றுவரை நின்று நிலைத்துள்ளது.
வால்மீகியின் மூல நூலைக்கற்று அதில் மனம் தோய்ந்தததோடு அல்லாமல் தனக்கு முன்னே தமிழகத்தில் தோன்றி வைணவ பக்திபிரவாகத்தைப் பரப்பிய ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஆழ்ந்தான் கம்பன். அதனலேதான் இராமனை மனிதருள் புனிதனாகமட்டுமே வால்மீகி காட்ட மனித வடிவம் தாங்கிவந்த இறைவனாகக் கம்பன் காட்டித் தனது நூலைப் பக்திப் பனுவலாக ஆக்கினான். இதனால் மூல நூலாகிய வால்மீகியிடமிருந்துகூடக் கம்பன் சில இடங்களில் வேறுபடுகிறான், புதியவற்றைப் படைத்துக்கொள்கிறான். இதற்கு அவனுக்கு ஆழ்வார்களின் பாசுரங்கள் துணைநிற்கின்றன
இராமன் காடு புகுந்தறுவாயில் தசரதன் புலம்பியதாகக் கம்பன் பாடும்போது குலசேகர ஆழ்வாரின் பாசுரங்கள் அவனுக்குக் வழி காட்டுகின்றன. அண்மையில் திருவேங்கடத்தில் பெருமாளைத் தரிசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது தரிசனம் செய்துவைத்த பெரியவர் பெருமாளின் கருவறையின் வாசற் படியை எங்களுக்குக் காட்டி "இதற்குக் குலசேகரப்படி என்று திருநாமம்" என்று குறிப்பிட்டு "ஏனென்றால் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்மேன் என்று சங்கல்பித்துள்ளார்" என்று விளக்கமும் செய்தார். இப்படித் தனது பெருங்காப்பியத்தில் நாலாயிரத் திவ்யப் பிரபந்த கருத்துக்களைப் பற்பல இடங்களில் பெய்து சிறப்புச் செய்துள்ளான் கம்பன். பக்தியின் சிறப்பை மேம்படுத்திச் சொல்வதற்காக வால்மீகி இராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைக் கம்பன் புகுத்தியுள்ளான். ஒரு நாஸ்திகனுக்குப் பிறந்த ஆஸ்திகப்பிள்ளை குருவாக விளங்கும் விந்தையைப் பக்திச் சுவை சொட்ட சொட்டப் பாடியுள்ளான்.
கதையமைப்பு, பாத்திரப் படைப்பு, கற்பனை, நிகழ்ச்சியமைப்பு என்று இந்த வகையில் தனது முதல் நூலாசிரியனாகிய வால்மீகியைப் பெரும்பாலும் பின்பற்றியிருந்தாலும் வேண்டும்போது வேண்டிய திருத்தங்களைச் செய்யக் கம்பன் தவறவில்லை. இவற்றால் கதைக்கு மெருகேற்றி இன்னும் பொலிவும் அழகும் கூட்டியிருக்கிறான். தமிழகப் பண்பாட்டிற்கு ஏற்பச் சில இடங்களைக் கம்பன்
மாற்றியுள்ளான். சீதையைக் கவர்ந்து சென்றபோது இராவணன் அவளது மேனியைத்தொட்டுத் தூக்கிச் சென்றதாக வால்மீகி பாட இது தமிழ்பண்பாட்டிற்கு ஒவ்வாது என உணர்ந்த கம்பன் அவளை அவளிருந்த தவச் சாலையோடும் தூக்கிச் சென்றதாகப் பாடிச் சீதையின் கற்புமேம்பாட்டையும் இராவணின் தோள் வலிமையையும் ஒருசேர உயர்த்திக் காட்டிக் கவிச் சக்கரவர்த்தி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டான்.
இவ்வாறு இரண்டு காப்பியங்களையும் ஒப்பீடு செய்த பற்பல அரிய கருத்துக்கள் இந்த நூலில் எல்லாக்கட்டுரைகளிலும் ஆங்காங்கே மிளிரக் காண்கிறோன். கட்டுரையாளர்களைப் பாராட்டுகிறேன். பரிசு பெற்றவர்களை வாழ்த்துகிறேன். இந்த நூலைத்தொகுத்து அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் ஸ்வாமிகளின் அன்பிற்குப் பாத்திரமான ஹிந்து மிஷனின் செயலாளர் கே.சி.லட்சுமிநாராயணன். மூத்த எழுத்தாளராகிய இவரைச் சிறப்பாகப் பாராட்டுகிறேன்.
பெரியோர்களே தாய்மார்களே இந்த நூலை வெளியிடும் இந்தப் பொன்னான நேரத்தில் நாமெல்லோரும் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்: ஆண்கள் எல்லோரும் புருஷோத்தமனாகிய இராமனைப்போல வாழ முயற்சி செய்வோம். பெண்கள் எல்லோரும் சீதாப்பிராட்டியைப் போல வாழ ஆசைப்படுங்கள். தொண்டிற்கு அநுமனை முன்மாதிரியாகக்கொள்வோம். அன்பிற்கு வேடனாகிய குகனைப் பின்பற்றுவோம். கெட்ட சூழலிலும் வாழக்கூடிய நிலை வந்தால் வீபீஷணன் நமக்குக் குருவாக நின்று வழிகாட்டட்டும். எந்தச் சூழ்நிலையிலுமூ பக்தி செலுத்துவதற்குப் பிரகலாதப் பிள்ளை நமக்கு ஆசாரியனாகட்டும். ஸ்ரீ காஞ்சி திருவடிகளில் வீழ்ந்து வணங்குவதற்குப் பரதழ்வான் நமக்கு நல்வழி காட்டுவானாக. கடைசியாக ஒரு வார்த்தை. தம்பிகள் எல்லாம் இலக்குவனைப் பின்பற்றுங்கள் இந்த இலக்குவனையல்ல அந்த இலக்குவனை - ஏனென்றால் இந்த இலக்குவனுக்கு அண்ணன் இல்லை.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பால் மிகுந்த அருளுடையவர்கள் ஹைதராபாத்திற்கு எனது இல்லத்திற்கு எழுந்தருளி ஆசி நல்கினார்கள். நானும் எனது குடும்பத்தினரும் அவர்களுக்கு என்றும் தொண்டுசெய்யக் கடமைப் பட்டவர்கள். இந்த அற்புத நூலினை வெளியிடும் பேற்றினை அருளிய அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கும்,
ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கும் எனது வணக்கங்கள். ஹிந்து மிஷன் நிர்வாகத்தினருக்கும் எனது உரையைக் கேட்ட உங்களுக்கும் எனது நன்றி. வணக்கம்.