வேத சப்தமும் பிரதேச மொழிச் சிறப்பும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்திய பாஷைகள் பலவற்றிலே இருக்கப்பட்ட தனிப்பட்ட விசேஷங்களையெல்லாம் அங்கங்கே இருக்கிற வேதாத்யயன அக்ஷர வித்யாஸங்களோடு இணைத்துப் பார்க்கிறபோது, ஒவ்வொரு பாஷைக்கும் உள்ள தனிப் பண்புகளுக்கும், இதனால் அவைகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள வித்யாஸங்களுக்கும் அந்தந்தப் பிரதேசத்திலுள்ள வேத சப்தங்களே காரணம் என்ற பெரிய விஷயம் தெரிகிறது. இப்படி நான் ஃபைலாலாஜிகலாகப் பண்ணின சில ஆராய்ச்சிகளைச் சொல்கிறேன்:

ட (d’a) – ர-ல-ள-ழ என்று ஐந்து சப்தங்களும் ஒன்றுக்கொன்று கிட்டத்தில் இருக்கிறவை. ஒரு குழந்தையிடம் போய், “ரயில் என்று சொல்லு, ராமன் என்று சொல்லு” என்றால் அது “டயில்”, “டாமன்” என்கிறது. ‘ர’ வும் ‘ட’வும் கிட்டத்தில் இருப்பதாலேயே இப்படிச் சொல்கிறது. ‘சிவராத்ரி’ என்பதைப் பல பேர் ‘சிவலாத்ரி’ என்கிறார்கள். ‘துளிப்போ‘ என்பதற்குத் ‘துளிப்போ‘ என்கிறோம். இங்கே ‘ல’வும் ‘ர’வும் ஒரே மாதிரியான சப்தங்கள் என்று தெரிகிறது. மேலே ‘ர’ வும் ‘ட’வும் மாறுவதைச் சொன்னேன். அதனால் ‘ல’வும் ‘ட’வாக மாறலாம் என்று ஏற்படுகிறது. அதனால் ‘ல’ வும் ‘ள’ வும் ரொம்ப நெருங்கினவை. அநேகமாக நாம் ‘லளிதம்,’ ‘நளினம்,’ ‘சீதம்’ என்று சொல்கிறதை, ஸம்ஸ்கிருத புஸ்தகங்களில் ‘லலிதம்’, ‘நலினம்,’ ‘சீதம்’ என்றுதான் போட்டிருக்கும்; அத்தனை நெருங்கினவை. ‘ள’வும் ‘ழ’ வும் ரொம்ப ஆப்தம் என்பதைச் சொல்லவே வேண்டாம். தமிழுக்கே ஏற்பட்ட மதுரையிலே இருக்கிறவர்கள் ‘வாழைப் பழம்’ என்பதை ‘வாளைப் பளம்’ என்றுதானே சொல்கிறார்கள்? தமிழுக்கே பிரத்யேகமானது என்று நினைக்கிற ‘ழ’வை மாற்றிச் சொல்கிறார்கள்?

இப்போது நான் ஒரு புது விஷயம் சொன்னேன், தமிழில் மாத்திரம் இருப்பதாக நினைக்கப்படும் இந்த ‘ழ’ வேதத்திலும் இருக்கிறது என்று. ஸாமவேதத்தில் ஜைமினி சாகை என்று ஒன்று இருக்கிறது. அதைத் தலவகார சாகை என்றும் சொல்வார்கள். மற்ற வேதங்களில் மற்ற சாகைகளில் ‘ட’ அல்லது ‘ள’ வாக இருப்பதை, தலவகார சாகையில் ‘ழ’ மாதிரிதான் ஒலிக்க வேண்டும். முறைப்படி தலவகார சாகையில் அத்யயனம் பண்ணினவர்கள் இப்படித்தான் ‘ழ’ காரமாகச் சொல்கிறார்கள். அதைப் பூர்ணமான ‘ழ’ என்று வேண்டுமானால் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் உள்ளூர (அந்தர்பாவமாக) அது ‘ழ’ சப்தந்தான் என்பதில் ஸந்தேஹமில்லை.

ரிக்வேதத்திலேயே கூட இப்படி ‘ழ’காரம் சில இடங்களில் ஒலிக்கிறதுண்டு. ஸாதாரணமாக ‘ட’வும் ‘ள’வும் ஒன்றுக்கொன்று மாறிவரும் என்றபடி, யஜுர் வேதத்தில் ‘ட’காரம் வருமிடங்களில், ரிக் வேதத்தில் ‘ள’ காரம் வருவதுண்டு. வேதத்தில் முதல் மந்திரத்தில் முதல் வார்த்தை ‘அக்னிமீடே’ என்பது. ‘அக்னிமீடே’ என்பது இப்போது அநுஷ்டானத்திலே மெஜாரிட்டியாக இருக்கிற யஜுர்வேதப் பாடம்தான். ரிக்வேதத்தில், இது ‘அக்னிமீளே’ என்றுதான் இருக்கிறது. இங்கே ‘ளே’ என்பதை ‘ழே’ மாதிரிச் சொல்ல வேண்டும். யஜுர்வேதத்திலே வருவதும், ரொம்பப் பிரஸித்தியோடு இருப்பதுமான ஸ்ரீ ருத்ரத்தில், ‘மீடுஷ்டமாய’ என்று ஒரு இடத்தில் வருகிறது. இந்த வார்த்தை ரிக்வேதத்திலும் உண்டு. அங்கே “மீடு”வில் வரும் ‘டு’ என்பது ‘ள’ காரமாக இல்லாமல், ‘ழ’ காரம் அந்தர்பாவமாகத் தொனிக்கிற சப்தமாகவே இருக்கிறது.

பொதுவாக, ரிக் வேதத்தில் ‘ள’வாக இருப்பது, யஜுர் வேதத்தில் ‘ட’வாகவும், தலவகார ஸாமவேதத்தில் ‘ழ’வாகவும் இருப்பதாகச் சொல்லலாம். இப்போது இந்த ஒவ்வொரு வேதமும் நிறைய அநுஷ்டானத்திலுள்ள பிரதேசங்களை எடுத்துக் கொண்டு, அந்தப் பிரதேச பாஷைகளின் விசேஷத்தைப் பார்க்கலாம்.

‘வேதம் ஆரியர்களைச் சேர்ந்தது; திராவிடம் அதற்கு வித்யாஸமானது’ என்று இக்காலத்தில் கிளப்பி விட்டிருப்பதால், திராவிடத்திலுள்ள மூன்று பிரதேசங்களையே எடுத்துக் கொள்ளலாம். அதாவது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று பாஷைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழிலே ‘ழ’காரம் விசேஷம். தெலுங்கிலே ‘ட’ (da) சப்தத்தின் பிரயோகம் விசேஷமாக வருகிறது. கன்னடத்தில் ‘ள’ என்ற சப்தம் அதிகமாக இருக்கிறது. கன்னடத்தில் ‘ள’ என்ற சப்தம் அதிகமாக இருக்கிறது. தமிழிலே ‘ழ’ வரும் இடங்களில், தெலுங்கிலே ‘ட’வும் கன்னடத்தில் ‘ள’ வும் வருகின்றன. உதாரணமாக, ‘ப்ரவாளம்’ என்று ஒரு ஸம்ஸ்கிருத வார்த்தை இருக்கிறது. ‘பவம்’ என்று தமிழில் சொல்வது அதுதான் . இதையே தெலுங்கிலே சொல்லும்போது ‘பகடாலு’ என்கிறார்கள். கன்னடத்தில் ‘ஹவ‘ என்று சொல்கிறார்கள்.

‘ப்ரவாளம்’ என்பதுதான் ‘பவழ’ மாயிருக்கிறது; ‘பகடாலு’ ஆகியிருக்கிறது. ஸம்ஸ்கிருத வார்த்தை தமிழில் மாறியதைவிடத் தெலுங்கில் ஜாஸ்தி மாறி, ‘ப்ரவாளத்’தில் வரும் ‘வ’வும் ‘க’ என்று வித்யாஸப்பட்டிருக்கிறது. அது தெலுங்கு மொழிப்பண்பு ( genius of the language) . இதே போல, ‘ப்ரவாள’ என்பது கன்னட ‘ஹவள’ மாகிற போது, முதல் எழுத்தே ரொம்பவும் மாறுகிறது. ‘ப்ர’ என்பது தமிழிலும், தெலுங்கிலும் ‘ப’ ஆனது சின்ன மாறுதல்தான். கன்னடத்திலோ ‘ஹ’ என்றே மாறிவிட்டது. ஆனால் இதுதான் கன்னடத்தின் பிரத்யேக மொழிப் பண்பு. மற்ற பாஷைகளில் ‘ப’ வாக இருப்பது அதிலே ‘ஹ’ வாக விடும். ‘பம்பா’ (ஸரஸ்) என்பது ‘ஹம்பா’ என்றாகி, ‘ஹம்பி’ (Humpi ruins) என்றாகியிருக்கிறது. நாம் ‘பால்’ என்பதை கன்னடத்தில் ‘ஹாலு’ என்கிறார்கள். நாம் ‘புகழ்’ என்றால் கன்னடத்தில் ‘ஹொகளு’ என்பார்கள். இங்கெல்லாம் ‘ப’ என்பது ‘ஹ’ வாகிறது போலத்தான், ‘ப்ரவாள’மும் ‘ஹவள’மாகிறது’.

நான் இந்த ப-ஹ வித்தியாஸத்தைச் சொல்ல வரவில்லை. ‘ப்ரவாள’த்தின் ‘ள’, தமிழில் ‘ழ’ வாகவும், தெலுங்கில் ‘ட’ வாகவும், கன்னடத்தில் மூலமான ‘ள’ ரூபத்திலேயே இருப்பதையுந்தான் சுட்டிக்காட்ட வந்தேன்.

இந்த வார்த்தை மட்டும் இல்லாமல், அதாவது ஸம்ஸ்கிருத ‘ரூட்’டிலிருந்து வந்த ப்ரவாளம் போன்ற வார்த்தைகளில் மட்டும் இன்றி, திராவிட பாஷைகளில் மட்டுமே இருக்கிற வார்த்தைகளிலும் கூடத் தமிழில் ‘ழ’ வரும் இடத்தில் தெலுங்கில் ‘ட’ வும் கன்னடத்தில் ‘ள’ வும்தான் வருகிறது. மேலே சொன்ன “புகழ்” என்பதே இதற்கு ஒரு உதாரணம். ‘புகழ்’ என்ற வார்த்தை ஸம்ஸ்கிருத தாதுவிலிருந்து வந்ததல்ல. அது ஒரு திராவிட பாஷைச் சொல்தான்….

ஆரியர், திராவிடர் என்று இரு இனமாகப் பிரிந்திருக்காவிட்டாலும், ஒரே இனத்துக்காரர்கள் ஸம்ஸ்கிருதத் தொடர்புடைய பாஷைகளாகவும், திராவிட பாஷைகளாகவும் பிரிந்திருக்கிறார்கள் என்றுதான் இப்போது ஆராய்ச்சி உள்ள நிலையிலிருந்து தெரிகிறது. இன்னும் நன்றாக ஆராய்ச்சி பண்ணினால் இந்தப் பாஷா வித்யாஸமும் கூட இல்லாமல், எல்லாம் ஒரே மூலபாஷையிலிருந்து ( Parent Stock -லிருந்து) வந்ததுதான் என்றுகூட ஏற்பட்டுவிடலாம். சில மொழி ஆராய்ச்சிக்காரர்கள் ( linguists ) இப்படித் தமிழ் – ஸம்ஸ்கிருத பாஷைகளின் ஐக்கியத்தைக் கூட ஆராய்ச்சி செய்வதாகத் தெரிகிறது. மிக மிக ஆதிகாலத்துக்குப் போனால் அப்படியிருக்கலாம். ஆனால் அதற்குப் பின் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, திராவிட பாஷைகள் வேறு ரூபமாக மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றன. இந்த நிலையை ஏற்றுக்கொண்டு, இப்போதைக்கு திராவிட பாஷைகளைத் தனியாகப் பிரித்தே தான் இங்கே பேசுகிறேன்.

‘புகழ்’ என்ற தமிழ் வார்த்தை கன்னடத்தில் ‘ஹொகளு’ என்றும், தெலுங்கில் ‘பொகடு’ என்றும் இருக்கிறது. இதிலிருந்தும் தமிழ் ‘ழ’ காரம் தெலுங்கில் ‘ட’காரமாகவும், கன்னடத்தில் ‘ள’ காரமாகவும் இருப்பதாகத் தெரிகிறது.

இப்படித் தமிழுக்கு ‘ழ’வும், தெலுங்குக்கு ‘ட’வும் கன்னடத்துக்கு ‘ள’வும் விசேஷமாக இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று ஆலோசித்துப் பார்த்த போது, அந்தந்தப் பிரதேசத்திலுள்ள வேத சாகையின் அத்யயனத்திலுள்ள அக்ஷர வித்யாஸம்தான் இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

மஹாராஷ்டிரம், கர்நாடகம் உள்பட மேற்குப் பிரதேசத்தில் எந்த வேதம் நிறைய அநுஷ்டானத்தில் இருக்கிறது என்று பார்த்தால், ரிக் வேதமாகத்தான் இருக்கிறது. நாஸிக்கிலிருந்து கன்யாகுமரிவரை மேற்குக்கரைப் பிரதேசத்தில் பார்த்தால், ரிக்வேதம்தான் அதிகம். அதனால்தான், அந்தப் பிரதேசத்தில் வழங்குகிற கன்னட பாஷையில் ‘ள’ முக்கியமாக இருக்கிறது. வேத ‘ள’ வே திராவிட பாஷையாக நினைக்கப்படும் பிரதேச மொழியான கன்னடத்திலும் விசேஷ சப்தமாக வந்துவிட்டது!

விசாகப்பட்டினத்திலிருந்து மெட்றாஸுக்கு வடக்கு வரை கிழக்கு ஸமுத்திரக் கரையையும், அதை ஒட்டிய உள்நாட்டையும் எடுத்துக் கொண்டு, அதாவது ஆந்திர தேசத்தைப் பார்த்தால், அங்கே நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டுப் பேர்கள் யஜுர்வேதிகள்தான்; பாக்கி இரண்டு சதவிகிதம் ரிக்வேதிகள். தெலுங்கு தேசத்தில் ஸாமவேதிகள் இல்லை என்றே சொல்லி விடலாம். இந்தப் பிரதேசத்தில் யஜுர் வேதம் முக்கியமாயிருப்பதால், அத்யயனத்திலே ரிக்வேதத்தில் வரும் ‘ள’ இங்கே ‘ட’வாகத்தானே ஓதப்படும்? இதை வைத்தே, இங்கே regional language (பிரதேச பாஷை) ஆக உள்ள தெலுங்கிலும், மற்ற பாஷைகளின் ‘ள’ என்பது ‘ட’வாகி விடுகிறது!

தமிழ் தேசத்தை எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் இங்கேயும் யஜுர்வேதிகள்தான் அதிகமாகி விட்டார்கள். ஆனாலும், தெலுங்கு தேசத்தில் உள்ள அளவுக்கு இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டில் நூற்றுக்கு எண்பது பேர் யஜுர்வேதிகள் என்று சொல்லலாம். பாக்கியில், 15% ஸாமவேதம் இருக்கும்; 5% ரிக்வேதம் இருக்கும்.

இப்போது இப்படி இருந்தாலும், முற்காலங்களில் தமிழ் தேசத்தில் ஸாமவேதம் இன்னம் நிறைய இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஸாம வேதத்திலிருந்த ஆயிரம் சாகையைச் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிகிறது. “ஆயிரம் சாகை உடையான்” என்பதாகத் தேவாரத்திலேயே சில இடங்களில் ஈச்வரனை ஸ்தோத்திரம் செய்திருக்கிறது.

இந்த ஆயிரம் சாகைகளில், தற்போதுள்ள ஸாம வேதிகளில் ‘கௌதுமம்’ என்ற சாகையைச் சேர்ந்தவர்களே அதிகமாயிருந்தாலும், பூர்வத்தில் ‘ஜைமினி சாகை’ அல்லது ‘தலவகாரம்’ எனப்படுவதைச் சேர்ந்த ஸாம வேதிகள் நிறைய இருந்திருக்கிறார்கள். ‘சோழியர்’கள் என்பதாகச் சோழ தேசத்துக்கே சிறப்பித்துப் பேசப்படுபவர்களில் இன்றைக்கும் ஸாமவேதிகளாக இருப்பவர்கள் தலவகார சாகையினராகத் தான் இருக்கிறார்கள். பாண்டிய நாட்டின் கோடியில், திருநெல்வேலியில் உள்ள சோழியர்களைப் பார்த்தால் கூட தலவகார சாகைகாரர்களான ஸாமவேதிகளாக இருக்கிறார்கள். ஆதியில் சோழ தேசத்தில் மட்டுமின்றி பாண்டிய தேசத்திலும் ஸாமவேதம் நிறைய இருந்திருக்கவேண்டும் என்று இதிலிருந்து தெரிகிறது.

“சோழியர்” என்றால், ரொம்பவும் பூர்வத்திலிருந்தே தமிழ் நாட்டுக்காரர்களாக இருந்த பிராம்மணர்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். அவர்கள் தமிழ் நாட்டின் ஆதிவாசிகளான பிராம்மணர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் “வடமர்” என்றும் ஒரு பிரிவு இருக்கிறது. ‘வடமாள்’, ‘வடமா’ என்கிறோம். “என்ன வடைமாவா, தோசை மாவா?” என்று கேலிகூடப் பண்ணுகிறோம். இது “வடமர்” என்பதே. தமிழ் நாட்டில் ஆதியிலிருந்து வஸித்துவந்த சோழியர்களைத் தவிர பிற்பாடு வடக்கேயிருந்து, குறிப்பாக நர்மதா நதிப் பிரதேசத்திலிருந்து, தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறிய பிராம்மணர்களதான் இந்த வடமர்கள். பெயரே அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று காட்டுகிறது

ஆனால், இப்போது சிலர் நினைக்கிற மாதிரி, “அத்தனை பிராம்மணர்களுமே வடக்கேயிருந்து இங்கே வந்தவர்கள்தான்; தமிழ் தேசத்தில் ஆதியில் பிராம்மணர்களே இல்லை” என்பது தப்பான அபிப்ராயம் என்பதற்கும், “வடமர்” என்ற வார்த்தையே proof -ஆக இருக்கிறது. எல்லா பிராம்மணர்களுமே வடதேசத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றால், தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பிராம்மணர்களுக்குமே “வடமர்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கும். அப்படியில்லாமல், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் ஒரு பிரிவுக்கு மட்டுமே “வடமர்” என்று பெயர் இருப்பதாலேயே, பாக்கியுள்ள பிராம்மணர்கள் ஆதியிலிருந்து தமிழ்நாட்டையே சேர்ந்தவர் என்றுதானே அர்த்தமாகும்? அந்த ஆதித் தமிழ் பிராம்மணர்கள் தான் ‘சோழியர்கள்’ எனப்பட்டவர்கள்.

“வடமர்”கள் நர்மதா தீரத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது. வடமர்கள் மட்டும் இன்றைக்கும் ஸந்தியாவந்தனத்தில்,

நர்மதாயை நம: ப்ராத: நர்மதாயை நமோ நிசி|

 

நமோஸ்து நர்மதே துப்யம் பாஹி மாம் விஷ ஸர்ப்பத:||

என்பதாக, நர்மதைக்குக் காலையிலும் நிசியிலும் வந்தனம் சொல்லி, தங்களை ஸர்ப்ப பயத்திலிருந்து ரக்ஷிக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.

தெற்கேயே இருந்த சோழியர்களில், சோமாசி மாற நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவராகக் கூட ஒரு பெரியவர் இருந்திருக்கிறார். ‘சோமாசி’ என்றால் பக்ஷணம் இல்லை. “சோம யாஜி” – ஸோம யாகம் பண்ணுகிறவர் – என்பதே “சோமாசி” என்றாயிற்று. ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் தகப்பனாரும் ஸோம யாகம் பண்ணினவர். கேசவ ஸோமயாஜி என்று அவருக்குப் பெயர். ஸாம வேதந்தான் ஸோம யாகங்களுக்கு விசேஷமானது.

தமிழ்நாட்டிலே முக்யமாகச் சோழியர்கள் ஆதியில் இருந்தார்கள் என்றால், இங்கே தலவகார ஸாமமும் வெகுவாக அநுஷ்டானத்தில் இருந்திருக்க வேண்டும் என்றே அர்த்தம். இங்கே சோழ, பாண்டிய தேசங்களைப் பற்றிச் சொன்னேன். பல்லவ தேசம், சேரநாடு இவற்றின் பிராம்மணர்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்று தோன்றலாம். ரொம்பவும் பூர்வத்தில் பல்லவ ராஜ்யமே இல்லை. சேர-சோழ-பாண்டியர்கள் என்பவர்கள்தான் மூவேந்தர்கள். பிற்காலப் பல்லவ ராஜ்யமும், ஆதியில் சோழ ராஜ்யத்தில் அடங்கியிருந்ததுதான். அதனால் அங்கிருந்த பூர்விகப் பிராம்மணர்களும் சோழியர்கள்தான். ‘வடமர்கள்’ என்று வடக்கேயிருந்து வந்தவர்களில் பலர், தமிழ் நாட்டின் வடபகுதியான பல்லவ ராஜ்யத்திலேயே தங்கிவிட்டார்கள். இவர்களுக்கு ‘ஒளத்தர வடமர்’ என்று பிற்பாடு பெயர் உண்டாயிற்று. தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்து வந்தபின், தமிழ்நாட்டுக்குள் அதன் “உத்தர” பாகத்தில் (வடக்குப் பகுதியில் ) தங்கி விட்டதால் “ஒளத்தர” என்று அடைமொழி ஏற்பட்டது. வடமர்களிலும் ஸாமவேதிகள் சிலர் உண்டு. ஆனால் இவர்கள் ஜைமினீயம் எனப்படும் தலவகார சாகையைச் சேர்ந்தவர்களல்லர். அதிக அநுஷ்டானத்திலுள்ள கௌதும சாகையைச் சேர்ந்தவர்களே. தமிழ்மொழியும் இலக்கியமும் முறையாக ரூபம் பெற்று வந்த பழைய காலத்துக்கு வடமர்களின் வருகை ரொம்பவும் பிற்பட்டது. ஆதலால் அவர்களுடைய அத்யயன முறை நாம் எடுத்துக் கொண்ட விஷயத்துக்குச் சம்பந்தமில்லாதது. தமிழ் பாஷை நன்றாக ரூபம் பெற்று, சங்க இலக்கியங்கள் தோன்றிய பின்பே வந்த பல்லவர் ஸமாசாரம் நம் ‘ஸப்ஜெட்டு’க்கு அவசியமில்லாத விஷயந்தான்.

சேர நாட்டு ஸமாசாரத்தைப் பார்க்கலாம். தற்போது கேரளமாகி விட்ட சேர நாட்டிலே மலையாள பாஷை வழங்குகிறது. தமிழ்-தெலுங்கு-கன்னடத்தைச் சொன்ன போது மலையாளத்தைச் சேர்க்காமல் விட்டதற்குக் காரணம், இந்த பாஷையும் பல்லவர்களைப்போல, வடமர்களைப் போல, பிற்காலத்து ஸமாசாரம் என்பதேயாகும். சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முந்தி வரையில், கேரளநாடு தமிழ்நாட்டின் பாகமான சேரநாடாகவும், அங்கிருந்த பாஷை தமிழாகவும்தான் இருந்தது. பிறகுதான் தமிழிலிருந்தே மலையாளம் தோன்றியது. தமிழ் ‘ழ’ தெலுங்கில் ‘ட’ வாகவும், கன்னடத்தில் ‘ள’ வாகவும் வித்தியாசப்பட்டு இருந்தாலும், மலையாளத்தில் ‘ழ’ வாகவேதான் தங்கிவிட்டது. நாம் ‘புழை’ என்பதை மலையாளத்தில் ‘புழா’ என்றே சொல்கிறார்கள். நாம் ‘ஆலப்புழை’, ‘அம்பலப்புழை’ என்றால் அவர்கள் ‘ஆலப்புழா’, ‘அம்பலப்புழா’ என்பார்கள். இத்தனைக் கொஞ்சம்தான் வித்தியாசம்.

அதனால் மலையாள பாஷையை விட்டுவிட்டு, அந்தச் சீமையில் ஆதியிலிருந்தே இருந்து வந்திருக்கிற வேதத்தைப் பார்ப்போம். நம்பூதிரிகள் எனப்படும் மலையாள பிராம்மணர்கள்தான் நீண்ட நெடுங்காலமாக ரொம்பவும் சாஸ்திரோக்தப்படி வேத அத்யயனம் செய்து வருகிறார்கள். இவர்களில் [ரிக்,யஜுஸ், ஸாமம் என்கிற] த்ரிவேதிகளும் இருக்கிறார்கள். குறிப்பாக, ஸாமவேதிகளில் தலவகார சாகையைப் பின்பற்றும் நம்பூதிரிகள் இருக்கிறார்கள். ‘பாஞ்சான்மனை’ என்று நல்ல வைதிகமான ஒரு நம்பூத்ரி பரம்பரை இருக்கிறது. அவர்கள் எல்லாரும் தலவகார சாகையினரே. தமிழ்நாட்டு ஸாமவேதிகளில் தற்போது கௌதும சாகையினர் அதிகமாகி விட்டபோதிலும், மலையாளத்தில் ஸாமவேதிகள் தலவகார சாகையினராகவே இப்போதும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக தலவகாரம் ஓதிவருகிற நம்பூதிரிகள் மற்றை சாகைகளில் ‘ட’ அல்லது ‘ள’ வாக வருவதை ‘ழ’ காரமாகவே உச்சரிக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் அத்யயனம் செய்வதுபோலவே தான் அங்கேயே இருக்கிறது. ஆதியில் அதுவும் தமிழ்நாடாகத்தானே இருந்திருக்கிறது?

மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள தலவகார ஸாமச் சுவடிகளில் எல்லாம் ‘ழ’ என்றே இந்த இடங்களில் எழுதியும் இருக்கிறது. சுவடியில் மட்டுமின்றி, அச்சுப்போட்ட பிரதிகளிலும் இப்படியே இருக்கிறது.

இப்படியாக, வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்குத் தமிழ் தேசத்திலேயே தொன்று தொட்டுத் தலவகார ஸாமஸாகை இருந்து வந்திருக்கிறது; வேறெந்தப் பகுதியிலும் இல்லாத ‘ழ’ உச்சரிப்பும் அதோடு வேத அத்யயனத்திலே வந்திருக்கிறது!

சங்க நூல்களின் உரையாசிரியர்களுள் முக்யமானவரான நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு எழுதிய உரையில் ‘தைத்திரீயம், பௌடிகம், தலவகாரம், ஸாமம்’ என்று நாலு வேதங்கள் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார் *. இவர் சாகைகளையே வேதம் என்று தவறுதலாகச் சொன்னாலும்கூட, இதிலிருந்தே ஆதியில் தமிழ்நாட்டில் தலவகாரம் என்பதே ஒரு முழு வேதம் மாதிரியான ஸ்தானத்தைப் பெற்றிருந்தது என்றும் தெரியவருகிறது அல்லவா? தைத்திரீயம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்த தைத்திரீய சாகை. பௌடியம் என்பது ‘பௌஷ்யம்’ எனப்படும். ரிக் வேதத்தில் ஸாங்காயன சாகையைச் சேர்ந்த கௌஷீதகீ ப்ராம்மணத்துக்குத்தான் பௌஷ்யம் என்றும் பெயர். இங்கே ‘பௌடியம்’ என்று இவர் சொல்வது ஆழ்வார் வாக்கிலே ‘பௌழியா’ என்று வருவதிலிருந்தும் ‘ட’வுக்கும் ‘ழ’வுக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது.

ஆக இப்படி வேத சாகைகளில் உள்ள உச்சாரண பேதத்தை வைத்தே, அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பாஷைகளில் தனித் தன்மையுள்ள எழுத்து உண்டாயிருக்கிறது.

திராவிட தேசத்தை மட்டும் வைத்து நான் இப்படி சொன்னதை, இப்போது ஆல் இண்டியா லெவலிலும் [அகில இந்திய ரீதியிலும்] இண்டர்-நேஷனல் லெவலிலும் [சர்வதேச ரீதியிலும்] சொல்லப் போகிறேன்.

இப்போது வட இந்தியாவை எடுத்துக் கொண்டால், அங்கே ‘ய’ வரவேண்டிய இடங்களில் ‘ஜ’வையும், ‘வ’ வரவேண்டிய இடங்களில் ‘ப’ (ba)வையும் உபயோகப்படுத்துவது அவர்களுடைய வழக்கமாயிருக்கிறது. பேச்சு மொழியில் (colloquial -ஆக) மட்டுமின்றி அவர்களுடைய பாஷைகளில் இலக்கிய மொழியிலும் கூட (literary)யாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது. அதிலும் ‘வ’வை ‘ப’வாக்குவது வங்காளத்திலும், ‘ய’வை ‘ஜ’ வாக்குவது உத்தரபிரதேசம், பஞ்சாப், இன்னம் வடக்கான இடங்களிலும் மிகவும் அதிகமாகக் காண்கிறது.

வங்காளத்தில் ‘வ-பயோரபேதம்’, அதாவது ‘வ’வுக்கும் ‘ப’ (ba) வுக்கும் பேதமில்லை என்பதை ஒரேயடியாகப் பின்பற்றுகிறார்கள். தமிழிலும், ‘பீஷ்மர்’ என்பதை ‘வீட்டுமர்’ என்றும், ‘பீமன்’ என்பதை ‘வீமன்’ என்றும் ‘ப’வை ‘வ’ ஆக்குகிறோம். ஆனால் ஒரேயடியாக மாற்றுவதில்லை. வங்காளிகளோ ‘வ’வை எல்லா இடங்களிலுமே ‘ப’வாக்குகிறார்கள். ங்காளமே பெங்கால் ஆகிறது.

வங்கவாஸி என்பதை பங்கபாஸி என்று சொல்லுவார்கள். இப்படிச் சொல்வது பிழை என்பதை அவர்களே அறிந்து கொண்டார்கள். வங்காள தேசத்தில் இந்தத் தப்பை திருத்த ஒரு பரிஷத் ஏற்படுத்தினார்கள். “வங்க பரிஷத்” என்பது அதன் பெயர். இனிமேல் பதிப்பிக்கும் புஸ்தகங்களிலெல்லாம், பகாரம் உள்ள இடங்களில் வகாரமாகத் திருத்தவேண்டுமென்று நினைத்து, அப்படியே செய்து வந்தார்கள். அப்படிச் செய்ததில் ஸ்வபாவமாக பகாரம் இருக்க வேண்டிய இடத்திலும் வகாரமாக மாற்றிவிட்டார்கள்! ‘பந்து’ வென்பதைக் கூட ‘வந்து’ வென்று மாற்றி விட்டார்கள்! ‘வங்கபந்து’ என்ற சரியான ரூபத்தை இதற்கு முன் அவர்கள் ‘பங்கபந்து’ என்று தப்பாக சொன்னார்கள் என்றால், இப்போதும் ‘வங்க வந்து’ என்று வேறு விதத்தில் தப்பாகச் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம்!

வடக்கே மற்ற மாகாணங்களிலும் ஒரளவுக்கு இப்படி ‘வ’வுக்கு பதில் ‘ப’ சொல்கிறார்கள். ‘பிஹார்’ என்பதே ‘விஹார்’தான். புத்த விஹாரங்கள் நிறைய இருந்த பிரதேசம் அதுவே. ராஷ்பிஹாரி என்கிறார்களே அது ராஸவிஹாரி என்பதுதான். அவர்கள் வகாரத்தைப் பகாரமாக மாற்றி உச்சரிப்பதற்கு காரணம் என்ன? பிராதிசாக்கியத்தில் அந்தச் சீமையில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாகையில் இப்படிச் சொல்ல வேண்டும் என்று இருக்கிறது. அந்த விதியை வேதத்துக்கு மட்டுமின்றி, பேசுவது எழுதுவது எல்லாவற்றிற்கும் உபயோகப் படுத்திக் கொண்டார்கள். இதனால் வேதத்தில் சொன்ன சிக்ஷா விதிகள் இந்தத் தேசம் முழுவதும் ஒரு காலத்தில் சிரத்தையாக அநுஷ்டிக்கப்பட்டு வந்ததென்று தெரிகிறது.

தேசம் பூராவிலுமே யஜுர் வேதம்தான் மெஜாரிட்டியாகப் பரவியிருக்கிறது என்று முன்பே சொன்னேன். இந்த யஜுஸில் கிருஷ்ண யஜுஸ், சுக்ல யஜுஸ் என்று இரண்டு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இவற்றில் தக்ஷிணத்தில் அதிகம் பிரசாரத்திலிருப்பது கிருஷ்ண யஜுஸ்; உத்தர தேசத்தில் விசேஷமாக அநுஷ்டானத்திலிருப்பது சுக்ல யஜுஸ்.

சுக்ல யஜுஸின் பல சாகைகளில் ஒன்று மாத்யந்தின சாகை என்பது. அதுதான் வடக்கே சிறப்பாக பின்பற்றப்படுகிறது. இதன் பிராதிசாக்யத்தில் ‘ய’ வுக்கு பதில் ‘ஜ’ வரலாம் என்று இருக்கிறது; ‘ஷ’ வுக்குப் பதில் ‘க’ வரலாம் என்றும் இருக்கிறது. இதனால்தான் நாம் ‘புருஷ ஸுக்தத்தில் “யத் புருஷேண ஹவிஷா” என்று சொல்வதை ஒரு ஹிந்துஸ்தானிக்காரன் “ஜத் புருஷேண ஹவிகா” என்கிறான். அவன் அப்படிச் சொல்வதைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வருகிறது. வேதத்தைத் தப்பாகச் சொல்கிறான் என்ற கோபங்கூட வருகிறது. நாம்தான் வேத சப்தங்களின் purity -ஐ காப்பாற்றி வருகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் வாஸ்தவத்தில் அவன் சொல்வதற்கு சிக்ஷா சாஸ்திரத்தின் அங்கீகாரமேயிருக்கிறது.

ஏற்கெனவே நான் சொன்னபடி, மிக நெருங்கிய தொடர்புள்ள சப்தங்கள்தான் இப்படி ஒன்றுக்கொன்று மாற்ற அநுமதிக்கப்படுகின்றன. ‘ஜ’வும் ‘ய’வும் கிட்டிய பந்துக்கள் என்பது தமிழைப் பார்த்தாலும் தெரிகிறது. ஜாவா என்று சொல்கிற ஜாவகத் தீவை தமிழ் நூல்களில் யாவகம் என்றே சொல்லியிருக்கும். ஸாதாரணமாக, ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக வருகிற ‘ஜ’வை ‘ச’ என்பதே தமிழ் வழக்கமாயிருந்தாலும், வார்த்தைக்கு நடுவே ‘ஜ’ வந்தால் அதை ‘ய’ என்றே ஆக்கி வருகிறோம். ‘அஜன்’, ‘பங்கஜம்’ என்பனவற்றை ‘அயன்’, ‘பங்கயம்’ என்கிறோம். ‘ஷ’ என்பது ‘ச’ வில் ஒரு வகைதான். ‘ஷ’வும் ‘க’வும் பரஸ்பரம் மாறும் என்பதால், ‘ச’ வும் ‘க’வும் அப்படி மாறலாம் என்றே தெரிகிறது. இதற்கேற்றாற்போல் நாம் ‘கை’ என்பதை தெலுங்கில் ‘செய்’ என்கிறார்கள். (சை என்கிற ஒலிதான் இது.) செய்வது (காரியம் பண்ணுவது) முக்கியமாகக் கையின் தொழில்தான். அதனால் ‘கை’ என்பதைவிட தெலுங்கிலே உள்ள செய் என்பதுதான் அதன் காரியத்தைத் தெரிவிக்கிற செய் (பண்ணு) என்ற ‘ரூட்’க்குப் பொருத்தமாயிருக்கிறது. ஸம்ஸ்கிருதத்திலும் இப்படித்தானே ‘கர’ என்றால் செய்வது என்கிற அர்த்தமும், கை என்ற அர்த்தமும் இருக்கிறது? சங்கரர் – நல்லதைச் செய்கிறவர். ‘கரோமி’ என்றால் ‘செய்கிறேன்’. கைக்கும் ‘கர’ என்றே வார்த்தையிருக்கிறது. ஆதலால் தமிழிலும் முதலில் ‘செய்’யாக இருந்தது தான் அப்புறம் ‘கை’ ஆயிற்றோ என்னவோ? இப்போது தமிழில் ‘செய்’ என்பது verb -ஆக மட்டுமே இருக்கிறது. அந்த ‘ச’ என்பது ‘க’வாக மாறி ‘கை’ உண்டாயிருக்கிறது. இன்னொரு விஷயம்: ஷ-வும் க்ஷ‌-வும் ரொம்பவும் கிட்டின ஒலிகள். க்ஷ என்பது க-வாக மாறுவது ரொம்ப ஸஹஜம். அக்ஷம்-அக்கம், தக்ஷிணம்-தக்காணம், க்ஷணம்-கணம் என்று பல திருஷ்டாந்தங்கள் சொல்லலாம். ஆதலால் ஷ-வும் க-வாக மாற நியாயமுண்டு.

தமிழிலே ப (ba) என்பது வ ஆகிறதென்றால், வடதேசத்து பாஷைகளில் வ என்பது ப ஆகிறது என்றேனல்லவா?அவ்விதமே, தமிழில் ஜ என்பது ய ஆகிறது, ஷ என்பது க ஆகிறது என்றால், எதிர்வெட்டாக வடக்கிலே ய என்பது ஜ-வாகவும், ஷ என்பது க-வாகவும் ஆகிறது. அது அவர்களுடைய அநுஷ்டானத்திலுள்ள வேத சாகையின் சிக்ஷா விதிப்படி ஏற்பட்டதாகும். இதனால்தான் யத் புருஷேண ஹவிஷா -வை ஜத் புருஷேண ஹவிகா என்கிறான்.

இதே மாற்றத்தை வடக்கிலே உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்படுத்தி விடுகிறார்கள். ‘யமுனா’வை ‘ஜமுனா’வாக்கி விடுகிறார்கள். ‘யோகி’யை ‘ஜோகி’யாக்குகிறார்கள். ‘யுகயுக’ என்பதற்கு ‘ஜுகஜுக’ என்பார்கள். ‘யாத்ரா’ என்பது ‘ஜாத்ரா’ ஆகிறது. ஷ என்பது க-வாக மாறுவதில், ‘ரிஷி’ என்பதை ‘ரிகி’ என்கிறார்கள். க்ஷ-வும் ‘ஷ’வும் ரொம்ப ‘பந்து’க்கள் அல்லவா? நம்மிலேயே எத்தனை பேர் ‘லக்ஷ்மி’ என்பதற்கு ‘லஷ்மி’ என்று சொல்கிறோம், எழுதுகிறோம்? இதனால் வடக்கே ‘க்ஷ’வையும், ‘க’ ஆக்கி விடுகிறார்கள். ‘க்ஷீரம்’ என்பதைக் ‘கீர்’ என்கிறார்கள். தமிழிலும் இந்த வழக்கம் இருக்கிறது என்று காட்டினேன். ‘லக்ஷ்மி’ என்பதை ‘இலக்குமி’ என்கிறோம். இப்படி அநேகம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது இண்டர்-நேஷனல் லெவலுக்குப் போகலாம். கிறிஸ்துவ வேதமான பைபிள் பிறந்த பாலஸ்தீனம் – இஸ்ரேல் முதலான ஸெமிடிக் நாடுகளுக்குப் போகலாம். பைபிளின் ‘ஓல்ட் டெஸ்ட்மென்ட்’ முகமதியர்களின் குரானுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஓல்ட் டெஸ்ட்மென்ட்டில் வந்தவர்கள் குரானிலும் வருவார்கள். ஆனாலும் அரேபியாவில் உச்சாரணம் மாறுகிறது. ‘ஜோஸஃப்’ என்பது ‘யூஸஃப்’ ஆகிறது; ‘ஜெஹோவோ’ என்பது ‘யெஹோவோ’ என்று வருகிறது. கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இப்படி வித்தியாசம் என்பது மட்டுமில்லை. கிறிஸ்துவ தேசங்களுக்குள்ளேயே சில பாஷைகளில் ய-கரம் ஒலிக்கிறது: சிலவற்றில் ஜ-கரம் ஒலிக்கிறது. ஜேஸு-யேஸு (இயேசு) என்பதாக அந்த மதஸ்தாபகர் பேரே இரண்டு விதமாகவும் வருகிறது. கிரீஸ் பக்கம் போய்விட்டால் ‘ஜ’காரம் வந்துவிடுகிறது.

இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருக்கிறது என்றும் ஆராய்ச்சி பண்ணப்பட்டிருக்கிறது. ‘யஹ்வன்’ என்று வேதத்தில் சொல்லப்படும் தேவதைதான் ஜெஹோவா – (யெஹோவா) என்கிறார்கள். ‘த்யௌ-பிதார்’ ( த்யாவா – ப்ருதவி என்பது) என்பதே ‘ஜூபிடர்’ ஆயிற்று என்கிறார்கள். ஸம்ஸ்கிருத வார்த்தை ஒன்றின் ஆரம்பத்தில் ஒற்றெழுத்து வந்தால், அது மற்ற பாஷைகளில் உதிர்ந்துவிடும். இம்மாதிரி ‘த்யௌபிதார்’ என்றால் ‘யௌபிதார்’தான். அது ‘ஜூபிடர்’ ஆயிற்று.

இப்படி மூல ரூபத்தில் யஹ்வன், (த்) யௌபிதார் என்று இருந்ததே அப்புறம் ‘ஜ’கார பேதம் அடைந்து ஜெஹோவா, ஜூபிடர் என்று ஆயிற்று என்றால் என்ன தோன்றுகிறது? ஆதியில் எங்கேயும், லோகம் பூராவும் வேதாநுஷ்டானம் இருந்தபோது, கிரீஸைச் சுற்றியிருந்த தேசங்களில் யஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகை அதிகம் பிரசாரத்திலிருந்து என்றுதானே ஊகிக்கமுடிகிறது? 1


* “வேதம்” என்ற பேருரையில் “வேதமும் தமிழ்நாடும்” என்ற பிரிவின் பிற்பகுதியும் பார்க்க.

1. தெய்வத்தின் குரல் முதற்பகுதியில் உள்ள “உலகம் பரவிய மதம்” என்ற உரையும் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சில சிறிய வித்யாஸங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேத உச்சரிப்பால் பிரதேச மொழி விசேஷமா ? பிரதேச மொழியை வைத்து வேத உச்சரிப்பா ?
Next