Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மூடநம்பிக்கையல்ல; ஆதார பூர்வமான உண்மைகளே ! : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

“ஹிந்து சாஸ்திரங்களில் ஒரே நான்ஸென்ஸாக விஷயங்கள் இருக்கின்றன. பூமிக்கு வடக்கே மேரு சிகரம் இருக்கிறதாம். அங்கே உள்ள தேவர்களுக்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகி விடுகிறதாம். அந்த மேருவை ஸூர்யன் சுற்றுகிறானாம். உப்பு ஸமுத்திரம் மட்டுமில்லாமல் இக்ஷூ (கருப்பஞ்சாற்று) ஸமுத்ரம், க்ஷீர ஸமுத்ரம் (பாற்கடல்) என்று ஏழு விதமான ஸமுத்ரங்கள் இருக்கின்றனவாம். ஐந்து கண்டங்களாகவே பிரிந்துள்ள உலகத்தை ஏழு தீவு கொண்டது (‘ஸப்த த்வீபா’) என்று வேறு சொல்கிறார்கள். எல்லாம் ஒரே பேத்தல்” என்று பரிஹாஸம் பண்ணுகிறார்கள்.

இருக்கட்டும். இந்த ஸமுத்ரம் ஏன் இத்தனை உப்புக் கரிக்க வேண்டும்? யார் அதிலே இவ்வளவு உப்பைக் கொட்டினது? இதே மாதிரி தித்திப்பு, பாலின் சுவை முதலி உள்ள கடல்களும் ஏன் இருந்திருக்க முடியாது?

சரி, ஸப்த த்வீபா என்றும் ஸப்த ஸாகரம் என்றும் சொல்வது தப்பு என்கிறார்களே, இவற்றைச் சொல்கிற சாஸ்திரத்தில் பூமியின் பொஸிஷனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது? ‘பூமியின் வடகோடியிலே மேரு இருக்கிறது. அதற்கு நேர் எதிரே த்ருவ நக்ஷத்திரம் இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறது.

வடகோடிதான் North pole (வட துருவம்) என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது த்ருவ (துருவ) நக்ஷத்ரம் இதற்கு நேரேயா இருக்கிறது என்று பார்த்தால், அப்படியில்லை. Pole -க்கு ‘த்ருவம்’ என்ற பெயரே அந்த நக்ஷத்திரத்தின் பெயரை வைத்துத்தான். ஆனாலும் இப்போது அதற்கு நேரே ‘போல்’ இல்லை. “ஆதியில் நேரேதான் இருந்தது. அப்புறம் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுப் பூமி கொஞ்சம் சாய்ந்து விட்டது” என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நேரே சுற்றும் பம்பரமாக த்ருவ நக்ஷத்ரத்தை நேரே நோக்கிய நிலையில் பூமி சுற்றிய காலத்தைச் சொல்கிற சாஸ்திரம் அப்போது இருந்த ஏழு தீவுகளையும் ஏழு கடல்களையும் சொல்கிறது. பம்பரம் சுற்றுவதில் கோணல் ஏற்பட்ட போது, ஸப்த சமுத்ரங்களும் கலந்து உப்பாகிவிட்டது என்கிறேன். அந்த வெள்ளத்தில் ஸ்பத த்வீபங்கள் ஐந்து கண்டங்களாக மாறிவிட்டன என்கிறேன்.

நம்முடைய வட துருவத்தின் மேலே ஒரு ஸ்தானம் இருக்கிறது என்றால், அதுதான் ஸ்வர்க்கம் இருக்கிற மேரு. இந்த பூலோகம் ஒரு எலுமிச்சம் பழம் என்று வைத்துக் கொண்டால் அதன் உச்சியில் உள்ள புள்ளி மேரு சிகரம். அந்த உச்சிக்கு எந்தப்பக்கமும் தெற்குதான். உச்சியான அந்த பாயின்டிலிருந்து கிழக்கேயோ, மேற்கேயோ, வடக்கேயோ, எங்கே போவது? எங்கேயும் போகமுடியாது. கீழே தெற்கில் இறங்குகிறது தவிர வேறு திசையே இல்லை. எலுமிச்சம் பழத்தின் உச்சியில் ஒரு பாயிண்டை வைத்துப் பார்த்தால் இது தெரியும். பூமியில் உள்ள எல்லாத் தேசங்களுக்கும் (வர்ஷங்களுக்கும்) வடக்கு மேருதான். ஸர்வேஷாமபி வர்ஷாணாம் மேரு: உத்தரத ஸ்தித: என்றதன் அர்த்தம் இதுதான்.

துருவத்திலே எப்படியிருக்கிறது? அங்கே ஆறுமாஸம் முழுவதும் பகலாகவும், ஆறு மாஸம் முழுவதும் இரவாகவும் இருக்கிறது. இதை ஆரம்ப கிளாஸிலேயே படித்திருக்கிறோமே! ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்கிறபடி, ஆறுமாஸம் பகலாகவும் ஆறு மாஸம் இரவாகவும் உள்ள துருவத்திற்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகிறது. இதைத்தான் தேவர்களுடைய ஒரு தினம் நமக்கு ஒரு வருஷம் என்பது.

பூமி சுற்றும்போது அதன் பக்கவாட்டிலுள்ள ஸகல பாகங்களும் சுற்றினாலும், உச்சிப் பாயின்டும், இதே மாதிரி அடியில் தென்துருவத்தில் உள்ள பாயின்டும் சுற்ற முடியாது. சுற்ற முடியாத அளவுக்குச் சின்னதுதானே பாயின்ட்? சுற்றுவதினாலேதான் மற்றப் பகுதிகளில் சூரிய சந்திரனோடு தினந்தினமும் பல கோணங்களில் சம்பந்தப்பட்டு ஓரிடத்தில் பதினெட்டு மணி வெய்யில் அடிக்கிறது; ஆறு மணி அளவே ராத்திரியாயிருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஓரிடத்தில் ஆறே மணி வெய்யிலாகவும் பதினெட்டு மணி ராத்திரியாகவும் இருக்கிறது. இரவு பகலில் பூமியின் பல பாகங்களுக்கிடையில் ஏகப்பட்ட கால வித்யாஸம் இருக்கிறது. சில நாட்களில் மட்டுமே சூரியன் நேர்கிழக்காக உதிக்கிறான்; தலைக்கு நேரே ஒரு டிகிரிக்கூடத் தப்பாமல் வருகிறான்; மற்ற நாட்களில் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வரையில் பல கோணங்களில் ( angle -களில்) சூரியோதயம் ஏற்படுகிறது. வட துருவத்தில இப்படியில்லை. அங்கே ஆறு மாஸம் பகலிலிருந்து ஆறு மாஸம் இரவுக்குப் போய், மறுபடி அதிலிருந்து ஆறு மாஸம் பகலுக்கு வரும் போது சூரிய கதியைப் பார்த்தால், அந்த இடமானது சூரியனைச் சுற்றாமல், சூரியன்தான் அந்த இடத்தைச் சுற்றி வருகிறான் என்றே தோன்றும். மேரு ஸூரியனைப் பிரதக்ஷிணம் பண்ணுகிறான் என்பது இதைத்தான்.

வடதுருவத்தில் ஸூரிய வெளிச்சமுள்ள ஆறு மாஸங்களை உத்தராயணம் என்றும், அங்கே இரவாகித் தென்துருவத்தில் வெளிச்சமிருக்கிற ஆறு மாஸங்களை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம்.

வடதுருவத்துக்கு ஸுமேரு என்றும், தென் துருவத்துக்குக் குமேரு என்றும் பெயர். (ஸுமேரியா தேசம்கூட ‘ஸுமேரு’விலிருந்து வந்ததுதான். அங்கே வேதத்தில் வரும் தேவதைகளின் வழிபாடு இருந்தது என்று சொல்கிறார்கள்.) வடக்கே தேவர்கள் இருப்பது போல் தெற்கே பித்ரு லோகமும் நரகமும் இருக்கின்றன. தேவதைகளையோ, பித்ருக்களான ஆவிகளையோ, நரகவாஸிகளையோ பார்ப்பதற்கு யோக சக்தியினால் திவ்ய திருஷ்டி பெறவேண்டும். நமக்கு அந்த த்ருஷ்டி இல்லாததால் அப்படிப்பட்ட லோகங்களும் இல்லை, ஜீவர்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ருஷ்யாவில் பிறந்து, அமெரிக்காவில் வஸித்துவிட்டு, இந்தியாவில் வந்து ‘தியாஸாஃபிகல் ஸொஸைடி’ ஆரம்பித்த ப்ளாவட்ஸ்கி முதலானவர்கள் ஆவி உலக, தேவதா லோக விஷயங்களைத்தான் முக்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமில்லை. இக்கால ஸயன்டிஸ்ட்களில் ரொம்பவும் முக்யமாக நினைக்கப்படுகிற ஆலிவர் லாட்ஜ் என்கிறவர் கூட, பிற்காலத்தில் ஸயன்ஸைவிட முக்யமாக இந்த ஆவிகள், தேவதைகள் இவற்றின் ஆராய்ச்சியிலேயே இறங்கி, ‘இவை எல்லாம் நிச்சயமாக இருக்கின்றன; இவைகளைக் கொண்டு மனிதன் அநுகூலங்களை அடையலாம்’ என்று புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜ்யோதிஷம் முதலான சாஸ்திரங்கள் ஒருபுறம் அஸ்ட்ரானமி மாதிரியான ஸயன்ஸ்களைச் சொல்லிவிட்டு உடனே spiritualism -க்கும் போகிறதே என்று கேட்டால், இவை இரண்டுக்கும் விரோதமில்லை என்று சொல்வது போல ஒரு பெரிய விஞ்ஞானியே ஸமீபத்தில் இப்படிப் பண்ணியிருக்கிறார்.

நாம் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கிறதுபோல மநுஷ்யர்கள் தேவர்களோடு பழகி வந்த புராதன காலத்தில் ஏற்பட்டவை நம் சாஸ்திரங்கள். நம்முடைய [கர்மாக்களைத் தொடங்கு முன் செய்ய வேண்டிய] ஸங்கல்பத்தைப் பார்த்தாலே இது தெரிகிறது. இந்த ஸங்கல்பமானது எத்தனையோ யுகாந்தரங்களுக்கு முன், கோடிக்கு அப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போட வேண்டிய அத்தனை காலத்துக்கு முன், ஸ்ருஷ்டி ஏற்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் காலத்தை நிர்ணயம் பண்ணித் தருகிறது. யுகத்தின் ஆரம்பத்தில் க்ரஹங்கள் எப்படியிருந்தன என்பது கூட ஜ்யோதிஷக் கணக்கால் தெரிகிறது. அப்போது எல்லா க்ரஹங்களும் ஒரே வரிசையில் இருந்தனவாம்.

சில கணக்குகள் இப்போது வித்யாஸப் படுகின்றன, பிரத்யக்ஷத்தில் பார்க்கிற சில நிலவரங்கள் சாஸ்திரத்துக்கு மாறாக இருக்கின்றன என்றால், உடனே ‘சாஸ்திரம் புளுகு மூட்டை’ என்று ஆரம்பித்துவிடக்கூடாது. எல்லா க்ரஹங்களும் நேராக இருந்த புராதன காலம், துருவ நக்ஷத்ரத்துக்கு சரியாக நேரே பூமியின் துருவம் இருந்த ரொம்பப் பழைய காலம்- இவற்றிலிருந்தே சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. அதற்குப் பின், பல யுகங்களில் Nature -ல் (இயற்கையில்) மகத்தான மாறுதல் ஏற்பட்டு, பூமி மலையாகவும், மலை ஸமுத்ரமாகவும், ஸமுத்திரம் பாலைவனமாகவும் இப்படியெல்லாம் ஆகியிருக்கிறது. இந்த விவரங்களை ஜியாலஜிஸ்ட்கள் சொல்கிறார்கள். அதோடுகூட வானமண்டலத்தில் கிரஹ ஸஞ்சாரங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ரானமிக்காரர்கள் சொல்கிறார்கள். இதனாலெல்லாந்தான் சாஸ்திரத்தில் என்றைக்கோ சொன்னதற்கு வித்யாஸமாகவும் சிலவற்றை இன்றைக்கு பார்க்கிறோம்.

ஜ்யோதிஷத்தில் கணக்குப் பண்ணி சிருஷ்டி எப்போது ஆரம்பித்தது என்று சொல்கிறார்களோ, அதுவே நவீன ஆராய்ச்சியால் அநுமானிக்கிற சிருஷ்டி காலத்துக்குக் கிட்டத் தட்ட சரியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கலியுகத்துக்கு 4,32,000 வருஷங்கள். த்வாபரயுகத்துக்கு இதைப்போல இரண்டு மடங்கான 8,64,000 வருஷம். த்ரேதாயுகத்துக்கு மூன்று மடங்கான 12,96,000 வருஷம். க்ருதயுகத்துக்கு நாலு மடங்கான 17,28,000 வருஷம். நாலு யுகங்களும் சேர்ந்த ‘சதுர்யுகம்’ அல்லது ‘மகாயுகம்’ என்பதற்கு 43,20,000 வருஷம். இப்படி ஆயிரம் மஹா யுகங்கள் சேர்ந்தால், அதுதான் பிரம்மாவின் ஒரு பகல் வேளை. அதுவே கல்பம் என்பது. அது 14 மநுக்களின் ஆட்சிக்காலம். ‘மநு’வின் ஆட்சிக்காலம்தான் ‘மன்வந்த்ரம்’ என்பது. நாம் பல ராஜாக்களையும் குடியரசுகளையும் வைத்துக் கொண்டிருந்தாலும், லோகம் பூராவுக்கும் மேலாதிக்கம் உள்ளவராக பகவான் மநு என்பவரையே வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட மநுக்கள் பதினாலு பேர், மநுஷ்ய இன ஸ்ருஷ்டிலிருந்து அது முடிகிறவரை ஆட்சி நடத்துகிறார்கள். மநுவிலிருந்து தோன்றுவதால்தான் நமக்கு மநுஷ்யர், மநுஜர் முதலான பேர்கள் இருக்கின்றன. Man என்பதும் மநுவிலிருந்து வந்ததுதான். இப்போது ச்வேத வராஹ கல்பம் என்ற பிரம்மாவின் பகல் வேளையில் ஏழாமவரான வைவஸ்த மநுவின் காலத்திலே, இத்தனாம் ஆண்டில் நாம் இருக்கிறோம் என்று ஸங்கல்பத்தில் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணக்கு பண்ணி முதலாமவரான ஸ்வாயம்புவ மநு எப்போது தோன்றியிருப்பார், அதாவது இந்த கல்பத்தில் ஸ்ருஷ்டி எப்போது ஆரம்பித்திருக்கும் என்று பார்த்தால், அந்தக் காலக் கணக்கும் மநுஷ்ய இனம் (Human Species) எப்போது தோன்றிற்று என்று ஸயன்ஸில் சொல்லுகிறார்களோ அதுவும் ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

‘மன்’ என்றால் ‘நினைப்பது’. நினைக்கிற காரியத்தைச் செய்கிற அங்கம்தான் மனஸ். அதை வைத்தே மநுவுக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டது. சிந்தனா சக்தி வாய்ந்த மனிதகுலத்துக்கு முதல்வராக அவர் இருக்கிறார். Man is a thinking animal என்று சொல்வதற்கேற்ப, நினைக்கத் தெரிந்ததே இவனுடைய சிறப்பு என்பதால்தான், மநுவிடமிருந்து வந்தவர்களுக்கும் மநுஷ்யர் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.

பதினாலு மநுக்களின் ஆயுட்காலமும் சேர்ந்த ஆயிரம் சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றால் அதற்கு 432,00,00,000 (432 கோடி) வருஷம்; அதே அளவு வருஷம் ஒரு ராத்திரி. அதாவது 864 கோடி வருஷம் பிரம்மாவுக்கு ஒரு முழு நாள். அதுவே கல்பம் என்பதுமுண்டு. அதிலே பகலில்தான் ஸ்ருஷ்டி நடப்பது. ராத்திரியில் ஸ்ருஷ்டி அடங்கிப் போன ப்ரளயம். இப்படி 365 நாட்கள் ஒரு பிரம்ம ஸம்வத்ஸரம் (வருஷம், ஆண்டு) . இதைப் போல் நூறு வருஷங்கள் அவருடைய ஆயுஸ். இந்த பிரபஞ்சத்தின் ஆயுஸும் அதுவே. அவரது ஆயுள் முடிகிற போது ஸகல லோகங்களும் இல்லாமல் போய்விடும். அதுதான் ‘ஆத்யந்திக பிரளயம்’ என்பது. அப்புறம் ஒரு பிரம்மா- ஆயுட்காலம் ஸ்ருஷ்டியே இல்லாமல், பிரம்மம் மட்டும் பிரபஞ்சமில்லாமல், தான் மாத்திரமாக இருக்கும். அப்புறம் மறுபடி இன்னொரு பிரம்மாவைக் கொண்டு சிருஷ்டியை ஆரம்பிக்கும். ஆஞ்சநேயர்தான் அடுத்த பிரம்மாவாக வரப்போகிறார் என்று சொல்வார்கள்.

‘ஆத்யந்திக ப்ரளயம்’ என்றால் சாச்வதமான ப்ரளயம் என்று அர்த்தம். ‘அத்யந்தம்’ என்ற வார்த்தையிலிருந்து ‘ஆத்யந்திக’ என்பது உண்டாயிருக்கிறது. ‘ப்ரளயம்’ என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, உணர்ச்சியில்லாமல் லயித்திருப்பது. ஆத்யந்திக ப்ரளயத்தில் இந்த லயம் என்பது பரமாத்மாவோடேயே சாச்வதமாக ஐக்யமாகி விடுவதாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயஸு பூர்த்தியாகிப் பரமாத்மாவோடு ஐக்யமாகிறபோது, அவர் உண்டாக்கிய ஸ்ருஷ்டியும் சேர்ந்து ஐக்யமாகிவிடுகிறது. அப்புறம் புது ப்ரம்மா புது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போதும் இந்த ஜீவர்கள் அதில் மறுபடி பிறப்பதில்லை. அதனால் இதை ‘மஹா ப்ரளயம்’ என்றும் சொல்வது.

வேறே இரண்டு ப்ரளயங்களும் உண்டு. ஒவ்வொரு சதுர்யுக முடிவிலும் ஏற்படுவது ஒன்று. இதை வெறுமே ‘ப்ரளயம்’ என்பார்கள். ஆயிரம் சதுர்யுகத்திற்கொரு தரம் பிரம்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும் ஏற்படும் கல்ப ப்ரளயம் இன்னொன்று. அவருடைய ஒவ்வொரு இராக்காலமும் முடிகிறவரை இது நீடித்து, அடுத்த பகல் உதிக்கும் போது முடிந்துவிடும். இரண்டு பகல்களுக்கு நடுவேயுள்ள ‘இன்டர்வெல்’ லில் இது நடப்பதால் இதற்கு ‘அவாந்தர ப்ரளயம்’ என்றும் பெயர். சதுர்யுக முடிவான ப்ரளயத்தில் அடங்கின ஜீவர்கள் அடுத்த சதுர்யுக ஸைக்கிள் ஆரம்பிக்கும் போது மறுபடி பிறக்கத்தான் செய்வார்கள். ‘அவாந்தர ப்ரளயம்’ அல்லது ‘கல்ப ப்ரளயம்’ என்பதில் அடங்கியவர்களும் அடுத்த கல்பத்தில் பிறக்கத்தான் செய்வார்கள்.

பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம், மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் என்று ஏழு. இவற்றுக்குள்தான் மநுஷ்யர்கள், தேவர்கள் முதலான ஸகல இனங்களும் இருக்கின்றன. இவற்றில் பூலோகம், புவர்லோகம், ஸுவர் லோகம் இவை மூன்றும் ஒரு group -ஆக இருக்கின்றன. ‘பூர்ப்புவஸ்ஸுவ:’ என்று இவற்றைத்தான் அடிக்கடி கர்மாக்களில் குறிப்பிடுகிறோம். மற்ற நாலு லோகங்களும் இவற்றைவிட உயர்ந்தவை. பிரம்மா ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போது அவாந்தர ப்ரளயம் ஏற்படுகிறதல்லவா? அப்போது இந்த முதல் மூன்று லோகங்கள் மட்டும் பிரளயத்தில் அழிந்துவிடும். அவரது ஆயுஸ் முடிவான மஹாப் பிரளயத்திலோ மற்ற லோகங்களும் அழிந்துவிடும்.

ஸூர்யனுடைய உஷ்ணம் நமக்குத் தெரியாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது என்று நவீன ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஸூர்ய உஷ்ணம் இல்லாவிட்டால் லோக வாழ்க்கை ஸாத்யமே இல்லை. ஆஹாரத்திலிருந்து ஆரம்பித்து லோக வாழ்வுக்கு வேண்டிய மழை, பருவக்காற்று எல்லாவற்றுக்கும் ஸூர்ய உஷ்ணந்தான் ஆதாரம் என்கிறார்கள். அதனால் இப்படி ஸூர்ய உஷ்ணம் குறைந்து கொண்டே போவதால், எத்தனையோ கோடி வருஷங்களுக்கு அப்புறம் நம் லோகமே இல்லாமற்போக வேண்டியதுதான் என்று ஒரு கணக்குக் கொடுத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி பிரம்மாவின் அடுத்த அவாந்தரப் பிரளயம் எப்போது வரவேண்டுமோ, அதுவும் ஸயன்டிஸ்டுகள் கொடுக்கிற காலக் கெடுவும் சற்றேறக்குறைய ஒத்திருக்கின்றன.

ஸங்கல்பத்தில் சொல்கிறபடி இப்போது பிரம்மாவுக்குப் பாதிக்கு மேல் ஆயுஸ் தீர்ந்துவிட்டது. நமக்கு வாரத்தில் ஏழு நாள் பெயர்கள் மாதிரி ஏழு கல்பப் பெயர்கள் பிரம்மாவின் விஷயமாகச் சொல்கிறார்கள். அதில் இப்போது நாலாவதான ச்வேத வராஹ கல்பத்தில் பாதிக்குமேல் வந்து விட்டோம். பிரம்மாவுக்கு இன்றைக்கு இத்தனை வயசு, இத்தனை மாஸம், தேதி, அதில் இன்ன யாமம், அப்புறம் நாம் இன்ன கல்பத்தில், இன்ன மன்வந்தரத்தில், இன்ன சதுர்யுகத்தில், இன்ன யுகத்தில், இன்ன சகாப்தத்தில், ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில் நம் மநுஷ்யப் பஞ்சாங்கத்தின்படி இன்ன வருஷம், மாஸம், தேதியில், லக்னத்தில் இருக்கிறோம் என்கிற வரையில் எல்லாவற்றையும் ஸங்கல்பத்தில் சொல்கிறோம்.

இந்தக் கணக்குப்படி பிரம்மா எப்போது தோன்றியிருப்பார் என்று பார்த்தால், அதுவும், பிரபஞ்சம் எப்போது தோன்றியிருக்கும் என்று ஸயன்ஸில் போட்டிருக்கிற கணக்கும், ஏறக்குறைய ஸரியாக இருக்கின்றன என்கிறார்கள்.

பிரம்மாவின் வயஸைச் சொல்வதில் ஒரு வேடிக்கை. ‘பரார்த்த -த்வய-ஜீவி’ என்று பிரம்மாவைச் சொல்கிறார்கள். அதாவது இரண்டு பரார்த்தங்கள் உயிர் வாழ்கிறவர் என்று அர்த்தம். பரார்த்தம் என்றால் ‘பர’ என்கிற எண்ணிக்கையில் பாதி (அர்த்தம்) என்று அர்த்தம். அதாவது ‘பரார்த்த-த்வய -ஜீவி’ என்றால் ‘இரண்டு x அரைப் பர ஆயுஸ்காரர்’ என்று அர்த்தம். ‘இரண்டு x அரைப் பர’ என்றால் ஒரு ‘பர’ தானே? அதனால் ‘பரார்த்த த்வயம்’ என்காமல் ‘பர’ என்றே சொல்லி விட்டால் போதும். ஆனாலும் பிரம்மா இப்போது பாதிப் ‘பர’வைத் தாண்டி 51-வது வயதில் இருப்பதால், ‘பர’வில் பாதியை முக்யமாக நினைத்து, ‘பரார்த்த‘த்தையே குறிப்பிடுகிறோம்.

ஆயிரம் சதுர்யுகம் கொண்டதான பிரம்மாவின் ஒரு பகலுக்குள் 14 மநுக்களின் ஆட்சி நடப்பதால் ஒரு மந்வந்தரத்திற்கு 71 சதுர்யுகங்கள். இந்த வைவஸ்தவ மன்வந்தரத்தில் இப்போது நடப்பது 28-வது சதுர்யுகம். அதில் இது கலியுகம். நாம் பண்ணும் ஸங்கல்பத்தில் இவ்வளவும் இருக்கின்றன! திதி,லக்கினம் வரையில் சொல்வதுண்டு. இவ்வளவும் காலக் கணக்கு.

தேசக் கணக்கு வேறு அந்த ஸங்கல்பத்தில் இருக்கிறது. பிரம்மாண்டம் முழுதையும் வர்ணித்து, அதிலே நாம் இருக்கிற ஊர் வரையில் கொண்டு வந்துவிடுகிறது. நாம் கடிதங்களில் ஊரையும் தேதியையும் எழுதுவது போல ஸங்கல்பத்தில் தேசத்தையும் காலத்தையும் சொல்லிக் கொள்கிறோம். இவ்வளவு அருமையான கணக்குகள் ஜ்யோதிஷ சாஸ்திரத்தினால் அறியப்படுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is புராதன நூல்களில் நவீனக் கண்டுபிடிப்புக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ப்ரத்யக்ஷ நிரூபணம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it