பழைய பெருமையும், இன்றைய அவநிலையும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்தச் சதுர்தச வித்யைகளும் ஆதிகாலத்திலிருந்து வெள்ளைக்கார ஆட்சி ஏற்படுகிற வரையில் நம் தேசத்தில் போதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதிலே ஒரு ரஸமான சங்கதி சொல்கிறேன். ஃபாஹியன் என்றும் ஹுவான்(த்) ஸாங் என்றும் இரண்டு சீன யாத்ரீகர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன் வெவ்வேறு சமயங்களில் இந்தியாவுக்கு வந்து சஞ்சாரம் செய்து, இங்கே தாங்கள் பார்த்ததை எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்குச் சரித்திர புஸ்தகங்களிலிருந்து தெரிந்திருக்கும். இவர்கள் நாலந்தா, தக்ஷசீலம் ஆகிய இடங்களிலிருந்த பெரிய பெரிய வித்யாசாலைகளைப் பற்றி கொண்டாடி எழுதியிருக்கிறார்கள். புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்தும் இந்தப் பழைய யூனிவர்ஸிடிகளைப் பற்றித் தெரிகிறது. இவை முக்கியமாக மிகவும் பிரகாச நிலையில் இருந்தது பெளத்த மதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான். ஆனால் இவற்றில் என்ன பாடத்திட்டம் (syllabus) என்று பார்த்தால், சதுர்தச வித்யைதான்! புத்தமதப் புஸ்தகங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் முதலில் வைதிக ஹிந்து மதத்தின் இந்த ஆதார புஸ்தகங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு அப்புறம்தான் புத்தமத நூல்களைப் போதித்திருக்கிறார்கள். அறிவு, அறம் இரண்டும் விருத்தியாவதற்கு இந்த வைதிகமான சாஸ்திரங்கள் எந்த மதஸ்தருக்கும் உதவுகின்றன என்பதாலேயே இப்படிச் செய்திருக்கிறார்கள். கல்விக்குக் கல்வி என்ற பேர் இருக்கவேண்டுமானால், இந்தப் பதினாலு வித்தைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்று பெளத்தர்களும் கருதியிருக்கிறார்கள்!

இங்கே நம் தக்ஷிணதேசத்தில் பார்த்தாலும், தமிழ் மன்னர்கள் ஏற்படுத்திய கடிகா ஸ்தானம், வித்யா ஸ்தானம் எனப்பட்ட கலாசாலைகளில் சதுர்தச வித்தைகள் போதிக்கப்பட்டிருக்கின்றன. கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் நடுவே ‘பாகூர்’ என்ற இடத்தில் இருந்த வித்யா சாலை பற்றி கி.பி. 868-ம் வருஷத்தியச் செப்பேடுகள் ஐந்திலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலே சதுர்தச வித்தைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டதாக இருக்கிறது. இதே போல், விழுப்புரத்துக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் உள்ள ‘எண்ணாயிரம்’ என்ற ஊரிலும் 340 மாணாக்கர்கள் படித்த ஒரு வித்யசாலை இருந்ததாகவும், அங்கே இந்தப் பிராசீன சாஸ்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததாகவும் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழனின் சாஸனம் ஒன்றிலிருந்து தெரிகிறது. இப்படிப் பல.

தமிழ் சரித்திரத்தை ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணி, அதைப் பற்றியே இப்போது கதைகள், நாவல்கள்கூட எழுத ஆரம்பித்திருந்தாலும், நான் விசாரித்துத் தெரிந்து கொண்ட மட்டில், தமிழ் மன்னர்கள் வேதசாஸ்திரங்களை ரொம்பவும் ஆதரித்துப் போஷித்தார்கள் என்பதை மட்டும் யாரும் எடுத்துச் சொல்வதாகத் தெரியவில்லை. Scientific outlook (பட்சபாதமில்லாமல், நடுநிலைமையாகச் சொல்வது) என்று பெரிதாகப் பேசுகிறார்கள்; ஆனாலும் வாஸ்தவத்தில் அப்படிக் காணோம்! வைதிகத்தை எதிர்த்து சண்டை போட்ட பெளத்தர்களே புத்தி வளர்ச்சிக்கும், தர்ம வளர்ச்சிக்கும் இந்தப் பதினாலு சாஸ்திரங்கள் அவசியம் என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இப்போது நம் ஊரில் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூட (இப்போது இவர்கள் வேதசாஸ்திரங்களை அபிவிருத்தி பண்ணா விட்டால் போகட்டும்), எப்போதோ தமிழ் ராஜாக்கள் வேத சாஸ்திரங்களை ஆதரித்து விருத்தி பண்ணினதைக்கூடச் சொல்லக்கூடாது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆக, இப்போது நாம் இருக்கிற ஸ்திதி என்ன என்றால், “உங்கள் வித்யைகள் என்ன? என்று கேட்டால், சொல்லத்தெரியாதது மட்டுமில்லை. வித்தை என்றாலே என்ன என்று தெரியவில்லை. செப்படி வித்தை, மாந்திரீகம், magic தான் வித்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

வித்யையும் கலையும் ஒன்றே. சந்திர கலை மாதிரி எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்கிற அறிவுதான் கலா, கலை எனப்படுவது. இப்போது கலை என்றால் டான்ஸைத் தான் நினைத்துக் கொள்கிறோம்!

இப்படி நாம் இருக்கக்கூடாது; நம்மவரை கொஞ்சமாவது நம்மவராக்க வேண்டும் என்றே இந்தப் பதினாலு – அல்லது பதினெட்டு – வித்யைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்ற உத்தேசம். நிறையச் சொல்லவில்லை. பேராவது தெரியட்டும் என்று சிறிது சொல்கிறேன். அதனாலேயே சிரத்தை ஏற்படலாம்; மேலே தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகலாம்.

இந்தப் பதினாலிலே மீமாம்ஸை, வியாகரணம், சிக்ஷை, நியாயம் என்று சில விஷயங்களைச் சொல்லும்போது அலுப்பாக இருக்கலாம். இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம், வெறும் knowledge (அறிவு) ஆக இருக்கிறதே தவிர, ஆத்மார்த்தமாக இல்லையே என்று தோன்றலாம். இப்போது நாம் செய்கிறதெல்லாம் ஆத்மார்த்தமாகவா செய்கிறோம்? மணிக்கணக்காகப் பார்க்கிற நியூஸ் பேப்பரில் என்ன இருக்கிறது? அதிலே முழுசாக ஒரு பக்கம், இரண்டு பக்கம் “ஸ்போர்ட்ஸ்’ என்று போடுகிறான். ஏதோ தேசத்தில் எவனோ விளையாடினான் என்று போடுகிறான். அதனால் நமக்கு என்ன லாபம்? ஆத்மார்த்தமாகத்தான் லாபம் உண்டா? அன்றாட வாழ்க்கைக்காவது பிரயோஜனம் உண்டா? ஆனாலும் விழுந்து விழுந்து படிக்கிறீர்கள், இல்லையா! ஒரு நாள், நான் பாட்டுக்கு நல்ல மத்தியான வேளையில் ரோடோடு வந்து கொண்டிருந்தேன். ஒரு கடை வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ரேடியோவில் நியூஸ் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் இத்தனை கூட்டம் என்று தெரிந்தது. [நியூஸ்] என்னவோ ஏதோ என்று விசாரித்தேன். எங்கேயோ பதினாயிரம் மைலுக்கு அப்பால் ஒரு தேசாந்தரத்தில் நடக்கிற கிரிக்கெட் நியூஸ்தான் என்று பதில் சொன்னார்கள். இப்படியெல்லாம் இந்த லோக வாழ்க்கைக்குகூட பிரயோஜனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, உங்களுக்குப் பிடித்த அநேக விஷயங்களுக்காகப் பொழுதையும், பணத்தையும், அறிவையும் செலவழிக்கிறீர்கள் அல்லவா? சிரமப்படுகிறீர்கள் இல்லையா? இதையெல்லாம் விட நிச்சயம் பிரயோஜனப்படுகிற நம் வித்யைகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறேன். அவற்றிலே நேராக ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாக தோன்றாததும் கூட, அதிலே கொண்டுவிடுவதற்காக ஏற்பட்டதுதான். அறிவு வளர்ச்சிக்கு இதெல்லாம் அவசியம்; மனஸை பண்படுத்திக் கொள்ள இவை உதவுபவை. பகவான் கொடுத்திருக்கிற ஒரு செல்வம் நம் அறிவு என்பது. அதை நல்ல கல்வியாலும், ஆராய்ச்சியாலும் சாணை தீட்டித் தீக்ஷணமாக்கிக் கொண்டால், அதற்கப்புறம் அதில் பரமாத்ம ஸத்யம் பளிச்சென்று ஸ்புரிப்பதும் சுலபமாகும். இப்படியே வாக்கு என்பதும் பகவத் பிரஸாதமாக மநுஷ்ய இனத்துக்கு மட்டுமே கிடைத்திருப்பது. அதைச் சரியாகப் பிரயோகிப்பதாலேயே பல க்ஷேமங்களை அடையலாம் என்பதால்தான் வாக்கைப் பற்றிய, சப்தத்தைப் பற்றிய வியாகரணம், நிருக்தம், சிக்ஷை, முதலிய சாஸ்திரங்கள் தோன்றியிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் பற்றி ஒரு அடிப்படை அறிவு (basic knowledge) எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று என் ஆசை. அதனால் நம் வித்யாஸ்தானங்கள் ஒவ்வொன்று பற்றியும் சிறிது சொல்கிறேன்.