அத்வைதம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அத்வைதம் என்பது என்ன? அதனால் நமக்கு என்ன உபயோகம்? வாஸ்தவமாகவே நாம் அதிலிருந்து பிரயோஜனம் அடையலாமா? முடியாதா? இவ்வளவும் பெரிசாக தத்வம், தத்வம் என்று அளவில் மட்டும் உள்ளதா? அநுபவத்தில் பிரயோஜனம் ஆகுமா? – என்பவற்றை ஆலோசிப்போம்.

‘அத்வைதம்’ என்பதன் அர்த்தம் என்ன? “இரண்டாவது இல்லாதது” என்பதுதான் அதன் அர்த்தம். இரண்டாவது இல்லை என்பது நமக்கு நடைமுறை அநுபவமல்ல. ஆயிரக்கணக்கான வஸ்துக்கள்தான் நமக்குத் தெரிகின்றன. அப்படி இருக்க இரண்டாவது வஸ்துவே இல்லை என்று ஏன் சொல்ல வேண்டும்? அப்படி இரண்டாவது இல்லாததனால் நமக்கு என்ன லாபம்?

நாம் எதற்காகப் பிரயத்தனம் செய்கிறோமோ அது அத்வைதத்தால்தான் கைகூடும். நாம் எதற்காகப் பாடுபடுகிறோம்? நமக்கு வரும் கஷ்டமெல்லாம் நிவர்த்தியாக வேண்டுமென்று பாடுபடுகிறோம். நாம் செய்யும் அத்தனை காரியமும் கஷ்டம் போய் ஸுகம் உண்டாக வேண்டும் என்பதற்குத்தானே? அந்தக் கஷ்ட நிவர்த்தி இந்த அத்வைதத்தால்தான் சாச்வதமாக உண்டாகும். தரித்ரம், பசி, அவமானம், வியாதி, வியவஹாரம், மனஸ்தாபம் முதலியவைகளை நிவர்த்தி செய்வதற்காக நாம் கஷ்டப்படுகிறோம். ஆனால் எந்த ஊரிலாவது இந்தக் கஷ்டம் இல்லாமல் இருக்கிறதா? இல்லை. ஒரு கஷ்டம் போனால் இன்னொன்று வரத்தான் செய்கிறது. எப்போதும் செளக்கியமாக இருப்பதென்பது நாம் செய்கிற பிரயத்தனங்களால் ஸாத்யமே இல்லைதான். ஆனாலும், நாம் துக்க நிவர்த்திக்காகப் பிரயத்தனம் பண்ணிக் கொண்டேயிருக்கிறோம். நம்முடைய லெளகிக பிரயத்தனங்களால் தற்கால சாந்தி மட்டும் உண்டாகிறது. ஒரு வியாதிக்கு மருந்து கொடுத்து அதை நிவர்த்தி செய்துவிட்டால் வேறொரு வியாதி வருகிறது. இப்படி உள்ள கஷ்டங்களை நீக்குவதற்கான நிரந்தரமான உபாயம் அத்வைதம்தான். அதனால் பசி, வியாதி, சாவு, அவமானம், வியவஹாரம், கோபம், தரித்திரம் முதலியவை என்றென்றைக்கும் வராமலிருக்கும்படியாகப் பண்ணிக் கொண்டு விடலாம்.

இப்படியெல்லாம் நாம் ஏன் துக்கப்படுகிறோம்? தரித்திரம், பசி, மானம், கெளரவம் முதலிய எல்லாம் நமக்கு இருப்பதுதான் காரணம். இவை இல்லாமல் இருந்தால் நல்லது. துக்கமே தெரியாது. ஆனால் இவை இருக்கின்றனவே! சரி, இவை ஏன் வருகின்றன? இவை வரும் வழி எது என்று பார்ப்போம். நமக்குத் துன்பம் தரும் பசி, வியாதி முதலானவைகளெல்லாம் உடம்பு இருக்கும் வரைக்கும் இருக்கும். உடம்பு இருப்பதால்தான் இவை வருகின்றன. இந்த உடம்பு போய்விட்டால் மற்றோர் உடம்பு வருகிறது. அந்த உடம்புக்கும் பசி, தாகம், வியாதி முதலியவையெல்லாம் வருகின்றன. அதாவது உடம்பு இருக்கிற வரையில் கஷ்டமுண்டு. துக்கம் உண்டு. ஆகவே உடம்பில்லாமல் பண்ணிவிட்டால் நமக்கு இந்தக் கஷ்டங்களெல்லாம் இல்லாமல் போகும்.

நமக்குப் பல பிறவிகள் உண்டாகின்றன. அந்தப் பிறவிகளுக்கெல்லாம் காரணம் என்ன? உடம்பு எதனால் வருகிறது? முன் ஜன்மத்தில் பண்ணிய பாப புண்ய பலன்களை நாம் அனுபவிக்கவேண்டும். ஆத்மாவால் பாப புண்யங்களை அனுபவிக்க முடியாது. ஆத்மாவை நெருப்பால் சுடமுடியாது. சந்தனத்தை அப்பிக் குளிரச் செய்து விடமுடியாது. ஆகையால் கர்மாவை அனுபவிப்பதற்காக ஓர் உடம்பு வேண்டியிருக்கிறது. நாம் செய்த பாப புண்ய பலனாகக் கடவுள் நமக்கு உடம்பைக் கொடுத்து அதையே ‘நான்’ என்று நினைக்கச் செய்து தண்டிக்கிறார். நாம் செய்த பாபத்திற்காக ஈச்வரன் உடம்பைக் கொடுத்து நம்மை சிக்ஷை செய்கிறார். இந்த உடம்பு போனதோடு பாபம் போகாவிட்டால் மறுபடியும் உடம்பைக் கொடுத்து சிக்ஷிக்கிறார். ஆகையால் நாம் பண்ணுகிற பாபம்தான் உடம்புக்குக் காரணம். இனிமேல் பாபம் பண்ணாமல் இருந்தால் உடம்பு வராது. ‘பாபம் பண்ணக்கூடாது’ என்ற நினைவு தினமும் இருக்க வேண்டும்.

பாப புண்யத்துக்குக் காரணம் என்ன? அவற்றைச் செய்யாமல் நிறுத்த இஷ்டமிருக்கிறது; ஆனால் முடியவில்லை. ஒரு மரத்தை தழைக்காமற் செய்ய வேண்டுமானால் கிளைகளை வெட்டினால் முடியாது; அடி மரத்தை வேரோடு வெட்டவேண்டும். வீட்டுக் கூரையிலே திரும்பத் திரும்பக் கறையான் புற்று உண்டாகிறது என்றால் மேலெழுந்த வாரியாக அந்தக் கூட்டை பெயர்த்தால் போதுமா? போதாது. இன்னோரிடத்தில் புற்று முளைக்கத்தான் செய்யும். கறையான் வைக்கும் தாய்ப்பூச்சியைப் பிடித்து அழித்தால்தான் புற்று எங்கும் எழும்பாமலே போகும். அதுபோலப் பாபத்துக்கு மூல காரணத்தை அறிந்து அதையே அழிக்க வேண்டும். பாபத்துக்கு மூலம் என்ன? கெட்ட காரியத்தினுடைய பலன்தான் பாபம்.கெட்ட காரியம்தான் பாப மூலம். கெட்ட காரியம் எதனால் செய்கிறோம்? நமக்கு ஒரு வஸ்து வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதை அடைவதற்குக் குறுக்கு வழிகளில் போகிறோம். அது பாபம். அதாவது,பாபம் செய்யக் காரணம் ஆசை. ஒரு வஸ்து அழகாக இருந்தால் ஆசை உண்டாகிறது. நல்ல பதார்த்தங்களை கண்டால் நமக்கு வேண்டுமென்று ஆசை தோன்றுகிறது. அது நல்லது என்று இச்சை உண்டாகிறது. இந்த இச்சையைப் பூர்த்தி பண்ணக் காரியங்கள் செய்கிறோம். இந்திரியங்கள் ஒன்றை அழகானதென்று அறிவதுதான் ஆசைக்குக் காரணம்.

இத்தனை நாழி நான் சொன்னதிலிருந்து ஏற்படுவது என்னவென்றால்:

நாம் செய்யும் பாபத்துக்கு உடம்பு தண்டனை. பாபத்துக்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட காரியத்துக்கு மூலம் ஆசை. ஆகையால் நம் கஷ்டம் அனைத்துக்கும் மூல காரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால்தான் நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும். ஆசையை எப்படி நிவர்த்திப்பது?

வேதத்துக்குச் சிகரமாக இருக்கும் வேதாந்தம் இந்தத் துக்க நிவர்த்திக்குத் தக்க வழியைச் சொல்கிறது.

ஆசையும் த்வேஷமும் நமக்கு அன்யமாக, நம்மைவிட வேறாக, இரண்டாவதாக இருக்கும் வஸ்துக்களிடத்தில்தான் உண்டாகின்றன. நம்மிடத்திலேயே நமக்கு ஆசையும் உண்டாவதில்லை; வெறுப்பும் உண்டாவதில்லை. ஆனபடியால் இப்போது வேறேயாக உள்ள பொருள்களிடத்தில் ஆசை உண்டாவதால், அவைகளையும் நாமாகவே பண்ணி விட்டால் ஆசை உண்டாகாது அல்லவா? நம்மிலும் வேறாக ஒன்று இல்லாமல் எல்லாவற்றையும் நாமாகப் பண்ணினால் ஆசை உண்டாகாது. ஆசை இல்லாவிட்டால் கெட்ட பிரயத்னம் இல்லை. அதனால் பாபம் இல்லை. பாபம் இல்லாத பொழுது தேகம் இல்லை. அது இல்லாவிட்டால் துக்கம் இல்லை. வாழ்நாள் பூராவும் நாம் பல பிரயத்தனங்கள் பண்ணியும் சாச்வதமாகப் போக்கிக் கொள்ள முடியாத துக்கமானது, இப்படி நமக்கு வேறாக இரண்டாவது வஸ்து இல்லை என்று ஆக்கிக் கொள்வதனால்தான் கைகூடுகிறது. இப்படி “இரண்டு இல்லை” என்பது தான் அத்வைதம்.

இரண்டாவது ஒன்று இருந்தால், அது நம்மைவிடச் சக்தி உள்ளதாக இருந்தால், பயம் உண்டாகிறது. அழகாக இருந்தால் ஆசை உண்டாகிறது; சித்த விகாரம் உண்டாகிறது. இரண்டாவது இல்லாவிட்டால் ஆசை இல்லை; த்வேஷம் இல்லை; பயம் இல்லை. இப்படி இரண்டாவது இல்லாமல் பண்ணுவது தான் அத்வைதம். இரண்டாவது இல்லையானால் பயம் நீங்குகிறதென்று உபநிஷத் சொல்கிறது. இரண்டாவதாக ஒன்றை நினைத்து விட்டாயோ பயத்துக்கு விதை போட்டு விட்டாய் என்கிறது: “த்விதீயாத்வை பயம் பவதி” (-பிருஹதாரண்யக உபநிஷத்.)

பிரபஞ்சத்தில் பலர் இருக்கிறார்களே, இவர்களெல்லாம் ஒன்றாக எப்படி ஆகமுடியும்? இரண்டாவது இல்லாமல் எப்படிப் பண்ணுகிறது?

வேதாந்தம் இந்த லோகத்தில் நாம் பல வஸ்துக்களாகக் காண்பவைகளெல்லாம் பொய் என்கிறது. எல்லாம் ஈச்வர ஸ்வரூபம் என்று சொல்கிறது. நமக்கு அப்படி தோன்றவில்லையே! எல்லாம் ஈச்வரன் என்பது நிஜமானால், நமக்குத் தோன்றுவது பொய்யாக வேண்டும். நமக்குத் தோன்றுவது நிஜமானால், எல்லாம் ஈச்வரன் என்பது பொய்யாக இருக்க வேண்டும். நமக்குத் தோன்றுவது நிஜமாக இருந்தால் நமக்கு கஷ்டம் வரக்கூடாது. ஆனால் கஷ்டம் வருகிறது. வேதாந்தத்தை அநுபவமாக்கிக் கொண்ட மஹான்கள், ஞானிகள்தான் நம் மாதிரித் திண்டாடாமல் ஸதாவும் ஆனந்தமாக இருக்கிறார்கள்; கஷ்டமே தெரியாமல் இருக்கிறார்கள். ஆகையால் வேதாந்தம் சொல்வது தான் நிஜம். அது உண்மையானால், எல்லம் ஈச்வர ஸ்வரூபம் என்பது உறுதியாக வேண்டும்.

லோகமெல்லாம் மெய்யான ஒரே வஸ்துவென்று அத்வைதம் சொல்கிறது. நமக்கு வஸ்துக்களாகத் தோன்றுவதெல்லாம் பொய். இந்தத் தோற்றங்களுக்கெல்லாம் ஆதாரமான வஸ்துவொன்றே மெய்.

மெய்யான வஸ்துவை பிரம்மம் என்றும், ஆத்மா என்றும் அத்வைதம் சொல்லும். லோக வழக்கில் ஈச்வரன் என்கிறோம். பிரம்மம் நிர்குணமானது, ஈச்வரன் ஸகுணமானவன் என்கிற பாகுபாடு இங்கே நான் சொல்லவில்லை.

எல்லாம் ஈச்வரன் என்றால் நாம் மட்டும் வேறேயா? நம்மையும் அந்த ஈச்வரனாகக் கரைக்க வேண்டும். அப்பொழுது இரண்டாவது என்பது இல்லை. நாம் இப்பொழுது வெவ்வேறாகப் பார்க்கிறோம். எல்லாம் ஈச்வரனாகப் பார்ப்பது தான் நிஜப் பார்வை. இரண்டாவது இல்லாமல் நாமும் கரைந்துவிட்டால் நல்லது உண்டாகும். துக்கம் இல்லாமல் போகும். லோகத்தில்கூட இரண்டு மனஸுகள் ஒன்றானால் சண்டையில்லை. அதுபோல எல்லாம் ஈச்வரனாகி ஒன்றாகி விட்டால் எந்தக் கிளர்ச்சியும் இல்லை. ஒரே சாந்திதான். அப்போது எல்லாம் நாமாக ஆகிறோம். நமக்கே நம் மேல் ஆசை அப்பொழுது ஏற்படாது. ஆசையில்லாவிட்டால் பாபம் இல்லை. பாபம் இல்லையென்றால் தேகம் இல்லை. இந்த தேகம் இருக்கிறபோதே அது இல்லை என்ற ஞானம் உண்டாகிவிடும். இது போனபின் இன்னொரு தேகம் வராது. அப்படியே அத்விதீயமான ஆனந்தத்தோடு ஒன்றாகியிருப்போம். தேஹம் இல்லாவிட்டால் துக்கமே இல்லை. அந்த துக்க நிவர்த்திக்கு அத்வைதம் மருந்து. இரண்டாவது இல்லாமற் பண்ணுவது அத்வைதம். எல்லாம் பகவானாகப் பார்ப்பது அத்வைதம். உள்ளதை உள்ளபடி பார்ப்பதுதான் அத்வைதம்.

நாம் தூங்குகிறோம்; தூங்கி விழிக்கிறோம். தூங்கும் போதே சில சமயங்களில் ஸ்வப்பனம் உண்டாகிறது. விழித்துக்கொண்டிருப்பது ஜாக்ரத் அவஸ்தை. கனவு காண்பது ஸ்வப்னாவஸ்தை. நன்றாக தூங்குவது ஸுஷுப்தி. இப்படி மூன்று அவஸ்தைகள் இருக்கின்றன. ‘நாம் விழித்துக் கொண்டிருப்பது வேலை செய்வதற்காக. நன்றாக தூங்குவது வேலை செய்த சிரமமெல்லாம் போவாதற்காக. இந்த இரண்டுமே போதுமே. ஸ்வப்னம் எதற்காக இருக்கிறது?’ என்று யோசித்துப் பார்த்தேன். ஈச்வரன் எங்கும் இருக்கிறார், அவர் அத்வைத ப்ரம்மம், எல்லாம் ஆத்ம ஸ்வரூபம் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு த்ருஷ்டாந்தமாகவே இந்த ஸ்வப்னத்தை அவர் உண்டாக்கி இருக்கிறார் என்று தோன்றியது. கனவு காண்பதற்கு வேறு ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த லோகம் நமக்குப் பலவாகத் தோன்றுவது ஸ்வப்னத்தைப் போல இருக்கிறது. ஸ்வப்னத்தில் என்ன என்னவோ கஷ்டங்களும் ஸுகங்களும் வருவதாக தோன்றுகின்றன. ஸ்வப்னம் முடிந்தால் ஒன்றும் இருக்கிறதில்லை. ஸ்வப்னம் பார்த்தபொழுது இருந்தாகத் தோன்றிய உடம்பு கூட இருப்பதில்லை. இப்படி ஸ்வப்னம் கண்டோம் என்று அறிந்துகொண்ட ஒருவன் தான் மிச்சம். இந்த ஒரே ஒருவனின் எண்ணந்தான் கனவுலகில் அவன் கண்ட அத்தனை பேர்களும், அத்தனை வஸ்துக்களும்! ஸ்வப்னத்தில் இருந்த இவை எல்லாம் விழிப்பிலே போய்விடுகின்றன. இதே மாதிரி ப்ரபஞ்ச ஸ்வப்னத்திலிருந்து நாம் விழித்துக்கொண்டால், பிரபஞ்சத்திலுள்ள ஸகல வஸ்துக்களும் பொய்யாகப் போய், அவற்றைக் கண்ட அறிவு ஒன்றுதான் மிச்சம். ஸத்யமான வஸ்து அதுதான். அதற்குத்தான் அத்வைதம் என்று பெயர். ஆயிரக்கணக்காகப் பார்ப்பது த்வைதம். நாமெல்லாரும் அத்வைதத்தை நம்புகிறவர்கள். ஆயினும் இப்போது அநுபவத்தில் த்வைதமாகிய கனவு காண்கிறோம்.

இதிலிருந்து விழித்தால் அது அத்வைத நிலை. அந்த ஸித்தாந்தம் நினைவிலாவது இருந்தால் லக்ஷத்தில் ஒருவனாவது அந்த நிலையை அடையப் பிரயத்தனம் பண்ணுவானென்றுதான் பெரியவர்கள் அத்வைத சாஸ்திரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். காசியில் கங்கையிருக்கிறது என்று தெரிவது மட்டும் போதாது. டிக்கட் வாங்கிக் கொண்டு ரயில்வே ஜங்க்ஷனெல்லாம் தாண்டி, ரயிலில் தூங்காமல் போய்க் காசியை சேர்ந்து கங்கா ஸ்நானம் செய்து அநுபவத்தில் நாம் சுத்தியாக வேண்டும்.

அத்வைத நிலை வாக்கும் மனமும் அடைய முடியாமல் திரும்புமிடம் என்று வேதமானது சொல்கிறது.

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ| (தைத்திரீயோபநிஷத்)

என்று வேத வாக்யம் சொல்கிறது. மனஸால் நினைக்க முடியாவிட்டால் எப்படித் தெரிந்துகொள்வது? வேதம் சொல்வதன் அர்த்தம் என்ன? அத்வைத ஸத்தியம் மனஸால் நினைக்கக் கூடியதல்ல என்பதன் அர்த்தம் என்ன? பரமாத்மாவை மனஸால் நினைக்கலாம், அறியலாமென்றால், அந்தப் பரமாத்மா அறியப்படும் பொருள் ஆகிறது. இப்படி சொன்னாலே அறிபவன் அதற்கு வேறு ஆவான் என்று ஆகிவிடுகிறது. இது தப்பு. அறிகிற ஜீவாத்மா, அறியப்படும் பரமாத்மா என்று இரண்டு பேர்வழிகள் இருந்துவிட்டால் அது த்வைதம் தான். அறிகிறவனும் அறியப்படுபவனாகி விட்டால் தான் அத்வைதம். இதனால் தான் ‘பரமாத்மாவை எனக்குத் தெரியும் என்பவனுக்குத் தெரியாது; தெரியவில்லை என்பவன் தான் தெரிந்தவன்’ என்று சொல்லப்படுகிறது.

யஸ்ய அமதம் தஸ்ய மதம், மதம் யஸ்ய ந வேத ஸ: || (கேனோபநிஷத்)

அறியப்படவில்லை யென்றால் என்ன? அது வேறாக இருந்து அறியப்படுவதில்லை என்பதே அர்த்தம். விளக்கைக் காட்ட வேறு விளக்கு கொண்டு வந்தால் அதற்கு அர்த்தமில்லை. விளக்கைத் தெரிந்து கொள்ள வேறு ஒன்றும் வேண்டாம். அதுபோல் பிரம்ம ஞானம், பிரம்மமாகிற ஞானம் அறிவு ஸ்வப்ரகாசமானது. அதை ஜீவாத்மா என்று நினைக்கப்படுகிற சிறிய அறிவால் அறிய முடியாது. அறிவே உருவாக இருப்பது ஈச்வர ஸ்வரூபம். தேவாரம், திருவாசகம், தாயுமானவர் பாடல் முதலிய தமிழ்நூல்களில் பலவிடங்களில் ஈச்வரன் ‘அறிவே’, ‘அறிவுருவே’ என்று சொல்லப்படுகிறார். அந்த அறிவிலேயே அறியப் போகிறவனும் கரைந்து விடுவதாலே இவன் அதை அறியமுடியாது.

மனஸாலே அது ஆலோசிக்கப்படுவதில்லை. மனஸ் அதனால் ஆலோசிக்கிறது. மனஸ் ஆலோசிக்கிறதெல்லம் பொய். எதனால் அது ஆலோசிக்கறதோ அது ஒன்றே மெய்.

யன் மனஸா ந மநுதே யேநாஹுர் மனோ மதம் | (கேனோபநிஷத்)

கனவில் காணப்படுவதெல்லாம் பொய். பார்க்கிற அறிவொன்றுதான் மெய். இந்த ஆத்மாவே பார்க்கப்படும் அவ்வளவு வஸ்துக்களாகவும் கனவில் இருந்தது. கனவு நீங்கினால் ஒன்றே மிச்சம் இருப்பது தெரியும். கனவிலே வருபவன், கனவு காண்கி்றவனை மனஸால் ஆலோசித்து, அறிய முடியுமா? ஆதலால் வேறாக இல்லாவிட்டால் ஒன்றை அறியவும், அதைப்பற்றிச் சொல்லவும் முடியாது. எனவேதான் அத்வைத ஸத்யமானது வாக்காலும் மனத்தாலும் பிடிபடாதது என்பது.

இப்பொழுது முடிவாக நாம் அறிந்து கொண்டது – நிஜம் ஒன்றுதான் இருக்கிறது; எல்லாம் அந்த ஒன்றான ‘ஈச்வர ஸ்வரூபம்’ என்பதே. மாயையால் வேறு வேறாகத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் ஒன்றாக்கவேண்டும். ‘நாம்’ என்பதையும் அந்த ஒன்றிலே கரைக்க வேண்டும். அதற்கு வேண்டிய சாஸ்திரங்களைப் படிக்கவேண்டும். இதற்கு ஸாதனம் ச்ருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரம்), புராணம், கோயில் தரிசனம், பூஜை, பரோபகார கர்மா, ஸ்வதர்மம் முதலியவைகள். உலகத்தில் உள்ள வஸ்துக்களுக்காக எவ்வளவோ தியாகம் பண்ணுகிறோம். நமக்கு ஸ்திரமான ஆனந்தத்தைத் தரும் அத்வைத நிலை அடைவதற்கு எந்தத் தியாகமும் பண்ணலாம். ஞானோபதேசம் செய்த யாக்ஞவல்கியரிடம் ஜனகர், “விதேஹ ராஜ்யம் முழுவதும் கொடுத்தேன்; என்னையும் கொடுத்தேன்” என்றாராம்:

“விதேஹான் ததாமி மாம் சாபி ஸஹ தாஸ்யாய” (பிருஹதாரண்யகம்).

கூரையில் எத்தனை தரம் உடைத்தாலும் பத்து நாளுக்கு ஒரு தரம் கறையான் புற்று தோன்றிக் கொண்டேதான் இருக்கும். கூரை மூங்கிலுக்குள் இருக்கிற தாய்ப் பூச்சியை எடுத்துப் போட்டால்தான் அப்புறம் புற்று முளைக்காது. இந்த மாதிரி ஸாதனை, மார்க்கம் எதில் போனாலும் சரீரம், துக்கம் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டுதான் இருக்கும். இதற்கெல்லாம் ஆதிகாரணமான தாய்ப்பூச்சியான த்வைதப் பூச்சியை எடுத்துப் போட்டால்தான் நமக்கு வேறான இன்னொன்றால் ஏற்படும் காமமும், க்ரோதமும், இதுகளை அநுபவிப்பதற்காக மறுபடி மறுபடி உடம்பு எடுப்பதும் தீர்ந்து போகும்.

இந்த நிலைக்கு வருவதற்கு ஸுலபமான ஸாதனம் பக்தி உபாஸனை என்று அப்பைய தீக்ஷிதர் சொல்லியிருக்கிறார். அதை எல்லோரும் அநுஸரித்து அத்வைத ஸித்தியை அடைய வேண்டும்.