Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நவராத்திரியின் மஹிமை நவராத்ரீவ்ரதம் பூமௌ குருதே யோ நரோத்தம I தஸ்ய புண்யபலம் வக்தும் சக்தா பரமேஸ்வரீ II அ நாதியாகவே இந்துக்களுக்கு நவராத்திரி என

நவராத்திரியின் மஹிமை

நவராத்ரீவ்ரதம் பூமௌ குருதே யோ நரோத்தம I

தஸ்ய புண்யபலம் வக்தும் சக்தா பரமேஸ்வரீ II


நாதியாகவே இந்துக்களுக்கு நவராத்திரி என்ற ஒரு மகா புண்ணிய காலம் வருஷந்தோறும் வருவதை யாவரும் அறியக்கூடும். அந்தப் புண்ணியகாலத்திற்கு ஸமானமான மற்றொரு புண்யகாலம் சாஸ்திரங்களில் சொல்லப்படவில்லை. அந்தப் புண்ணியகாலமோ ஒன்பது தினங்களால் நிறைந்தது. அதில் லோகமாதாவான பராசக்தியே வழிபடப் பெறும் தேவதை. ஸ்ரீதேவியினுடைய பூஜையும், ஸ்ரீதேவியினுடைய பரதத்துவத்தைப் பிரகாசம் செய்யும் ஸ்ரீதேவி பாகவத பாராயணமும், பஞ்சதசீ முதலான மகா மந்திர ஜபமும், ஸுவாஸினிகள், குமாரிகைகள், பிராம்மணர்கள், வடுக்கள், பிரம்மசாரிகள் இவர்களுடைய ஸந்தர்ப்பணையும் விரதத்தின் முக்கியமான அங்கங்களாகும். எந்தத் தினங்களில் ராத்திரியில் பராம்பிகை புதிது புதிதாகத் தனது ஸ்வரூபத்தைத் தன்னை ஆராதிக்கிற

பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து அருள் செய்கிறார்களோ அந்தத் தினங்களுக்கு நவராத்திரி என்ற பெயர் விளங்கிவருகிறது. இந்த விரதத்தை அநுஷ்டானம் பண்ணுவதில் ஸ்திரீகளானாலும் புருஷர்களாலும் இரு வகுப்பினருக்கும் அதிகாரம் உண்டு.

முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலை யாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸுரனைக் கொன்ற மஹாதுர்க்கை யாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாஸுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அஸுரர்களைக் கொன்று ஜகத்தை ரக்ஷித்த மகாஸரஸ்வதி யாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள்.

ஒன்பது தினங்களிலும் தேவீமஹாத்ம்ய பாராயணமும், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், த்ரிசதி , அஷ்டோத்தரசதநாமாவளி முதலானவற்றினால் அர்ச்சனையும் செய்து தேவியை ஆராதிக்கிறவர்களுக்கு ஸகலவிதமான ஸெளபாக்கியமும் ஏற்பட்டு, இகத்திலும் பரத்திலும் ச்ரேயஸ்ஸை அடைவார்கள். வித்யையையோ தனத்தையோ யசஸ்ஸையோ புத்திர லாபத்தையோ இன்னும் மற்றக் காமனைகளையோ பூர்த்தி செய்துகொள்வதற்கு இந்த நவராத்திரி விரதம் முக்கியமான உபாயமாகும்.

ருதுக்களுக்குள் வஸந்தருதுவும், சரத்ருதுவும் யமதர்மராஜாவின் தந்திப் பற்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது வஸந்தருதுவிலும் சரத் ருதுவிலும்தான் பிராணிகளுக்கு வியாதிகள் அதிகமாக ஏற்பட்டு அதனால் கஷ்டத்தை அடைவது அதிகமாக இருக்கும் என்பது சாஸ்த்திரத்தின் தாத்பர்யமாகும். அந்த ஸமயத்தில் லோகமாதாவான ஜகதீஸ்வரியை ஆராதிக்கிறவர்களுக்கு யாதொரு விதமான வியாதியும் ஏற்படாதென்பது திண்ணம். ஒன்பது தினங்களிலும் பிரத்தியக்ஷமான பலனைக் கருதுகிற உபாஸகர்கள் அலவணமாக ஹவிஸ்ஸை மாத்திரம் ஒரு வேளை போஜனம் செய்துவிட்டுப் பரதேவதையை ஆராதிக்க வேண்டும். அவ்விதமானால் அவர்களுடைய மனோபீஷ்டம் உடனே நிறைவேறும் என்பதில் ஸந்தேகமே இல்லை. தசரதசக்கரவர்த்தியின் திருக்குமாரனான ஸ்ரீராமன் ராவணனால் அபகரிக்கப்பட்ட ஸீதையை அடைவதற்கு நாரதமஹரிஷியின் உபதேசத்தால் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துத் தேவியினுடைய பிரஸாதத்தை அடைந்தார் என்று ஸ்ரீதேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நஷ்டவஸ்துவின் லாபத்திற்கும் இந்த நவராத்திரி விரதாநுஷ்டானம் மிகவும் முக்கியமானதென்று ஸித்திக்கிறது.

பராம்பிகை என்ற தேவி மோக்ஷத்திற்கு ஸாதனமான ப்ரஹ்மவித்யைக்கு அதிதேவதையான பராசக்தியாவாள். அகுணை, ஸகுணை என்று இரண்டு விதமாகத் தேவியின் ஸ்வரூபம் சாஸ்திரங்களில் வர்ணிக்கப்படுகிறது. ஸத்துவ குணம் ரஜோகுணம் தமோ குணம் என்ற மூன்றுக்கும் க்ஷே£பம் இல்லாமல், அதாவது ஒன்று மேல், ஒன்று கீழ் என்ற தாரதம்யம் இல்லாமல், ஸமமான நிலையில் இருக்கும்பொழுது ஸாம்யாவஸ்தை என்று பெயர். அந்த ஸாம்யாவஸ்தையை அடைந்த மாயை ப்ரஹ்மத்திற்கு உபாதியாக ஆகும் பொழுது தேவியினுடைய ஸ்வரூபம் பாஸிக்கின்றது. குண ஸாம்யா வஸ்தாபந்ந மாயோபஹித ப்ரஹ்மஸ்வரூபிணீ பராசக்தி என்ற தேவதை. இந்தத் தேவி அகுணமான சக்தி என்று சொல்லப்படுவாள். இந்த ஸந்தர்ப்பத்தில்தான் தேவிக்குப் புவனேஸ்வரீ என்ற திருநாமமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஓர் நாமம் மட்டுமில்லை; இன்னும் அநேக நாமாக்கள் உண்டு. நாமாக்களுடைய ஸங்க்யையே யாராலும் அறிய முடியாது. அவ்விதம் இருக்க, தேவியின் ஸ்வரூபத்தையா அறிய முடியும்? அம்ருதக் கடலினுடைய நடுவில் மணித்வீபம் என்ற ஸ்தலத்தில் சிந்தாமணி என்ற ரத்தினத்தால் நிர்மாணம் செய்யப்பட்ட திவ்ய க்ருஹமே ஸ்ரீதேவியினுடைய மந்த்ரமாகச் சொல்லப்படுகிறது.

லக்ஷ்மீ ஸரஸ்வதி பார்வதீ என்ற தேவிகள் ஸகுணமான சக்திகளாவார்கள். ரஜோகுணமும் தமோகுணமும் கீழாக அமுங்கிப்போய் ஸத்துவகுணம் மேலிட்டிருக்கும்பொழுது அந்த மாயை ப்ரஹ்மத்திற்கு உபாதியாக இருக்கும்பொழுது அந்த ஸத்வப்ரதாந மாயோபஹித ப்ரஹ்மஸ்வரூபிணீயான சக்தியை லக்ஷ்மீ தேவி என்றும், அதே மாயையக்கு ஸத்துகுணமும் தமோகுணமும் கீழடங்கி ரஜோகுணம் மேலிட்டிருக்கும்பொழுது ரஜ:ப்ரதானமான மாயோபஹித ப்ரஹ்மஸ்வரூபிணியான சக்தியை ஸரஸ்வதீ என்றும், அப்படியே அந்த மாயைக்கு ஸத்துகுணமும் ரஜோகுணமும் கீழடங்கித் தமோகுணம் மேலிட்டிருக்கும்பொழுது தம : ப்ரதாந மாயோபஹித சக்தியைப் பார்வதீ என்றும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. லக்ஷ்மீ ஸரஸ்வதீ பார்வதீ என்ற இந்த மூன்று சக்திகளும் குணவைஷம்யத்தை அடைந்த மாயோபஹித ப்ரஹ்மஸ்வரூபிணிகளாக ஆகிறபடியால், ஸகுணமான சக்திகளென்று சொல்லப்படுவார்கள். இவ்விதம், அகுணமான சக்தி, ஸகுணமான சக்தி என்று தேவியினுடைய ஸ்வரூபம் இரு வகைப்படும். அகுணமான சக்தி ஸகல வேதாந்தங்களிலும் சொல்லப்படும் ஸம்வித்ரூபமான பரப்ரஹ்மமேதானகும். அக்னிக்கும் ஒளஷ்ண்யம் என்ற சக்திக்கும் பேதம் இல்லாதது போல், தேவிக்கும் ப்ரஹ்மத்திற்கும் பேதமே இல்லை. தேவியே ப்ரஹ்மம், ப்ரஹ்மமே தேவீ என்று தேவியினுடைய ஸ்வரூபத்தை அநுஸந்தானம் செய்துகொண்டு, அம்பிகையை ஆராதிக்க வேண்டும்.

தேவியினுடைய ஆராதனத்திற்கு, தேவிக்குப் பிரதானமான பீடமாகிய முக்கியமான க்ஷேத்திரங்களே ஸித்தியைக் கொடுக்கக் கூடியவை. இந்தப் பாரதவர்ஷத்தில் ஹாலாஸ்ய க்ஷேத்திரம் போல் தேவியின் ஸாந்நித்யத்திற்குப் பிரதானமான பீடம் மற்றொரு க்ஷேத்திரத்தில் இல்லை என்பது ஸித்தமானது. இந்த க்ஷேத்திரத்திலுள்ள பீடத்திற்கோ ச்யாமளா பீடம் என்று பெயர் விளங்கி வருகிறது. அந்த நாமாவினாலேயே ஸகல போகங்களையும், ஸ்வரூப அவஸ்தானம் என்ற முக்தியையும் கொடுக்கக்கூடிய பீடம் இதுவேதான் என்று ஸித்திக்கிறது. ச்யாமம் என்றால் மந்த்ர சாஸ்த்ர ரீதியாக ஜன்மா என்ற அர்த்தம் விளங்குகிறது. ள என்றதனால் அவஸானம் என்ற அர்த்தத்தை அறிக. ஜன்மாவிற்கு முடிவைக் கொடுக்கும் பீடம் என்று பொருளானது பாஸிக்கிறது. இந்த க்ஷேத்திரத்திற்கு த்வாதசாந்த என்றும், ஸஹஸ்ர கமலம் என்றும், சந்திரமண்டலம் என்றும், ப்ரஹ்மரந்த்ரம் என்றும் பெயர்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நவராத்திரி புண்யகாலத்தில் இந்த க்ஷேத்திரத்தில் வாஸமும், ஸ்வர்ண பத்மினி என்ற காரணப்பெயடருன் கூடிய புண்ணிய தீர்த்த ஸ்நானமும், மீனாக்ஷி பரதேவதையின் தரிசனமுமே புக்தி, முக்தி இவற்றைக் கொடுக்கக் கூடியது என்பதற்கு ஆக்ஷேபமே இல்லை. இது போலவே அகிலாண்டேஸ்வரியின் ஸந்நிதியும், காமாக்ஷியின் ஸந்நிதியும், மங்களாம்பிகையின் ஸந்நிதியும், ப்ரமராம்பிகையின் ஸந்நிதியும், விசாலாக்ஷியின் ஸந்நிதியும் நவராத்திரி காலத்தில் விரதாநுஷ்டானம் செய்கிறவர்களுக்குப் புண்ய ஸ்தலமாகும். ஆகையால் இந்தப் புண்ய ஸ்தலங்களுக்குள் ஏதாவதொரு ஸ்தலத்தில் வஸித்துக்கொண்டு மேற்சொன்ன நவராத்திரி விரதத்தை விதிவத்தாக அநுஷ்டித்து ஸகல ப்ராணிகளும் ஸகலவிதமான ஸெளபாக்கியத்தையும் பெற யத்னம் செய்ய வேண்டும்.

க்ஷேத்திரங்களுக்குள் மிகவும் முக்கியமான ஹாலாஸ்ய க்ஷேத்திரத்தில் இந்த நவராத்திரி விரதாநுஷ்டானம் மஹா பலத்தைக் கொடுக்கும். இந்த க்ஷேத்திரத்தில் வஸிக்கும் ஜனங்களே மகா புண்ணியவான்கள். சத்ருக்ஷயம், ஐச்வர்ய அபிவிருத்தி, தாரித்ரிய நிவிருத்தி, வித்தையில் ப்ராசஸ்த்யம் முதலான மேன்மையை அடைய இந்த நவராத்திரி விரதமே முக்கியமான ஸாதனமாகும்.

ஸகல பிராணிகளுக்கும் மாத்ரு பக்தி மிகவும் அவசியமாகும். ' மாத்ருதேவோ பவ ' என்று ச்ருதியும் மாதாவை முதல் தெய்வமாகப் போதிக்கிறது. அவ்விதம் போதிக்கப்பட்ட மாதாவோ ஸர்வலோக ஜனனியான ஜகதீச்வரியேதானாவாள். அந்தத் தேவியின் சரணகமலத்தில் பக்தியில்லாத ஜனங்களைத் தௌர்ப்பாக்யத்தைச் செய்தவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். நவராத்திரி புண்யகாலத்தில் அந்தத் தேவியை ஆராதிக்க வேண்டியது அவசியமாகும். தனது கிருகத்தில் கும்பஸ்தாபனம் செய்து அதில் தேவியை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜைகள் செய்து ஸ்ரீஸ¨க்தம் முதலான ஸ¨க்த பாராயணமும், லலிதோபாக்யான பாராயணமும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் பிரதிதினம் செய்து, குறைந்த பக்ஷம் ஒரு ஸுமங்கலிக்காவது பிரதிதினம் போஜனம் செய்துவைத்து, விஜயதசமி தினத்தில் விரதத்தை ஸமாப்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறவர்களுக்கு தேவியினுடைய தரிசனமும், ஸகல ஸெளபாக்கியமும் ஸித்திக்கும் என்பது நிச்சயம். ஆகையால் ஸகலவிதமான ப்ராணிகளும் ஸ்ரீதேவியின் சரணாரவிந்தத்தில் பக்தியுள்ளவர்களாக வேண்டும்

htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it