பசு ஸம்ரக்ஷணம் ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் தொன்றுதொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனித எண்ணங்களும் தத்துவங்களுமே நம் கலாச்சாரத்திலு

பசு ஸம்ரக்ஷணம்

ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

தொன்றுதொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனித எண்ணங்களும் தத்துவங்களுமே நம் கலாச்சாரத்திலுள்ள மற்றச் சீரிய அம்சங்களையும் உருவாக்கித் திகழச் செய்துள்ளன.

பாலுட்டித் தன் சிசுக்களை வளர்க்கும் இனங்களிலே பசு ஒன்றுதான் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துச் சம்ரக்ஷிப்பதுடன் மற்ற இனத்தைச் சார்ந்த பாலகர்களையும், விருந்தினர்களையும் பால் கொடுத்துப் போஷிக்கிறது. ஆகவே நாம் பசுவினிடம் நம் தாயிடம் காட்டும் பக்தியையும் மரியாதயையும் காட்டவேண்டும்.

தமிழ் நாட்டுத் சமயாசார்யார்களும், மனித சமூகத்தின் லௌகிக க்ஷேமத்திற்கும் பசுவின் ஸம்ரக்ஷணம் அவசியம் எனப் போதிக்கிறார்கள்.

நம் நாட்டுத் சமய குரவர்களில் ஒருவரான ஞானசம்பந்தர் ஹிந்து மத முக்கியக் கொள்கைகளில் பசு ஸம்ரக்ஷணையைச் சேர்த்துள்ளனர்.

சங்க நூல்களில் பிரபலமான புறநானுறு, யுத்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபடும் இரு கட்சியாளர்களும் பசுவைக் காப்பாற்றுவதைக் முதல் கடமையாக கருத வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பசுவே லோக ஷேமத்தை அளிக்க வல்லது. கண்ணனின் அவதாரம் கோஸம்ரக்ஷணைக்காகவே என்பதை அவரது கோபாலன் என்ற திருநாமம் எடுத்துக் காட்டுகிறது.

வங்கம் பீகார் எல்லையிலுள்ள ஸந்தால் பர்கணா ஜில்லாவில், இலுப்பை மரம், பூர்விக மக்களுக்கு முக்கிய உணவை அளித்து வந்தது. ஆதலால் இலுப்பை மரம் அழியாமல் இருக்க அதற்கு சட்டப்பூர்வமான காப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருமானத்தைப் பெருக்குகிறது என்பதால் ஆகாரத்துக்கு உபயோகமில்லாத சந்தன மரம் சட்டமூலமாக காப்பாற்றப்படுகிறது.

இம்மாதிரி சாமானிய இனங்களுக்குக் காப்பு இருக்கையில், தேசீயச் செல்வமான பசுவைக் காப்பாற்றவும், பசுவைத் தடுக்கவும் சட்டம் எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். பசுவதையை தடுப்பதுடன், அதைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயமாக மேய்ச்சல் தரை ஒதுக்கப்படவேண்டும். மாட்டுத் தீவனமான பிண்ணாக்கை எருவாக உபயோகிப்பதை தடுக்கவேண்டும். முகலாய அரசர்களான அக்பரும் ஷாஜஹானும், நம் காலத்திலேயே ஆப்கானிஸ்தான் அமீரும், பசு ஸம்ரக்ஷணையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான சட்டங்களைச் செய்தது ககுறிப்பிடத் தக்கது.

வயல்களில் கஷ்டமான வேலைகளைச் செய்யும்படியான நிர்பந்தத்தைச் செய்யும் அளவிற்கு பசுக்களை உட்படுத்துவது மதக் கோட்பாடுகளுக்கு முரணானது. பெருத்த அநீதியுமாகும். அப்படி செய்வதினால் நாட்டில் வருமானம் குறையும்; நாளடைவில் பசுக் குலமே நசித்துப் போகும்.