ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் துளசி மகிமை 1 நாரத மஹர்ஷி ப்ருது மஹாராஜாவுக்குச் சொல்கிறார் சகல தேவதைகளும் தங்களுக்கு ஒரு கார்யம் ஸித்திக்க வேண்டி ஸ்ரீ பராசக

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
துளசி மகிமை

1. நாரத மஹர்ஷி ப்ருது மஹாராஜாவுக்குச் சொல்கிறார்.

சகல தேவதைகளும் தங்களுக்கு ஒரு கார்யம் ஸித்திக்க வேண்டி ஸ்ரீ பராசக்தியைப் போற்றுகின்றார்கள். அப்போது ஆகாயத்தில் உலகெங்கும் பிராசிக்கும் தேஜோ மண்டலத்தைக் கண்டார்கள். அங்கே தேன்றிய ஆகாச வாணியையும் செவியுற்றனர்.

2. தேவதைகளால் பிரார்த்திக்கப்பட்ட சக்தியானவள், ஸ்த்வம், ரஜஸ், தமஸ், என்கிற மூன்றுவித குணங்களால் நான்தான் கௌரீ, லக்ஷ்மி, சரஸ்வதி என்கிற மூன்றுவித பேதத்தை அடைந்திருக்கிறேன். ஹே, தேவர்களே, அங்கே செல்லுங்கள் உங்களுக்கு கார்ய ஸித்தி உண்டாகும் என்று ஆக்ஞை இட்டாள்.

3. அதற்குப் பிறகு சகல தேவர்களும் பராசக்தியின் வாக்கியப்படி மிகவும் பக்தியுடன் கௌரீ முதலான மூன்று பேர்களையும் வந்தனம் செய்தார்கள்.

4. கௌரீ முதலானவர்கள் தேவதைகளுடன ப்ரீதியுடன் சில விதைகளைக் கொடுத்து இந்த விதைகளை ஸ்ரீ விஷ்ணு இருக்கும் இடத்தில் விதைத்தால் உங்கள் கார்யம் ஸித்திக்கும் என்று சொன்னார்கள். தேவர்களும் அப்படியே விதைத்தார்கள்.

5. ஸ்ரீ பார்வதியின் அம்சமாக ஸத்வம், ரஜஸ், தமஸ், என்ற மூன்று குணங்களோடும், கூடிய துளசி அங்கே உண்டாயிற்று. அதைப் பார்த்து விஷ்ணு மிகவும் சந்தோஷத்துடன் அதை எடுத்துக் கொண்டு வைகுண்டம் சென்றார். விஷ்ணுவுடன் துளசியிடம் அதிகமான ப்ரீர்தி உண்டு. துளசியின் அடியில் ஸ்ரீ வ்ஷ்ணுவைப் பூஜித்தால் விசேஷமான சிரேயஸுக்கள் உண்டாகும்.

6. எந்தக் கிருகத்தில் துளசி வனம் இருக்கின்றதோ, ஹே, அரசனே, மிகவும் பரிசுத்தமான அந்தக் கிருகத்தில் யம கிங்கரர்கள் வரமாட்டார்கள்.

7. ஸகல பாபங்களைப் போக்கும். ஸகல இஷ்டங்களையும் அளிக்கும். துளசி வனத்தை யார் உண்டுபண்ணுகிறார்ளோ. அவர்கள் யமனை அடைய மாட்டார்கள்.

8. நர்மதா நதியின் தரிசனம் கங்கை ஸ்நானம் துளசி வனத்தின் ஸம்பந்தம் இம்மூன்றும் சமமான பலனைக் கொடுக்கும்.

9. துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம் சரீரம், மூன்றினினாலும் செய்த பாபங்கள் போகும்.

10. துளசியால் ஸ்ரீ மஹா விஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியை அடைகிறான். மறுபடியும் பிறவியை அடைய மாட்டான்.

11. புஷ்கரம், கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசீ தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.

12. துளசியைச் சிரஸில் தரிசித்துக் கொண்டு பிராணனை விடுபவன் அநேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான்.

13. துளசிக் கட்டையால் அரைத்த சந்தனத்தை, எவன் தரிசிக்கிறானோ, அவன் பாபம் செய்ய மாட்டான்.

14. துளசீ தளங்களுடைய நிழல்படும் இடங்களில், சிராத்தம் செய்யவேண்டும். அதனால் பித்ருக்களுக்கு திருப்தி ஏற்படும் என்று பத்ம புராணம் கூறுகிறது. துளசி விஷயமான புராணக்கதை இது.

ஒரு கிராமத்தில் வைதிகாசாரமற்ற ஒரு வேதியன், பயிரிடும் தொழிலில் ஆவல்கொண்டு அத்தொழிலையை நடத்திவந்தான். ஒரு சமயம் அரண்யத்தில் மாட்டுக்குப் புல்லுக்காக செல்லுங்கால், சில துளசிச் செடிகளை கண்ணுற்றான். அவைகளின் சிறந்த வாசனையில் விருப்பங்கொண்டான். சில செடிகளை அப்புல்லோடு சேர்த்து கட்டினான். இந்தச் சமயத்தில் அவன் ஆயுளின் முடிவோ என்னவோ ஒரு கிருஷ்ண சர்ப்பம் அந்தக் புற்கட்டில் ஒளிந்து கொண்டிருந்தது. அது அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனைத்தீண்ட அவ்வரவத்திற்கு சக்தி இல்லை. துளசிக்கட்டையை கீழே போடும் சமயத்தை எதிர்பார்த்திருந்தது அது.

இந்தப் பிராமணனின் வீட்டிர்கருகிலுள்ள ஒருவர் சிறந்த தவ வலிமை உள்ள ஞானியாக விளங்கி வந்தார். அவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் துளசீ பத்திரங்களால் தினந்தோறும் பக்தியுடன் நன்கு ஆராதிக்கிறவர். புல்லுக்கட்டையைச் சுமந்து செல்லும் அவன் பின்னால் யம தூதர்களைக் கண்ட அவர், எதற்காக நீங்கள் இவனைப் பின்பற்றுகிறீர்க ளென்று வினவினார். உடனே அவர்கள் கிருஷ்ண சர்பத்தின் மூலம் அவன் பிராணனை அபகரித்து யம லோகத்திற்கு கொண்டுபோக வேண்டி நாங்கள் பின்தொடர்கிறோம். துளசிச் செடிகளை அவன் தூக்கிச் செல்வதால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தச் செடிகளை எப்பொழுது கீழே போடப்போகிறான் என்று சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டு பின் செல்கிறோம். என்று விடை பகர்ந்தார்கள். இவ்வாசனத்தைச் செவியுற்ற அவ்வேதிய சிராமணி மிகவும் மன வருத்தம் அடைந்தார். ஆபத்தை எவ்விதத்திலும் போக்க வேண்டுமென்று கருதி அதற்குத் தகுந்த உபாயம் ஒன்றும் தோன்றாமல் அருகிலிருக்கும் எம கிங்கரர்களையே இதற்கு என்ன செய்யலாமென்று வினவினார். அவர்கள், தவசிரேஷ்டரே. ஒவ்வொரு நாளும் துளசி தளங்களால் ஸ்ரீ பகவானை அர்சித்து எவ்வளவு புண்யம் சம்பாதித்திருக்கிரீர்களோ அந்தப் புண்யத்தை இவன் பொருட்டுக் கொடுத்தால் இந்த ஆபத்திலிருந்து இவன் விலகுவான் என்று கூறினார்கள்.

தமக்குப் பரோபகாரம் செய்வதற்குத் தகுந்த சமயம் கிடைத்ததே என்று அடங்கா மகிழ்ச்சியுடன் தம் புண்ணியத்தை அளித்தார். உடனே புல்லுக்கட்டை சுமந்து வந்த பிராம்ணன் இங்கு நடந்த சகல சமாச்சாரங்களையும் இவ்வேதியர் வாயிலாக அறிந்து, அன்று முதல் ஒவ்வொரு தினமும் நியமாகத் துளசி தளங்களால் ஸ்ரீமந் நாராயணமூர்த்தியை பூஜித்து முடிவில் உத்தமமான பதவியைப் பெற்றான். ஆகையால் நாமும் நம்மால் இயன்றவரை துளசி அர்ச்சனை செய்து ஜன்ம ஸாபல்யத்தை அடைவோமாக!