ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் பொங்கல் விழா ஒவ்வொரு வருடத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உண்டு அதில் முதல் 6 மாதத்திற்கு தக்ஷிணாயனம் என்றும், அடுத்த 6 மாதத்தி

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பொங்கல் விழா

ஒவ்வொரு வருடத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உண்டு. அதில் முதல் 6 மாதத்திற்கு தக்ஷிணாயனம் என்றும், அடுத்த 6 மாதத்திற்கு உத்தராயணம் என்றும் பெயர். சூரியனின் போக்கை அனுசரித்தே இந்த பெயர்கள் ஏற்பட்டுள்ளன.

தக்ஷிண அயனம்-தக்ஷிணம் என்றால் தெற்கு. அயனம் என்றால் வழி. சூரியன் சிறிது தெற்கு நோக்கிப் போவதால் தக்ஷிணாயனம் என்று பெயர்.

உத்தர அயனம்-உத்தரம் என்றால் வடக்கு அயனம் என்றால் வழி. சூரியன் சிறிது வடக்கு நோக்கி வருவதால் உத்தராயணம் என்று பெயர் பெற்றது. தை மாதம் முதல் ஆனி முடிய உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தக்ஷிணாயனம்.

உத்தராயணம் பிறந்த நாளைச் சங்க்ராந்தி (மகர சங்க்ராந்தி) என்று கூறுவார்கள். அன்றைய நாள் ஒரு புண்ணிய தினமாகும். அன்றைய தினம் ஸ்நானம் செய்வது, பூஜை செய்வது, தானதர்மம் செய்வது மிகவும் விசேஷம். சங்க்ராந்தியை ஒட்டி அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கி, அன்றய தினம் பொங்கல் செய்து சூர்ய பகவானுக்கு நைவேத்தியம் செய்வது (படைப்பது) மிகவும் விசேஷமாகும்.

அதற்கு மறுநாள் இந்த நெல்லைப் பெறுவதற்கு உதவியாக இருந்த உதவியாக இருக்கின்ற கால்நடைகளான மாட்டுக்குப் பொங்கல் செய்து படைப்பது மிகவும் விசேஷமாகும். இதுவே மாட்டுப் பொங்கல் எனப்படும் பசு தன் பாலைத் தான் ஒரு நாளும் பருகியதில்லை. ஆனால் அன்று பசு பூஜை செய்து, பசுவிலிருந்து கிடைத்த பாலைக்கொண்டே பால் பொங்கல் செய்து, பசுவிற்கே அளிக்கிறோம். பொங்கல் விழா சூர்ய பகவானுக்கும், கால்நடைகளுக்காக மட்டும் அமைந்திருந்தாலும், வழிபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமயத்தாராகவோ இனத்தாராகவோ இல்லாமல், எல்லா இந்துக்களும் இப்பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். அப்படித்தான் கொண்டாடவும் வேண்டும்.

ஹிந்துக்களின் பண்டிகை பொங்கல் பண்டிகை. அது சூர்ய பகவானுக்கே சிறப்பானது. சூர்யனை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் ஒவ்வொரு கார்யங்களையும் தொடங்குகின்றோம். சூரியன் உதயமானபின் பட்சிகள் இரை

தேடிப் பறக்கின்றன. பாட்டாளி உணவிற்காகவும், நடுத்தர வர்க்கத்தினர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் வேலைக்குச் செல்கிறார்கள்.

வாரங்களுக்கு சூரியனே காரணமாக அமைகிறான். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள். அதை ஆதித்யவாரம் எனறும், பானுவாரம் என்றும் கூறுவர். இதையே ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டு, SUNDAY என்று வாரத்தைத் தொடங்குகிறார்கள். இதேபோல்தான் மாதங்களின் தொடக்கங்களும் அமைந்திருக்கின்றன. சித்திரை மாதத்திலிருந்தே நமக்கு மாதத் தொடக்கம் ஏற்பட்டாலும், தை மாதத் தொடக்கத்திலிருந்தே கல்யாணம் முதலிய மங்களகரமான செயல்களும் தொடங்கப்படுகின்றன.

மார்கழி மாதத்தில் கல்யாணம் போன்ற சுப சடங்குகள் செய்வதில்லை. முன்பெல்லாம் தக்ஷிணாயனத்தில் எந்தவொரு நல்ல கார்யங்களையும் செய்யாமல் உத்திராயணத்தில் மட்டுமே செய்வார்கள். அதாவது, தக்ஷ்ணாயனம் தேவதைகளுடைய இரவுக்காலம் உத்திராயணம் தேவர்களுடைய பகற்காலம் என்பார்கள். இரவில் மங்கள கார்யங்கள் செய்வது வழக்கமன்று. தேவதைகள் பிரசன்னமாக விழித்துக் கொண்டிருக்கும் உத்தராயன காலத்தில் மங்களகரமான கார்யங்களை நடத்துவதால் தேவதைகளுடைய அருளைப் பெற ஏதுவாகும்.

ஆகவே, மங்கள கரமான கார்யங்கள் தொடங்குவதற்கும், தேவதைகளின் அருளைப் பெருவதற்கும் உத்தராயன காலமே உகந்ததாகும். அந்த நல்ல உத்தராயண காலம் தை மாதத்தில்தான் தொடங்குகிறது. தை மாதத்தின் முன் மாதம் மார்கழி மாதமாகும். அந்த மாதம் தேவதைகளின் தூக்கத்திலிருந்து விழிக்கும் காலமாகும்.

சாதாரண மனிதர்களே தூக்கத்திலிருந்து விழிக்கும் போது கோபதாப மில்லாமல், மனத் தெளிவுடனும், சாந்தத்துடனும் (சாந்தியுடனும்) மனம் பிரசன்னமாக இருப்பார்கள். ஆகவேதான், மார்கழி மாதத்தில் பூஜைகள், பஜனைகள், ஜப-தினங்கள் முதலியவைகளைச் செய்யும்படி விசேஷமாகவும், பிரத்யோகமாகவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. திருப்பாவை திருவெம்பாவைப் பாராயணம் இம்மாத்திற்குறிய சிறப்புப் பாராயணமாகும்.

ஆங்கிலேயர்களும் மார்கழி மாதத்திலேயேதான் வருஷ ஆரம்பத்தை ஜனவரி முதல் தொடங்குகின்றார்கள். இந்த மார்கழி மாதத்தைப் பற்றித்தான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத்கீதையில், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். மார்கழி மாதத்தில் மங்களகரமான சடங்குகள் செய்யப்படுவதில்லை. மார்கழி மாதம் பகவான் வழிபாட்டுக்காக மட்டும் ஏற்பட்ட காலமாகும். ஏனெனில், பகவானே அந்த மாத வடிவமாக இருக்கிறார். அதனால் பகவத் பக்திபோன்ற மிக உயர்ந்த கார்யங்களைத்தவிர வேறு எந்தக் கார்யங்களையும் அம்மாதத்தில் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால் பாவமாகும். உதாரணமாக-15 நாள்களுக்கு ஒரு முறை ப்ரதோஷம் என்று ஒரு குறிப்பிட்ட காலம் வரும். ப்ரதோஷம் என்றால் ரொம்ப தோஷமான காலம் என்று பொருள். ஆனால், ப்ரதோஷ காலத்தில் பகவான் ஸ்ரீ பரமேசிவரன் கயிலயிங்கிரியிலே நர்தனம் செய்வதற்காகவும், அப்போழுது எல்லாத் தேவதைகளும் அந்த நடன தரிசனத்தைக் காண வருவதாகவும், சாதாரண மனிதர்களுடைய மனமும் கட்டாயமாக

இருக்கவேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால், ப்ரதோஷ காலம் என்றும், அதாவது, பெரிய தோஷமுடைய காலம் என்றும் சொல்லப்படுகிறது. அது போல்தான், பகவானுக்காக ஏற்பட்ட மார்கழி மாதத்தில் பகவத் பக்தி தவிர வேறு எந்த மங்களகரமான காரியத்தையும் செய்யக்கூடாது.

இம்மார்கழி மாதத்தின் கடைசீ நாள் போகிப்பண்டிகையாகும். இதற்கு அடுத்தநாளே பொங்கல் நன்னாளாகும். இம்மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்திருந்து, குளிர்ந்த நீரில் குளிர நீராடி, தூய ஆடை உடுத்தி, திருநீறணிந்து ( அவரவர் வழக்கப்படி திருநீறோ, திருமண்னோ குங்குமமோ அணிந்துகொண்டு) தீபமேற்றி, வீட்டில் பூஜை செய்யச் சக்தியுள்ளவர்கள் தங்கள் தங்கள் இஷ்ட தேவதைகளை பூஜை செய்யவேண்டும். வீட்டில் பூஜை செய்யமுடியாதவர்கள் கிராம, நகரங்களில் மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கோயில்களில் நடக்கும் பூஜைகளைக் கண்டு, களிக்க வேண்டும். அதுவும் முடியாதவர்கள் கடவுள் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். இம் மாதத்தில் ஒவ்வொருவரும் திருப்பாவை, திருவெம்பாவையைப் பாராயணம் செய்ய வேண்டும்!