அபிராமபட்டரும் அவர் இயற்றிய அபிராமி அந்தாதியும்
பெரும்புனல் காலைமூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி,
அரும்பு கொண்டு மலர்களெய்தாங்கு ஆர்வத்தை உள்ளேவைத்து
விரும்பு நல்விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வர் கடவூர் வீரட்டனாரே.
என்ற பாடல் குறிக்கும் க்ஷேத்திரம் மாயூரத்திலிருந்து தரங்கம்பாடி போகும் மார்க்கத்திலுள்ள திருக்கடவூர். இங்கேதான் பஞ்சாக்ஷரத்துக்குப் பிரதிபாத்தியமான பரம்பொருள் பரமேஸ்வரன் மார்க்கண்டனுக்காக யமனை உதைத்தருளிக் காலனைப் பாலனுக்காக காய்ந்தார்.
சீராரும் மார்க்கண்டன் செய்த பூஜனைக்காகச் சினந்து கூற்றைப்
பாராரும் விண்ணவரும் பன்னகரும் காண இடப்பாதத்தாலே
காராரும் கரத்தளவினுலகில் விழவுதைதத்தருளி
வாராரு முலைமடந்தை யருபாகன் இருதாளை மனத்துள் வைப்போம்.
இந்தப் பாசுரத்திலிருந்து இரண்டு விஷயங்கள் வியக்தமாகின்றன.
(I) காலனைப் பகவான் ஸம்ஹாரம் செய்யவில்லை;தம் பக்தனைக் காக்க வேண்டி யமனை உதைத்துத் தம் லிங்கத்தை 'அடைக்கலம்'என்று அணைந்துகொண்ட மார்க்கண்டேயருக்குச் சிரஞ்சீவி ஸ்தானம் தந்தார்.
(II) யமனை உதைத்தது பரமனது இடக்கால்;அதாவது, சிவ சக்தி உறையும் வாமபாகத்துள்ள கால்.
சிவாம்சமாகக் கருதப்பெறும் மகாபுருஷரான அப்பய்ய தீக்ஷிதர் பேரர் நீலகண்ட தீக்ஷிதர் இயற்றிய ஆநந்தஸாகர ஸ்தவத்தில் நஹிநிந்தா ந்யாயத்தால் மீனாஷியை உத்கர்ஷமாக வர்ணித்துச் சிவனைக் குறைகூறுவது போலப் பாடியிருக்கிறார். அவர் உறைக்கிறார்:-
ஸாதாரணே ஸ்மரஜயே நிடாலாக்ஷிஸாத்யே பாஹி சிவோ பவது நாம யஸஸ்ஸமக்ரம் I
வாமாங்க்ரிமாத்ரகலிதே ஜனனி த்வதீயே காவா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: II
அதாவது, ஸ்ரீ ஆசார்யர் போன்ற கோடியிலொருவர் பரமசிவன் நெற்றிக்கண்ணால் பஸ்மமாக்கிய மன்மதனை வென்ற ஜிதேந்திரிய நைஷ்டிகப்ரஹ்மசாரிகளாகப் பிரகாசிக்கிறார்கள். ஆகையால், நம்மில் அநேகருக்கு அஸாதாரணமான காமனை ஜயிப்பது என்பது அவர்களுக்கு ஸாதாரணமே. ஆனால், அத்தகைய மகாபுருஷர்கள் கூடக் காலனை ஜயிக்காமல் இறுதியில் ஸமாதியடைகிறார்கள். எனவே, மார்க்கண்டனுக்காகக் காலனை உதைத்து மரணத்தை ஜயித்தது அஸாதாரணம். அந்த அபூர்வமான அபார பராக்கிரமச் செயல் நிகழ்த்தியது இடக்கால் மட்டுந்தான். அப்படியிருக்க, 'காலனை உதைத்தவர்'என்ற பிருது அம்பாலைச் சேர்ந்ததைப் பரமேஸ்வரன் ஸ்வீகரித்தது நியாயமல்ல;அவருடைய அர்த்தநாரி சரீரத்தின் வலப்பாகத்துக்கு இதில் சம்பந்தமே இல்லை என்கிறார்.
எனவே, திருக்கடவூர் மிருத்யுஞ்ஜய க்ஷேத்திரம். இங்கேதான் குங்கிலிய நாயனாருக்கு இறைவன், இறைவன் தம் பக்தர் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அரிசி வாங்கப் போனவர் குங்கிலியைப் பொடியைப் பார்த்து அதை வாங்கி ஈஸ்வரனுக்குத் தூபம் போட, பரமன் இனியும் சோதனை தகாது என்று அவருக்குக் குன்றாத அக்ஷயமான ஐஸ்வரியத்தை அளித்ததாகச் சேக்கிழார் பெரியபுராண வரலாறு. இந்தத் திருக்கடவூரில் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி இருந்தாள்.
இந்த க்ஷேத்திரத்தில் மூலவர் அமிருதகடேஸ்வரர். மத்தியில் மிருத்யுஞ்ஜயமூர்த்தி தம் பாதத்தின் கீழ் உதைப்பட்டுக் கிடக்கும் யமனைத் தம் வாம பாகத்தில் இருக்கும் இறைவி (அபிராமி) க்கு ஆள்காட்டி விரலால் காட்டி, ''என் பக்தர்களைத் தீண்டுபவர் கதி இதுதான்''என்று சொல்லாமல் சொல்கிறார். 'மௌநவ்யாக்யாநம்'செய்யும் தக்ஷிணாமூர்த்தி பரமேஸ்வரரின் மூர்த்தந்தானே?எதிரே புனருத்தாரணம் செய்யப்பட்ட யமன். ஏககாலத்தில் உதைப்பட்ட யமனையும்புனருத்தாரணம் செய்யப்பட்ட யமனையும் தீபாராதன தரிசனம் செய்தால் யமபாதை இல்லை என்று ஐதிஹ்யம். மரணமே இல்லை என்ற பொருள் பொருந்தாது. யமகிங்கரர்களாலும் யமபடர்களாலும் பாதை இராது என்பதே தகும்.
அனாயாஸேன மரணம் வினா தைன்யேன ஜீவனம் I
தேஹி மே க்ருபயா சம்போ த்வயி பக்திமசஜ்சலாம் II
என்று பிராத்தித்தார் ஒரு பக்தர். இந்த ஸ்தலத்தில் ஸ்வாமி கோயிலுக்கு வெளியே அபிராமி தேவிக்குத் தனிகோவில் உண்டு. அதில் கைங்கர்யம் செய்த சிவசாரியார்கள் பட்டர்களில் ஒருவர் தேவியிடம் ஈடுபாடு அதிகமுள்ளவர். தம்மை மறந்து அலங்காரம் அர்ச்சனை செய்பவர். சிலசமயம் உன்மத்தர், பித்துப்பிடித்தவர் போல் கூடஇருப்பார். ஆனால், இவர் கையால் குங்குமப் பிரசாதம் பெற்றால் வியாதிகளுக்கு நிவிருத்தியும் காரியஸித்தியும் ஏற்படுவதாக ஜனங்களிடம் பலத்த நம்பிக்கை நிலவியதனால் மற்றப் பட்டர்களைவிட இவருக்குப் பன்மடங்கு பேர் புகழ் பணம் தேடிவந்தன. கூடவே, இவர் பேரில் மற்றேருக்குப் பொறாமையும் விருத்தியாகிக் கொழுந்துவிட்டெரிந்தது. எனவே, அக்காலத்தில் தஞ்சையில் அரசு செய்த சரபோஜி மன்னருக்கு இவர் அபின், கஞ்சா முதலிய லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பதனால் உன்மத்தாக இருப்பதாகவும், இவர் கோவிலிற் பணிசெய்வது உசிதமில்லை என்றும் புகார்க் கடிதங்கள் பறந்தன. சரபோஜி மன்னர் தெளிந்த புத்திமானும் பழுத்த நிர்வாகியும் ஆனதனால் தை அமாவாசை ஸ்நானத்துக்குக் காவிரிப் பூம்பட்டினம் சென்று கடல்நீராடி, மாலையில் திருக்கடவூருக்குக் கேவலம் தரிசனத்துக்கு வருவதுபோல் வந்து, மகா மிருத்யுஞ்ஜய மூர்த்தியையும் அபிராமி தேவியையும் தரிசித்து, அபிராமபட்டரைப் பற்றிய புகார்களில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு என்பதை கண்டுபிடிக்கவும் வந்தார்.
தஞ்சையை ஆண்ட மன்னரே வந்த தினம் தை அமாவாசையுங்கூட. ஸ்ரீஅபிராமிக்குச் சந்தனக்காப்பும், உயர்ந்த ஆடையாபரண அலங்காரங்களும் விசேஷமாக நடந்தன. அன்று முறை நமது பட்டருடையது தம்மை மறந்து பிரமாதமாக அலங்காரம் செய்திருந்தார். அரசர் வந்ததும் ஏகாக்ர சித்தத்துடன் மெய்ம்மறந்து ஸ்ரீலலிதாஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்ததும் மன்னரிடம் பணிவுடன் பிரஸாதங்கள் கொடுத்தார். ராஜா அவற்றைப் பெற்றுக்கொண்டு தம் மனத்தை உறுத்தும் ஐயம் தீரவேண்டி, பட்டரைப் பார்த்து, ''பட்டரே இன்று என்ன திதி?''என்றார். பட்டர், களங்கமே இல்லாத பூர்ணசந்திரவதனியான இறைவி ஸ்ரீஅபிராமியின் முகாரவிந்தத்திலேயே லயித்திருந்த ஞாபகத்திலேயே ''பூர்ணிமை!''என்றார்.
அரசர், 'ஆகா!இல்லாமற் பிறவாது. இன்று அமாவாசை அன்று பூர்ணிமை என்பவர் பித்தர்தாம் என்று எண்ணி மறுபடி, ''அப்படியானால் இன்று பூர்ண சந்திரன் உதிக்குமா?''என்று வினவினார். அப்பொழுதும் பூஸ்பர்சமின்றி ஸ்ரீபுரத்திலுறையும் அபிராமியம்பாள் முகாரவிந்தத்திலேயே நினைவு கொண்டிருந்த பட்டர், ''உதிக்கும்!''என்று கூறிவிட்டார். வந்தது மன்னருக்கு நியாயமான கோபம். ''இல்லையேல் உம்மைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுவேன்''என்று உரைத்துத் தம் ஜாகைக்குப் போய்விட்டார்.
பட்டர் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம் தாண்டி மகாமண்டபம் வந்ததும் தம் தவற்றை உணர்ந்தார். அன்று காலைதான் தம் பிதுருக்களை உத்தேசித்துத் திலதர்பணம் செய்திருந்தும் ''உளறிவிட்டேனே!''என்று வருந்தினார். வருந்தி என்ன பலன்? ''தேவி!என்னைத் தன்மயமாக்கி என் ஸ்வப்ரஜ்ஞையின்றிப் பேச வைத்த நீதான் தஞ்சம். காப்பாற்ற வேண்டும்''என்று கதறினார். ஓர் அசரீரி, ''அஞ்ச வேண்டாம்''என்று 'உதிக்கின்ற'என்று அடியெடுத்துக் கொடுத்து அவரை அம்பாள் மீது பாடப்பணித்தது அவர் அந்தாதி பாடினார். தேவிக்குத் தீந்தமிழ்ப் பாக்களைக் கேட்க இருந்த ஆர்வம் அவளருள் சுரக்கச் சற்றுத் தாமதம் ஏற்படுத்தியது. ஆனால்,விழிக்கே அருளுண்டு எங்களபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன
வழிக்கே வழிபட மனமுண்டு எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களையே செய்யும் கயவர்
தம்மோ டென்ன கூட்டு இனியே?
இந்தப் பாட்டுத் தொடங்கியதுமே அபிராமி அம்பாள் பட்டருக்குத் தரிசனம் தந்து தன் மூக்குத்தியை ஆகாசத்தில் உயர வீசியெறியப் பூர்ண நிலவு பிரகாசித்தது. அதே சமயம் அசரீரி வாக்கு, ''இன்னும் 21 பாட்டுக்களும் பாடி 100 பூர்த்தி செய்''என்ற உத்தரவைப் பிறப்பித்தது. 33/4 நாழிகை பூர்ணசந்திரன் பிரகாசிக்கவே சரபோஜி மன்னர் உட்பட யாவரும் அம்பாள் தன் பக்தருக்காக நிகழ்த்திய அதியற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட, மன்னர் ''அபிராமி பட்டரே!''என்று அவரை அழைத்து அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து மன்னிப்புக் கோரியதுமல்லாமல் அவருக்குச் சந்ததி பரம்பரையாக ஒரு செப்புப்பட்டயம் மூலம் மானியம் கொடுக்க உத்தரவிட்டுச் சென்றார்.
அபிராமி அந்தாதி நூறு பாடல்கள். 101-வது பாட்டு பலச்ருதி;அதாவது:-
ஆத்தாளை எங்க ளபிராம வல்லியை அண்டமெலாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையிற் பாசாங்குசமும் கரும்புவில்லும்
சேர்த்தாளை முக்கணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கிலையே.
ஆத்தாள் என்றால் ஸ்ரீமத்ரே நம:அண்டமெலாம் பூத்தாளை என்றால், சுகப்பிரம்மம் பாகவதத்தில் கோபிகா கீதத்தில் மகாவிஷ்ணுவைப் பற்றிச் சொல்வது போல தரணிமண்டனம் த்யேயமாபதி புவியடங்கக் காத்தாளைக் என்றால் பூமியில் அக்கிரமம் அடங்குமாறு சட்டதிட்டங்களைக் காக்கும் க்ஷ்த்ரதாரணகரீ. கீழ்க்கண்ட பாடல் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம்;அல்லது அவசியம் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும்:-
தனம்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தண்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும்;நல்லன யெலாந்தரும் அன்பரென்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாளபிராமி கடைக்கண்களே.
அதாவது, கௌரவம் தரும் அபிராமியன்னையின் கடாக்ஷம் செல்வம் தரும், கல்வி-வித்தை தரும், சோர்விலா மனோதைரியமும், திவ்ய தேஜஸ்ஸும், வஞ்சனையில்லாத மனமும் மற்றும் பக்தர்கள் விரும்பும் நலன்கள் அனைத்தும் கொடுக்கும். இங்கு, சற்று நிதானித்துக் கவனிக்க வேண்டிய இடம். உபநிஷத் '' ஸமேன்த்ரோ மேதயா ஸ்ப்ருணோது, ததோ மே ஷ்ரியமாவஹ '' என்று கூறுகிறது. அதாவது எனக்கு முதற்கண் மேதை அதாவது புத்திசக்தியைக் கொடு;பிறகு செல்வத்தைத் தா என்கிறது. இந்த உபநிஷத்வாக்கியத்தை அநுஸரித்துதான் ஆதி சங்கர பகவத் பாதங்களும் ஸெளந்தர்யலஹரியில் 99-ஆம் ஸ்லோகத்தில்,
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரிஸபத்னி விஹரதே
ரதே:பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா I
ஸிரஞ்ஜிவன்னேவ க்ஷபிதபஸுபாஸவ்யதிகர:
பரானன்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜனஜவானு II என்று உரைக்கும் போது, ஸரஸ்வதி கடாக்ஷம் அல்லது வித்யா விலாசத்துக்குப் பின்னரே லக்ஷ்மீகடாக்ஷம் அல்லது ஐஸ்வரியப்ராப்தியைச் சொன்னார். காரணம்:-மேதை அல்லது புத்திசக்தியுள்ளவனிடம் இருக்கும் அதிகாரம் அல்லது பணம்தான் ஸத்விநியோகமாகி மக்களுக்கு நற்பலனளிக்கும். சமையற்காரனிடமுள்ள உள்ள கொள்ளிக்கட்டை அடுப்பு மூட்டி அநேகருக்கு அன்னதானத்துக்கு உதவும். ஆனால் புத்திசக்தி இல்லாதவனிடம் உள்ள அதிகாரமோ ஐஸ்வரியமோ மக்களுக்கு நற்பலனளிக்காது;தீங்கும் செய்யும்;குரங்கு கையில் அகப்பட்ட கொள்ளிக்கட்டை கூரைவீட்டைக் கொளுத்தி விடுமாப்போல். ஆனால், அபிராமி அந்தாதியில் மானிடரிற் பெரும்பாண்மையோர் முதலில் விரும்பவுது பணம், பிறகுதான் வித்தை என்பதைத் தழுவியே, ''தனம் தரும், கல்வி தரும்''என்றார். மூககவியும் ஸ்ரீமுகபஞ்சசதியில்:-
ச்ரியம் வித்யாம் தத்யாது ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸமுத்ரான்னு ப்ராதத்தே தவ ஞடிதி காமாக்ஷி கருணா I
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபன்திபணயினி
ப்ராணாமஸ்த்வத்பாதே ஸதிததுரிதே கிம் ந குருதே II
என்று சொல்லும்போது, முதலில் ஸ்ரீ அல்லது ஐஸ்வரியத்தையும், பிறகுதான் வித்தையையும் கேட்கிறார் .
அபிராமி பட்டர் ஓர் அழகிய பாட்டில், ''ஆளுகைக்கு நின் அடித்தாமரையுண்டு, அந்தகன்பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு''என்கிறார்.
''அப்படியிருந்தும், நான் நற்கதியடையவில்லையானால் என் குறைதான்;உன் குறையேயன்று. மழை பெய்யும்போது பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தால் நீர் பிடிக்க முடியுமா?அதுபோல உன் அருள் மழை பெய்தாலும் நான் சாதகபக்ஷிபோல் தயாராக இருக்க வேண்டாமா?''என்கிறார் அபிராமி பட்டர்.
ஒரே ஒரு முக்கியமான பாட்டைக்கூறி, உரையும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். அதன் கருத்து:-குதிரைகள், யானைகள், கிரீடம், கனகாபிஷேகம், பெரும் விலைமதிப்புள்ள உயர்ந்த முக்தாஹாரம் இவை எல்லாம் படைத்த பீடாதிபதி ஸ்தானம் ஒருவருக்கு கிடைப்பதென்றால் அவர் முற்பிறப்பில் சந்திரசூடன் சந்திரமௌளீஸ்வரன் சந்திரசேகரனான பரமசிவனின் சக்தியான அம்பாலின் திருவடித் தாமரைகளில் செய்த இடைவிடாத நித்யபுஷ்பபூஜை குங்குமார்ச்சனையின் புண்ணியபலனே.
வையம் துரகம் மதகரி மாமகுடம்
பெய்யும் கனகம் பெருவிலை யாரம் பிறைமுடித்த
ஐயன் மனையா ளடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்தவ முடையார்க்கு ளவாகிய சின்னங்களே