மூளை வளர்ச்சியும் இதய வளர்ச்சியும்

மூளை வளர்ச்சியும் இதய வளர்ச்சியும்

ஆனால் வித்யா போதகர் என்பதாக எந்த ஒரு வித்தையையும் - Arts , Science எல்லாமே வித்தைகள்தான் அப்படி எந்த ஒரு வித்தையைச் - சொல்லிக் கொடுக்கிறவருக்கும் குரு என்ற பேர் ஏற்பட்டுவிட்டதால் கேள்வி வருகிறது. என்ன கேள்வி என்றால், 'நல்வழி' என்பதன் ஸம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு ஸயன்ஸை, ஆர்ட்டைத் தானே இந்த குரு சொல்லிக் கொடுக்கிறார்? இவருக்கு எப்படி உயர்ந்த ஸ்தானம்?" என்ற கேள்வி.

இன்றைக்குதான் என்றில்லை. பூர்வகாலத்திலேயே நாஸ்திகத்தைக்கூட சாஸ்த்ரமாகவும், சூதாட்டம் - திருட்டு முதலானதைக்கூட வித்யைகளாகவும் சொல்லி, அவற்றுக்குக்கூட மூலபுருஷர்களும் குருமார்களும் சொல்லியிருக்கிறது!ப்ருஹஸ்பதியையே நாஸ்திக சாஸ்திரமான சார்வாகம் என்பதற்கு மூலபுருஷராகச் சொல்லியிருக்கிறது. திருட்டு சாஸ்திரத்திற்கு - சௌர்யம் (Chauryam) என்று அதற்குப் பேர், அதற்கு மூல புருஷர் பேர் மூலதேவர் என்று இருக்கிறது. கர்ணீ என்றவளுடைய புத்ரரானதாலே அவருக்கு கர்ணீஸுதர் என்றும் பேர்.

சாஸ்திரம் என்றாலும் வித்யை என்றாலும் ஒன்றேதான். ராஜ சாஸனம் என்கிறோமே, அப்படிச் சாஸனம் என்றே அநேக விதிகளுடன் கட்டளையாகப் பெரியவர்கள் செய்ததெல்லாம் 'சாஸ்திரம்'. அவை ஒவ்வொரு துறையில் அறிவை ஊட்டுகிறபடியால் 'வித்யை'. 'வித்' என்றால் அறிவது.

(மேலே) சொன்னபடி நாஸ்திகம், திருட்டு - புரட்டு உள்பட எதையும் 'வித்யை' என்கிறபோது வித்யை என்பது 'ஏதோ ஒரு துறையில் அறிவு' என்றே ஆகிறது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதற்கும் 'ஸிஸ்டமாடிக்'காக ஒரு'முறை' ஏற்படுத்திச் சொல்லிக் கொடுத்தால் அது வித்யாபோதனையாகி விடுகிறது. அப்படிப் போதிப்பவர் குரு ஆகிவிடுகிறார்.

ஆனால் இது ஒரு ஜீவனை மூளை என்பதன் எல்லைக்குள் மட்டும் கொண்டு வந்து பின்னப்படுத்தி, குரு என்ற ஸ்தானத்தையும் ரொம்பக் குறைத்துவிடுகிற கார்யந்தான். அறிவு வளர்ச்சி என்ற ஒன்றை மட்டும் கவனித்து, எந்தத் துறையில் அறிவை வழங்குவதும் வித்யாபோதனை என்னும்போது ஜீவனுடைய ஹ்ருதயத்தை ஒதுக்கி விட்டதாக ஆகிறது. மூளை - ஹ்ருதயம் இரண்டும் சேர்ந்தே ஜீவன். ஒரு ஜீவன் உண்மையான ஜீவனாக வாழவும், ஜீவனே தேவனாகக்கூட உசரவும் மூளையைவிட ஹ்ருதய அபிவ்ருத்திதான் முக்யமானது. அதனால்தான் மூளைக்கு மாத்திரம் சரக்கு ஏற்றி அதை வ்ருத்தி செய்வதை 'ஜீவனை பின்னப்படுத்துவது' என்றது. ஜீவனை புத்திசாலியாக மாத்திரமில்லாமல் குணசாலியாகவும் ஆக்க வேண்டியதே நிஜகுருவின் கடமை. அப்படியில்லாமல் புத்திசாலியாய் மட்டுமே பண்ணும்போது குருவின் ஸ்தானத்தை ரொம்பவும் குறைத்து, குறுக்கி, இறக்கிவிடுவதாக ஆகிவிடுகிறது.

பகவத் ஸ்ருஷ்டியில் மநுஷ்ய மூளை என்பது ஒரு அத்புதமான கருவியாக இருப்பதைக் கவனித்து - அதை மாத்திரமே கவனித்து - வெறும் அறிவை மட்டுமே சார்ந்து ஒரு ஆர்ட்டாக, ஸயன்ஸாக ஸிஸ்டம் செய்யப்பட்ட எதையும்

'வித்யை' என்று வைத்து விட்டார்கள். அதன் போதகர் 'குரு' என்றும் சொல்லிவிட்டார்கள் ஆனால் இதுவே நம் பூர்விகர்களின் பூர்ணமான அபிப்ராயம்

என்று நினைத்து விடக்கூடாது.

லோக வாழ்க்கை என்பது நன்றாக நடப்பதற்கு அறிவுத் துறைகள் என்றே - அதாவது ஆத்ம ஸம்பந்தமில்லாமல் இருக்கப்பட்டவையாகவே - இருக்கிறவையும் தேவைப்படத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கு நேரே ப்ரயோஜனப்படுவதாகத் தெரியாவிட்டாலும் அல்லது மனஸுக்கு ஒரு நிறைவைக் கொடுத்து, அதனால் ஸந்தோஷம் ஏற்படுத்துவதகாவும் அநேகத் துறைகள் இருக்கின்றன - ஸங்கிதம், சில்ப-சித்ரம், சரித்ரம், பாஷா சாஸ்திரம் இப்படி அநேகம். திருட்டும், சூதாட்டமும் மாதிரியில்லாமல், தனிப்பட நல்லது,கெட்டது என்று இல்லாமல் நாம் எப்படி ப்ரயோஜனப்படுத்திக்கொள்கிறோமோ அதனாலேயே நல்லதோ கெட்டதோ விளைவிப்பதாகவுள்ள ஸயன்ஸ் ஸப்ஜெக்ட்கள் தற்போது தினந்தோறும் பெருகி வருகின்ற. இன்றைய வாழ்க்கைக்கு - பெனதிகமாக, மெடீரியலாக த்ருப்தி தருகிற வாழ்க்கை மட்டுமில்லை, அறிவுக்கும் மனஸுக்கும் ஸந்தோஷம் தந்து வாழ்க்கையையே உத்ஸாப்படுத்துகிறவற்றையும் சேர்த்தே சொல்கிறேன், அப்படிப்படட வாழ்க்கைக்கு - இந்த வித்யைகள் எல்லாமே வேண்டித்தான் இருக்கின்றன. நாகரிக ஸமுதாயங்கள் ஏற்பட்ட நாளிலிருந்தே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.

நம் தேசத்தில் இந்த அறிவு வித்யைகளைக் கற்பிக்கிறவர்களும் உத்தம ஹ்ருதயமுள்ள யோக்யர்களாக, நல்ல சீலமுள்ளவர்களாக இருந்து வந்தார்கள். திருட்டு, சூதாட்டம் மாதிரியான கெடுதலான வித்யைகளைக் கற்றுக் கொடுக்கிறவர்களைத் தவிர, மற்ற ஆசாரியர்கள், ஆசிரியர்களெல்லாம் நல்ல morals -ம் அதாவது நன்னெறியும், அத்தனை நெறிக்கும் ஆதாரமான தெய்வபக்தியும் கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். அதனால், அவர்களிடம் கற்றுக்கொண்டவர்கள், பக்தி விச்வாஸம் வைக்கவேண்டிய குருமார்களாகவே அவர்களுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பல துறைப் பாடத்தால் மூளை வளரச்சி பெறுகிறதோ? பாடமான cF போதனை, பக்தி போதனை முதலியவற்றுக்கு ஜீவ சக்தி ஊட்டிய அவர்களுடைய வாழ்க்கை உதரணத்தாலும், பெர்ஸனல் ரேடியேஷனாலும் ஹ்ருதய வளர்ச்சியும் பெற்றார்கள்.

ஆனாலும் ஆத்ம பரிபக்வம், பூர்ணத்வம் முதலியன இங்கே கிடைப்பதற்கில்லை. அதற்கென்றே ஏற்பட்ட குருமாரைத்தான் நம்முடைய மரபிலே முக்யமாக குரு, ஆசார்யர், தேசிகர் என்றெல்லம் சிறப்பித்து வைத்தது.

ஜீவனை தேவனாக்குவதற்கே முக்யத்வம் தந்தவர்கள் நம் மன்னோர்கள். "வேறே எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், கலாசாரத்திலும் இப்படி 'ஸெக்யூலர்' (உலகியல்) என்று தோன்றுகிற ஸகலத்தையுங்கூட 'ஸ்பிரிசுவலைஸ்' பண்ணி (ஆன்மிகமாக்கி) த் தரக் காணோம்" என்று மதாந்தரங்களை (பிறமதங்களை) ச் சேர்ந்த அறிவாளிகளும் சொல்கிறார்கள்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மாதா-பிதாவுக்கும் மேல் குரு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  நிகழ்கால இழிநிலை
Next