அன்னையின் வழியில் கண்ணனையே!

அன்னையின் வழியில் கண்ணனையே!

அதிலே ஒருத்தர் ஸாட்சாத் கிருஷ்ண பரமாத்மா 'இதுதான் க்ருஷ்ணரைப் பற்றிய earliest reference; அவர் வாஸ்தவமாகவே இருந்த historical personality என்று ரூபக்கிற reference' என்று படிப்பாளிகள் சொல்கிறார்கள். அது எங்கே வருகிறதென்றால், சாந்தோக்யத்தில் 'புருஷ யஜ்ஞம்' என்பதைப் பற்றிச் சொல்கிற இடத்திலே. ஒருத்தரை 116 வயசு ஜீவிக்கச் செய்கிற யஞ்ஜம் அது. க்ருஷ்ணர் 120 வயஸுக்கு அதிகமாக ஜீவித்தவர் என்பது கவனிக்கவேண்டிய பாயின்ட். அவர் கோர ஆங்கிரஸ் என்ற ரிஷியிடமிருந்து இந்த உபதேசம் கேட்டுக் கொண்டார், கேட்டுக் கொண்டதற்கப்புறம் 'தாஹமில்லாதவராக ஆனார்' என்று சொல்லியிருக்கிறது. அதற்கு அர்த்தம், 'இந்த உபதேசம் பெற்றுக்கொண்ட பிறகு அவருக்கு வேறே வித்யை எதுவும் தெரிந்துகொள்ளணும் என்று ஆசை போய் விட்டது என்பதே' என்று ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். ஆசை ஒரு தீராத தாஹம். 'த்ருஷ்ணா' என்பது (தாஹம், ஆசை என்ற) இரண்டையும் குறிக்கும். புத்தர் ஆசையை 'த்ருஷ்ணா' என்றே சொல்வார். அதை 'தன்ஹா' 'தன்ஹா' என்ற 'ஸம்ஸ்க்ருதச் சிதைவான பாலி மொழியில் பௌத்தப் புஸ்தகங்களில் போட்டிருக்கும்.

'பூர்ணாவதாரமான கிருஷ்ணரா ஆயுர்விருத்தி மாதிரியான ஒரு ஐஹிகமான (இகவுலக) விஷயம் தெரிந்து கொண்டு அதிலே இவ்வளவு த்ருப்திப்பட்டார்?' என்று நினைக்கப்படாது. இந்த வித்யையில் ஒரு ஜீவன் தன்னுடைய பஞ்ச ப்ராணன்களையும் வரிசையாக வயஸு ருத்ர - ஆதித்யர்களுக்கு அர்ப்பணம் பண்ணியே அந்த 116 - வயஸு கொண்ட வாழ்க்கையின் முதல் - இரண்டாவது - மூன்றாவது பாகங்களைக் கடப்பதாக வருகிறது. அதற்குள்ளே என்னவெல்லாம் ரஹஸ்யமான பாரமார்த்திக தத்வங்களை ஒளித்து வைத்திருக்கிறதோ? '116 வயஸு ஆயுஸ்' என்பதிலேயே என்னென்ன 'மெடஃபிஸிகல்' ரஹஸ்யங்கள் ஒளிந்து கொண்டிருக்குமோ? திருட்டு க்ருஷ்ணர் அந்த ஆத்மார்த்தமான ரஹஸ்ய நவநீதத்தையெல்லாமும் ஸ்வீகரித்துக் கொண்டே த்ருப்திப்பட்டிருப்பாராக இருக்கும்!

அவர் த்ருப்திப்பட்டது இருக்கட்டும். அம்மா பேரில் பிள்ளையைச் சொல்வதிலல்லவா இருந்தோம்? இங்கே க்ருஷ்ணரைப் பற்றிச் சொல்லும்போது 'க்ருஷ்ணாய தேவகிபுத்ரா' என்றே இருக்கிறது!அவர் வஸுதேவர் பிள்ளை என்பதாலேயே பிரஸித்தமான 'வாஸுதேவ' நாமம் பெற்றவர். 116 வயஸு ஆயுஸிலும் முதல் பாகத்தில் வஸுக்கள்தான் ப்ராணாதாரமாக இருப்பது. ஆனாலும் தம்முடைய மாயவித்தனத்திற்கேற்ப, தேவகிபுத்ரர் என்றே இங்கே தம்மை ரிஷிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்!க்ருஷ்ணாவதாரத்தை ஏற்படுத்திய வித்து எதுவோ அதை வஸுதேவர் மனஸிலே தரித்து தேவகியின் மனஸுக்கு அனுப்பி வைத்ததாகத்தான் - பௌதிக கர்ப்பமாக இல்லாமல் மானஸீக ரீதியில் - பாகவதத்தில் சொல்லியிருக்கிறதே தவிர, சரீர ஸம்பந்தத்தால் அவர்களை அப்பா அம்மா என்று சொல்லும்படியாகக் காட்டவில்லை. ஆனாலும் அவர்களில் தேவகி வாஸ்தவமாகவே கர்ப்பவதியாக இருந்துதான் அவரைப்

பெற்றிருக்கிறாள். அதனால் அவளுக்குத்தான் ஓரளவுக்காவது மாத்ரு ஸ்தானம் கொடுக்க இடமிருக்கிறது, வஸுதேவருக்கு (பித்ரு ஸ்தானம்) கொடுக்க அந்த அளவுக்குக்கூட ந்யாயமில்லை என்றே பகவான் நினைத்து அப்படிச் சொல்லயிருக்கலாம்


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அன்னையும் குருவாக:ஆசார்யாளின் ஆமோதிப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஸத்யகாம ஜாபாலர்
Next