குருவுக்கும் தந்தைத்தன்மை உண்டு

குருவுக்கும் தந்தைதன்மை உண்டு

அப்பா குரு என்றால் குருவும் அப்பாதான்!

'cF சாஸ்த்ர'த்தில் ஐந்து பேரை அப்பாவாகச் சொல்லியிருக்கிறது. யாரார் என்றால்

ஜநீதா சோபநீதா ச யச்ச வித்யாம் ப்ரயச்சதி 1

அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே பிதர:ஸ்ம்ருதா:11

'ஜநீதா'-பிறப்பைக் கொடுக்கும். எல்லோருக்கும் தெரிந்த, அப்பா, 'உபநிதா' - பூணூல் போட்டு வைக்கிறவர் யாரோ அவர். பல பேருக்கு அப்பா இல்லாமல் வேறொருத்தர் பூணூல் போடும்படி ஆகிறதோல்லியோ? அப்பா இருக்கும்போதே இரண்டு பிள்ளைகளுக்கு ஒரே முஹ¨ர்த்தத்தில் ப்ரஹ்மோபதேசம் செய்தால் அப்போது ஒரு பிள்ளைக்கு அப்பாவும், மற்றவனுக்கு சித்தப்பா, பெரியப்பா மாதிரி ஒருத்தருந்தானே பூணூல் போட்டு வைக்கிறார்? அப்படிப்பட்ட, யாராயிருந்தாலும் அவரும் ஒரு அப்பா. நல்ல காயத்ரி அநுஷ்டானம் உள்ளவர்தான் ஒரு குழந்தைக்கு ப்ரஹ்மோபதேசம் செய்யவேண்டுமென்று சாஸ்திரம். முன்னாளில் அப்படி இல்லாத ஒரு ஜனக பிதா காயத்ரியில் ஸித்தி கண்டவர்களைக் கொண்டே தன்னுடைய பிள்ளைக்கு உபதேசம் செய்வித்தார். அப்படிப்பட்ட அந்த குரு அந்தப் பிள்ளைக்குப் பிதாவாகி விடுகிறார். 'யச்ச வித்யாம் ப்ரயச்சதி' - இதுதான் நம்முடைய விஷயம். எவன் வித்யை கற்பிக்கிறானோ, அதாவது எவன் குருவாயிருக்கிறானோ, அவன் ஒரு அப்பா. 'அன்னதாதா' - ஒருத்தன் சாதம் போட்டு ரக்ஷித்தானானால் சாப்பிடுகிறவனுக்கு அவன் ஒரு அப்பா. 'பயத்ராதா' - பயத்திலிருந்து காப்பாற்றுபவனும் அப்பா. இப்படி அஞ்சு பேர். ஆனால் ப்ரஸித்தியாயிருப்பது, பெற்ற தகப்பனுக்கு அடுத்தபடியாக குருவுக்கும் பிதா ஸ்தானம் என்பதுதான்...

அந்த அப்பா ஜன்மாவைக் கொடுக்கிறாரென்றால், இந்த அப்பா ஜன்மாவை அழிக்கிறார்!'ஜன்மாவைக் கொடுக்கிறவரைத்தானே அப்படிச் சொல்லலாம்? இவரை எப்படிச் சொல்லலாம்?' என்றால், ஒரு ஜீவனை பூத ப்ரபஞ்சத்தில் நேர் அப்பா ஜன்மிக்கச் செய்கிற மாதிரி இவர் ஆத்ம ப்ரபஞ்சத்தில் ஜன்மிக்கச் செய்கிறாரே!அவர் physical லிவீயீமீ-ஐக் கொடுக்கிற மாதிரி இவர் spiritual life -ஐக் கொடுக்கிறாரே!அப்போ 'அப்பா' சொல்லலாந்தானே?

வைதிக அநுஷ்டான வழியில் உபநயன பூர்வமாக பாரமார்த்திகத்தில் போக ஆரம்பிக்கிறவர்களுக்கு 'த்விஜன்மர்' - தமிழில் 'இருபிறப்பாளர்' என்றே பேர் இருக்கிறது. ஆதி காலத்தில் அப்படி உபநயனம் செய்வித்து, இரண்டாவது பிறப்பைத் தந்து, அதாவது பிதாவாக ஆகி, அப்புறம் தன்னுடன் சிஷ்யனை குருகுல வாஸத்தில் வைத்துக் கொண்டு பயிர் பண்ணினவர் குருவே. 'குருகுல வாஸம்' என்று அவரோடு வஸிப்பதைச் சொன்னதாலேயே அது தெரிகிறதே!உபநயனமானவுடன் இரண்டாம் பிறப்பு த்விதீய ஜன்மா.

பக்ஷிக்கும் த்விஜன்மா என்று பேர். முட்டையாக இருப்பது ஒரு ஜன்மா. தாயார்ப் பெட்டை அதை அடைகாத்து, ஓட்டைப் பிளக்கப் பண்ணினவுடன் பூர்ணமான பக்ஷியாக வெளியிலே வருவது இரண்டாவது ஜன்மா. ஒரு ஜீவனை அநுக்ரஹத்தாலே அடைகாத்து அவனுடைய ஆணவ ஓடு பிளந்து பரமாத்மாவிடம்

அவன் பறந்து போகும்படியாகப் பூர்ண ரூபம் தருகிறவரே குரு.

இங்க்லீஷில் மாணவனை pupil என்கிறதில் கூட அவர்களுக்குத் தெரியாமலே இந்த த்விஜன்ம தத்வார்த்தம் இருக்கிறது. Pupa என்றால் ஒரு பூச்சி பூச்சியாகிறதற்கு முந்தி இருக்கிற கூட்டுப் புழு ஸ்டேஜ். (சிரித்து) த்விஜன்மாவுக்குப் பதில் சதுர்ஜன்மாவாக பூச்சிக்கு இருக்கிறது!முட்டை அப்புறம் முழு ரூப ப்ராணி என்று 'இரு பிறப்பு' மட்டுமில்லாமல் முட்டை, அப்புறம், புழு, அதற்கப்புறம் அந்தப் புழு தன்னைச் சுற்றித் தன்னிடமிருந்தே நூலைக் கக்கிக் கூடு கட்டிக் கொண்டு அதற்குள்ளே செயலற்றுக் கிடக்கிற ஸ்டேஜ் - அதற்குத்தான் pupa என்று பெயர் - அப்புறம் கூட்டைப் பிளந்து கொண்டு பறந்து வருகிற முழுப்பூச்சி என்று 'நாலு பிறப்பு'! Pupa -வும் முட்டை மாதிரிதான் இருக்கும். Pupil என்கிற வார்த்தை அதிலிருந்தே வந்திருக்கிறது. குளவி புழுவைக் கொட்டிக் கொட்டித் தன் மாதிரியே குளவி ஆக்குகிற காரியம்தான் குரு செய்வது என்றும் சொல்வதுண்டு. அப்படிச் சொல்கிறபோது புழுவிலிருந்து பூச்சி பிறப்பதாக இரண்டாம், நாலாம் ஸ்டேஜ்களை முடிச்சுப் போட்டுச் சொல்கிறோம்.

இந்த நம்முடைய வைதிக ஸம்ப்ரதாய அபிப்ராயங்களே மேல் நாட்டிலும் ஆதி காலத்தில் இருந்து, பிற்பாடு அவர்கள் வேறே வழியிலே போனபோதும் அதோடு ஒரு மாதிரி கலந்து போயிருப்பதால்தான் pupa - pupil என்று வந்திருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் அவர்களுக்கு அந்தத் தாத்பர்யம் மறந்து போய்விட்டது - அவர்களுடைய அநுஷ்டானத்தில் நம்முடைய குரு - சிஷ்ய பத்தி மாதிரித் தொடர்ந்து வராததால்!இப்போது நாமும் எல்லாம் மறந்துவிட்டுத் தான் மேல் நாட்டு நாகரிகமே வாழ்க்கை என்று அவர்களைப் பின்பற்றிக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்!...

அப்பா - அம்மா தருவது உடம்பை முக்யமாக வைத்த முதல் ஜன்மா. உபநயனத்தில் குரு உபதேசத்தால் ஏற்படுவது உயிரை முக்யமாக வைத்த இரண்டாம் ஜன்மா. அந்த ஜன்மாவில் முன்னேறி முன்னேறி முன்னேறி முடிவாகத்தான் பூத ப்ரபஞ்ச ஜன்மாவை அழித்தே போட்டு ஆத்மாவாக, பரமாத்மாவாக ஆகிறது.

உபநயனம் பண்ணி வேத வித்யை உபதேசிக்கிற குரு அந்த முடிவு ஸ்தானம் வரை அழைத்துப் போகிறவரில்லை. கர்மாவாலே சித்த சுத்தியும், பக்தியாலே சித்த ஐகாக்ர்யமும் (ஒருமைப்பாடும்) ஏற்படுத்துகிற அளவுக்கே அவர் வழிகாட்டுவது. அவை அழுத்தமாக ஏற்பட்டு, த்ருடமாக நின்று நிலைப்பதற்கு வாழ்க்கையிலே நன்றாக அடிபட்டு, கர்மா எல்லாம் கழிந்து அந்த ஜீவன் தேவ KS -பித்ருக்களும் ஜீவ ப்ரபஞ்சத்துக்கும் பட்டிருக்கிற கடனெல்லாமும் தீர்ந்தாகியிருக்கவேண்டும். இதற்கு அவரவர் ஸம்ஸ்காரத்தைப் பொறுத்து கொஞ்ச காலமோ, நிறையக் காலமோ தேவையாயிருக்கும். அபூர்வமான ஏதோ சில பேருக்கு வேண்டுமானால் ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலிருந்தே, அல்லது அதுவுங்கூட இல்லாமலே, அல்லது பூர்த்தியாகாமலே பரமாத்மாவாக ஆகிவிடுகிற ப்ரஹ்ம ஞானம் ஸித்திக்க முடியும். மற்றவர்கள் உபநயனமானவுடன் குருகுலத்தில் ஆரம்பக்கிற ப்ரஹ்மசர்யாச்ரமம் பூர்த்தியானபின் அநேக வருஷம் க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து, அடிபட்டே, கர்மா

கடனெல்லாம் தீர்ந்து சித்த சுத்தி, ஐகாக்ர்யங்களை நன்றாக ஸம்பாதித்துக் கொண்டு ப்ரஹ்மமாக ஆகிற வித்யாப்யாஸத்திற்குப் போகமுடியும். அப்படி சித்தம் சுத்தியாகி, சிதறாமல் ஒன்றையே சிந்திக்கிற ஐகாக்ர்யம் ஸித்திக்கிற ஸமயத்தில் அந்தச் சித்தம் பரமாத்மாவையே ஒரே குறியாகப் பற்றிக் கொள்ளும்படி செய்ய இன்னொரு குரு வருவார், ஸந்நியாஸம் தந்து உபதேசம் பண்ணுவார். அந்த உபதேச மஹிமையாலே - அந்த குருவினுடைய அநுக்ரஹ சக்தியும் உபதேச வாக்கியத்தில் பாய்ந்திருக்கிற மஹிமையாலே - சிஷ்யன் அவர் சொன்ன பாரமார்த்திக வாழ்க்கையில் முன்னேறி முன்னேறி முடிவாகத்தான் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொள்வது. அந்த இடத்தில் சிஷ்யன் பரப்ரஹ்மமாகவே ஜன்மித்து விடுகிறான்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பிதா - குரு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பிற மதங்களிலும் பிதா-குரு
Next