'அவ்யக்தம்' என்பது என்ன?

'அவ்யக்தம்' என்பது என்ன?

'வ்யக்தம்' என்றால் 'வெளிப்பட இருப்பது'. 'அவ்யக்தம்' - வெளிப்படாதது. ப்ரம்மத்திலிருந்து வெளிப்பட்டு அதன் manifestation -ஆக இருக்கப்பட்ட ப்ரப்ஞசம் வ்யக்தமானது. இந்த வ்யக்தம் எதிலிருந்து வந்ததோ அந்த ஆதார ஸத்யம், ப்ரஹ்மம் என்பது, வெளிப்படத் தெரியவில்லை. அதற்குள்ளிருந்துதான் இந்த நானா ப்ரபஞ்சமும் வெளிப்பட்டது. அதோடு, ப்ரபஞ்சத்திற்கு உள்ளேயும், அதிலிருக்கிற ஒவ்வொரு பதார்த்தத்திற்கு உள்ளேயும் அந்த ப்ரஹ்மமே நிறைந்து இருக்கிறது. 'உள்ளே இருக்கு' என்றாலே வெளியில் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்? அதாவது வ்யக்தமாக இல்லை என்றுதானே அர்த்தம்? வ்யக்தமாக இல்லாததே அவ்யக்தம். அதாவது ப்ரஹ்மந்தான் அது. ஸாங்கிய சாஸ்திரத்தை அநுஸரித்தே ப்ரஹ்மவித்யா சாஸ்திரம் அர்த்தம் பண்ணும்போது, அவ்யக்தம் என்பதை ப்ரஹ்மமாகச் சொல்லாது. வ்யக்தமான ப்ரபஞ்சத்துக்கு மூலச் சரக்காக, வெளிப்படாமலிருக்கிற மூல மாயை என்றே சொல்லும். ஆனால் அத்தனை டெக்னிகலாக இங்கே அர்த்தம் பண்ணுவது பொருந்தாது. வ்யக்தம் - தெரிகிற லோகம், அவ்யக்தம் -தெரியாத பரமாத்மா என்பதுதான் பொதுவான அர்த்தம். அதுதான் இங்கே பொருந்துவது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'உ': திருமாலின் வடிவம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'விஷ்ணு', 'வாஸுதேவ' பத விளக்கம்
Next