Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஞானி ஹநுமாரும் அவரது ஞான குருவும் <

ஞானி ஹநுமாரும் அவரது ஞான குருவும்

       அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்

        தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |

        ஸகல குணநிதானம் வானராணாமதீசம்

        ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பற்றிய ச்லோகம்.

துளஸீதாஸ் என்ற பரம பக்தர் ’ராம் சரித் மானஸ்’ – ‘ராமசரிதமானஸம்’ – என்கிற தலைப்பில் எழுதியிருக்கிற ஹிந்தி ராமாயணம் வடக்கேயெல்லாம் ரொம்ப ப்ரஸித்தம். இங்கே நாம் கம்பராமாயணத்தைக் கொன்டாடுவதைவிட அங்கே அவர்கள் அந்த ராமாயணத்தை ரொம்பவும் பூஜிதையாகக் கொண்டாடிப் பாராயணம் பண்ணுவது வழக்கம். முந்நூறு-முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன் எழுதிய புஸ்தகம்தான் அது. தமிழ் மாதிரிப் பழமை பெறாத ஹிந்தி பாஷைக்கு அந்த ராமாயணத்தால் தான் இலக்கிய ரீதீயிலும் ஒரு ஏற்றம் கிடைத்திருக்கிறது. இலக்கியமாகச் சிறப்புப் பெற்றாலும், இலக்கணம் என்று பார்த்தால் அது புலவர் பாஷையில் எழுதினதில்லை. பாமர ஜனங்களும் ரஸித்துப் படிக்கிற மாதிரியான பாஷையிலேயே அதை துளஸீதாஸ் செய்திருக்கிறார். அதனால்தான் அது கம்ப ராமாயணத்தை விடவும் ஸர்வ ஜன ப்ரஸித்தமாக, பாமர-பண்டித ரஞ்ஜகம் என்னும்படியாக இருந்து வந்திருக்கிறது. பக்திக்கு பக்தி, கவிதாரஸத்துக்குக் கவிதா ரஸம் என்று இரண்டுமாக அது இருந்தாலும் அதனுடைய பக்தி சக்தியே பொது ஜனங்களை பலமாகத் தொட்டு வருகிறது.

துருக்கர்கள் ஆட்சியில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக பலவந்தம் நடந்து வந்த காலத்தில் எழுதிய புஸ்தகம் அது. அந்த பலவந்தத்தையும் மீறி ஜனங்கள் தாய் மதத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததற்கு ‘ராம்சரிதமானஸ்’ ஊட்டிய பக்தியும், மத உணர்ச்சியும் ஒரு முக்யமான காரணம். அதிலே வருகிற மஹாவீர பலவந்தரான ஆஞ்ஜநேயரின் ஸாஹஸங்கள் எந்த பலவந்தத்துக்கும் தலை பணியாத ஒரு மனோபாவத்தை ஜனங்களுக்கு ஊட்டியது. துளஸிதாஸே பரம பராக்ரமசாலியான ஆஞ்ஜநேயரின் காப்புக் கவசம் எந்த ஆபத்திலும் பக்தர்களுக்கு இருப்பதைக் காட்டி, ரொம்பவும் வீர சூரம் கொடுக்கும்படியாக ‘ஹநுமான் சாலீஸா’ என்று நாற்பது ஈரடிச் செய்யுள்கள் கொண்ட ஒரு தனி ஸ்தோத்ரமும் எழுதியிருக்கிறார். எவரானாலும் அதைப் படித்து மனப்பாடம் செய்யும்படியாகப் பண்ணும் ஆகர்ஷணம் அந்த ஸ்தோத்ரத்துக்கு உண்டு. படித்தாலே மஹா கோழையான சோப்ளாங்கிகளுக்கும்கூட, ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பலத்தில் தானும் பயில்வானாகி விட்ட மாதிரியான உத்ஸாஹத்தை அது கொடுக்கும். அந்த ஸ்தோத்ரமும் அவர் நாளிலேயே ஜனங்களுக்கிடையே நன்றாக ப்ரஸித்தமாகி, மதமாற்றத்துக்குத் தடுப்பு வேலி போட்டது.

துளஸீதாஸ் ஏதோ கல்பனையில் எழுதினாரென்றில்லாமல் ப்ரத்யக்ஷத்திலேயே ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர். அவருடைய ஜீவ்ய சரித்ரத்தைப் பார்த்தால் அதில் ஆஞ்ஜநேயரோடு அவர் நேர்முகமாகவே எவ்வளவு நெருக்கமாகப் பழகியிருக்கிறாரென்று தெரியும். அவரையே ஆஞ்ஜநேய அம்சமாகச் சொல்வதுண்டு. ஆஞ்ஜநேயர் மாதிரியே அவரும் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்தான்.

அப்படிப்பட்டவர் பண்ணின ஆஞ்ஜநேய ஸ்தோத்ரம்தான் நான் ஆரம்பத்தில் சொன்னது. அவருடைய ராம் சரித் மானஸில் ஆஞ்ஜநேய ப்ரபாவத்துக்கேயான ஸுந்தர காண்ட ஆரம்பத்தில் வரும் மங்கள ச்லோகங்களில் ஹநுமத்பரமாக வருகிற ச்லோகம்தான் அது. உள்ளே கதை ஹிந்தி பாஷையில் இருந்தாலும், ‘ராம் சரித் மான’ஸில் வரும் மங்கள ச்லோகங்கள் எல்லாம் அழகான ஸம்ஸ்க்ருதத்திலேயே இருக்கும். அப்படி ஒன்றுதான் நான் சொன்னது.

              அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்

                தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |

                ஸகல குணநிதானம் வானராணாமதீசம்

                ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

’வாதஜாதம் நமாமி’ என்று நமஸ்காரம் பண்ணி முடிகிறது. ‘வாதஜாதன்’ என்பதுதான் இந்த ச்லோகத்தில் ஆஞ்ஜநேயரின் பெயராக வருவது. ‘வாதஜாதன்’ என்றால் ‘வாயுகுமாரன்’. ‘வாதம்’-வாயு; ‘வாயுப் பிடிப்பு’ என்பதை ‘வாதம்’ என்றும் சொல்கிறோமல்லவா? ‘ஜாதன்’ – குமாரன். ‘வாதாத்மஜன்’ என்றும் இதே அர்த்தத்தில் ஆஞ்ஜநேயருக்கு பெயர் உண்டு. ‘வாத(da)ம்’ இல்லை; ‘வாத(ta)ம்’ என்று சொல்ல வேண்டும். ‘வாம்’ என்றால் பேசுவது; ‘ஆர்க்யூ’ பண்ணுவது.

இந்த ச்லோகத்தை நான் சொல்லக் காரணம், அதில் ‘ஞானினாமக்ரகண்யம்’ – ஞானினாம் அக்ரகண்யம்’ என்று வருவதுதான். அப்படியென்றால் ‘ஞானிகளுக்குள்ளே முதல்வராக எண்ணத் தக்கவர்’. ப்ரஹ்ம ஞானிகள், ஆத்ம ஞானிகள் என்று சொல்லப்படுகிறவர்களில் ஆஞ்ஜநேய ஸ்வாமிக்குத் தலை சிறந்த இடம் என்று ச்லோகம் சொல்கிறது.

பொதுவிலே ஆஞ்ஜநேயருடைய சிறப்புக்களாகச் சொல்லப்படுபவை அவருடைய பலம், அதாவது சரீர பலம், வீர பராக்ரமம், துணிச்சல், கார்ய ஸாமர்த்யம், அபாரமான புத்தி தீக்ஷண்யம், குறிப்பாக வ்யாகரணத்தில் படுத்வம் (இலக்கணத்தில் பேராற்றல்), அப்பழுக்குச் சொல்ல முடியாத ப்ரஹமசர்யம், தன்னுடைய இத்தனை சக்திகளையும் தனக்காக இல்லாமல் பகவத் ப்ரீதியாக தர்மத்துக்கே ப்ரயோஜனப்படுத்தியது, எல்லாவற்றுக்கும் மேலாக ராம பக்தியில் அப்படியே உருகி ராமருடைய அடியார்க்கடியாராக அடங்கிக் கிடந்த விநயம் ஆகியவைதான். சரீர பலம், கார்ய ஸாமர்த்யம், செய்கிற கார்யத்திலேயே ஆடாத, அசையாத ஈடுபாடு ஆகியவற்றால் அவரைப் பெரிய கர்ம யோகியாகவும், அசஞ்சலமான ராம பக்தியால் பக்த யோக சிகாமணியாகவும்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஞான யோகியாக அவரை நம்மில் ரொம்பப் பேர் தெரிந்து கொள்ளவில்லை.

அவர் மஹா புத்திமான். ’புத்திமதாம் வரிஷ்டம்’ என்று சொல்கிறபடி* இருந்தவர் என்பதும் நமக்குத் தெரியுமானாலும், புத்தி வேறே, ஞானம் வேறேதானே? இன்றைக்கு லோகத்தில் பல துறைகளில் மஹா புத்திமான்களாகப் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஞானி என்று சொல்ல முடியுமா? ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ‘தான்’ என்கிற ஜீவாத்மா என்ற அறிவை அநுபவமாகப் பெற்றவனைத்தான் ஞானி என்று சொல்கிறது – ப்ரஹ்மஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சொல்கிறது. அந்த அறிவைப் பெறவும் நிரம்ப தத்வ சாஸ்த்ரங்கள் படித்து அவற்றில் புத்தியைச் செலுத்தி அலசிப் பார்க்க வேண்டுமாதலால், இங்கேயும் புத்தி அவசியம்தான் என்றாலும், அந்த புத்தி ஆத்ம விஷயத்தில் மட்டுமே ப்ரவர்த்திப்பதாக இருக்க வேண்டும். புத்திமான்களாக மட்டும் இருப்பவர்கள் அப்படி தத்வ சோதனம் செய்பவர்களாக இல்லாமல் வேறே ஸ்ப்ஜெக்டுகளிலேயே புத்தியைப் ப்ரயோகிப்பவர்களாக இருப்பதுதான் ஜாஸ்தி. தத்வ ஆராய்ச்சியே அவர்கள் பண்ணினாலுங்கூட, அது பெரும்பாலும் வெறும் மூளையின் அலசலாகத்தான் இருக்கும்; பரமாத்ம-ஜீவாத்ம ஐக்யத்தை அநுபவித்தாக வேண்டும் என்ற ஹ்ருதய தாபம் கலக்காத மூளையலசலாக மட்டுமே இருக்கிற அது ப்ரயோஜனமில்லை. அது ஞானமுமில்லை. மஹா புத்திமானேயானாலும் அப்படிப் பட்டவர் ஞானிக்கு எங்கேயோ தள்ளி நிற்கிறவரே.

இங்கே ’புத்திமதாம் வரிஷ்ட’ரான ஆஞ்ஜநேயர் மற்ற புத்திமான்களுக்கெல்லாம் வித்யாஸமாக இருக்கிறார். அவர் வேதாந்தத்தின் பரம தாத்பர்யத்தை அறிந்தநுபவித்தவர். அது மட்டுமில்லை. அப்படி அறிந்தநுபவித்தவர்களிலேயும் முதலாமவராக நினைக்கத்தக்கவர், ‘ஞானினாம் அக்ரகண்யர்’ என்று அவரை நேருக்கு நேராக அறிந்திருந்த துளஸீதாஸ் சொல்கிறார்.

லோகமறிந்த ஆஞ்ஜநேயருடைய மற்றப் பெருமைகளில் சிலதையும் அவர் இந்த ச்லோகத்தில் சொல்லியிருப்பதால், அதிகப்படியாக அவர் சொல்லியிருக்கும் இதுவும், அதாவது ஆஞ்ஜநேயர் ஞானி ச்ரேஷ்டர் என்பதும் பரம ஸத்யமாகத்தான் இருக்கவேண்டும்.

அந்த மற்றப் பெருமைகள் என்ன? ‘அதுலித பலதாமம்’ என்று ஆரம்பிப்பது ஆஞ்ஜநேயரின் சரீர பலத்தைச் சொல்வதுதான். ‘அதுலித பலதாமர்’ என்றால் ‘தன்னிகரில்லாத பலத்தின் இருப்பிடமாக இருப்பவர்’. அப்புறம் ‘ஸ்வர்ண சைலாப தேஹம்’ என்பதாக அவருடைய சரீரம் பொன்மலையான மேரு மாதிரிப் பெரிசாக, ப்ரகாசமாக இருப்பதைச் சொல்கிறார். அந்த ஸ்வர்ண வர்ணம் அவருடைய ப்ரஹ்மசர்ய தேஜஸால் ஏற்பட்டது. ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’  என்று மாணிக்க வாசகர் சொன்னார். ஆஞ்ஜநேய ஸ்வாமியிடமோ உள்ளொளி ஸ்வர்ண காந்தியாக ஊனிலும் ப்ரகாசித்தது; அந்த ஊனை உருக்காமல் அவர் மேரு பர்வதம் மாதிரியான சரீரியாக இருந்தார். ஏனென்றால், அவர் கர்ம யோகியாக அஸாத்யமான கார்யங்களைச் செய்ய வேண்டியிருந்ததே, அதனால்! அந்த அஸாத்யமான கார்யங்களில் ஒன்றைத்தான் அடுத்ததாக வரும் ‘தநுஜ வன க்ருசானும்’ என்பது சொல்கிறது. அப்படியென்றால், காட்டுத் தீ என்று உண்டே, அப்படி அவர் ராக்ஷஸ குலம் என்கிற காட்டை பஸ்மம் பண்ணின அக்னியாயிருந்தவர் என்று அர்த்தம்.

இப்படி அவருடைய கார்ய லோக சதுரத்தைச் சொன்னவிட்டுத்தான் சட்டென்று ஞானி லோகத்துக்குத் துளஸீதாஸ் போய் அவரை ‘ஞானினாம் அக்ரகண்ய’ராக ஸ்தோத்ரிக்கிறார்.

அதற்கப்புறம் அவருடைய மனோ விசேஷத்தைச் சொல்கிறார்: ‘ஸகல குணநிதானம்’. அத்தனை ஸத்குணங்களுக்கும் ஒரு தேக்கமாக, கஜானாவாக அவர் இருந்தாரென்று அர்த்தம். அந்த குணங்களில் ஒன்றாகவே அவருடைய புத்தி தீக்ஷண்யத்தையும் வைத்துக்கொண்டு விடலாம். அதற்கப்புறம், ‘ராமதாஸர்’ என்று ஸேவகராகப் பெயரெடுத்த அவரே ஸுலபத்தில் அடக்கி வைக்க முடியாத வானர ஜாதி முழுதையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதீச்வரனாக – Lord ஆக – இருந்தாரென்பதைச் சொல்கிறார்: ‘வானராணாம் அதீசம்’. அப்படிச் சொன்னதிலேயே figurative – ஆக, ஸுலபத்தில் அடங்காமல் பிய்த்துக் கொள்ளும் இந்த ஜீவாத்மாவின் இந்த்ரியங்களை, மனஸை – குரங்கு மனஸ், குரங்குப் புத்தி என்றே சொல்கிறதை – கட்டுப் படுத்தி வைத்திருந்த ஜிதேந்த்ரியரான ப்ரஹ்மசாரி அவர் என்றும் தெரிவித்துவிடுகிறார்.

முடிவாக, ஆஞ்ஜநேயர் என்ற மாத்ரத்தில் நாம் முதலில் நினைப்பதான அவருடைய ராம் ஸம்பந்தத்தைச் சொல்கிறார்: ‘ரகுபதி வரதூதம்’. ராமசந்த்ர மூர்த்தியின் சிறப்பு வாய்ந்த தூதர் அவர்.

‘வரதூதம்’ என்பதற்குப் பதில் ‘ப்ரிய பக்தம்’ என்றும் இன்னொரு பாடம். ரகுபதியான ஸ்வாமியின் பரம ப்ரியத்தைப் பெற்ற பக்தர், அவரிடம் பரம ப்ரியம் வைத்த பக்தர் என்ற இரண்டு விதத்திலும் இவர் அவருக்கு ‘ப்ரிய பக்தர்’.

ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பற்றிய இத்தனை விஷயங்களையும் முதலில் சொல்லி, முடிவாக இந்த விஷயங்களுக்கெல்லாம் பாத்ரமான நபர் யார் என்று பேர் சொல்லி அடையாளம் காட்டவேண்டிய இடத்தில் ‘வாதஜாதம்’ என்று போட்டு அவருக்கு ‘நமாமி’ – ‘நமஸ்கரிக்கிறேன்’ – என்று ச்லோகத்தைத் துளஸீதாஸ் முடித்திருக்கிறார்.

த்தனையிலும் நமக்கு இப்போது விஷயம் ‘ஞானினாம் அக்ரகண்யம்’ என்பதே. ஆஞ்ஜநேய ஸ்வாமி ப்ரஹ்மஞானிகளுக்குள்ளே ப்ரதம ஸ்தானம் கொடுத்து மதிக்கப்படவேண்டியவர் என்று அது தெரிவிக்கிறது. அவரோடு ப்ரத்யக்ஷமாகப் பழகி அறிந்த துளஸீதாஸ் நமக்குத் தெரிந்த அவருடைய சிறப்புக்களைச் சொல்லும்போது நடுவிலே, மத்யமணி மாதிரி இந்தச் சிறப்பையே சொல்லியிருக்கிறார்.

’அதுலித’, அதாவது நிகரில்லாத, பலம்; ஸ்வர்ண பர்வதமாக மேரு இருக்கிறதே, அது மாதிரியான தேஹம்; ராக்ஷஸ குலம் என்கிற வனத்தை பஸ்மமாக்கும் அக்னியாக இருக்கும் வீர சூரம் என்றிப்படி முன்னால் மூன்று சிறப்புக்கள். ஸகல ஸத் குண நிலயமாக இருப்பது; வானரகணாதிபதியாக இருப்பது; ராமருக்குச் சிறப்பு வாய்ந்த தூதராக இருப்பது என்றிப்படி பின்னால் மூன்று சிறப்புக்கள். இந்த இரண்டு ‘மூன்று’களுக்கும் நடுவிலே, நடுநாயகமாக அவர் ஞானிகளில் அக்ரகண்யராக இருப்பதைச் சொல்லியிருப்பதால், அது சிறப்புக்களிலும் சிறப்பிடம் பெற்றிருப்பதாக ஆகிறது.

ஞ்ஜநேயர் ப்ரஹ்மஞானி என்றவுடனே நம்முடைய வைதிக ஸம்ப்ரதாயத்தில் அடுத்த கேள்வி ஒன்று வரும். அநுபவிகள் உருவாக்கியிருக்கிற நம்முடைய ஸம்ப்ரதாயக் கருத்துப்படி ஒருத்தருக்கு ப்ரஹ்மஞானம் கிடைத்திருக்கிறது என்றால், அதைத் தானாக அவர் ஸம்பாதித்திருக்க முடியாது. ப்ரஹம வித்யா உபதேசகரான ஒரு குருவின் உபதேசத்தைக் கேட்டு, அந்த உபதேச பலத்தால், உபதேசிக்கிற குருவின் அநுக்ரஹ பலத்தால்தான் ஸம்பாதித்திருக்க வேண்டும். உபதேசம் பெறுகிற சிஷ்யரும் நிரம்ப ப்ரயாஸை, ப்ரயத்னத்தோடு ஸாதனை பண்ணத்தான் வேணுமென்றாலும் அவர் தாமே பண்ணும் மனன, நிதித்யாஸனாதிகளுக்கு முன்னால் ‘ச்ரவணம்’ என்பதாக அவர் குருவிடம் உபதேசம் பெறுவதுதான் வருகிறது. ச்ரவண-மனன-நிதித்யாஸனம் என்றே படி வரிசை. ‘ச்ரவணம்’ : குருவிடம் உபதேசம் கேட்டுக் கொள்வது: ‘மனனம்’: அப்புறம் அதைச் சிஷ்யர் ஓயாமல் உருப்போடுவது; ‘நிதித்யாஸனம்;: உருப்போட்டதில் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போய் அதை அநுபவமாக்கிக் கொள்வது.

ஆகையினால் ஒருவர் ஞானம் பெற்றாரென்றால் அடுத்த கேள்வியாக வருவது, அவர் யாரிடம் ச்ரவணம் செய்தார். அதாவது அவருக்கு ஞானோபதேசம் செய்த குரு யார் என்பதுதான்.

ஞானி ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்த ஞானாசார்யர் யார்?

அவருடைய பால ப்ராயத்தில் அவருக்கு ஸுர்ய பகவான் குருவாக இருந்து உபதேசித்தாரென்று கதை கேட்டிருக்கலாம். அவதரித்தவுடனேயே அவர் உதிக்கிற ஸுர்யனைப் பார்த்து அது ஒரு செம்பழம் என்று நினைத்து அதைப் பிடிப்பதற்காக ஸுர்ய மண்டலத்துக்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தவர். அதற்குச் சில வருஷம் அப்புறம் அந்த ஸுர்ய பகவானிடமே சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். உதயகிரியிலிருந்து அஸ்தமன கிரி வரை குருவான ஸுர்யனுக்கு எதிர் முகமாக சிஷ்ய க்ரமத்தில் அவரோடு கூடவே ஸஞ்சாரம் செய்துகொண்டு பாடம் கேட்டார். ஆனால் அது ஞான போதனைப் பாடமில்லை. ஆத்மாநுபவமாக இல்லாமல் மூளை அறிவினால் பெறக்கூடிய மற்ற எல்லாத் துறைகளிலும், மற்ற ஸகல சாஸ்த்ரங்களிலுமே ஸுர்ய பகவான் ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்தார். முக்யமாக வ்யாகரண சாஸ்த்ரங்கள் ஒன்பதையும் உபதேசித்தார். அது அவருடைய பால ப்ராயத்தில். அவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்றுத்தான் அவர் ‘புத்திமதாம் வரிஷ்டம்’ என்னும்படி அறிவாளிகளில் சிறப்பிடம் பெற்றது. ஆனாலும் அறிவாளி வேறே, ஞானி வேறேதானே? ஞானியாக அவர் ஆனது எப்போது? அப்போது அவரை அப்படி ஆக்கிய குரு யார்?

ஆத்ம சாஸ்த்ரத்துக்குத்தான் பரவித்யை என்று பெயர். அது தவிர்த்து மற்ற எல்லா சாஸ்த்ரங்களும் அபரவித்யைதான். ‘பரம்’: superior. ’அபரம்’ : inferior.

அபர வித்யையால் ஆஞ்ஜநேயருடைய புத்தியை சோபிக்க வைத்த குரு ஸுர்யன் என்கிறாற்போல பரவித்யையால் அவருடைய அந்தராத்மாவையே சோபிக்க வைத்த குரு யார்? அவர் இவருக்கு உபதேசித்த கதை எப்போது நடந்தது?

ஆஞ்ஜநேயர் எப்போது ஞானோபதேசம் பெற்றாரென்றால், ராமாயணக் கதை முக்காலே மூணு வீசம் முடிந்து, ராம பட்டாபிஷேகமும் ஆன அப்புறந்தான். அதாவது அவர் ஸுர்யனிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட பாலப் பிராயத்திலிருந்து எத்தனையோ வருஷம் பின் தள்ளித்தான்.

அவர் பெரியவராகி, ‘ஆஞ்ஜநேய ப்ரபாவம்’ என்று இப்போது நாம் கொண்டாடிக் கொண்டு சொல்கிற மஹத்தான லீலைகளை ராம ஸேவையாகப் பண்ணியாகி விட்டது. ‘ஸமுத்ரம் தாண்டி தூது போனார். அந்த தூதுப் பணியை வெற்றிகரமாக ஆற்றினார். அசோக வனத்தை அழித்தார். லங்கையை தஹனம் பண்ணினார். அப்புறம் ராம-ராவண யுத்தம் வந்தது. அதன்போது ஸேது கட்டுவதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் அபாரமான ஸாஹஸ கார்யங்கள் பண்ணினார். ஒரு பக்கம் ராக்‌ஷஸ ஸைன்யத்தை அடித்து நொறுக்கி உயிரைப் போக்கியவரே இன்னொரு பக்கம் ராம-லக்ஷ்மணர்கள் உள்பட ஸ்வபக்ஷ ஸைன்யம் முழுதும் ப்ரஜ்ஞா பங்கமாகிச் சாய்ந்தபோது ஸஞ்ஜீவி பர்வதத்தைக் கொண்டுவந்து உயிர் ஊட்டவும் செய்தார்; - என்றிப்படியெல்லாம் சொல்கிற அவருடைய அத்தனை ப்ரபல லீலைகளையும் அவர் செய்தாகிவிட்டது. அதற்கப்புறம் ராவண வதமாகி, ஸ்வாமி அயோத்தியில் சக்ரவர்த்தியாக ஆண்டு கொண்டிருந்த போது அவருக்கே தம்மை அர்ப்பணம் செய்து கொண்டு ஆஞ்ஜநேயர் ஸேவகம் பண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர் ஞானோபதேசம் பெற்றுக் கொண்டது.

‘ராமருக்கே ஸேவகம் என்று ஆத்மார்ப்பணம் செய்து கொண்டவர் அதை விட்டுவிட்டு எங்கே போய், யாரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டிருக்க முடியும்?” – இப்படிக் கேள்வி எழும்புகிறது.

தம்முடைய உயிருக்குயிரான ராமரை விட்டுவிட்டு அவர் எங்கேயும் போகவில்லை. வேறே எவரிடமோ உபதேசம் பெறவுமில்லை.

ஸ்ரீராம ஸந்நிதியிலேயே, அந்த ராமரிடமேதான் உபதேசம் பெற்றுக்கொண்டார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசம் செய்த குரு ராமரேதான்.

ப்ரபு-ஸேவகர் என்ற உறவிலும், பகவான் பக்தர் என்ற உறவிலுந்தான் நாம் பொதுவாக ராம-ஆஞ்ஜநேயர்களைப் பார்ப்பது. இங்கேயோ வேறே ஒரு புதுமையான கோணத்தில் அவர்களை குரு-சிஷ்யர்களாகப் பார்க்கிறோம். ராமகுருவின் சிஷ்யராக ஆஞ்ஜநேயரைப் பார்க்கிறோம். இதிலே தனியான ஒரு விசேஷம் தெரிகிறதோல்லியோ? ஸத்குரு-ஸச்சிஷ்ய உறவைப்போல ஒன்று கிடையாதே! ஆஞ்ஜநேயர் பரம ஸத்புருஷர். ராமரோ ‘ஸத்’ என்றே சொல்லப்படுகிற மெய்ப்பொருளான பரமாத்மா. இரண்டு பேரும் குரு-சிஷ்யர்களாக இருந்ததை நினைத்தாலே புண்யம்.

‘ராஜாராமன்’ என்றே பெயர் கொண்ட சக்ரவர்த்தியாக ஸ்வாமி, இன்றைக்கும்  ‘ராம ராஜ்யம்’ என்று சொல்லும்படியான முறையில் தர்ம பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த ராஜாவே ஞானராஜாவாகவும் இருந்துகொண்டு ஆத்மோபதேசமும் பண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய மாமனார் ஜனகர் ராஜர்ஷி (ராஜரிஷி) என்பது ப்ரஸித்தம். மாப்பிள்ளையும் மாமனார் மாதிரிதான். ஒரு பக்கம் கார்ய வீரரான ராஜா; இன்னொரு பக்கம் ஞானச்ரேஷ்டரான ரிஷி; வேதாந்தத்தை வ்யாக்யானம் செய்தவர்.

அவர் ஹநுமாருக்கு உபதேசித்தது மாத்திரமில்லை. அன்றைக்கு லோகத்தில் இருந்த ரிஷிகணங்களுக்கெல்லாமும் அவர் உபதேசித்தார். அந்த ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் அவர் ஸாக்ஷாத் நாராயணாவதாரம் என்று தெரியும். தங்களை ஹிம்ஸித்து வந்த ராவணாதி ராக்ஷஸர்களை நாசம் செய்யவே முக்யமாக அந்த அவதாரம் ஏற்பட்டது என்றும் தெரியும். அந்தக் காரியம் முடிந்து ராமர் ராஜாவாகி ஆட்சி செலுத்த ஆரம்பித்து விட்டார். அப்போது தம்முடைய தர்ம ஆட்சி மூலம் அவர் ஸாதாரண ஜனங்களெல்லாம் லக்ஷ்யமாகக் கொண்டு முன்னேற வேண்டிய தர்ம மார்க்கத்தை அவர்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு அவதார கார்யந்தான். அதோடு மூன்றாவது கார்யமாக இன்னொன்றையும் அந்த ரிஷிகள் சேர்த்து விட்டார்கள். என்னவென்றால்:

பூர்வாங்கம்-உத்தராங்கம் என்று இரண்டு. பூர்வாங்கம் முதலில் பண்ண வேண்டியது; உத்தராங்கம் பின்னால் பண்ண வேண்டியது. வைதிக ஸம்ப்ரதாயத்தில் இந்த இரண்டை வைத்தே, முதலில் நம்முடைய ஸாமான்ய தசையில் இஹ லோகத்தில் நல்லபடி வாழ்க்கை நடத்திப் பரலோகத்துக்கு ப்ரயத்னம் பண்ணும் பக்குவத்தைப் பெறுவதற்காக தர்மம் என்பதை அறிந்து அப்யஸிக்க வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் பெற்றவர்கள் அதற்கப்புறம் தர்மம்-அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ப்ரஹ்மம் என்பதை அறிந்து அநுபவிக்க வேண்டுமென்றும் வைத்தார்கள். ஷட்-தர்சனங்கள் என்று நமக்கு ஆறு சாஸ்த்ரங்கள் இருப்பதில், ‘தர்ம ஜிஞ்ஜாஸா’ என்று முதலில் தர்மத்தை அறிய ஆசைப்பட வேண்டிய நம்மை தர்மத்தில் ஈடுபடுத்துவதற்காகவே பூர்வ மீமாம்ஸை என்கிற தர்சனத்தையும், அதை அறிந்த பிற்பாடு ‘ப்ரஹ்ம ஜிஞ்ஜாஸா’ என்று ப்ரஹ்மத்தை அறிய ஆசைப்படுகிறபோது அந்த ப்ரஹ்மத்தில் ஈடுபடுத்துவதற்காகவே உத்தர மீமாம்ஸை என்ற தர்சனத்தையும் வகுத்துக் கொடுத்தார்கள். அப்புறம் அந்தப் பூர்வ மீமாம்ஸைக்கே மீமாம்ஸை என்ற பெயரும், உத்தர மீமாம்ஸைக்கு வேதாந்தம் என்ற பெயரும் வந்துவிட்டது. தர்ம மார்க்கமான மீமாம்ஸை கர்ம மயமானது. ப்ரஹ்ம மார்க்கமான வேதாந்தம் ஞான விசார மயமானது.

ராக்‌ஷஸ வதம் என்ற முதலாவது அவதார கார்யம் ஆன பிற்பாடு ராமர் சக்ரவர்த்தியாகி ஸாதாரண நிலையிலேயுள்ள லோக ப்ரஜைகளுக்கெல்லாம் தம்முடைய நீதி பரிபாலனத்தாலும், தாம் செய்யும் யஜ்ஞாதி வைதிக கர்மாநுஷ்டானத்தாலும் தர்ம மார்க்கத்தைக் காட்டிக் கொண்டிருப்பதான இரண்டாவது அவதார கார்யத்தையும் பண்ணினார். இப்போதே அவர் ரிஷிகளான தங்களையெல்லாம் ஞான மார்க்கத்தில் நிலைப்படுத்துவதான மூன்றாவது கார்யத்தையும் பண்ணட்டும் என்று அந்தக் கால ரிஷிகள் எல்லாரும் நினைத்து அவரிடம் வந்து கூடினார்கள்.

எந்த அந்தரங்கத்தையும் துளைத்துக் காணக்கூடிய பார்வை பெற்ற அந்த ரிஷிகளுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் ராமர் உள்ளூர பரம ஞானி என்று. வெளியிலே அவர் மாநுஷமாகக் கூத்தடித்தார்; ஒரு ஸமயம் ரெளத்ர கோபம் கொண்டார்; இன்னொரு ஸமயம் அழு அழு என்று அழுதார் என்றாலும் இதெல்லாம் நடிப்புத்தான் என்று அவர்களுக்குத் தெரியும். உள்ளுக்குள்ளே ஸகுணமாகப் பார்த்தால் அவர் மஹாவிஷ்ணுவே, அதற்கும் உள்ளே நிர்குணமாகப் பார்த்தால் பரப்ரஹமமாகவே இருந்து கொண்டிருக்கிற ஞானி என்று அவர்களுக்குத் தெரியும். ஆகையினால், ஏற்கெனவே தாங்கள் உபதேசம் வாங்கிக் கொண்டு அநுபவம் பெற்றவர்கள்தானென்றாலும், பகவானாகவும் பரப்ரஹ்மமாகவுமே இருக்கப்பட்ட ராமரின் வாயால் மறுபடி உபதேசம் கேட்டால் அப்போதுதான் தாங்கள் பெற்ற அநுபவம் நின்று நிலைத்துத் தங்களுக்கு ஜீவன் முக்தி ஸ்திதி கிட்டும் என்று அவர்கள் கண்டார்கள். அதனால் அவரிடம் கூட்டமாக வந்து வேதாந்தத்தை உபதேசிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

உபதேசம் கொடுப்பதற்கு ராமருக்கும் இஷ்டந்தான். ஏன் இஷ்டம் என்றால், ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பழமொழி அல்லவா? அப்படி, ப்ரஹ்ம வித்யையைத் தான் கற்றுக் கொண்டு பேரின்பம் என்பதையே அடைந்தவர்களுக்கும் அதை மற்றவர்களோடு ‘ஷோ’ பண்ணிக் கொள்ளவேண்டும் என்று இருக்கும். ராமர் ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபம்; ப்ரஹ்மானந்தத்தில் இயற்கையாகவே திளைத்துக் கொண்டிருப்பவர்; அவர் யாரிடமும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை தான். என்றாலும் அவதாரம் என்று நரலீலை பண்ணும் போது அவரும் ஜனங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக குருமுகமாகவே தாம் ப்ரஹ்ம வித்யை கற்றுக் கொன்டதாகத்தான் காட்டினார். நல்ல யெளவனப் பிராயத்திலேயே, ஒரு ராஜகுமாரன் பெறவேண்டிய தநுர்வேதம் உட்பட்ட ஸகல வித்யைகளையும் வஸிஷ்டரின் குருகுலத்தில் பெற்றுக்கொண்டபோதே வேதாந்தத்திலும் – அதுதான் ப்ரஹ்ம வித்யை என்பது; அதிலும் – அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டார். ஆனால் அதோடு அவருடைய ஆர்வம் – ஞான தாஹம் என்பது – தணியவில்லை.  அதனால் விஸ்தாரமாகவே வஸிஷ்டரிடமிருந்து ப்ரஹ்ம வித்யோபதேசம் கேட்டும் பெற்றுக் கொண்டார். அந்த உபதேசம் ஒரு பெரிய புஸ்தகமாக இருக்கிறது. அத்வைத வேதாந்தத்தில் ஒரு ‘அதாரிடி’ என்று சொல்லக்கூடிய ‘க்ளாஸிக்’காக அது இருக்கிறது. அதற்கு ’யோக வஸிஷ்டம்’ என்று பெயர். தமிழிலும் அதற்குப் பழமை வாய்ந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. அதை ’ஞான வாசிட்டம்’ என்பார்கள். ‘வாசிட்டம்’ என்று மட்டுமேயும் சொல்வதுண்டு. யோகப் புஸ்தகமாக அதைச் சொல்வதைவிட ஞானப் புஸ்தகமாகவே சொல்வதுதான் அதிகப் பொருத்தம். ஸாதனா மார்க்கம் எல்லாவற்றையுமே யோகம் என்று சொல்வதுண்டு – கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்றிப்படி. ஆனாலும் ‘யோகம்’ என்று மட்டும் சொன்னால் பொதுவிலே பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகம்தான். இது அதைச் சேர்ந்ததில்லை. அத்வைத ஞான ஸாதனைக்கேயான புஸ்தகந்தான் இது.

ஒருத்தன் கற்ற வித்தை அவனோடு போய் விடாமல், அதை அவன் நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விதி. விதி ஒரு பக்கம் இருக்க, அப்படி வித்தையைக் கற்றுக் கொண்டவனுக்கே அதை லோகத்திலும் தக்க பாத்ரங்களுக்குக் கொடுத்துத் தான் பெற்ற இன்பம் அவர்களும் பெறச் செய்ய வேண்டுமென்று இருக்கும்.

ராமருக்கும் அப்படியிருந்தது. அவதாரத்தின் ப்ரதான லக்ஷ்யமான ராவண வதம் முடிகிற வரையில் அந்த ஆசையை அவர் அமுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அந்த லக்ஷ்யம் பூர்த்தியாகி, அவர் நிம்மதியாக ராஜ்ய பாரம் செய்ய ஆரம்பித்த பின் அந்த ஆசை அவருக்கு அமுக்கமாட்டாமல் தலை தூக்கி வந்தது. ஸமயம் பார்த்து ரிஷிகளும் அவரைத் தேடிக்கொண்டு வந்தார்கள்.

ஆனாலும் அவர் அடக்கத்தின் உருவானவர். அதனால் க்ஷத்ரியரான தாம் தம்மைவிட வயஸில் எவ்வளவோ பெரிய ப்ராம்மண ச்ரேஷ்டர்களான ரிஷிகளுக்கு உபதேசிப்பது அநுசிதம் என்றே நினைத்தார். அவர்கள் ஆசைப்படுகிறபடி அவர்களை ப்ரஹ்ம நிர்வாணத்தில் ஸ்திரப் படுத்தும்படி ப்ரஹ்ம வித்யையைத் தாம் எடுத்துச் சொல்லவும் வேண்டும், அதே ஸமயத்தில் நேராக அவர்களுக்கே உபதேசிப்பது என்று வைத்துக் கொள்ளவும் கூடாது என்று நினைத்தார்.

அப்போதுதான் அவருக்குச் சட்டென்று யோஜனை தோன்றிற்று. ‘ஆஞ்ஜநேயன் இருக்கிறானே!’ பரிபூர்ணமாக இந்த்ரிய நிக்ரஹம் பண்ணினவன் அவன். தனக்கென்று ஸ்வய வாழ்க்கை ஒன்றில்லாமல், தான் பகவானாக நினைக்கிற நம்மிடமே பூர்ண சரணாகதனாக் இருக்கிறவன். இப்பேர்ப்பட்டவன் ஞானம் என்று ஒன்று இருக்கிறதைத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் ஞான லக்ஷ்யமான மோக்ஷத்தை அடைந்துவிடுவான் தான். ஆனாலும் இவன் ஞானம், ஞானமார்க்கம், ஞானோபதேசம் என்கிறவற்றையுந்தான் தெரிந்து கொள்ளட்டுமே! புத்தி சக்தி அதிகமில்லாதவர்கள் அப்படித் தெரிந்து கொள்வதற்காகப் பாடுபடவேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் இவனோ மஹா புத்திமானாக இருப்பதால் தத்வ விசாரம் பண்ணியும் ஞானத்தை அடைய நன்றாகப் பக்வப்பட்டவந்தான். இவனைவிட ஸச்சிஷ்யன் நமக்குக் கிடைக்க முடியாது. ஆகையினால் இவனை முன்னால் வைத்துக் கொண்டு, இவனை முன்னிட்டு, இவனுக்கு உபதேசிப்பதாகவே நாம் வைத்துக் கொண்டுவிடலாம். அதையே கூடியிருக்கிற மற்ற ரிஷி கணங்களெல்லாமும் கேட்டுக் கொள்ளட்டும்’ என்று ராமர் நினைத்தார்.

ஆஞ்ஜநேயரின் பால ப்ராயத்தில் அவருடைய அபர வித்யைக்கு ஆசார்யராக ஸுர்ய பகவான் வந்தாரென்றால், வயஸேறிய காலத்தில் அவருடைய பரவித்யைக்கு ஆசார்யராக ஸுர்யகுல திலகரான ராமர் வந்தார். அந்த ராமர்தான் தன் மூல்மான விஷ்ணு ரூபத்தில் ஸுர்யனுக்கும் பரவித்யை உபதேசித்திருக்கிறார். கீதையில் க்ருஷ்ண பரமாத்மா இந்த ஸங்கதி சொல்லியிருக்கிறார்*:

”இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹம் அவ்யயம்.”

”அர்ஜுனா, இன்றைக்கு உனக்கு நான் செய்கிற இந்த உபதேசத்தை ஆதியில் நான் விவஸ்வானுக்குச் செய்தேன்” என்கிறார். விவஸ்வான் என்றால் ஸுர்யன்.

ஆஞ்ஜநேயர் தனக்கு அபர வித்யை போதித்த முதல் குருவுக்கும் பர வித்யை உபதேசித்த மூல குருவிடமே அந்த முக்தி ஹேதுவான மஹாவித்யையில் உபதேசம் பெற்றார். முதல் குரு கற்றுக் கொடுத்த வித்யை அவரை ‘புத்திமதாம் வரிஷ்ட’னாக்கியது மூல குரு கற்றுக் கொடுத்ததோ ‘ஞானினாம் அக்ரகண்ய’ராகவே ஆக்கியது.

ஒரு பசு இருந்தால் அது பல பேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு அதை ஊக்குவதாக அதனுடைய ஸொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டுப் பெறுவதாக இருக்கவேண்டியிருக்கிறது. அப்படித்தான் உபதேசம் என்கிற பால். அது தக்க யோக்யதாம்சம் பெற்ற எல்லோருக்குமானதாக இருந்தாலும் குறிப்பாக ஒரு சிஷ்யனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். ‘கீதை’ த்யான ச்லோகத்தில் இப்படி உபமானம் கொடுத்திருக்கிறது.

*4.1

‘மாட்டுக் கோனார் கிருஷ்ணர் இருந்தாரே, அவர் எல்லா உபநிஷத்துக்களையும் ஒரு பசுவாக்கினார். அந்தப் பசுவின் பாலையே தம்முடைய கீதோபதேசமாகக் கறந்து கொடுத்தார். அவருடைய கை பட்ட விசேஷம் அந்த ஸர்வோபநிஷத் ஸாரம் வெறும் பசும்பாலாக இல்லாமல் அமரத்வம் தருகிற அம்ருதமாகவே மாறிவிட்டது. அதைப் பானம் பண்ணுகிற தகுதி, நல்லறிவு பெற்ற எல்லாருக்கும் உண்டு. அவர்களுக்கெல்லாம் ‘ரெப்ரஸெண்டேடிவ்’-ஆக அவர் நேரே ஊட்டுப் பெற வைத்த கன்று அர்ஜுனன்’ – இப்படி ச்லோகம்:

ஸர்வோபநிஷதோ காவோ, தோக்தா கோபாலநந்தன: |

பார்த்தோ வத்ஸ:, ஸுதீர் போக்தா, துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

கிருஷ்ண பரமாத்மாவோடு இணைபிரியாத ஸகாவாக இருந்த அர்ஜுனன் அவர் ஞானாசார்யராக ரூபம் எடுத்துக் கொண்டபோது அவருடைய ப்ரதம் சிஷ்யனானான். ராமருக்கோ அவருடைய தாஸ ச்ரேஷ்டர் அப்படி சிஷ்யரானார். அவர்தான் அப்புறம் அர்ஜுனனுடைய கொடியிலேயும் இடம் பெற்று, ‘விஜயன்’ என்கிற பெயர் அவனுக்குப் பொருந்தும்படி ஜயசாலியாக்கினார். அது வெளியுத்தத்தில் ஜயம். ப்ரஹ்ம வித்யா உபதேசம் உள் யுத்தத்தில் ஜயம் பெறுவதற்கு. இந்த ஜயம்தான் சாச்வதமாக இருப்பது.

அதற்கான தகுதி வாய்ந்த ஸகலருக்குமான உபதேசத்தை, அர்ஜுனனை முன்னிட்டுக் கொண்டு க்ருஷ்ணர் உபதேசித்த மாதிரி, ஸனகாதி நால்வரை முன்னிட்டுக் கொண்டு தக்ஷிணாமூர்த்தி உபதேசித்த மாதிரி, ஆஞ்ஜநேயரை முன்னிட்டுக் கொண்டு ராமர் ஸகலருக்கும், அவர்களில் முக்யமாக அவரைத் தேடிக்கொண்டு வந்திருந்த முனிவர்களுக்கு உபதேசித்தார்.

தக்ஷிணாமூர்த்தி மாதிரியேதான் ராமரும் சின்முத்ரை காட்டுகிறவர். அவர் மாதிரியே இவரும் ஒரு காலை மடித்து வைத்துக்கொண்டும், இன்னொரு காலைத் தொங்கவிட்டுக் கொண்டும் உட்கார்ந்திருப்பவர். அதற்கு வீராஸனம் என்று பெயர். ஞானவீரம்! முறைப்படி எழுதப்பட்ட பழங்காலச் சித்ரங்களில் அப்படித்தான் போட்டிருக்கும் – தஞ்சாவூர்ப் படம் மாதிரியானதுகளில்.

ஸ்ரீராம மந்தரம் ஜபிக்கிறபோது சொல்லும் த்யான ச்லோகம் ஒன்று உண்டு.

காலாம்போதர காந்தி காந்தம் அநிசம் வீராஸநாத்யாஸிநம்

முத்ராம் ஞான மயீம் ததாநம் அபரம் ஹஸ்தாம்புஜம் ஜாநுநி |

என்று அது ஆரம்பிக்கிறது. ‘நீருண்ட மேகம் போல் ச்யாமள வர்ணமான ஸ்வாமி வீராஸனத்தில் உட்கார்ந்திருக்கிறார்; அவருடைய ஒரு கை ‘முத்ராம் ஞான மயீம்’ என்பதாகச் சின்முத்ரை காட்டுகிறது; இன்னொரு கை முழங்கால் மேல் படிந்திருக்கிறது’ என்று அர்த்தம்.

இன்னொரு ச்லோகம் – க்ரமப்படி ராமாயண பாராயணம் பண்ணும்போது ஆரம்பத்தில் மங்கள ச்லோகங்களாகச் சொல்கிறவற்றில் ராம த்யான ச்லோகமாக வருவது. அதிலும் ஸ்வாமி வீராஸனத்தில் உட்கார்ந்திருப்பதைச் சொல்லியிருக்கிறது. அதில் சின்முத்ரையைப் பற்றி வரவில்லை. ஆனால் அந்த ச்லோகத்தில்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிற தத்வோபதேச விஷயம் – ஆஞ்ஜநேயரை முன்னிட்டுக் கொண்டு ரிஷிகளுக்கெல்லாம் ராமர் ஞானோபதேசம் செய்தார் என்ற விஷயம் – பளிச்சென்று சொல்லியிருக்கிறது. நான் சொன்னதே முக்யமாக அந்த ச்லோகத்தின் ஆதாரத்தில்தான். எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ச்லோகம்.

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹா மண்டபே

மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸம்ஸ்திதம் |

அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜனஸுதே தத்-த்வம் முனிப்ய: பரம்

வ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம் ||

தக்ஷிணாமூர்த்தி மாதிரி வீராஸனத்தில் உட்கார்ந்து கொண்டு ராமர் வேதாந்தோபதேசம் கொடுத்தாரென்றாலும் அவர் மாதிரி இவர் ஏகாங்கியில்லை. ராஜாவாகவும் ரிஷியாகவும் ஒரே ஸமயத்தில் இருந்து கொண்டு கர்ம யோகம், ஞானயோகம் இரண்டையும் பண்ணிக் கொண்டிருந்த இவர் ராணி ஸஹிதமாக ஸ்வர்ண மயமான மண்டபத்தில் மணிமயமான ஆஸனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவர். அதைத்தான் ச்லோக ஆரம்பத்தில் ‘வைதேஹீ ஸஹிதம்’ என்று சொல்லியிருக்கிறது. விதேஹ ராஜ்யத்திலே பிறந்தவளாதலால் ஸீதைக்கு ‘வைதேஹி’ என்று பெயர். ராமர் ஞானாசார்யராக இருந்ததைச் சொல்கிற ச்லோகத்தில் அவளுடைய ஸீதை என்ற பெயரையோ, மற்ற ஜானகி, மைதிலி முதலான பெயர்களையோ சொல்லாமல் வைதேஹி என்று போட்டதில் ரொம்ப அர்த்தம் இருக்கிறது. வைதேஹி என்றால் தேஹத்தை விட்டு விட்டு இருப்பவள், அதாவது தேஹப்ரஜ்ஞையை விட்டுவிட்டு ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பவள் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அதாவது, அவர் உபதேசிக்கிற தத்வத்துக்கு அவள் ‘பெர்ஸானிஃபிகேஷ’னாக இருக்கிறாள். அல்லது இதையே வேறே விதமாகச் சொன்னால், அவள் ‘பெர்ஸானிஃபை’ பண்ணும் தத்வத்தைத்தான் அவர் உபதேசிக்கிறார்.

ஸீதை ராமருக்குப் பக்கத்தில் இருக்கிறாள். அவரைச் சுற்றி பரத-லக்ஷ்மண-சத்ருக்னாதிகள் இருக்கிறார்கள். ‘பரதாதிபி: பரிவ்ருதம்’ என்று ச்லோகத்தின் கடைசிப் பாகத்தில் அதைத்தான் சொல்லியிருக்கிறது.

அந்தத் தம்பிகளும் அவரும் பரஸ்பரம் ஒருவர் மேல் மற்றவர் உயிரையே வைத்திருந்தவர்கள். ஆனால் அவர் உபதேசம் செய்யும்போது அவர்களில் எவரையும் முன்னிட்டுக் கொண்டு செய்யவில்லை. தம்மிடம் ஞானோபதேசம் பெறும் நேர் சிஷ்யர் ஆஞ்ஜநேயராகத் தான் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்து அவருக்கே அந்த பாக்யத்தைக் கொடுத்தார். அதைத்தான் அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜனஸுதே தத்வம் என்று சொல்லியிருக்கிறது.

‘ப்ரபஞ்ஜன ஸுதன்’ என்பதுதான் ஆஞ்ஜநேயர். துளஸீதாஸ் சொன்ன ‘வாதஜாதன்’ மாதிரியே ‘ப்ரபஞ்ஜன ஸுதன்’ என்றாலும் வாயுவின் குமாரன் என்றுதான் அர்த்தம். ‘ப்ரபஞ்ஜனன்’ என்பது வாயுவின் பெயர்களில் ஒன்று.

‘அக்ரே’ என்றால் ‘முன்னாடி’. ராமருக்கு முன்பக்கம் அடக்கவொடுக்கமாக உட்கார்ந்து கொண்டு அந்த ப்ரபஞ்ஜன ஸுதர் உபதேசம் கேட்டுக் கொள்கிறார்.

ஆனால் ராமர் குறிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டு உபதேசித்தாலும் அவருக்கு மட்டும் சொல்வது தான் ராமருடைய முழு உபதேசமும் என்று நினைத்துவிடக்கூடாது. திரண்டு வந்திருந்த எல்லா முனிவர்களையும் உத்தேசித்தே இந்த ஒருவருக்கு அவர் சொன்னார்: தத்-த்வம் முனிப்ய: பரம் வ்யாக்யாந்தம். பரவித்யை என்று சொல்லப்படும் ‘பரம் தத்வ’த்தை முனிவர்களுக்கெல்லாம் ஆஞ்ஜநேயரை முன்னிட்டுக்கொண்டு, ராமர் வ்யாக்யானம் பண்ணினாரென்று அர்த்தம். தக்ஷிணாமூர்த்தி மாதிரியில்லாமல் ராமர் பத்னி ஸஹிதமாக இருந்த மாதிரியே, அவர் மாதிரி மெளனோபதேசம் என்றும் இல்லாமல் நன்றாக வாயால் விளக்கியே வ்யாக்யானம் செய்தார்.

ராமர் மட்டுமில்லாமல் ஸீதையும் ஆஞ்ஜநேயருக்கு உபதேசித்ததாக ஒரு அபூர்வ ஸமாசாரம் ‘ஸீதாராம ஆஞ்ஜநேயம்’ என்ற உத்தமமான அத்வைத க்ரந்தத்தில் வருகிறது. அது தெலுங்கு பாஷையில் இருப்பது. அப்படியிருப்பதில் ஒரு விசேஷம்.

ஸாதாரணமாக, நம்முடைய பிரதேச பாஷைகளில் original work என்றே மூலநூலாக அத்வைதப் புஸ்தகங்கள் இருப்பதில்லை. மிகப் பெரும்பாலும் ஸம்ஸ்க்ருதத்திலுள்ள மூலப் புஸ்தகங்களின் மொழி பெயர்ப்பாகத்தான் அவை இருக்கும். இதற்கு அபூர்வமான விலக்காகத்தான் ப்ரதேச பாஷையிலேயே மூல அத்வைத க்ரந்தம் இருப்பது. தெலுங்கு பாஷையில் அப்படி இருக்கப்பட்ட புஸ்தகமே ‘ஸீதாராம ஆஞ்ஜநேயம்’. ‘ஸீதாராம ஆஞ்ஜநேய ஸம்வாதமு’ என்று நீட்டிச் சொல்வார்கள்.

தேஹ ப்ரஜ்ஞை போன ஞானியான வைதேஹியும் ஆஞ்ஜநேயருக்கு உபதேசிப்பதாக வருவது அதில் ஒரு விசேஷம். முதலில் அவள்தான் உபதேசிக்கிறாள். ஸ்ரீராம தாரக மந்த்ரத்தை உபதேசிக்கிறாள். ராமருடைய ப்ராணனாகவே இருக்கப்பட்ட அவருடைய சக்தியிடமிருந்து ராம மந்த்ரம் பெறுகிறதென்றால் அது பரம பாக்யந்தானே?

அப்படி அவள் உபதேசித்த அப்புறம் ராமர் ஆஞ்ஜநேயருக்கு பரம அத்வைத பரமாக ஸாங்க்ய யோகம், அமனஸ்க யோகம் என்கிறவற்றை உபதேசிக்கிறார். அந்தப் புஸ்தகத்தில் அந்த உபதேசம் பெரிசாக, விரிவாகக் கொருத்திருக்கிறது.

ஸீதா-ராமர்கள் வேலை கொடுப்பவர்கள், ஆஞ்ஜநேயர் அவர்கள் கொடுக்கிற வேலையைச் செய்கிறவர் என்கிற ப்ரபு-தாஸ உறவிலே அவர்கள் அவரிடம் எவ்வளவுதான் ஸந்தோஷித்து வாரிவாரிக் கொடுத்தாலும் தங்களுடைய ஸொத்து பூராவையும் அவருக்குக் கொடுப்பதற்கில்லை. மஹா விவேகியான ஆஞ்ஜநேயருக்கு எந்த ஸொத்தும் தேவைப்படவுமில்லை. ஸீதா-ராமர்களின் ஸேவையிலேயே, அவர்களிடம் பக்தி பண்ணுவதிலேயே அவர் பூர்ண த்ருப்த்ராக இருந்தார். ஆனால் அந்த தம்பதிக்குத்தான் த்ருப்தி ஏற்படவில்லை. அதனாலேயே எத்தனை கொடுத்தாலும், முழுசாகவே அள்ளிக் கொடுத்தாலும் செலவழியாத மூலதனமாக அப்படியே இருக்கும் தங்களுடைய ஞானச் சொத்தை அவருக்கு அப்படியே தந்துவிடுவது என்று தீர்மானித்து உபதேசம் பண்ணினார்கள்.

அவர்கள் யார்? வேலை வாங்குகிற யஜமானர்கள் மட்டும்தானா? இல்லை. பரம அன்பான வாத்ஸல்யத்தைப் பொழிகிற ஸர்வலோக மாதா-பிதாக்களே அவர்கள். அவர்களுடைய அந்த வாத்ஸல்ய ஸொத்தைப் பெறுவதில் தலைக் குழந்தையாக இருந்த ஆஞ்ஜநேயருக்கே அவர்கள் மாதா-பிதாவாக இருந்ததோடு குருவாகவும் ஆனார்கள்! அவருக்கு அவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலுமாக இருந்தார்கள். அப்படி ஒரு அலாதி பாக்யம் அவருக்கு!

ற்றப் புஸ்தகங்களில் சொல்லியிருப்பதைவிட ‘ச்ருதி சிரஸ்’ – வேதத்தின் முடி – என்கப்படுகிற உபநிஷத்தில் ஒன்று சொல்லியிருந்தால் அதற்குத் தனி மதிப்பு. அந்த மாதிரி 108 உபநிஷத்துக்கள் என்று ஒரு கணக்கு இருப்பதில் பார்த்தால், அதில் முடிவாக இருக்கிற ‘முக்திகோபநிஷத்’ என்பது ராமர் ஆஞ்ஜநேயருக்கு உபதேசித்த உபநிஷத்தாகத்தான் இருக்கிறது. வேத முடியிலும் முடிவான, முடிமணியான இடத்தில் ராமர் குருவாகவும், அவருக்கு சிஷ்யராக ஆஞ்ஜநேயரும் வருகிறார்கள்.

பேரே முக்திகோபநிஷத் என்றால் விஷயம் பரம அத்வைத ஸாரமாகத்தானே இருக்கவேண்டும்? அந்த உபநிஷத்தில் அப்படித்தான் ஸாக்ஷாத் ராமசந்த்ர மூர்த்தி உபதேசித்து பரம பக்த சிரோமணியான ஆஞ்ஜநேயரும் பரமஞானி சிஷ்யராகக் கேட்டுக் கொள்கிறார்.

அந்த உபநிஷத்தின் ஆரம்பத்திலும் ரிஷி கணங்கள், முனிகணங்கள் திரண்டு வந்திருந்த பெரிய வித்வத் ஸதஸிலேயே நேராக உபதேசம் வாங்கிக் கொள்ளும் பாக்யம் ஆஞ்ஜநேயருக்குத்தான் கிடைத்ததாக வருகிறது. தக்ஷிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்ற ஸனகாதியர்கள் கூட அவர்களில் இருந்தார்கள் என்றும் வருகிறது.

ஆஞ்ஜநேயர் மேலே மேலே கேள்விகள் கேட்டு ராமரிடமிருந்து ஞானாம்ருதப் பாலை ஒட்டக் கறந்து கொள்வதாக உபநிஷத் போகிறது. “ஸச்சிதாநந்த விக்ரஹமான ராமா! முக்தி காங்க்ஷனாக (முக்தியை விரும்புபவனாக) உள்ள நான் உன்னுடைய தத்வ ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதைச் சொல்லி என்னை முக்தனாக்கி அநுக்ரஹி!” என்று அழகாக, அர்த்த நயம்படக் கேட்டு அவர் ராமரை உபதேசிக்க வைக்கிறார்.

அந்த உபநிஷத்தில் தத்வோபதேசம் இருப்பது மட்டுமில்லை. அதன் ப்ரதம அத்யாயத்தில் ஆஞ்ஜநேயர் கேட்டுக் கொண்டபடி ராமர் 108 உபநிஷத்துக்கள் என்னென்ன என்று அவற்றின் பெயர்களைச் சொல்லி லிஸ்ட் கொடுக்கிறார். அதில் எந்த உபநிஷத் எந்த வேதத்தைச் சேர்ந்தது, அத்யயன க்ரமத்தில் அந்த ஒவ்வொரு உபநிஷத்துக்கும் என்ன சாந்தி மந்த்ரம் சொல்ல வேண்டும் என்கிற விவரமெல்லாமும் தெரிவிக்கிறார். இதற்கு ஆரம்பமாக, உபநிஷத்துக்களுக்கு அடிப்படையாக இருக்கப்பட்ட வேதங்கள் எத்தனை, அதில் ஒவ்வொரு வேதத்திலும் ‘சாகை’ என்று இருக்கிற கிளைகள் எத்தனை என்றும் கணக்குச் சொல்கிறார். 108 உபநிஷத்துகள் பற்றிய ‘டீடெய்ல்ஸு’க்கு அந்த முடிவான உபநிஷத் ஒரு ‘ரெடி ரெக்கனர்’ மாதிரி இருக்கிறது!

நமக்கெல்லாம் இந்த உபகாரம் ஆஞ்ஜநேயர் கேட்டதாலேயே கிடைத்திருக்கிறது.

ப்படி வாழ வேண்டும் என்று நமக்கெல்லாம் ‘ஐடியல்’ காட்டுவது ‘மர்யாதா புருஷர்’ என்றே சொல்லப்படும் ராமர் மட்டுமில்லை; ஆஞ்ஜநேய ஸ்வாமியும் தான். அவரிடம் என்னவெல்லாம் இருந்ததோ – தேஹ பலம், புத்தி பலம், பக்தி பலம், கார்ய ஸாமர்த்யம், பயமின்மை, ஸேவா மனப்பான்மை, புலனடக்கம், கல்வி, விநயம் என்று என்னவெல்லாம் இருந்ததோ – அந்த எல்லாவற்றுக்கும் அவரையே குருவாக நினைத்து நாம் அவர் போன வழியில் போக வேண்டும். ‘ஸகல குண நிதானம்’ என்று துளஸீதாஸர் சொன்னபடி, இத்தனை சிறப்பு அம்சங்கள் அவரிடம் இருந்ததோடு, ஞானம்தான் இதெல்லாவற்றுக்கும் மேலான சிறப்பு, எல்லாச் சிறப்புக்களுக்கும் அதுவே பூர்த்திஸ்தானம் என்று அவர் அதில் ஸாக்‌ஷாத் தன்னுடைய ப்ரபுவான ராமரிடமிருந்து உபதேசம் பெற்று, அங்கேயும் நமக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கிறார். லோக வாழ்க்கையில் நாம் தர்மம் என்ற ஸ்ரீயை அடைந்து அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டியதுதான் இப்போது நம்முடைய லக்ஷ்யமாக இருந்தாலும், முடிவாக நம் ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கு ஞானம் என்ற ஸ்ரீயைத்தான் பெற்றாக வேண்டும் என்ற எண்ணமாவது இப்போதே நமக்கு இருக்க வேண்டும் என்ற பாடம்.

இப்படிப் பல விதத்தில் நமக்கு குருவாக வழிகாட்டும் அவர் நாம் வாழ்நாள் பூராவும் சிஷ்யர்களாக இருந்து பாடங்கள் படித்துக்கொண்டே போகவேண்டும் என்றும் வழிகாட்டுவதற்காகத் தாமே சிஷ்யராக இருந்திருப்பதைத் தான் சொன்னேன். (சிரித்து) சிஷ்யராக எப்படி இருப்பது என்று வழி காட்டுவதற்கான குருவாக இருப்பதற்காகவே அவர் சிஷ்யராகியிருக்கிறார்!

சிஷ்யராக இருக்கும் ஆஞ்ஜநேய குரு; அவருக்கு குருவாக உபதேசிக்கும் ராமசந்த்ரமூர்த்தி – இந்த இரண்டு பேரின் ஸ்மரணம் நமக்கு இருந்தால் போதும், எப்போதும் நல்ல வழியிலேயே போய் நன்மையே அடையலாம். 

htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it