மடாதிபதி ஸந்நியாஸியும் நமஸ்காரமும்
இது நிஜ ஸந்நியாஸிக்கு, நூறு பெர்ஸென்ட் ஸந்நியாஸிக்குச் சொன்னது. ஆனால் எதிலும் good, bad, indifferent என்று பல தினுஸு இருக்கத்தானே செய்கிறது? அப்படி, முழுக்க நிஜ ஸந்நியாஸியாக இல்லாமல் எங்கள் மாதிரி அரை ஸந்நியாஸியாக இருக்கிறவர்கள் (நெடுநேரம் குமிழ்த்துக் குமிழ்த்துச் சிரிக்கிறார்)… ‘அரை’ என்கிறது கூட ஜாஸ்தியோ என்னவோ? அப்படிச் சொன்னால் ஐம்பது பெர்ஸென்டாகி விடுமே! அதனால் ‘பாஸ் மார்க் ஸந்நியாஸி’ என்று வேணுமானால் வைத்துக் கொள்ளலாம்!... இப்படிப்பட்ட எங்கள் மாதிரி ‘பாஸ் மார்க் ஸந்நியாஸிகள்’ தங்களுக்குப் பிறத்தியார் நமஸ்காரம் பண்ணும் போது அதில் தங்களுக்கு அடியோடு ஸம்பந்தமில்லை என்று நாராயணனிடம் தள்ளி விட்டு இருக்க முடியுமா?...
(எங்கள் மாதிரி பாஸ் மார்க் ஸந்நியாஸி என்றதில்) ‘எங்கள் மாதிரி’ என்று யாரைச் சொல்கிறேனென்று புரியாதவர்கள் இருக்கலாம். அதனால் யார் என்று சொல்லிவிடுகிறேன். ஸந்நியாஸிக்குக் கடமையே கிடையாது என்று சொன்னேன். அவனுடைய ஒரே கடமை என்று சொல்லக் கூடியது ஆத்மவிசாரம் தான். பெண்டாட்டி, பிள்ளை-குட்டி என்ற கடமைகளை விட்டு விட்ட அவனுக்கு ஜன ஸமூஹத்தைப் பற்றிய கடமையும் கிடையாது. அதனால் அவன் நமஸ்காரத்தை நாராயணன்கிட்டே தள்ளி விட்டுச் சும்மா இருந்து விட வேண்டியதுதான்.
ஆனால் ‘குரு பீடம்’ என்று போட்டுக் கொண்டு, ‘மடாதிபதி’ என்று மிரட்டிக் கொண்டு சில ஸந்நியாஸிகள் உட்கார்ந்திருக்கிறோமே, அப்படிப்பட்டவர்களைத்தான் மற்ற ஸந்நியாஸிகளிடமிருந்து பிரித்துப் ‘பாஸ் மார்க் ஸந்நியாஸிகள்’ என்று சொன்னேன்! ஏனென்று கேட்டால் எப்போது குருபட்டம் கட்டிக் கொண்டோமோ அப்போதே கடமையையும் வாரிக் கட்டிக் கொண்டு விட்டோம் என்று அர்த்தம்! ஜன ஸமூஹத்தைக் குறித்த பெரிய கடமை, பாரமான கடமை, ஜன ஸமூஹம் பூராவையும் சிஷ்ய ஸமூஹமாக நினைத்து அதை நல்ல வழியில் கொண்டு போகிற பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால் நல்லதோ பொல்லாததோ யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடந்து விட்டுப் போகட்டும் என்று நாங்கள் தள்ளி விட்டு இருந்தால் அது கடமையில் தவறின குற்றமாகி விடும். சிஷ்ய வர்க்கம் நல்வழிப்படணும், அவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று நினைத்து, அதற்கானதைச் செய்ய வேண்டிய ‘ட்யூடி’ எங்களுக்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது நாங்கள் நல்லது பண்ணுவோம் என்று நம்பிக்கொண்டு சிஷ்யர்கள், பக்தர்கள் நமஸ்காரம் பண்ணும்போது, “இவர்களுடைய நல்லது பொல்லாததுகளில் எங்களுக்கு ஸம்பந்தமில்லை. உன் பாடு! என்ன பண்ணிப்பியோ, பண்ணிக்கோ!” என்று நாராயணனிடம் தள்ளினால் அவன் ஒப்புக் கொள்வானா?...
”வேத ரக்ஷணம்; ஸப்ஸ்க்ரிப்ஷன் கொண்டு வா” என்கிறேன். “கோபுரம் கட்டணும்; டொனேஷன் கொண்டுவா” என்கிறேன். தினந்தினமும் பிக்ஷை என்று வாங்கிக் கொட்டிக் கொள்கிறேன். இதெல்லாம் த்ரவ்ய ரூபத்தில் பிடுங்கிக் கொள்கிறது. இன்னும் சரீர ப்ரயாஸையாகவும் பிழிந்து எடுக்கிறேன். “பிடி அரிசி கலெக்ட் பண்ணு”, “ஆஸ்பத்ரி ஆஸ்பத்ரியாகப் போய் ப்ரஸாத விநியோகம் பண்ணு:, “மாடு கன்றுக்காகக் குளம் வெட்டு” இப்படி தினமும் ஏதாவது! இந்த மாதிரியெல்லாம் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, வேலையும் வாங்கிக் கொண்டு, நீங்கள் நமஸ்காரம் பண்ணுகிறபோது மட்டும் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை என்று கத்திரித்தேன் என்றால் அது எப்படி ந்யாயமாகும்?