’ரேஸ் தியரி’ தவறானது
God, Satan என்று இரண்டாகப் பார்த்தே பழக்கப்பட்ட மதஸ்தர்கள், அந்தப் பார்வையிலேயே நம்முடைய வேத மத ருத்ரனைப் பார்த்ததில்தான் வேறு தினுஸாக அர்த்தம் பண்ணிவிட்டார்கள். Divide and Rule – பிரித்து ஆளுவது – என்ற தங்கள் தந்திரமான கொள்கையையும் முடிகிற இடங்களிலெல்லாம் அவர்கள் நுழைத்து விடுவார்களாதலால் இதில் ஆர்ய-திராவிட வித்யாஸத்தையும் ஸாமர்த்தியமாக இழுத்து விட்டு விட்டார்கள்!
ஸர்வ சக்தனாக ஒரே ஈச்வரன் தான். அப்படி அவன் ஸர்வ சக்தனாக இல்லாவிட்டால் அவன் ஈச்வரன் என்று பெத்தப் பேர் வைத்துக் கொள்ளவே லாயக்கில்லாதவன். ‘ஸர்வ’ என்றால் அதில் நல்லது மாதிரியே கெட்ட்தெல்லாமும் அடக்கமாகத்தானே இருக்கணும்? பிரஸித்தமான ருத்ர ஸுக்தங்களில் அப்படித்தான் அவனை விவரமாக வர்ணித்திருக்கிறது. நல்ல சக்தியாக மட்டும் ஈச்வரன், அவனுக்கு ஆப்போஸிட்டாக, கெட்ட சக்தியாக Satan என்று ஒரு இரண்டாம் ஆஸாமி என்று இல்லை. அல்லது அந்த Satanக்கும் அசட்டு ஹிந்துக்கள் தெய்வமாக ஸ்தானம் தந்து உக்ர மூர்த்தி என்று பூஜை பண்ணினார்கள் என்பதும் இல்லை. இரண்டு வெவ்வேறான ஸ்வாமி இல்லை. ஒரே ருத்ர-சிவன் தான். இரண்டு வெவ்வேறான ரேஸ்களும் இல்லை. ஒரே வைதிக ஸமுதாயந்தான்; ஒரே பாரத கலாசாரந்தான்.
நான் கர்நாடகமான வைதிகக் குடுக்கை; பத்தாம் பசலி. அதனால் நான் என்னமோ சரித்திர நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு மாறாக உளறுகிறேன் என்று தோன்றலாம். விவேகானந்தர் இருந்தார். இன்னும் ஸமீபத்தில் அரபிந்தோ (அரவிந்தர்) இருந்தார். அவர்கள் என் மாதிரி இல்லை. சரித்திர ஆராய்ச்சி உள்பட நவீனகால ஸமாசாரமெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தவர்கள். அநேக விஷயங்களில் சீர்திருத்தம், புரட்சிக் கொள்கை என்று சொல்கிறவற்றை பலமாக ஆதரித்தவர்கள். பத்தாம்பசலிகளைக் கண்டித்துக்கூட இருக்கிறவர்கள். அந்த இரண்டு பேரும் கூட இந்த Aryan Dravidian என்ற இரட்டை Race theory-ஐ ஒப்புக் கொள்ளவேயில்லை. உங்களில் பல பேர் ஆராய்ச்சி மனப்பான்மை, Scientific outlook (அறிவியல் கண்ணோட்டம்) இல்லாவிட்டால் ப்ரயோஜனமில்லை என்று அபிப்ராயப்பட்டு, என்மாதிரி கட்டுப்பெட்டி ஸநாதனிகளைத் தள்ளுபடி செய்யக்கூடுமானதால்தான், (ஆராய்ச்சி மனப்பான்மை, அறிவியல் கண்ணோட்டம் என்ற) அந்த இரண்டு யோக்யதாம்சமும் நிறையப் பெற்றவர்களான இரண்டு பேரைச் சொன்னேன்.