இன்றைய பெண்டிர் செய்ய வேண்டியது**
இவ்வாறு அநேகம் பெண்களாலேயே நம் தேசம் அந்நிய மதங்களின் ஆதிக்கத்திலிருந்து அவ்வப்போது மீட்கப்பட்டு, ஸநாதன தர்மம் புத்துயிர் பெற்று வந்திருக்கிறது. எப்போதுமே புருஷர்களைவிட அவர்களுக்கு அதிக மதாபிமானம் இருந்திருக்கிறது. இவன் ஆஃபீஸ், ஷிஃப்ட், டூர் என்று போக ஆரம்பித்த பின் ஸ்திரீகள்தான் இவன் செய்ய வேண்டிய பூஜாதிகளைப் பண்ணிக்கொண்டு இந்த மட்டும் இங்கே மதாநுஷ்டானம் இருக்கச் செய்திருக்கிறார்கள்.
பூர்வகால ஸ்திரீகளைப் போல மதத்தை ரக்ஷித்துக் கொடுப்பதில் இக்காலப் பெண்களும் நன்றாக மனஸைச் செலுத்திவிட்டால் நாம் ‘கன்வெர்ஷ’னைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதேயில்லை.
இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் –
ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ரொம்பவும் காவியச் சுவையுடன் வாழ்க்கைப் பயனையும் தருகிற நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. தமிழ் நாட்டில் பிறந்தவர்களுக்கு இது இரட்டை பாக்யம். இந்தியா பூராவுக்குமாக இருக்கிற ஸம்ஸ்கிருதத்தோடு மட்டுமில்லாமல், மற்ற எந்தப் பிரதேசத்து பாஷையையும் விட ஜாஸ்தியாக ரொம்பப் பழங்காலத்திலிருந்தே தமிழ் பாஷையில் தான் பக்தி நூல்களும் நீதி நூல்களும் ரொம்பவும் ரஸம் நிறைந்தனவாக வந்திருக்கின்றன. ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டும் கற்றுக் கொண்டு விட்டால் லோகத்தில் தெரியாததே இராது. ஆனாலும் இத்தனை இருந்தும் ‘செய்யுளாயிருக்கே’ என்று உடனேயே கீழே போட்டுவிடுவதாக இருக்கிறது.
செய்யுளை வசனமாக்கி, பழந்தமிழைப் புதுத் தமிழிலும், ஸம்ஸ்கிருதத்தை தமிழிலும் பண்ணிச் சின்னச் சின்னப் புஸ்தகங்களாகப் போட்டுக் கொடுத்து, அவற்றோடு ஒரு பிரஸாதமும் வைத்து அனுப்புகிறோமென்றால் பெண்டுகள் ஆசை ஆசையாகப் படிப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. இப்போதே ‘ஸௌந்தரிய லஹரி’, ’அபிராமி அந்தாதி’ என்று எவ்வளவு ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள்? பக்தி மட்டுமில்லாமல், தர்மமும், மதாசரணைகளும் அவர்களுக்குத் தெரியும்படியாக சாஸ்திர ஸமாசாரங்களையும் புஸ்தகம் போட்டுத் தர வேண்டும்.
பெண்கள் அங்கங்கே ஒரு எட்டுப் பேர் ஸங்கமாகச் சேர்ந்துகொண்டு மடத்துக்குத் தெரியப்படுத்திவிட்டால் அவர்களுக்கு மடமே இம்மாதிரிப் புஸ்தகங்களைப் பொருள் விளக்கிப்போட்டு, அவர்கள் படிக்கப் படிக்க ஒவ்வொன்றாக அனுப்பிக்கொண்டே இருக்குமாறு திட்டம் போட்டு அமல் செய்யணும் என்று எனக்கு இருக்கிறது. மதத்தைப் பெண்களும், பெண்களை மதமும் பரஸ்பரம் ரக்ஷிக்கும்படியாகப் பண்ண அங்கங்கே இந்த மாதிரி நிறைய ஸத் ஸங்கங்கள் ஏற்பட வேண்டும். பெண்கள் தாங்களே கூடி, தங்களுக்குள்ளாகவே படித்துப் புரிந்து கொள்ளும்படியாக Self-instructor – ஸ்வய போதினி – மாதிரி இந்த தர்மப் புத்தகங்களைப் போட வேண்டும். இதற்கு மடம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது என் எண்ணம். இந்த மாதிரி ஏழெட்டுப் புஸ்தகம் ஸம்ஸ்கிருதத்திலும் பழந்தமிழிலும் பதவுரை படித்து அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டால் அப்புறம் வித்வான்கள் எழுதுவதையும் சொல்வதையும் புரிந்து கொண்டுவிட முடியும். செய்யுள், கடினமான நடை என்ற பயமெல்லாம் போய் விடும். நூல்களின் ரஸம் தன்னால் மேலே மேலே தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டு போகிற அபிருசியை உண்டாக்கிவிடும்.
ஸ்திரீகள் யாவரும் – ‘தாய்க்குலம்’ என மரியாதையாகச் சொல்லப்படுகிற யாவரும் – ஸரஸவாணிகளாக ஆக வேண்டும் என்பதே என் ஆசை. நாட்டின் மஹோன்னத நிலைக்கு அஸ்திவாரம், ஸைன்யத்தின் பலமோ, ஸயன்ஸின் அபிவிருத்தியோ, மந்திரிகளின் யுக்தியோ, பொருளாதார முன்னேற்றமோ இல்லை. பெண்கள் தர்மத்தை நடத்துவதால் பெறுகிற தெய்வத்தன்மையே தேசத்துக்கு அஸ்திவாரம், ஜீவரத்தம் எல்லாம். அவர்கள் அப்படி தர்மப்படி ஆகிவிட்டால் நம்முடைய வேத மதத்துக்கு ஒரு நாளும் ஒரு குறைவும் வராது. அம்பாள் ஸ்வரூபமாகவே அவர்களைச் சொல்லியிருக்கிறது. அம்பாள்தான் இப்படிப்பட்ட அநுக்ரஹத்தைச் செய்ய வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
**இதே நூலில் குரு-சிஷ்ய உறவு என்ற உரையில், ‘பெண்களின் பாண்டித்யம் : அக்கால-இக்கால மாறுபாடு’ என்ற உட்பிரிவும் காண்க.