ஏரண்டகரின் உத்தம உதாரணம்
கீதையிலே யோகிகளில் உச்சநிலைக்குப்போன 'பரமயோகி'எவன் என்று பகவான் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். மூக்கைப் பிடித்தவன், குகையிலே அடைத்துக் கொண்டு கிடப்பவன், மாஸக் கணக்காய் பட்டினி கிடப்பவன், 'ஸஹஸ்ராரம் அது இது'என்று என்னவோ சொல்கிறார்களே அந்த இடத்துக்குக் குண்டலிநீ சக்தியைத் தூக்கிக் கொண்டு போனவன் ஆகியவர்களைப் 'பரம யோகி'என்று சொல்லவில்லை. வேறே என்ன லக்ஷணம் சொல்கிறார்?
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோ (அ) ர்ஜுந*
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: **
''அர்ஜுனா!எவன் ஸுகமாயினும் துக்கமாயினும் எங்கேயும் தன்னையே உபமானமாகக் கொண்டு ஸமமாகப் பார்க்கிறானோ, அவனே பரம யோகி என்பது என் துணிபு''என்று சொல்கிறார்.
''ஆத்மௌபம்யேந''அதாவது, ''தன்னையே உபமானமாகக் கொண்டு''என்பதைத்தான் ஓரளவுக்கு பைபிளின் ''Do unto others as thou wilt be done! ''என்ற Golden Rule சொல்கிறது. நமக்குப் பிறத்தியார் எப்படிச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் பிறத்தியாருக்குச் செய்ய வேண்டும்.
யோகதத்தின் கிட்டேயே போகாத தற்கால நிலையில் நாம் என்ன நினைக்கிறோம்?
'நமக்கு வருகிற கஷ்டத்தைப் பிறத்தியான் போக்கணும். நமக்கு தரித்ரமா, பிறத்தியான் நமக்கு அள்ளிக் கொடுக்கணும். நமக்கு வியாதியா, பிறத்தியான் சுச்ரூஷை பண்ணணும். நமக்கு ஒரு காரியம் பாரமா இருக்கா, அதை பிறத்தியான் தலையில் கட்டிவிட வேண்டும் - இப்படித்தானே நினைக்கிறோம்? இதை அப்படியே மாற்றி நம் இடத்தில் பிறத்தியானை வைத்து, அவனுக்கு எந்த விதத்தில் கஷ்டமானாலும் அதை நாம் போக்கணும் என்று ஆக்கிக் கொண்டுவிட்டால் அது தான் 'ஆத்மௌபம்யம்'. இன்னொருத்தனைக் கஷ்டப்படுத்தியாவது நாம் ஸந்தோஷம் அடையணும் என்று இப்போது நினைப்பதில், இன்னொருத்தன், நாம் என்கிற இரண்டு பேரின் இடத்தையும் 'இண்டர்சேஞ்ஜ்'பண்ணி விட்டால், பரஸ்பரம் இடம் மாற்றிவிட்டால் அது தான் 'ஆத்மௌபம்யம்'. அன்பு என்ற ஒன்றை வளர்த்துக் கொண்டுவிட்டால் இந்த ஆத்மௌபம்யம் தன்னால் ஸித்தித்துவிடும் என்று திருக்குறளிலிருந்து தெரிகிறது. விச்வ வியாபகமான அன்பு இல்லாமல் நம்மிடம் மாத்திரமே நாம் அன்பு பாராட்டிக் கொண்டிருக்கும்போது பிறத்தியானுக்குஸெளக்கியம் தருகிற எல்லாமும் நம்மிடம் வந்துவிட வேண்டுமென்று நினைக்கிறோம்; உத்தமமான அன்புக் குணம் நமக்கு வந்து விட்டாலோ இது அப்படியே மாறி, பிறத்தியாருக்கு நம்முடைய ஸகலத்தையும் கொடுத்துவிட வேண்டுமென்று தோன்றிவிடும்.
ஸகலத்தையும் என்பதற்கு ''நம்முடைய எலும்பையும்''என்று திருவள்ளுவர் சொல்கிறார். அதாவது ததீசி மஹர்ஷி தம்முடைய முதுகெலும்பையும் தேவ கார்யத்துக்காகக் கொடுத்தது போல உயிரையும் தியாகம் செய்வதே அன்புடைமை என்கிறார்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
ஸுகம், துக்கம் இரண்டையும் ஸமமாகப் பார்க்க வேண்டும் என்று கீதையில் இருப்தாகச் சொன்னேன் அல்லவா? இதற்கு லோகத்தின் ஸுகம், துக்கம் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளாமல் தன்னுடைய ஸவ்ய இன்பம், துன்பம் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். லோகத்தின் ஸுக, துக்கங்களை ஸமமாகவே பார்த்து விட்டால் அப்புறம் அதற்குத் துக்கம் உண்டாகும்போது அதனிடத்தில் அருள் பாராட்டி ஸுகத்தை உண்டுபண்ணுவதற்கு இடமே இருக்காதல்லவா? தன்னுடைய ஸுக துக்கங்களை ஒன்றாகக் கருதி, அதாவது தனக்கு துக்கம் ஏற்படுவதையும் கருதாமல் லோக க்ஷேமத்துக்காகக் காரியம் செய்ய வேண்டும் என்றுதான் பகவான் சொல்லி, அப்படிக் கார்யம் பண்ணுவதை ''லோக ஸங்க்ரஹம்''என்கிறார். 'இந்த லோக ஸங்க்ரஹத்துக்காகவேதான், உலகம் மாயையே என்று நன்றாகக் கண்டுகொண்ட ஞானிகள்கூட, தங்களுக்கென்று ஒரு கர்மாவும் தேவைப்படாவிட்டாலும் கர்மாக்களைப் பண்ணிக் காட்ட வேண்டும் என்றும் விதித்திருக்கிறார்.
ஞான நிலையில் ஸுக, துக்கம் என்ற இரண்டையும் abstract ஆக [தனித் தத்வங்களாக]ப் பார்க்கிறபோது இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். ஸுகமும் பொய், துக்கமும் பொய் என்று தான் இருக்கும். ஆனாலும் அதிலேயே பிரேமையின் நிமித்தமாக லோக த்ருஷ்டி மாதிரி ஒன்றை ஈச்வரன் ஏற்படுத்துகிறபோது, ஸுகம், துக்கம் இரண்டும் தனக்கு ஒட்டவில்லை என்று தெரிகிறபோதே, லோகத்தின் ஸுக துக்கங்களைப் பார்த்து அது நல்ல வழியில் ஸுகம் அடையும்போது அதில் ஒரு ஞானியும் ஸந்தோஷப்படுகிற மாதிரியும், அது துக்கம் அடையும்போது அதற்காக அவனும் கருணையில் உருகுகிற மாதிரியும் இருக்கும். இப்படி அது துக்கப்படுகிற போது அதைப் பரிஹரிப்பதற்காக அவன் தன்னையே தியாகம் பண்ணிக் கொள்ள முன் வருவான். 'தன்னை'என்று சொல்லும்போது நாம் அவனுடைய சரீரத்தை அர்ப்பணம் பண்ணுவதைச் சொல்கிறோம். ஆனால் அவனுக்கு இந்த சரீரம் நிஜத் 'தான்'இல்லை என்பது தெரியும்!
இப்படி பரமத் தியாகியாக, ஆத்மௌபம்யத்தால் கிருஷ்ண பரமாத்மா சொல்கிற பரமயோகியாகவும் ஆன ஏரண்டகர் திருவலஞ்சுழியில் காவேரியின் பிலத்துச் சுழலில் இறங்கிப் பிராணத் தியாகம் பண்ணினார்.