இரு நிந்தாஸ்துதிப் பாடல்கள்
அந்த இரண்டு திருநாள்களைப் பற்றியே கொஞ்ச நாளாக நினைப்பு இருக்கிறது. அப்படியிருப்பதில் திரும்பத் திரும்ப இரண்டு பாட்டுகளைச் சுற்றியே எண்ணம் சுழண்டு கொண்டிருக்கிறது. ரொம்பவும் வேடிக்கையான பாட்டுக்கள். வேடிக்கையிலேயே தத்வார்த்தமும் நிறைய இருப்பதாக அவற்றைச் செய்த பெரியவர்கள் பாடிக் கொடுத்திருக்கிறார்கள். தலைக்கொன்றாக, சிவபரமாக ஒன்றும், விஷ்ணுபரமாக ஒன்றும், ‘நிந்தா ஸ்துதி’ என்று சொல்கிற வகையைச் சேர்ந்த பாட்டுக்கள். நிந்தை என்றால் வாயில் வந்தபடி வைகிறதில்லை; சமத்காரமாகப் பரிஹாஸம், கேலி பண்ணுகிறது தான்! ஸ்வாமியிடம் கோபித்துக் கொண்டு திட்டுகிறதில்லை; ‘நம்மோட ஸ்வாமி’ என்ற ஸ்வாதீனத்தால் பரம ப்ரியத்தில் அவரைக் கிண்டல் பண்ணுகிறதுதான்!
மனஸுக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் அந்த இரண்டு பாட்டுக்களை மற்றவர்களுக்கும் சொல்லலாமே என்று தோன்றித்தான் ஆரம்பித்தேன். பூர்வ பீடிகை ரொம்ப தூரம் இழுத்துக் கொண்டு போய்விட்டது. ஆனால் நான் விடுவதாக இல்லை – அந்தப் பாட்டுக்களையும்தான், உங்களையுந்தான்!
முதலில் வைகுண்ட ஏகாதசிதானே வந்தது? இனிமேலேதானே திருவாதிரை வரப் போகிறது? அதனால் விஷ்ணுபரமான பாட்டையே முதலில் சொல்கிறேன்.