குரு என்ற தனிப் பெருமை
இதற்கெல்லாம் மேலே இன்னம் அவர் என்ன? தீக்ஷிதர் ஒவ்வொரு க்ருதியிலேயும் என்ன முத்ரை வைத்திருக்கிறார்? ‘குரு குஹ’.
குரு – அதுதான் ஸுப்ரஹ்மண்யருடைய எல்லாப் பெருமைகளுக்கும் மேலான மஹா பெருமை. குருவாக உபதேசித்து மோக்ஷத்தை அநுக்ரஹிக்கிற பேரருளைச் செய்கிறவர் அவர். “குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த” என்று அருணகிரிநாதர் சொல்கிறபடி, பரம ஞான மூர்த்தியான அப்பாவுக்கும் உபதேசம் செய்த தகப்பன் ஸ்வாமி, ஸ்வாமிநாத ஸ்வாமி அவர். “ஞான பண்டித ஸ்வாமி”. அழகு, அருள், வீர தீர சக்தி எல்லாம் சொன்னபின் தீக்ஷிதர் இதற்கு வருகிறார்:
“தாப-த்ரய ஹரணநிபுண தத்வோபதேச கர்த்ரே”:
தாபத்ரயம் என்பதாக ஜீவாத்மாவுக்கு மூன்று தினுஸுத் தாபம். மூன்று ஸமாசாரங்கள் அதை தஹித்து வேக வைக்கின்றன. ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று. இவை மநுஷ்யரைத் தபிக்க வைக்கின்றன. ஆத்யாத்மிகம் என்பது தன் ஆத்மாவாலேயே தன்னை வருத்திக் கொள்வது. அதாவது நம்முடைய மனஸின் பலவிதமான சஞ்சலிப்பு, கொந்தளிப்பினாலேயே நம்மை வறுத்தெடுத்துக் கொள்வது. ஆதிபௌதிகம் என்பது பூதர்களால் அதாவது உயிர்களால், நம்மைத் தவிர பிற மநுஷ்யர்களாலும் மற்ற ஜீவராசிகளாலும் உண்டாகிறது. ஆதிதைவிகம் என்ற இடத்தில் தைவம் என்றால் விதி. நம்முடைய வினையே விதியாக வந்து வருத்துவது ஒரு தாபம். அல்லது மநுஷ்ய சக்திக்கு அப்பாற்பட்டதாக ‘இயற்கை உற்பாதம்’ என்கின்ற, ஆனால் உண்மையில் தேவ சக்திகளின் கோபத்தைக் காட்டுவதான புயல், பூகம்பம், எரிமலை வெடிப்பது முதலியவற்றால் ஏற்படுவது ஆதிதைவிகமான தாபம். ஆதிபௌதிகத்தாலும், ஆதிதைவிகத்தாலும் விபத்து, வியாதி இத்யாதி ஏற்படலாம். ஆனால் அதை நமக்குத் தாபமாக மாற்றி வருத்தம் தருவது, வறுத்து எடுப்பது மனஸ்தான். மனஸ் என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்தத் தாபமும் தெரியாதுதானே? ‘மனம் இறக்கக் கற்றுவிட்டால்’ தாபமேயில்லை. ஆத்மாராமர்களாக, ஆனந்தமயமாக ஆகி விடலாம். அப்படி ஆகக் கற்றுக் கொடுப்பதுதான் தத்வோபதேசம். தாபத்ரயங்களைப் போக்குவதில் மிகவும் வல்லமை வாய்ந்த தத்வ உபதேசத்தைச் செய்பவர் ஸுப்ரஹ்மண்யர்: “தாபத்ரய ஹரண நிபுண தத்வோபதேச கர்த்தா.”
ஸ்கந்த மூர்த்தியாகி அவர் பிதாவான ஈச்வரனுக்கு ப்ரணவ உபதேசம் பண்ணினது மட்டுமில்லை. ஸநத்குமாரர் என்று ஒரு ப்ரஹ்மநிஷ்டர். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரம்மாவிடமிருந்து முதலில் தோன்றிய நாலு பேர் யாரென்றால், தாங்களும் புனர் ஜன்ம ஸ்ருஷ்டியிலிருந்து தப்பிய ஞானிகளாக இருந்தவர்கள்; தங்களாலும் ப்ரஜா ஸ்ருஷ்டி ஏற்படாமல் ப்ரம்மச்சாரி, ஸந்நியாஸி இரண்டுமாக, எல்லா ஆச்ரமங்களுக்கும் மேலே போன அதிவர்ணாச்ரமிகளாக இருந்தவர்கள். ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்று அவர்களுக்குப் பேர். அவர்களில் ஸநத்குமாரரைக் ‘குமாரர்’ என்றே சொல்வது. ஸநத் என்பது ப்ரம்மாவின் பேர். அவருடைய புத்ரர் ஸநத்குமாரர். அவர் நாரதருக்கே தத்வோபதேசம் செய்திருக்கிறார். அந்த உபதேசமும் அதைப் பற்றிய கதையும் சாந்தோக்யோபநிஷத்தில் வருகிறது. ஸநத்குமாரர் நாரதருக்கு இருட்டைத் தாண்டிய நிலையைக் காட்டினார் என்று உபநிஷத்து முடிக்கிற இடத்தில், அந்தக் குமாரரே தான் குமார சப்தத்தை ப்ரஸித்த நாமாவாகக் கொண்ட ஸ்கந்தமூர்த்தி என்று இரண்டு தரம் சொல்லியிருக்கிறது.
அஞ்ஞான இருட்டுக்கு அப்பால் இருக்கிற ஞான ஜ்யோதிஸ்தான் ஸுப்ரஹ்மண்யர். அக்னி ஸ்வரூபமென்றால் அது ஞானாக்னிதான். அவர் கையிலே தகதகவென்று இருக்கிற சக்த்யாயுதமும் ஞானவேல்தான். பாஹுபல பராக்ரமத்தைக் காட்டும் சக்தி; கோடி கோடி மன்மத லாவண்யம்; தீன ரக்ஷணத்தில் முதல்வராக இருக்கும் காருண்யம் எல்லாமும் கடைசியில் அந்த ஞானத்தில் பிறந்தவையே; அந்த ஞானத்தோடு பிரிக்க முடியாமல் ஸம்பந்தப்பட்டவையே. ஞானத்தை மற்றவருக்கும் வழங்கும் குருநாதனாக இருப்பதே ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் உயிரான லக்ஷணம் – ‘தத்வோபதேச கர்த்ரே; வீரநுத குருகுஹாயாஜ்ஞான-த்வாந்த-ஸவித்ரே.’