கதையின் படிப்பினைகள்
பல உயர்ந்த லக்ஷ்யங்களை இந்த விஷ்ணு புராண உபாக்யானம் காட்டுகிறது. படிப்பறிவையே அநுபவ அறிவு என்று மயங்காமல் படித்ததைப் பரிச்ரமப்பட்டு படிப்படியாக வாழ்க்கையநுபவமாக்கிக் கொள்வது; அவரவருக்கும் வாய்த்த ஸ்வதர்மக் கடமையைப் பேணி நடப்பது; செய்கிற அநுஷ்டானத்தில் மனப்பூர்வமான பக்தி ச்ரத்தைகள் காட்டுவது; தர்மத்தைத் தெரிந்து கொண்டு செய்வதற்காகத் தன் உயிருக்கே ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முயல்வது; ராஜ்ய லாபத்தைவிடவும் ஆத்மஞானத்துக்கான உபாயத்தையே பெரிதாகப் போற்றுவது என்றிப்படிப் பல குறிக்கோள்களை இந்த இரண்டு ஜனகர்களின் கதை நமக்கு விளக்கிக் காட்டுகிறது.
இதெல்லாவற்றையும்விட குறிப்பாகத் தெரியும் ஒரு கொள்கை, அறிவுக்குத் தடை போடாமல் யோக்யதாம்சமுள்ள எவரிடமிருந்தும் சொந்த பாச-த்வேஷங்கள் பாராட்டாமல் அதைக் கோர வேண்டுமென்பதும், அதே போல யோக்யதையுள்ள எவருக்கும் அதை ஸ்வய விருப்பு-வெறுப்புப் பாராமல் கொடுக்க வேண்டுமென்பதுமாகும். அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழில்லை என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி என்பதற்கு இந்த உபாக்யானம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இப்படி ஸகலருக்கும் அறிவைத் தடையில்லாமல் பரப்ப வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட வேண்டுமானால் அதற்கும் அன்புதான் காரணம்.