பரம சத்ருக்கள் குரு-சிஷ்யரானது
நம்முடைய பண்பாட்டிற்கேற்க கேசித்வஜர் இதைப் பார்த்துப் பெருமை கொண்டார். தம்மை விடவும் ஒரு படி அவர் மேலே போய்விட்டதில் பொறாமைப் படாமல் பெருமைப்பட்டார். “அப்பா! நான் ஆத்ம சாஸ்த்ரம் நிறைய அறிந்திருந்தும் ஆத்ம ஸாதனைக்கே என்னை அர்ப்பணித்துக் கொள்ளாமல் இன்னமும் காம க்ரோதாதிகளைப் போக்கிக் கொள்வதற்காக ஸ்வதர்மம், கர்மாநுஷ்டானம் ஆகியவற்றைத் தொடர வேண்டியவனாகவே இருக்கிறேன். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொள்வது போலவே, பூர்வ புண்யங்களையும் போக்கிக் கொண்டால்தான், பாப-புண்யம் இரண்டும் அறியாத ஆத்மாவில் சேரலாம். அதனால்தான், உடலை வருத்திக் கர்மா பண்ணிப் பூர்வ பாபத்தைப் போக்கிக் கொள்வது போலவே, உடலுக்கு ராஜ போக ஸௌக்யம் என்பதையும் கொடுத்துப் புண்யத்தைப் போக்கிக் கொள்கிறேன். இன்னும் சில காலம் எனக்கு இந்தக் கர்ம யோகமும் ராஜபோகமும் நீடிக்க வேண்டியதாயிருக்கிறது. ஆனால் நீயோ இப்போது என்னிடம் ஆத்ம சாஸ்த்ரம் கற்றுக் கொண்டு உடனேயே நேராக ஆத்ம ஸாதனைக்குப் போவதற்கான விவேகத்தைப் பெற்றுவிட்டாய். நீ அத்ருஷ்டசாலி. வா, உனக்கு ஸாங்கோபாங்கமாக வேதாந்தம் சொல்கிறேன்” என்றார் கேசித்வஜர்.
இங்கே அவர் சத்ருவான காண்டிக்யரைத் தங்களுடைய குலத்துக்கே ஆனந்தமூட்டும் வார்ஸான “குல நந்தனன்” என்று அழைப்பதாக இந்தக் கதையைச் சொல்லும் விஷ்ணு புராணத்தில் இருக்கிறது.
அப்புறம் அஷ்டாங்க யோகம், ஈச்வர பக்தி ஆகியவற்றை உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கும் ஞான தத்வங்களோடு அழகாக இழைத்து, சுலபமாகப் புரிந்து கொள்ளும்படி காண்டிக்யருக்குக் கேசித்வஜர் உபதேசம் செய்தார்.
ஆத்ம ஞானத்துக்கு நம் தேசம் தந்த பெருமைக்கு அளவேயில்லை. அதனால்தான் பரம சத்ருக்களாக இருந்த இரண்டு பேரில் இப்படி ஒருவர் குருவாகவும், மற்றவர் சிஷ்யராகவும் ஆனார்கள்.
உபதேசத்தைக் காண்டிக்யர் நன்றாக உள்ளே வாங்கிக் கொண்டார். அதிலே ஸந்தோஷம் கொண்ட கேசித்வஜர், “இன்னும் நான் உனக்கு என்ன பண்ணணும்?” என்று பரம அன்போடு கேட்டார்.
அதே அன்போடு காண்டிக்யரும், “நீ பண்ணுவதற்கு இனியும் ஏதாவது மீதியிருக்கிறதா என்ன? அகண்டமான ஆத்ம ஸ்வரூபத்தையே அல்லவா எனக்கும் காட்டிக் கொடுத்துவிட்டாய்? என் ச்ரேயஸுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அத்தனையும் பண்ணிவிட்டாய். இன்னும் எனக்காக மெனக்கிடாமல் நீ ராஜ்யத்துக்குத் திரும்பலாம்” என்று நன்றியோடு சொல்லி நமஸ்காரம் செய்தார். உபசாரங்கள் பண்ணிக் கேசித்வஜரை ஊருக்குத் திருப்பியனுப்பி வைத்தார்.
அப்புறம் காண்டிக்யர் தாம் பெற்ற உபதேசத்துக்கு உரிய ஸாதனையைத் தீவிரமாகச் செய்து, பிரம்ம நிர்வாணம் அடைந்தார். கேசித்வஜரும் கர்மத்தால் பாப க்ஷயமும், போகத்தால் புண்ய க்ஷயமும் ஏற்பட்ட பிறகு ஞான அநுஷ்டானங்கள் பண்ணி மோக்ஷ ஸித்தி அடைந்தார்.