ஸரஸ்வதியின் சாதுரியம்
ஸ்ரீஹர்ஷரின் கதைப்படி அவருடைய இஷ்ட தெய்வமான ஸரஸ்வதியே தமயந்தியுடன் சுயம்வர மண்டபத்துக்கு வந்து ஒவ்வொரு ராஜகுமாரனைப் பற்றியும் சொல்கிறாள். இந்த ஐந்து பேரைப் பார்த்ததும், அவளுக்கும் ஒரு சங்கடம் உண்டாயிற்று. தேவர்கள் ஸாக்ஷாத் ஸரஸ்வதியை ஏமாற்ற முடியுமா? ஆனாலும், ஸரஸ்வதிக்கோ இந்திராதி தேவர்களை வேஷக்காரர்கள் என்று அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்க மனமில்லை. அது உசிதக் குறைவாகப்பட்டது. உள்ளதைச் சொல்லாவிட்டாலும் தப்பாகும். ஸரஸ்வதி அறிவுத் தெய்வம் அல்லவா? எனவே சபையில் கூடியிருந்த மற்றவர்கள் தெரிந்து கொள்ளாவிட்டாலும், தமயந்தி தானாகவே புரிந்து கொள்ள அநுகூலமான முறையில் மறைமுகமாக இந்த ஐந்து பேரைப் பற்றியும் சொன்னாள். தேவன் ஒவ்வொருத்தனுக்கும் நளனுக்கும் ஒரே சமயத்தில் பொருத்தமாக இருக்கிற மாதிரி லட்சணங்களைச் சொல்லி சிலேடையாக வர்ணித்தாள். அதற்குப் ‘பஞ்சநளீயம்’ என்றே பெயர். அதைத் தமிழில் விளக்குவது கஷ்டம். அது இங்கே நமக்கு அவசியமும் இல்லை.
மற்ற நாலு நளர்கள் தேவரானதால் அவர்களின் கால் பூமியில் பாவவில்லை; அவர்கள் இமை கொட்டவில்லை; இதை எல்லாம் பார்த்துத் தமயந்தி நிஜ நளனைப் புரிந்து கொண்டு மாலை போட்டாள் என்ற கதை உங்களுக்கே தெரிந்திருக்கும்.
தமயந்தி கதை உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடியது தான். நான் அதை அதற்காகவே சொல்ல வரவில்லை. எனக்கு அதை எவ்வளவு தூரம் சொல்ல வருமோ? பௌராணிகர்களானால் ஸ்வாரஸ்யமாகச் சொல்வார்கள். ஒரு காவியத்துக்குள் தத்துவத்தை எவ்வளவு நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என்று காட்டவே இதைச் சொன்னேன்….