சொல்லி ப்ரயோஜனமில்லை என்றாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. வெள்ளைக்கார அரசாங்கம் வருகிறதற்கு முந்தி ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் பசுக்களுக்கென்றே பிரத்யேகமாக மேய்ச்சல் பூமி சாஸனமாக விடப்பட்டிருக்கிறது. கோக்ஷேமத்துக்குள்ள முக்யத்வம் தெரியாத வெள்ளைக்கார அரசாங்கம் அந்த பூமிகளையும் தர்க்காஸ்தாகக் கொடுத்து விட்டது. பசுவின் வயிற்றில் அதிலிருந்து அடி விழ ஆரம்பித்தது. அதே மாதிரி, மந்தைக் கரைக்குளம் என்று பசுக்களுக்காகவே முன்காலத்தில் இருந்த குளங்களும் இப்போது எடுபட்டுவிட்டன. Minor irrigation works – சிறிய நீர்ப்பாசனத் திட்டம் – என்று அரசாங்கத்தில் போடுவதில் இந்த மந்தைக் கரைக் குளத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அநேக க்ராமங்களாக இருந்தவை உருமாறித்தான் இன்றைய சென்னை மாநகராகியிருக்கிறது. இப்போது மந்தைவெளி என்று இருக்கிற பேட்டை ஆதியில் மேய்ச்சல் பூமியாகவே இருந்திருக்கிறது. அமிஞ்சிக்கரையை அமைந்த கரை என்கிறார்களே, அது மந்தைக்கரை குளமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்யவேண்டிய தர்மங்களை எண்-நான்கு- அதாவது முப்பத்திரண்டு – அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில் அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில் சொறிந்து கொண்டு தினவு தீர்ந்தன. இப்படிச் சின்ன விஷயங்களைக்கூடப் பரம தர்மமாக நினைத்து கோவுக்குச் செய்த தேசத்தில் நாம் அதை எலும்பும் கூடுமாக்குகிறோம், வதையாவதற்கு விடுகிறோம் என்றால் அது நமக்குப் பெரிய அபக்யாதி.
முற்காலத்தில் நடந்த பசு பராமரிப்பு சொல்லி ப்ரயோஜனமில்லை என்றாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை வெள்ளைக்கார அரசாங்கம் வருகிறதற்கு முந்தி ஊருக்
முற்காலத்தில் நடந்த பசு பராமரிப்பு