கீதை காட்டும் தர்ம சக்கரம்
உண்மை யாதாயினும், நாம் அவனை மறந்து விட்டாலும் நம்மை மறவாத கருணையுடன் பகவானே தான் தனது தர்ம சக்கரத்தை நமது கொடிக்கு நடுநாயகமாக இடம் பெறச் செய்து, அதன் மூலம் இன்றைய கொள்கைச் சூழ்நிலை எப்படியிருந்தாலும் எதிர்காலத்தில் அநுபவத்தால் படிப்பினை பெற்றேனும் இக்கொள்கையைக் கைவிட்டு, இந்நாட்டுக்கே ப்ரத்யேகமாக உரிய மரபு வழியில்தான் நம் நாடு சென்று, உலகின் ஏனைய நாடுகளுக்கு ஒரு நல்ல மாற்றாகவும், மாற்று மருந்தாகவும் புகழ் கொள்ளுமென நன்னம்பிக்கை ஊட்டுகிறார் என்றே நாம் கொள்கிறோம். இதற்குக் காரணம் இதே தர்ம சக்கரப் பிரவர்த்தனக் கருத்தை இதே சொற்றொடரால் அப் பரமத ஸ்தாபகருக்குப் பல்லாயிரம் ஆண்டு முன்பே சக்கரக் கரத்தனான கிருஷ்ண பகவான் சநாதன தர்மத்தின் முக்கியமான ஆதார நூல்களிலொன்றான கீதையில் கூறியிருப்பதுதான். அப்புனித நூலில் (3-16) “ஏவம் ப்ரவர்த்திதம் சக்ரம்” – இவ்வாறு சுழன்று வரும் சக்கரம் - என்றே மாந்தரின் உயரிய வாழ்க்கைக்குத் தாமளித்துள்ள ஒழுங்கு அமைப்பான தர்மத்தைச் சக்கர வடிவாக பகவான் கூறியுள்ளார். ‘இவ்வாறு’ என்பது ‘எவ்வாறு’ என்பதையும் சுருங்கக் கூறி விளங்க வைக்கிறார். உயர் வாழ்வின் அமைப்புக்கு மைய இருசாகவுள்ள தர்மம் என்பது காரணம் – விளைவு (cause and effect) என்று தொடர்ச்சியாகப் பல அம்சங்கள் கொண்ட ஒரு வெளி வட்டத்தின் சீரான சுழற்சியாகவே பரிணமிப்பதால் சக்கரமாக உவமிக்கப்படுகிறதென அங்கு காட்டுகிறார். அத்தொடரை மானுடன் என்ற இறுதி விளைவில் ஆரம்பித்து யாவற்றுக்கும் ஆதி காரணமாம் பரம்பொருளுடன் முடிக்கிறார்.
ஒன்றையொன்று பற்றிச் செல்லும் ஆறு அங்கங்கள் கொண்டது அத்தொடர். அது யாது?