நன்னம்பிக்கை தோன்றாத சூழ்நிலையாகவே உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தலைமை தாங்கி மஹாத்மா என்று பெயர் பெற்றவர் பாரத நாட்டிற்கேயான நாகரிகத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு அதனையேதான் எடுத்துக் கூறிபோதிலும், அவரைப் பின்பற்றுவோராகத் தெரிபவர்களிலேயே ஒரு சிலரைத் தவிர ஏனையே தலைவர்கள் வேறுவிதமாக அபிப்ராயப்படுபவர்களாகவே தெரிகின்றனர். சென்ற சில தலைமுறையாகவே அந்நிய வாழ்க்கைப் பாணி இங்கு வேரூன்றத் தொடங்கி விட்டதால், அது கப்பும் கிளையுமாக வளர்வதிலேயே மகிழ்ச்சி கொண்டவர்களாகத்தான் பொது ஜனங்களில் மிகப் பெரும்பாலோரும் உள்ளனர்.
எதிர்ப்பு நடவடிக்கைகளில் எப்போதுமே ஒருவித உற்சாகம் காட்டுவதுதான் மானுட இயற்கை. எனவே வெள்ளையரை எதிர்ப்பது என்ற அம்சத்தில் நமது மக்கட் சமுதாயம் முழுதும் மஹாத்மா எனும் பெரியவரைப் பின்பற்றியதும் (எதிர்ப்பில் உற்சாகம் கொள்கின்ற) அம்மனப்பான்மையில்தானென்று தோன்றுகிறது. சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளை அறியாது, நம்மைக் கட்டவிழ்த்து நம்மிஷ்டப்படிச் செய்ய தேச சுதந்திரம் உதவும் என்ற எண்ணத்திலேதான் பெரும்பாலோர் அவரைப் பின்பற்றியதெனத் தோன்றுகிறது. ஆனால், நமது வாழ்வு முறை நமது பிரத்தியேக நாகரிகத்திற்கு இசைந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு மக்கள் அவ்வளவாகச் செவி சாயக்கவில்லை.
எனவே இனி நடக்க வேண்டிய இலட்சியத்தில் கவனம் காட்டப்படுமோ என்று கவலையுறுமாறு உள்ளது.
நடக்கவேண்டியது, இன்று ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள தலைவர்கள் ஸெக்யூலரிஸத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதைத் தீவிரமாகச் செயலாக்கி, மதவியலுக்குச் சிறப்பான போஷணை கொடுத்து, மக்களது உலகியல் பிணிக்கு மாற்று மருந்து காண்பதேயாகும்.