எனினும், மன்னர்களும் மக்களும் தாமாகவே நல்ல மதாபிமானமுள்ளோராயிருந்ததால் அவர்கள் மூலமே பொருளாலும் ஆள்கட்டாலும் காப்பளிப்பது எனும் அம்சம் நல்லபடியாக நிறைவேறி ஹிந்து மத போஷணை வெகு நீண்டகாலம் வரையில் நன்கு நடந்து வந்திருக்கிறது.
முக்கியமாக ஆலய வழிபாடே ஒரு மத சமூகத்தினரிடம் மதத்தைக் காத்துக் கொடுப்பதாக இருக்கிறது. சமூகத்தினரை மதத்தால் காத்துக் கொடுப்பதும் முக்கியமாக ஆலய வழிபாடுதான். இவ்வாறு முக்கியத்துவம் பெற்ற ஹிந்து மத ஆலயங்கள் நாடெங்கும் பரவியிருப்பதால் அவற்றுக்குத் திருப்பணி செய்து, அங்கு வழிபாடுகள் முறைப்படி நடக்கச் செய்தலே மத ரட்சணைக்கு மையமாக இருந்ததும், இருப்பதும் ஆகும். மாபெரும் அளவினதாக அநேக ஆலயங்கள் கொண்ட ஹிந்து மதத்தில் ஆலயத் திருப்பணிக்குத் தேவைப்படும் திரவியமும் மாபெரும் அளவினதே. இதையும் ஏற்று, காப்புப் பணியை ஆற்றியது முக்கியமாக மன்னர்களும் மக்களுமே;மதத்திற்கென்று ஸ்தாபனமாக அமைக்கப்பட்ட திருமடங்கள் இதில் ஆற்றிய பங்கு சிறியதே.