இரு வித சரணாகதிகளும் குரு சிஷ்ய உறவும்

இரு வித சரணாகதிகளும் குரு சிஷ்ய உறவும்

சரணாகதியில் இரண்டு தினுஸு சொல்வதுண்டு:'மர்கட கிசோர ந்யாயம்' என்றும். மர்கட கிசோரம் என்றால் குரங்குக் குட்டி, மார்ஜார கிசோரம் என்றால் பூனைக்குட்டி. குரங்கு ஜாதியில் குட்டிதான் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும். அப்படி பக்தன் தன் முயற்சியால் பகவானைப் போய்ப் பிடித்துக் கொள்ளணும் என்பது மர்கட கிசோர ந்யாயம். பூனை ஜாதியைப் பார்த்தாலோ, குட்டி தன்னை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்ற கவலையே இல்லாமல் அது பாட்டுக்குக் கிடக்கிறது. தாய்ப் பூனைதான் அதை வாயால் கௌவிக் கொண்டு இடம் இடமாக எடுத்துப்போகிறது. இப்படி ஸ்வய ப்ரயத்னம் இல்லாமல் பகவானே பார்த்துக்கொள்ளட்டும் என்று இருப்பதுதான் மார்ஜார கிசோர நர்யம். .இந்த இரண்டில் எது உயர்ந்தது என்ற விவாதம் இப்போது வேணாம். யாருக்கு எப்படிப் பிடிக்கிறதோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு ந்யாயமும் பகவான் - பக்தன் என்ற ஜோடி விஷயமாகச் சொன்னது. இதை குரு - சிஷ்யன் என்ற ஜோடிக்கு வைத்துப் பார்க்கிற போது சுருக்கமாக ஒன்று மாத்திரம் சொல்லலாமென்று தோன்றுகிறது. முதலில் சிஷ்யன் குருவைத் தேடிப்போய் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அவருக்கு இவன் தேவைப்படுவதைவிட இவனுக்குத்தானே அவர் அத்யாவச்யமாகத் தேவைப்படுகிறார்? அதனால் மர்கட கிசோர ந்யாயத்தில் இவனே பிடித்துக் கொள்ளணும். அப்படிப் பிடித்துக் கொண்டால் அவர் மார்ஜார கிசோர ந்யாயத்தை நடத்த அரம்பித்து விடுவார் அதாவது அவரே இவனுக்கு முழுப் பொறுப்பும் எடுத்துக்கொண்டு இவனை நடத்திப்போவார்.

இப்படி இரண்டு 'ந்யாய'மாகப் பிரிக்காமல் இவன்-அவர் இரண்டு பேருமே பரஸ்பரம் ஒருவரையருவர் விடாமல் பிடித்துக்கொண்டே குரு-சிஷ்ய உறவு நடக்கிறது என்றும் சொல்லிவிடலாம்!

'யார் ஸரியான குரு, ஸத்குரு? அவரை எப்படிக் கண்டுபிடித்து அடைவோம்?' என்று நிஜமான தாபத்துடன் ஒருவன் இருந்தானானால், ஈச்வரனே தூண்டிவிட்டு அப்படிப்பட்ட ஒருவர் இவனைத் தேடி வருவார் என்று சொல்லியிருக்கிறது. அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளும் இருக்கிறது. இதைப் பார்த்தால் - யாரைப் பிடிப்பது என்றே தெரியாமல் சிஷ்யன் தவித்தபோது குருவே வந்து பிடித்துக் கொள்கிறார் என்பதைப் பார்த்தால் - முதலில் மார்ஜார கிசோர ந்யாயம் மாதிரியான ஒன்றாகத் தோன்றுகிறது. ஆனால் குரு வந்த பிறகு சிஷ்யனும் அவரை மர்கட கிசோரமாகப் பிடித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

நான் சொன்னதற்கு இன்னொரு திருத்தங்கூட குருவுக்கும் சிஷ்யன் தேவைப்படத்தான் செய்கிறான். அவர் கற்றதை, அநுபவித்ததை யாருமே வாங்கிக்கொள்ள வராவிட்டால், அவருந்தான் அது தன்னோடு போய்விடப்படாதே என்று சிஷ்யனுக்காகத் தவிப்பார். தன்னிடம் ப்ரஹ்மசாரிகள் வரணும், வரணும் என்று குரு தவித்துச் சொல்வது தைத்திரீயத்தில் மந்திரமாகவே இருக்கிறது!ஆவஹந்திஹோமம் என்று இன்றைக்கு அதைச் சொல்லி ஹோமம் பண்ணி, எத்தனையோ படுத்துப்போன பாடசாலைகளில் பசங்கள் வந்து சேர

ஆரம்பிப்பதை ப்ரத்யட்சமாகப் பார்க்கிறோம்...

குரு இன்னார் என்று குறிப்பாகத் தெரியாவிட்டாலும், 'குரு என்று ஒருத்தர் வேண்டுமே நமக்கான அந்த குரு யார் தெரியவில்லையே' என்று முதலில் ஒருத்தன் தேடுகிறான், அப்புறம் அந்த குருவே வந்து அவனைப் பிடித்துக் கொள்கிறார், ஆட்கொள்கிறார் என்றால் - முதலில் அவன் குருவைத் தேடினதே ஆஸாமியாக இல்லாமல், ஆனால் தத்வமாக இருக்கிற குருவை அவன் மனஸில் பிடித்துப் போட்டுக் கொண்டால்தானே? அப்படி அவன்தான் முதலில் பிடித்தான் என்பதால் இது மர்கட கிசோர ந்யாயமே என்றும் சொல்லலாம்.

குரு என்று ஒருவரையும் தேடாமல் பரம வ்ராத்யனாக இருக்கிற ஒருவனைக்கூட ஸத்குரு ஒருவர் தாமாக ஆட்கொண்டு உசந்த நிலைக்கு ஏற்றுவிப்பதுமுண்டு. அது ரொம்ப ரொம்ப அபூர்வமாகவே நடக்கிற ஒன்று. அங்கேதான் ஆரம்பமே மார்ஜார கிசார நர்யம், (சிரித்து) ஸரியாகச் சொன்னால், மார்ஜார மாதா ந்யாயம்!

பொதுவாக என்ன சொல்லத் தோன்றுகிறதென்றால் சிஷ்யன் என்று நாம் பண்ணக்கூடியதை மர்கட கிசோரமாகச் செய்வோம். குரு பண்ண வேண்டியது இன்ன என்று எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்.

அவர் பண்ணவேண்டிய ஒன்றே ஒன்று, ஞானத்தைத் தருவது. அதற்காகத்தானே குரு என்று ஒருவரிடம் போவது? அதை அவர் எப்படிப் பண்ணுவாரோ, பண்ணிவிட்டுப் போகட்டும், ஆனால் நிச்சயமாக பண்ணுவார் என்ற நம்பிக்கையுடன் - 'ச்ரத்தாவான்'களாக - நம்காரியமாக அவரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்போம்.

சரணாகதி ந்யாயங்கள் இரண்டில் எது என்று முடிவாகச் சொல்லத் தெரியாமல் இப்படி ஏதோ கலந்தாகட்டியாக இருக்கிறபோது அதைப் பற்றிச் சொல்வானேன் என்றால், காரணம் இருக்கிறது. இரண்டிலும் மர்கட கிசோரம், மார்ஜார கிசோரம் என்பதாக 'ககிசோர'ப் பிரஸ்தாவம் இருக்கிறது. கிசோரம் என்றால் குட்டி குட்டியாக உள்ள மட்டுந்தான் குரங்கு தாயைப் பிடித்துக் கொள்வதும், தாய்ப் பூனை தன் குட்டியைப் பிடித்துக் கொள்வதும், குரங்கோ, பூனையோ எதுவானாலும் குட்டி கொஞ்சம் பெரிசானால் அப்புறம் அதுவும் தாயை விட்டுப் போய்விடுகிறது, தாயும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அனால் குரு-சிஷ்யன் விஷயம் இப்படியில்லை என்று வித்யாஸம் காட்டவே அந்த இரண்டு ந்யாயத்தையும் பற்றிச் சொன்னேன்.

குட்டியும் தாயும் ஒரு காலத்திற்கு அப்புறம் ஒன்றையன்று விட்டுவிடுவதுபோல் குரு - சிஷ்யர்கள் விடுவது என்பதே இல்லை. சிஷ்யன் - அத்யாத்மிகத்தில் குட்டியாக குருவிடம் வந்தவன் - அவருடைய அநுக்ரஹத்தால், அவர் தாயாக இருந்து ஊட்டுகிற ஞானப் பாலால் ஆத்ம ஞானியாகவே பூர்ண வளர்ச்சி பெற்ற பிறகுங்கூட குரு - சிஷ்ய பாந்தவ்யம் இருந்துகொண்டே இருக்கும். அப்படித்தான்! சிஷ்யன் அத்வைத ஞானியாகவே ஆன பிற்பாடுங்கூட, குருவிடம் மாத்திரம் அத்வைதம் கொண்டாடிக் கொள்ள முடியாமல் த்வைதம் மாதிரியான - அஸலே வேறே வேற என்று பிரிந்துவிட்ட த்வைதம் இல்லை, அந்த 'மாதிரி'யான - ஒரு பாவம் இருக்கும் அந்த குருவும்

(எல்லாமும், எல்லாரும் தானே என்றறிந்த அத்வைத) ஞானியனாக

இருந்தபோதிலும், இவனை வேறே 'மாதிரி' நினைத்துத்தானே 'சிஷ்யன்' என்று வைத்து உபதேசம் செய்தது, அதனால் அவரும் த்வைதம் மாதிரியான உறவு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று ஆகிறது. இவர் மார்ஜார அம்மாவாகப் பிடித்துக் கொள்வது, சிஷ்யன் மர்கடக் குழந்தையாகப் பிடித்துக் கொள்வது என்று அந்த உறவு எந்நாளும் தொடருகிறது. 'எந்நாளும்' என்றால், சிஷ்யனுக்கு அத்வைத ஸித்தி வந்த பிற்பாடுந்தான் குரு ஜீவ யாத்ரை முடித்து? 'ஸித்தி அடைவது' என்கிறார்களே, அப்படி ஆன பிற்பாடுந்தான் அத்வைத ஞானிகளும் விதேஹ முக்திக்குப் பிற்பாடுகூட அநுக்ரஹம் மட்டும் பண்ணிக் கொண்டிருப்பது அநுபவிகளுக்கு ப்ரத்யக்ஷமாகத் தெரிந்த விஷயம். அது எப்படி என்றால் தெரியாது அவர்களுடைய சரீரம், கர்மா எல்லாம் அழிந்துபோய்விட்ட போதிலும், அவர்களுடைய அநுக்ரஹ சித்தம் - கருணை என்கிறது - அது மட்டும் அழியாமல் அம்ருதமாக இருந்துகொண்டிருக்கும் படியாக ஈச்வரன் விளையாடுகிறானென்றுதான் சொல்லணும். ஆகக்கூடி, அத்வைதமாகக் கரைந்து போய்விடாமல் குரு - சிஷ்யாள் என்று பரம ப்ரியமான ஒரு உறவு எந்நாளும் இருக்கிறது!

ஆசார்யாளே அவருடைய குருவையும், பரம குருவையும், ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரை முழுவதையும் பரம பக்தியோடு ஸ்தோத்ரிப்பதில் அவருடைய சிஷ்ய பாவ - த்வைதம் தெரிகிறது. ஆசார்யானை ஞானிகளான அவருடைய சிஷ்யர்கள் - ஸுரேச்வராசார்யாள், பத்ம பாதாசார்யாள், தோடகாசார்யாள் - ஆகியவர்கள் கருணாமூர்த்தியாக ஸ்துதித்திருப்பதிலிருந்து அவருடைய குரு பாவ - த்வைதம் தெரிகிறது. அவரும் மற்ற ஞானிகள் பல பேரும் தேசமெல்லாம் ஸஞ்சாரம் பண்ணி உபதேசம் செய்திருப்பதும், வருங்காலத்தில் பிறக்கப் போகிறவர்களுக்காகவுங்கூட அத்வைத புஸ்தகங்கள் எழுதி வைத்திருப்பதுமே போதும், இந்த குருபாவ த்வைதத்தைக் காட்ட!

ப்ரேமை என்பதன் பெருமை தெரிவதற்காக பராசக்தியின் லீலையில் இப்படி அத்வைதிகளுக்கும் குரு - சிஷ்ய த்வைதம் மாதிரியான ஒன்று சாச்வதமாக இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. கருணை என்று குரு காட்டும் ப்ரேமை, பக்தி என்று சிஷ்யன் காட்டும் ப்ரேமை.

சொல்ல வந்த விஷயம், சிஷ்யனானவன் குருவிடம் சரணாகதி செய்ய வேண்டும் என்பது.

பல குருமார்கள் வாய்த்தாலும் அவர்களில் முக்யமானவரிடம் சரணாகதி, மற்றவர்களெல்லாரிடமும் ஆத்மார்த்தமான மரியாதை என்று இருக்க வேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சிரத்தையிலிருந்து சரணாகதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அரசும் மதமும்,   தர்ம சக்கரம் பகவானின் அருட்சூசகம்
Next